6.03.2026
அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை
குடும்பம்: இதுவரையில் ஜென்ம ராசியில் சனி - சுக்கிரன் கூட்டுச் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.இந்த ஜென்மச் சனியிலிருந்து நீங்கள் விடுபட்டுள்ளீர்கள்!! அடுத்த இரண்டரை வருடம் உங்களுடைய ராசியாதிபதியான சனி பகவான், சுபப் பலன்களைக் கொடுத்து, உங்களை மேலும் உயர்த்துவார். இத்தருணத்தில், உங்கள் ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய, மிதுனத்தில் வலம் வரும் குருவின் சுபப் பார்வையும் கிடைப்பதால், சுபப் பலன்கள் அதிகரிக்கிறது.
நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை மேம்படும். பரஸ்பர உறவில் பகையுணர்ச்சி இராது. வருமானத்திற்குமேல் செலவுகள் ஏற்பட்டாலும், இத்தருணத்தில் கடன் வாங்க நேரிடாது. கூடியவரையில் பணத்தைச் சேமிப்பது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, உத்தியோகத்தில் பதவியுயர்வும், ஊதிய உயர்வும் அதிகரிக்கும். அது உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். ஒருசிலருக்கு, சொந்த வீடு வாங்கும் யோகமும் உள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகக் கட்டியம் கூறுகிறது. திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும் நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, மகப்பேறு போன்ற சுபச் செலவுகளாக அமையப் பெற்றாலும், அதனால் மகிழ்ச்சி ெவள்ளத்தில் நீந்துவீர்கள்.
உத்தியோகம்: அன்றாடப் பணிகளில், கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும். பணிச் சுமை அதிகரித்துக் கொண்டேபோகும். ஆயினும், அதற்கேற்ப ஊதியம் நிச்சயமாக இருக்கும் ! வேலையில் மும்முரமாகவும், அதிக உற்சாகத்துடனும் ஈடுபடவைக்கும். உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் தவிர்ப்பது அவசியம். சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகாமலிருத்தல் மிகவும் நல்லது. மேலதிகாரிகளைப் பற்றி சக-ஊழியர்களுடன் பேச வேண்டாம். அலுவலகத்தில் பணியாற்றிவரும் பெண் ஊழியர்களின் சொந்தப் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். நீங்களுண்டு, உங்கள் பணிகள் உண்டு! -என இருப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தௌிவாக எச்சரிக்கை செய்கின்றன.
தொழில், வியாபாரம்: சனி பகவானின் சஞ்சார நிலை, உங்கள் ராசிக்கு, தன ஸ்தானத்தை பலப்படுத்துகிறது."தொட்டதெல்லாம் துலங்கும்!" என்பர் பெரியோர்! சந்தை நிலவரத்தை அனுசரித்து, உங்கள் உற்பத்தியை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். ஊழியர்கள் பிரச்னைகள் ஏதுமின்றி, கடமையைச் செய்து உயர்வடைய முயல்வார்கள். உற்பத்திக்கு அவசியமான மூலப் பொருட்களின் கொள்முதல் விலை, அதிகரிப்பதால், உங்கள் சரக்குகளின் விலையையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அரசாங்கச் சலுகைகள் தக்க தருணத்தில் கிடைப்பதால், நிலைமையைச் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக, வெளியூர்ப் பயணங்களின்போது, உடமைகளையும், பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். களவுபோன விலையுயர்ந்த பொருட்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. புதிய முயற்சிகளில், அளவோடு முதலீடு செய்யவும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைப்பது, உற்சாகத்தையளிக்கும்.
கலைத் துறையினர்: சனி பகவானும், சுக்கிரனும் பலம் பெற்று சஞ்சரிப்பதால், லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அவற்றில் சில வெளிநாடுகளிலிருந்தும் இருக்கக்கூடும். ஆடம்பரச் செலவுகளிலும், விளம்பரத்திலும் பணம் விரயமாக்காதீர்கள். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள். எதிர்காலத்திற்கு உதவும்.
அரசியல் துறையினர்: பேச்சிலும், சற்று நிதானமாக இருங்கள்! இல்லாவிடில், பிரச்னைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ள நேரிடும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. சனி பகவானின் சஞ்சார நிலையினால், அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடக்கூடும். பேச்சில் நிதானம் அவசியம். "நுணலும் தன் வாயால் கெடும்...!" என்றொரு பழமொழி உண்டல்லவா? அதே போல்தான், (நுணல் என்றால், தவளை என்று பொருள். தேவையில்லாமல், இரவு நேரங்களில், தவளை குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அந்தச் சப்தத்தைக் கேட்டு பாம்பு, தவளை இருக்கும் இடத்தை அறிந்து, தவளையைக் கவ்வி விழுங்கிவிடும். ஆதலால்தான் இத்தகைய பழமொழியும் ஏற்பட்டது.) தேவையற்ற பேச்சு, ஆபத்தில் கொண்டுபோய் விடக்கூடும் என்பதே இதன் கருத்து!
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள புதன் மற்றும், இதர கிரகங்களும், சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், மாணவ - மாணவியர் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பார்கள். உயர் கல்விக்கு உதவிகள் உங்களைத் தேடி வரும். ஒருசிலருக்கு, ெவளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில்வதற்கும், சாத்தியக்கூறு உள்ளதை, கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: ஜீவன காரகரான சனி பகவான் மற்றும் செவ்வாய், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் சுப பலம் பெற்று, சஞ்சரி்ப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையைச் சரி செய்துகொள்ள ஏற்ற தருணமிது! நழுவ விட்டுவிடாதீர்கள்!! கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிப்பதில் பிரச்னை ஏதும் இராது. தசா புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய பசுக்கள், காளைகள், ஆடுகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. சிறிது முயற்சி செய்தால், எதிர்காலத்திற்கென்று சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளது.
பெண்மணிகள்: கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றன. குறிப்பாக, பெண்களின் நலன்களுக்கு அதிகாரம் கொண்டுள்ள சுக்கிரன், சுப பலம் பெற்றுள்ளதால், புதிய ஆடை - ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். உங்களுக்கு நன்மை செய்வதில், சனி பகவானும் சேர்ந்துகொள்கிறார். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, மனதிற்கேற்ற மணாளன் அமைவார். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வரும் பெண்மணிகளுக்கு, நல்ல குணம் ஏற்படும்.
அறிவுரை: கற்பனையான குடும்பக் கவலைகளைத் தவிர்த்தல் அவசியம்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால், மிகச் சிறந்த பலன் கிட்டும். இதை அனுபவத்தில் காணலாம்.தினந்தோறும் காகத்திற்கு நெய், பருப்பு, சேர்த்த ஐந்து சாத உருண்டைகள் வைத்துவந்தாலும் போதும். நல்ல பரிகாரமாக அமையும்.


