search-icon-img
featured-img

விருச்சகம்

Published :

6.03.2026

விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை

குடும்பம்: விருச்சிக ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய மீனத்திற்கு மாறியிருக்கிறார், சனி பகவான்! அஷ்டம ஸ்தானத்தில் (8-ம் இடம்) குரு பகவான் அமர்ந்து, அந்தச் சனியையும், சுக்கிரனையும் பார்க்கிறார். வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். ஆயினும், பெரும்பான்மையான செலவுகள் சுபச் செலவுகளாகவே இருப்பது மனத்திற்கு நிறைவைத் தரும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக, அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமை குறையும். சிறு விஷயங்களுக்குக்கூட, வாக்குவாதம் ஏற்பட்டு, மன நிம்மதி பாதிக்கப்படும். வெளியூர்ப் பயணங்களில் ஏமாற்றமே மிஞ்சும். என்றோ பட்ட கடன்களும், கவலையை அளிக்கும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளிச் செல்லவேண்டிய அவசியத்தால், குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்க இயலாது. ஒருசிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறும் உள்ளது. திருமண முயற்சிகளில், தடங்கல்களும், தாமதமும் உண்டாகும்.

உத்தியோகம்: சனி பகவானால் ஏற்பட்டுவந்த அர்த்தாஷ்டக சஞ்சார தோஷம் நீங்கிவிடுவதால், அலுவலகச் சூழ்நிலையில் நிம்மதி உண்டாகும். பணிச் சுமை குறையும். உங்களுக்கு, தொல்லை கொடுத்துவந்த, மேலதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதால், மனதில் நிம்மதி பிறக்கும். வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, நல்ல செய்தி கிடைக்கும். இதுவரை மறுக்கப்பட்டு வந்த பதவியுயர்வினை இப்போது எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்த வேலை கிட்டும். வெளிநாடு சென்று பணியாற்ற ஆர்வமிருப்பின் அதனை நிறைவேற்றி வைப்பார் சனீஸ்வரன்! பணிகளில் கவனக் குறைவாக இருப்பதற்கும், தவறுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சிலருக்கு, இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படக்கூடும். கூடியவரையில் உடல் நலனில் சற்று கவனத்துடன் இருத்தலும் நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறையக்கூடும்.

தொழில், வியாபாரம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், சனி பகவான் சஞ்சரிப்பதால், செய்தொழிலில், அலைச்சலும், உழைப்பும் கடினமாக இருப்பினும், நல்ல லாபம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற கூலி கொடுப்பவர்தான் சனிபகவான். வேலை வாங்கினாலும், கூலி கொடுக்கும் நியாயமான எஜமானன் அவரே! சந்தை நிலவரம் கவலையை அளிக்கும். போட்டிகள் கடுமையாக இருக்கும். வங்கிகளின் கண்டிப்பு கவலையளிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து, வரவேண்டிய பாக்கிகள், நின்றுபோகும். தரக்குறைவான சரக்குகள், சந்தையில் மலியும். அதுவே உங்கள் விற்பனையைக் கடுமையாக பாதித்துவிடும். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு பாதிக்கப்படும். ஆதலால், பணப் பிரச்னை ஏற்படும். புதிய திட்டங்களைச் செயல் படுத்துவதில், பிரச்னைகள் உண்டாகும். வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள பணியாளர்கள், நியாயமற்ற ஊதிய உயர்வைக் கேட்பார்கள். ஆதலால், பல பிரச்னைகளை, ஒரேசமயத்தில் நீங்கள் சந்திக்கநேரிடும். மனம் நிம்மதியின்றி தவிக்கும்.

கலைத்துறையினர்: கலைத்துறை அன்பர்களுக்கு, சற்று சிரமமான காலகட்டமிது. நடிகை மற்றும் நடிகர்களுக்கு, வருமானம் குறையும். புதிய படப்பிடிப்புகளும், குறைவதால், வாய்ப்புகளும் பாதிக்கப்படும். தேடிவரும் வாய்ப்புகளிலும், எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் இராது. மக்களிடையே செல்வாக்கும் குறையும். படத் தயாரிப்பாளர்கள், படம் எடுக்கும் முன், கதையில் , கவனம் செலுத்துதல் அவசியம்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை, தனது ஆதிக்கத்தில் கொண்டுள்ள சுக்கிரனின், உச்ச வீடான மீனத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால், உயர்மட்டத் தலைவர்களுடன் கருத்து ஒற்றுமை ஏற்படக்கூடும். உங்கள் மீதுள்ள நம்பிக்கை கூடும். பிற கட்சிகளிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். மனவுறுதிக் குறைவினால், வேறு கட்சிக்கு மாற மனதில் விருப்பம் ஏற்படும். உங்கள் மனவுறுதிக்கு சோதனையான காலகட்டமிது. அவசர முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம். தவறான முடிவுகளினால், மனதில் அமைதி குறையும்.செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஓரளவே ஆதரவாக உள்ளதால், உங்கள் பேச்சிலும், கருத்துகளை வெளியிடுவதிலும், நிதானமாக இருத்தல் அவசியம். இல்லாவிடில், பிரச்னைகளில், அகப்பட்டுக் கொண்டு, அவதியுறக்கூடும். உயர்மட்டத் தலைவர்கள் உங்களைப் புறக்கணிக்கக்கூடும். மௌனம், பொறுமை, சாதுர்யம் அவசியம். மக்கள், மிகவும் கவனமாக உங்கள் சொற்பொழிவுகளை கவனித்துவருகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவ - மாணவியர்: சனி பகவானின் சஞ்சார நிலையினால், பாடுபட்டுப் படிக்க வேண்டி வரும். ஆசிரியர்களின் ஆதரவும் வழிகாட்டுதல்களும் குறையக்கூடும். சகவாச தோஷத்தினால், படிப்பில் கவனக்குறைவு உண்டாகும். கல்வித் துறைக்கு அதிபதியான புதன் உங்களுக்கு சாதகமாகவே சஞ்சரிப்பதால், சனி பகவானால் ஏற்படும் பாதிப்பின் கடுமை குறையும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ேநரடியான தொடர்புள்ள சனி பகவான், செவ்வாய், சூரியன், ஆகிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், விளைச்சல் திருப்திகரமாக இருக்கும். ஆயினும், சனி பகவான் வேலை வாங்கியே கூலி கொடுப்பவர். ஆதலால், வயல் பணிகள் சற்று கடுமையாக இருக்கும். உழைப்பிற்கேற்ற விளைச்சலைத் தந்தருள்வார், சனீஸ்வரர் கால்நடைகள் அபிவிருத்தியை அடையும். அண்டை நிலத்தாரோடு சுமுக உறவு நீடிக்கும். முயன்றால், அளவோடு புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு அதிகாரம் கொண்டுள்ள சுக்கிரன் , சுப பலம் பெற்று வலம் வருவதால், அனுகூலமான தருணம் இது, உங்களுக்கு!திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, மனத்திற்குப் பிடித்தமான நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணமாகியுள்ள பெண்மணிகளுக்கு, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

அறிவுரை: அளவிற்கு மீறிய வீரியம் நிறைந்த செவ்வாயின் ஆட்சிவீடாகும், விருச்சிகம்!! முன்-கோபம், உணர்ச்சிவசப்படுதல் ஆகியவற்றைத் தவிர்ப்பது நன்மை தரும் உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது!

பரிகாரம்: சனிக் கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வந்தால், கிடைத்தற்கரிய பலன் கிடைக்கும். இதனை அனுபவத்தில் காணலாம்.