“உங்கள் கணவரின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தியை நீங்கள் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். உங்களிடம் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. அவருக்கு வந்திருக்கும் நோய் மிகவும் அரிதானது. லட்சத்தில் ஒருவருக்குத்தான் இப்படி வரும்,” என்று டாக்டர் சொன்னதிலிருந்து கவலையில் உறைந்துபோனாள் ஜெயந்தி.
“எல்லா சிக்கல்களுக்குமே ஒரு தீர்வு இருப்பதுபோல இந்த நோய் குணமடையவும் ஒரு ஆபரேஷன் இருக்கு மேடம். மலேசியன் டாக்டர்கள்தான் இந்த வகை ஆபரேஷன்ல ஸ்பெஷலிஸ்ட். நீங்க அங்க போறதா இருந்தா நான் எழுதித் தர்றேன். போன்லயும் பேசிடறேன்.
தமிழ் நாட்டுக்குள்ளனா வேப்பேரில ஒரு டாக்டர். அர்த்தநாரின்னு பேரு. அவரை சாதாரணமா பிடிக்க முடியாது. அப்பாய்ன்மென்ட் வாங்கறதுக்கே ஒரு மாசம் அலையணும். அதுக்கப்புறம் அவர் டேட்ஸ் பிக்ஸ் பண்ணி ஆபரேஷன் பண்ண லேட் ஆகும். ஆனா இது பைபாஸ் சர்ஜரியைவிட மோசமானது. அவ்ளோ டைம் எடுத்துக்க முடியாது. சடார்னு என்ன வேணா ஆயிடலாம். “ மலேசியா போய் ஆபரேஷன் செய்ய காசு பொரட்டியாகணும் மேடம், அதற்கு மினிமம் டைமாவது வேணும்...’’ டாக்டரிடம் வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டே கேபினை விட்டு வெளியில் வந்துவிட்டாள் ஜெயந்தி.
“முருகா இது என்னப்பா எனக்கு இவ்வளவு சோதனை! காலம்பூரா உன் காலடியில் கிடக்கிற எங்களுக்கு இது மாதிரி தாங்க முடியாத கஷ்டத்தை எல்லாம் ஏம்ப்பா கொடுக்கறே? எனக்கு உன்னை விட்டா வேற கதி இல்லப்பா. நீதான் இதிலிருந்து தப்பிக்க வழிகாட்டணும்” பூஜை அறைக்குள்ளேயே புழு ங்கிக்கொண்டு கிடந்தாள் ஜெயந்தி. மீரா, கிருஷ்ணனின் மீது அன்பு கொண்டிருந்த மாதிரி, குழந்தையிலிருந்தே ஜெயந்தி, முருகா, முருகா என்று கசிந்து உருகுவாள். சின்ன வயதிலிருந்தே முருகன்தான் அவளுடைய இஷ்டதெய்வம். எதற்கெடுத்தாலும் முருகா என்று உச்சரித்து விட்டுத்தான் தொடங்குவாள்.
பரீட்சை எழுதுவது, பாத்திரம் தேய்ப்பது, கோலம் போடுவது, கொல்லை கூட்டுவது, காபி குடிப்பது, கடைக்குப் போவது என்று எது செய்தாலும் முருகா, முருகா என்று வேலையும், மயிலையும் வணங்கி விட்டுத்தான் தொடங்குவாள். ஜெயந்தி, சுதாகரனைக் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டாள். முதல் நான்கு வருடங்கள் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. விஷாலும், விசுதாவும் பிறந்த பிறகு குடும்பம் இன்னும் சந்தோஷம் பூங்காவாகத்தான் பூச்சொரிந்தது. யார் கண்பட்டதோ தெரி வில்லை, இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்னை ஆரம்பித்தது.
ஒரு நாள் விஷாலையும், விசுதா வையும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்ப அழைத்து வரும் போது “நெஞ்சு வலிக்கிறது” என்று படுத்துக் கொண்டான் சுதாகரன்.
சாதாரண வாயுத் தொந்தரவாகத்தான் இது இருக்கும். ஒரு ‘ஒமீ’ போட்டா ஒரு நாள்ல சரியாகிப் போய்விடும் என்றுதான் ஆங்கில மருத்துவத்தை ஆரம்பித்தார், டாக்டர். ஆனால், அன்று ஆரம்பித்த பிரச்னை இன்றுவரை இழுத்துக்கொண்டெ போகிறது. “என்ன நோய்னே தெரியாம ரெண்டு வருஷமா இஷ்டத்திற்கு மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கீங்க. அதுவே இப்ப ஒத்துக்காமபோய், வாய்லேந்து வயிறு வரைக்கும் புண்ணாயிடுச்சி.
