நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள்
கிருத்திகை - உத்திரம் - உத்திராடம்
"பொருள் மேன்மை யுண்டாம் குல
விறை கூடி நின்றுயர்த்த மேனிக் கேடகன்று
மெருகேருமன்றோ யில் - வாணிபமோங்கு
மன்றி வாட்டி நின்ற துக்கமுமகல பாரீர் -
விசய கும்பத்து குதூகலங்கூடி முயங்க
வூரகத் தானை உவந்து வண்டு"
-என்கின்றார் சிவபோகனார். குலதெய்வத்தின் சகாயத்தினால், தாமதமான காரியங்கள் இனி நடந்தேறும். பொருள் வரத்து அதிகரிக்கும். வியாபாரம் விருத்தி காணும். இதுவரை மனத்தை சங்கடப்படுத்திய கவலை அகலும். காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் குடி கொண்டுள்ள திரு ஊரகத்தானை நம்பி சரணடைய குதூகலம் சேரும் என்பதாம்.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம்
"மனைமாட்சி பெறுமே - கரம் விட்டகன்ற
தனமுந் திரும்புமே - வில்லங்கமொடு பகையும்
படப் பாரீர் பாரெல்லாம் வலம்வர வேது
வாம். மங்கையர் தம்மால் குலத்து சம்பத்
துண்டாம். தடையான விவாகமும் தடை
யறுபடவே மங்கள முண்டாமற்றியழிஞ்சி
விருட்சத்துறை சப்தகன்னியரை தொழ
முடியாததேது யிவ்வையத்தே"
-என்றார் பதஞ்சலியார். திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னிமார் பாளையத்தில் சப்த கன்னிமார் கோயிலில் உள்ள சப்த கன்னியரை இம்மாசியில் தொழுவது வெற்றிகரமான வாழ்வை தரும். இந்தக் கோயிலின் தலவிருட்சம் அழிஞ்சி மரம். தனவிருத்தியும், கைவிட்டுப் போன பொருள் திரும்பவும், தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவும் ஏதுவாகும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். தாமதமான விவாகம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பதாம்.
மிருக சீரிடம் - சித்திரை - அவிட்டம்
"மேலோர் நேசமுண்டாம் - பெண்
டிருக்கு சோதனை பலசேருமெனினும்
பின்னே விமோசனமாம் - விரையம் பற்பல
வழி வந்தாடும் - சற்றே கூரறிவு
கொண்டு ஜெயமே பெறலாகுமே
வைரியர் வகைவகையாய் தொல்லை
தர பின்னபாதை பெறலாகுமே -
திருவரங்கனை யாராதித்தே விமோச
னங் காணலாகுமே"
-சிவவாக்கிய சித்தர். நல்லவர்கள் வழிகாட்டுதலில் நாம் வெற்றியை அடையலாம். பெண்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பொருட்செலவு கூடும் என்றாலும் ஆராய்ந்து செய்ய, செலவினங்களை கட்டுக்குள் வைக்க முடியும். எதிரிகளை ஒதுக்குவது நல்லது. திருவரங்கம் அரங்கநாதனை தொழுது வர நன்மை நிறைய எய்தலாகும்.
திருவாதிரை - சுவாதி - சதயம்
"தர்மகர்ம பலன் சேருமன்றோ: வாதமதனை
தவிர்த்தே நிற்ப நன்றாம் - பயணங்கள்
தம்மை தவிர்த்தலே மேலாம் கள்வரால்
யந்நியரால் தொல்லையு நட்டமுங் காண
லாகுமன்றி விரையமு பலவழி வந்திடப்
பாரீர் - அதிகாரத் திருப்போரை யனுசரணை
கூத்தாடி நின்று மேன்மை எய்தலாமே-
பயிரவப் பூசை கண்ட காலத்து செய்தின் பமெய்தலாமே."
-முன் வினையால் மேன்மை பெறும் மாதம் இது. வாக்குவாதம், கருத்து மோதல்களை விலக்கி பொறுமை காப்பது மேன்மையாகும். தீயவரால் தொல்லை வர வாய்ப்பு உண்டு. ஆதலால் அதிக எச்சரிக்கை நன்மை தரும். மேலதிகாரிகளை அனுசரித்து போவது சிறப்பு. பைரவ சுவாமி வழிபாடு உகந்தது என்பதாம்.
