6.03.2026
மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை
குடும்பம்: இதுவரை மனைவியையும், மனை-வாழ்க்கையையும் குறிப்பிடும் களத்திர ஸ்தானமாகிய, கும்ப ராசியில் சஞ்சரித்துவந்த சனி பகவான், இப்போது ஆரோக்கியம், மனநிலை, பிரயாணம் ஆகியவற்றைக் குறிக்கும் மீன ராசிக்கு மாறுகிறார்! "அஷ்டம ஸ்தானம்" என்பது, உடல் நலனையும், நோய்களையும், அலைச்சல்களையும், கவலைகளையும் குறிப்பிடும் ராசியாகும். ஜோதிடக் கலையின் விதிகளின்படி, சனி பகவான், ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது, உடல் ஆரோக்கியக் குறைவும், தேவையற்ற வீண் அலைச்சல்களும், கணவர் - மனைவியரிடையே ஒற்றுமைக்குறைவும் ஏற்படக்கூடும். ஆயினும், மீனம், குரு பகவானின் ராசியாக இருப்பதால், சோதனைகள் அளவோடுதான் இருக்கும்! எத்தகைய வீரியம் கொண்டுள்ள கிரகமானாலும், குரு பகவானின் ராசியைக் கடக்கும்போதும், குருவின் சுபப் பார்வை கிடைக்கும்போதும், தங்கள் வீரியத்தைச் சற்று இழப்பதாக "ஜோதிட ரத்னாகரம்" அறுதியிட்டுக் கூறுகிறது. சனிக்கு, குருவின் பார்வை கிடைப்பதால், கிரகங்களின் தோஷம் குறைகிறது. ஆதலால், சனியால் ஏற்படும் தோஷமும் குறைந்துவிடுகிறது. விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், தவறான வரனை நிச்சயித்துவிடும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். வரன் அமைவதிலும், குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
உத்தியோகம்: உத்தியோகத் துறையினருக்கு, பணிச்சுமை சக்திக்கு மீறியிருக்கும். சிலர் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும். ஆயினும், அதற்காக பிரத்யேக ஊதியம் ஏதும் கிட்டாது. அதன் காரணமாக, அலுலகப் பணிகளில் வெறுப்பும், விரக்தியும் ஏற்படும். அந்நிய நாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு, மேலதிகாரிகளினால், தொல்லைகள் உண்டாகும். தாய்நாடு திரும்பிவிட மனம் விழையும். உத்தியோகத்தை விட்டுவிடலாம் எனும் அளவிற்கு மனதில் விரக்தி ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சித்து வருபவர்களுக்கு, இடைத்தரகர்களை நம்பி பணத்தை இழக்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: சந்தையில், நியாயமற்ற போட்டிகள் மிகவும் கடுமையாக இருக்கும். வங்கிகளின் கண்டிப்பினால், பணப் பிரச்னை ஏற்படக்கூடும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பணம் மேலும் தாமதப்படும். இதனால், அடிக்கடி பணப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இது பணப் பிரச்னையின் கடுமையை மேலும் அதிகமாக்கும். புதிய கிளைகள் திறப்பதில், புதுப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். வெளியூர்ப் பயணங்களினால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். எதிர்பார்த்திருந்த நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். "நிச்சயமாக நமக்குக் கிடைக்கும்" என்றிருந்த லாபகரமான சந்தர்ப்பங்கள், ஏமாற்றத்தையளிக்கும்.
கலைத் துறையினர்: வாய்ப்புகள் குறையும். நடிப்புத் துறையினருக்கு, வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதப்படும். கிடைக்கும் சந்தர்ப்பங்களிலும், எதிர்பார்த்திருந்த அளவிற்கு வருமானம் கிடைக்காது. மக்களிடையே செல்வாக்கு குறையும். வெளிநாடு சென்று, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள், கடைசி விநாடியில் கைநழுவிப் போகும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, எதிர்பார்த்த அளவிற்கு படங்கள், மக்களிடையே வசூலைப் பெற்றுத் தராது. போட்ட பணத்தை எடுப்பதே பிரச்னையில் முடியும்.
அரசியல் துறையினர்: உங்கள் அரசியல் வாழ்க்கையில், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணமிது!
மாணவ - மாணவியர்: சிம்மராசிக்கு 8-ம் இடமாகிய மீன ராசியில் சனி பகவான் மாறியிருப்பதாலும், கல்விக்கு அதிபதியான புதனும், அவருக்குத் துணை நிற்கும் கிரகங்களும், பலம் குறைந்து சஞ்சரிப்பதாலும், படிப்பில் முன்னேற்றம் பாதிக்கப்படும். பாடங்களில் மனத்தைச் செலுத்துவது கடினமாக இருக்கும். விடுதிகளில் தங்கி, படித்துவரும் மாணவ - மாணவியருக்கு, பணப் பிரச்னை கவலையை அளிக்கும். உயர் கல்விக்கு எதிர்பார்த்திருந்த பண உதவி ஏமாற்றத்தில் கொண்டு விடும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் சாதகமாக இல்லை! இதன் விளைவாக, குறித்த காலத்தில் மழை பொழியாது!! கடினமான தண்ணீர்ப் பிரச்னையினால், பயிர்கள் வாடி - வதங்கும். பழைய கடன்கள் நீடித்து, கவலையை அளிக்கும். கால்நடைகளின் பராமரிப்பிலும், பணம் சக்திக்கு மீறி செலவழியும். நிதி நிறுவனங்களின் நிபந்தனைகள் கடுமையாக இருக்கும். பழைய கடன்கள் நீடிப்பதால், அந்தக் கவலையும் மனத்தை அரிக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் வெற்றிக்கு உண்மையான காரணம், அவர்களது பொறுமையே ஆகும். இவ்வுண்மையை, மிகக் குறுகிய காலகட்டத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முதல் பிரச்னை, தேவைக்குக் குறைவான வருமானத்தில், குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்பதே! இரண்டாவது பிரச்னை, நெருங்கிய உறவினர்களுடன் ஏற்படும் கருத்துவேற்றுமை, வாக்குவாதம் போன்றவை! இவை போதாதென்று, சிறு, சிறு உடல் உபாதைகளையும் சமாளித்தாக வேண்டும்.
அறிவுரை: பொறுமை, சகிப்புத் தன்மை அவசியம். பிறருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காகங்களுக்கு சிறிதளவு நெய், பருப்பு, கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைப்பது நல்லது.