முதல்ல அதற்கு வைத்தியம் பாக்கணும்,’’ என்றார் டாக்டர். ஆனால், ஆறுமாத ஆராய்ச்சிக்குப் பிறகுதான் சுதாகரனுக்கு இருதயத்தில் சிறு ஓட்டை இருப்பதாக குண்டைத் தூக்கிப் போட்டார். ‘‘அந்த ஹோல் ரொம்பவும் சின்னதா இருக்கறதுனாலதான் உடனடியாக கண்டுபிடிக்க முடியலே...’’ ஜெயந்தியின் அப்பா, கடவுள் மீது பாரத்தைப் போடச் சொன்னார். “திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போ. அவர்தான் உன் இஷ்ட தெய்வமாச்சே! அங்க நீங்க ரெண்டு பேரும் மாங்கல்ய பூஜைல கலந்துகிட்டு சேவல் வாங்கி தானம் கொடுத்துட்டு வாங்க. உன் வீட்டுக்காரருக்கு ஆயுசு கெட்டியாயிடும். எல்லாம் நல்லபடியா நடக்கும், கவலைப்படாதே.’’
திங்கட்கிழமை அதிகாலை பூஜையில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமையே சுதாகரனை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் வந்துவிட்டாள் ஜெயந்தி. ஆனால் மாங்கல்யபூஜை நடத்தும் ஜெகந்நாதக் குருக்கள்தான் பெரிய அதிர்ச்சியைத் தந்தார்: ‘‘நாளைக்கு யாரோ மினிஸ்டர் திடீர்னு வாராளாம். அதனால நாளைக்கு நடக்க இருந்த பூஜை, யாகம் எல்லாம் அடுத்த திங்கட்கிழமைதான் நடக்கும். நாளைக்கு காலைல வழக்கமா நடக்கற பூஜைக்கே மினிஸ்டரையும் அவாளுக்கு தெரிஞ்சவாளையும் மட்டும்தான் அலவ் பண்றாளாம். பிறருக்கு அனுமதி இல்லையாம்...’’
இது பெரிய அபசகுனமாகவும், தடையாகவும் பட்டது ஜெயந்திக்கு. அங்கேயே உட்கார்ந்து அழத்தொடங்கிவிட்டாள். ‘‘முருகா, எனக்கு ஏன் இவ்வளவு சோதனை? தயவு செஞ்சு கருணை காட்டு.’’ கோயிலுக்குப் பின்புறம் கடலைப் பார்த்துக்கொண்டு அழுதாள் ஜெயந்தி. சுதாகரன்தான் தேற்றினான். ‘‘நீயே இப்படி அழுதா நான் என்ன செய்வேன் ஜெயந்தி? ப்ளீஸ் அழாத. என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும்.’’ ‘‘உங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா, நான் அதை தாங்கிகிட்டு இருக்க மாட்டேன். கந்தா உன் காலடிக்கு கூப்பிட்டுக்கோன்னு சொல்லிவிட்டு இதோ இந்தக் கடல்ல விழுந்து செத்துருவேன்.”