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி
"பந்தங் களினாலிறக்க முண்டாம் மெய்யொடு அகவருத்தஞ்
சேரு மென் றறி -வாணிப மேற்றமாயினுஞ் சஞ்
சலக்கேடில்லை -யலைந்துண்ணவே நேருமென் றறிவீரே -
நூதனப் பணி சேர வித்திடலாகுமே -
பட்ட துயரமெல்லாங் கல்விக் கென்றிருப்
பீரே- மாதவ துர்க்கை தனை வழிபட்டு
பெருமை பெறலாமே."
-பொய்யாமொழிச் சித்தர். உறவுக்காரர் களிடம் கவனத்துடன் பேசுதல் நன்மை சேரும். உடல் உபாதை உண்டாகும். மனசஞ்சலம் காணும் என்றாலும் மாதப் பிற்பகுதி விமோசனம் கிட்டும். வியாபாரம் கூடும். பொருள் வரத்து காணும். ஆனாலும் மனதில் சங்கடம் உண்டாகும். இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து பாடம் கற்றோம் என்று எண்ணி இன்புறலாமே என்கின்றார் பொய்யாமொழிச் சித்தர். விஷ்ணு துர்க்கை பூசையை தொடர்ந்து செய்துவர எதையும் சாதிக்க முடியும் என்பதாம்.
பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி
"கடனுபாதை குன்றுமடுத்து யுட்பகை
யொழிங் காலமிதுவே - அவதூறு தானகல
ஆட்சி பீடத்திருப்போராத ரவுங் கிட்டுமே
குருதி வழி மேன்மை சேறு மன்றி தொட்டது
துலங்குமே - பூமி மனை லாபஞ்சேர
அகத்தில் சற்றே சாந்தி சேரப் பாரு
மாடு கன்று விருத்தியுமுண்டாமற்று யாபரண
ரதங் கூடுந் தானே - கணநாதனை நாளோறும்
வணங்கி வர வையத்து மேலாய் வாழ லாகுமே."
-பாம்பாட்டிச் சித்தர். பகையும், கடன் உபாதையும் இனி விலகி மறையும். இதுவரை குற்றமும் குறையும் கூறி நின்றவர்கள் நம்மைப் பாராட்டுவர் என்று நிம்மதி அடையலாம். வீடு கட்டுதல், மராமத்து பணி செய்தல், திட்டமிடுதல் போன்ற சுபமான செயல்கள் நடக்கும். விநாயகப் பெருமானை அனுதினமும் சென்று தொழுதுவர இப்பூமியில் சிறந்து வாழலாகும் என்பதாம்.
ஆயில்யம் - கேட்டை - ரேவதி
"மூத்தோர் தோசமொடு சாபமகற்று
வீர்-பித்ரு தோசத்தால் தடையிருப்ப
யுறவு பலம் கூடாது விளங்குதே -
தனமேன்மை தடையானதே - தாமதமாகியே
கால விரையமு மாக கலக்கமுண்டே -
மூதாதையராஸ்தி விரயங் காணப் பாரு -
பல மேன்மை தோசமறுபட கூடுமன்றோ -
சுயநலங் கொண்டிருப்ப வில்லங்கமில்லை
யென்போமே - அஞ்சன புத்திரனனுமனைத்
தொழ யுயர் மேன்மை யுண்டிம்மையிலேயே"
- கொங்கணச் சித்தர். கொங்கண கோமான் என்று சிவபெருமானால் பாராட்டப்பட்டவர் வாக்கு இது. குடும்பத்தில் நீண்ட காலமாக இருக்கும் சாபத்தை அகற்றவும், பித்ரு தோஷத்தால் பெரிய முன்னேற்றமின்றி விளங்கியது இனி மாறும். பெரியோர் தேடிய பூர்வீக சொத்து விரயமாகும். தன் வேலையை மட்டுமே பார்த்து கவனமாக வாழ்தல் நன்று. வீண் விவாதம் வேண்டாம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்ல விமோசனத்தைத் தரும் என்பதாம்.
