6.03.2026
கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை
குடும்பம்: இதுவரையில், ஜீவன ஸ்தானத்தில், சஞ்சரித்துவந்த சனி பகவான், இப்போது லாப ஸ்தானமாகிய மீன ராசிக்கு மாறியிருப்பது, மிகவும் அனுகூலமான கிரக மாறுதலாகும்! இதே தருணத்தில், வாக்கு, தனம், குடும்பம் ஸ்தானத்தில் குரு பகவானும் சாதகமாக சஞ்சரிக்கிறார். வருமானம் உயரும். குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகளாகிய, நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, மகப்பேறு போன்ற சுபச் செலவுகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் ெவற்றி கிட்டும்.நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமையும், பரஸ்பர அந்நியோன்யமும் நிலவும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆயினும், வெளியூரில்தான் கிடைக்கும். ஒப்புக் கொள்வது உங்கள் எதிர்கால நலனிற்கு மிகவும்் உகந்ததாகும். கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழி பிறக்கும். வெளிநாடு சென்று, உயர் கல்வி பெற ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில், மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், பதவி உயர்விற்கும் அல்லது கூடுதல் சம்பளத்திற்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஒரு சிலருக்கு இடமாற்றமும் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. உங்கள் எதிர்கால நலனிற்காக அந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளுங்கள். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: ரிஷப ராசியினருக்கு, ஜீவனாதிபதி சனி பகவான்தான்!!ஆதலால்தான் இந்த ராசியினர், தங்கள் தொழில்களில் அபார திறமை கொண்டவர்களாக விளங்குவார்கள். கடினமாக உழைப்பவர்கள்!இந்த ராசியில் பிறந்தவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பும், வியாபாரத்தில் திறமைசாலிகளாகவும், வர்த்தகத் துறையில் பிரசித்திப் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சோர்வில்லாத உழைப்பும், லட்சுமி கடாட்சமும் கொண்டவர்கள். எந்த வர்த்தகத் துறையானாலும், துணிந்து முதலீடுசெய்து, வெற்றி பெறுவார்கள்.
கலைத்துறையினர்: மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது, உற்சாகத்தை ஏற்படுத்தும். வருமானம் உயரும். புதுப்படத் தயாரிப்பாளர்களுக்கு, லாபகரமான காலகட்டம் இது! ஒரு சிலருக்கு, வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உருவாகும். தற்போதுள்ள கிரக நிலைகளில் தயாரிக்கப்படும் அனைத்து படங்களும் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் கிட்டும். நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு அவர்களது பொருளாதார நிலையை சரிசெய்து கொள்ள ஏற்ற தருணமிது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றைத் தீர்த்து நிம்மதி பெறலாம். புதிய படங்களுக்கு, விருது கிடைப்பதற்கும் நல்ல வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
அரசியல் துறையினர்: அரசியல் துறை, திரைப்படத் துறை ஆகிய இரண்டுமே சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. இக்காலகட்டம் முழுவதும் சுக்கிரன், சுப பலம் பெற்று வலம் வருவதால், அரசியல் துறை அன்பர்களுக்கு, மக்களிடையே செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்குக் கட்சி மாற்றமும் ஏற்படக்கூடும்.
மாணவ - மாணவியர்: வித்யா காரகரான புதனும், இத்துறையுடன் தொடர்புள்ள இதர கிரகங்களும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர்! மாணவ - மாணவியர் தங்கள், தங்கள் பாடங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பரீட்சைகளில் இவர்கள் வாங்கும் மதிப்பெண்களைப் பார்த்தாலே இதனை உணர்ந்து கொள்ளலாம். சில மாணவ - மாணவியருக்கு வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பெறுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. உயர் கல்விகக்கு நிதியுதவி எளிதில் கிட்டும்.
விவசாயத் துறையினர்: பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும். தண்ணீர் வசதி குறைவில்லாமல் கிடைக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். மாநில அரசின் சலுகைகளும், உதவியும் கிட்டும். தற்ேபாது நடைபெறும் தசா - புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய விளைநிலம் வாங்குவதற்கும் வசதி ஏற்படும். சில விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சாத்தியக்கூறும் உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
பெண்மணிகள்: பெண்மணிகளின் பெரும்பான்மையான அம்சங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளவர், சுக்கிரன், அவர் தற்போது சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பெண்மணிகளுக்கு, மிகவும் அனுகூலமான காலகட்டமிது! இத்தகைய நல்ல தருணத்தில், சனி பகவானும் லாப ஸ்தானத்திற்கு மாறியிருப்பது, மிக நல்ல கிரக மாறுதலாகும். திருமணம் ஆகியுள்ள பெண்மணிகளுக்குக் குடும்பச் சூழ்நிலை மனநிறைவையளிக்கும். விவாகத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, மனத்திற்குத் திருப்தியும், உற்சாகமும் அளிக்கும் நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வயோதிகத்தினால், அவதியுறும் பெண்மணிகளுக்கு, உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அறிவுரை: சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். எதிர்காலத்திற்கென்று, சிறிதளவாவது சேமிப்பிற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளனர்.
பரிகாரம்: சனிக் கிழமைகளில் மட்டும் உபவாசமிருப்பது அற்புத பலனளிக்கும்.