‘‘முருகா, முருகான்னு உருகற நீ முருகன் மேல வெச்சிருக்கிற நம்பிக்கை அவ்வளவுதானா ஜெயந்தி?’’ “எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே தெரியலீங்க. ஆபரேஷனுக்கு உடனடியா மலேசியா கௌம்பியாகணும். அதற்கு காசு பொறட்டணும். இந்த பூஜை நடந்து அதுல கலந்துகிட்டு இருந்தா அது ஒரு திருப்தியா இருந்திருக்கும். அதுவும் முடியல. மனசுக்குள்ளே ஏதோ பயமாவே இருக்குங்க,” அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு குமுறினாள் ஜெயந்தி. பிறகு ஆறுதல் பெற்று, ‘‘வாங்க, அந்தி கால பூஜை ஆரம்பிக்கற நேரம். வந்ததுக்கு திருப்தியா சாமி கும்பிட்டுட்டு ஊருக்குப் போய்டுவோம். மலேசியா போறதுக்கு நான் எங்க பெரியப்பா கிட்ட போய் காசு கேட்டுப்பாக்கறேன்”என்ற ஜெயந்தி, அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
கருவறையை ஒட்டிய அர்த்த மண்டபத்தில் மூலவருக்கு மிக அருகில் உட்கார்ந்து கொண்டார்கள். இவர்களுக்கு எதிரே வெளியூரி லிருந்து வந்த இன்னொரு குடும்பம் சிறப்பு தரிசனத்திற்காக உட்கார்ந்திருந்தார்கள். “இவா சென்னைலேந்து வந்திருக்கா, ஒரு லட்சார்ச்சனை இருக்கு. அவாளோட சேர்ந்து நீங்களும் திருப்தியா வேலனை சேவிச்சுக்கோங்க...” அர்ச்சகர் ஜெயந்தியிடம் சொல்லிவிட்டு பூஜையில் ஆழ்ந்தார். சுதாகரன் சோர்வாக கண்களை மூடிக் கொண்டான். ஜெயந்தி கந்தர் சஷ்டி கவசத்தை மனசுக்குள் ஆழ்ந்து பாடினாள். “எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும் முருகா.
நானாக எதையும் கேட்க மாட்டேன்’’ என்றும் முருகன் மீது மனசுக்குள் உரிமையாகக் கோபம் கொண்டாள். எல்லாவற்றிற்கும் பதிலாக ஒரு புன்னகை மட்டும் முருகப்பெருமானிடம் இருந்து கசிந்து கொண்டிருந்தது. பூஜை முடித்து தீபத்துடன் கருவறையிலிருந்து வெளிவந்தார் குருக்கள். கண்களில் ஒற்றிக் கொண்டாள் ஜெயந்தி.
“இவா ஆயிரம் பேருக்கு மாங்கல்ய தானம் தர்ரதா வேண்டிண்டு இருந்தா. இதோ பூஜை முடிஞ்சிருச்சு. நீங்க முதல்ல ரெண்டு பேருமா சேர்ந்து அவா கையால மாங்கல்ய பாக்கெட்டை வாங்கிக்கோங்கோ,’’ இரண்டு பெரிய தாம்பாளங்களில் குவித்து வைத்திருந்த ஒரு மாங்கல்ய பையை எடுத்து நீட்டினார், அர்ச்சகர்.
‘‘ஆண்டவன் சந்நதியில், அவன் முன்னாடி வாங்கறேள். உங்களுக்கு அதிர்டம்தான். முருகப்பெருமானே எடுத்துக் கொடுக்கற மாதிரி ஐதீகம். வாங்கிக்கோங்கோ. தீர்க்க சுமங்கலியா இருப்பேள்.’’ என்றார் குருக்கள். இரண்டு கைகளையும் உயர்த்தி, ஜெயந்தி-சுதாகரனை ஆசீர்வதித்தார் அவர். உடம்பெங்கும் சிலிர்த்து அடங்கியது ஜெயந்திக்கு. “இதைவிட எப்படிங்க இறைவன் காட்சி கொடுப்பார்! நாம எதைத் தேடி வந்திருக்கோமோ, அதை என் முருகன் பிரசாதமாகக் கொடுத்திருக்கார், பாத்தீங்களா? ரொம்பவும் நம்பிக்கை தரும் சமிக்ஞைங்க.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, வேகவேகமா அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்தார் ஜெகந்நாதக் குருக்கள். “சுதாகரன் சார், உங்களைப் பார்க்கத்தான் ஓடி வந்தேன்...’’ என்றார். “என்ன விஷயம்னு தெரியலியே! ஒரு வேளை மினிஸ்டர் விசிட் கேன்சல் ஆயிருக்குமோ?” கேள்விக்குறியோடு ஜெகந்நாதக் குருக்களை பார்த்தான் சுதாகரன். அதற்குள் சென்னை குடும்பத்தினர் குருக்களை முகமலர்ந்து வரவேற்றனர். “விஷயம் தெரியுமோ? சென்னைலேர்ந்து வந்திருக்காளே, இவா யார் தெரியுமோ? இவாதான் நீங்க தேடிட்டு இருக்கற டாக்டர் - அர்த்த நாரீஸ்வரர்.