அசுவினி - மகம் - மூலம்
"வியாச்சியத்தாலுந் தொல்லை கூடும்
கீர்த்திக்குக் குறைவில்லை - தனமது
பலவழி வரினுமோடும்
மெய் சஞ்சலஞ் செயும் - நல்லோரோடு
இணங்கி கூட்டுச் செய்தே பெருங்
கீர்த்தி பெற யடிதட்டுங் காலமிது -
தன்னைத் தாசானாக்கி நிற்ப குறை
யேதியம்பு - பைரவி யன்னை யிருக்க
பாரினிலுமக்கு சறுக்கேது விடு"
-கொங்கணச் சித்தர். கோர்ட், பஞ்சாயத்து என்று மனதில் பயம் வந்தாலும் அதனை பொருட்டாக எண்ண வேண்டாம். வெற்றி நிச்சயம். பெரிய பாராட்டும் கீர்த்தியும் அண்மையில் உண்டாகும். பற்பல வழிகளில் தனச்சேர்க்கை உண்டாகும். கூட்டுச் சேருகையில் உங்கள் சொல்லுக்கே முக்கியங்கிட்டும். இதனால் வாழ்வில் இதுவரை கிடைக்காத புகழ் பெற ஏதுவாகும். பிறர் ஆலோசனைகளை தவிர்த்து தமது கருத்துப்படி முடிவு செய்து காரியம் செய்ய எந்தக் குறையும் இன்றி இலக்கை அடையலாம். அன்னை பராசக்தி வழிபாடு மிக நன்று.
பரணி - பூரம் - பூராடம்
"சுக சீவனத்துக் காதாரமாகுமே-
மந்த யோகமிருக்க மந்தனைத்
தொழுதுமெழு - ஆகாததேதுமின்றியே
வாழலாகுமே - புண்ணிய கருமஞ் செய்ய
லாகுமே - பிறர்க்குழைக்கலாகுமே
பொருட்பீடை யுண்டாக பெரு விரயமுங்
கூடுமே - அயலார் பணி நோக்கி
யின்பமெய்திடுவீரே - பெண் நேசமத
னாலே விரையு மபகீர்த்தியுங் காணுமன்றோ?
மெய் ரணமாகு மகமுஃதே - அயிலைத்
திருமகளுடனமர் வாராகனைத் தொழவிம்
மண்ணில் சீருடன் வாழப் பாரீரே"
- சூதமுனிச் சித்தர். மதுரை மாவட்டத்து அயிலாங்குடியில் வீற்றிருக்கும் லட்சுமி வராகப் பெருமானை தொழுது எழ, இந்த பூமியில் பற்பல சுகங்களை கொண்டு வாழலாம் என்கின்றார் சித்தர். சனிபகவானைத் தொழுது மேன்மை எய்தலாம். மனதிற்கும், உடலுக்கும் சற்று சங்கடம் தோன்றி மறையும். புண்ணிய கார்யங்கள் பற்பல செய்ய முற்படும் மாதமிது. பிறர்க்கு உதவி புரிந்தே சுகப்படுவீர்கள். பணச் சங்கடங்கள் ஏற்படும். வீண் செலவினங்கள் வந்து சேர்ந்து பின் மறையும். இறைவழிபாடு சாந்தியை தரும் என்பதாம்.
"கும்ப மையத்து புதனொடு சுங்கனுமே
மகரமேற சிவபூசை ராவிழித்துச்
செய்த பேருக்கு ஏற்றங் காணும்
தனமொடு தக்க கீர்த்தியும்
பிணியறுபட்டு வாழ்நாள் விருத்திபெற
ஏவலுஞ் சூனியமுமின்றி விடுபட்டு
சிவனாசி தன்னாலின்புற்று வாழ்வரிது
சத்தியமே"
-என்கின்றார் அகத்தியர். புதனும் சுக்கிரனும் மகரத்தில் மாறிய பின் மகா சிவராத்திரி வருகிறது. இந்தத் திருநாளில் இரவு கண் விழித்து சிவபூசை செய்பவருக்கு சிவபெருமான் அருளினால் நோயற்ற வாழ்வும், கீர்த்தியும் புகழும் மேலோங்கி, ஏவல் பில்லி சூன்யம் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற்று பெரும் தனப் பிராப்தி கொண்டு இன்புற்று வாழலாம் என்கின்றார் அகத்தியர்.
நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.