பெரிய கார்டியாலஜிஸ்ட். இவாளும் நாளைக்கு பூஜை பண்ணனும்னு கேட்டா. மினிஸ்டர் விசிட்டினால கேன்சல் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டேன். இவா திரும்பி வந்ததுக்கு அப்பறம்தான் எனக்கு உங்க ஞாபகம் வந்தது. அதான் ஓடி வந்தேன். உங்க பிரச்னையை இவாகிட்டே சொல்லுங்கோ. இங்கயே பார்த்து சொல்லிடுவார். அப்பாய்ன்மென்ட் வாங்கிடுங்க. உங்க அவசரத்தை இவரும் புரிஞ்சுப்பார்... பிறகு டாக்டரிடம் திரும்பி, “அம்பி, அர்த்தநாரி, இவாளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா. உன்னை மாதிரியே கந்தா கதிர்வேலான்னு காலமெல்லாம் உருகிண்டு கிடக்கறவா.
ஏதோ ஹார்ட் பிராப்ளம் சொல்றா....’’ என்றார். ‘‘பெரியவா நீங்க ப்ளீஸ்னெல்லாம் சொல்லக்கூடாது,’’ டாக்டர் சொன்னார். ‘‘நீங்க அம்பின்னு சொன்னாதான் அழகா இருக்கு.’’ சுதாகரனின் ஸ்கேன் ரிப்போர்ட், ட்ரீட்மென்ட் ரிப்போர்ட் எல்லாவற்றையும் வாங்கி அங்கேயே பார்த்தார் டாக்டர். இது ஓண்ணுமில்லயே, வெரி மைனர். உங்களைத் தேவையில்லாம பயமுறுத்தி யிருக்காங்க. சர்ஜரி அவசியம்தான்; ஆனா, பயப்படத் தேவையில்லை. ஆபரேசன் அன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆயிடலாம். இதுக்குப் போய் நீங்க மலேசியா, சிங்கப்பூர்னு எங்கயும் அலைய வேண்டாம்...’’
சிறிது நேரம் யோசித்துவிட்டு தொடர்ந்தார்: ‘‘நாளைக்கு பூஜை செய்ய ப்ளான் பண்ணிருந்ததால எனக்கு எந்த அப்பாய்ன்மென்ட்டும் இல்லை. திருச்செந்தூரிலேயே ஒரு ஹாஸ்பிடல்னு இருக்கு. என்னோட ஓல்டு ஸ்டூடண்ட்தான் அங்கே டீன். அங்கேயே ஆபரேஷனை வெச்சுக்கலாம். காலை பத்து மணிக்கு ஆபரேஷன்; சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிடறேன். உங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கவரேஜுக்கும் எழுதிக் கொடுத்துடறேன். காசு பணத்துக்காக எங்கயும் அலைய வேண்டாம்.....’’
‘‘புண்ணியமா சேர்த்துண்டு போறேப்பா அர்த்தநாரி. பகவான் உனக்கு நல்ல ஷேமத்தைக் கொடுக்கணும்,’’ என்று நெகிழ்ந்துபோய் சொன்னார் ஜெகந்நாத குருக்கள்.
“ரொம்ப, ரொம்ப நன்றி டாக்டர்,’’ என்று நாத்தழுத்தழுக்கச் சொன்ன ஜெயந்தி, கணவனைப் பார்த்து, ‘‘எனக்கு நல்லா தெரியும், முருகன் என்னைக் கைவிட மாட்டார்னு. பாத்தீங்களா?‘‘ என்று நிம்மதியுடனும், பெருமையுடனும் கேட்டாள். “உங்களைப் பார்க்கவே ஒரு மாசம் ஆகும்னு சொன்னாங்க. இப்படி திடீர்னு எங்க கண் முன்னாடி வந்து நிக்கறீங்கன்னா, இது கடவுளோட கருணைதான். இப்ப நீங்க வரல டாக்டர்; உங்க ரூபத்துல அந்த கந்தன்தான் வந்துருக்கான்,’’ கண்களில் நீர் மல்கச் சொன்னான் சுதாகரன். “சதமானம் பவதி ஸதாயுஷ் புருஷ்யக..” என்று அர்ச்சகர் மந்திரம் வாசித்து யாரையோ வாழ்த்திக் கொண்டிருப்பது மங்களகரமாக ஜெயந்தியின் காதுகளில் ஒலித்தது.
ஆதலையூர் சூரியகுமார்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.