காரி நாயனார் (18.2.2014)
திருக்கடவூர் என்னும் மறையோர்கள் வாழ்கின்ற வளமிகுந்த இப்பகுதியிலே காரி நாயனார் என்னும் புலவர் அவதரித்தார். புலமை மிக்க இச்சிவனடியார் தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறத்தினைப் பெற்றிருந்தார். இவர் சிந்தையிலே சங்கரர் இருக்க, நாவிலே சரஸ்வதி கொலுவீற்றிருந்தாள். திரு வெண்ணீற்றின் பெருமையை உணர்ந்து ஈசனையும், அவர் தம் அடியார்களையும் பேணி வந்தார். ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் திருப்பணிகள் பல செய்தார். ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம், தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை ஆக்கினார்.
மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற்றார். அவர்களுக்கு, அந்நூலின் தெள்ளிய உரையை நயம்படக் கூறினார். இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அவரைச் சிறப்பித்தனர். பொற்குவியலோடு, திருக்கடவூர் தி ரும்பிய நாயனார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். சிவன் கோயில்கள் பல கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு உணவளித்து பெரு நிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அகமகிழ்ந்தார்.
தமிழறிவால் நூல்கள் பல இயற்றி பெரும் பொருள் பெற்று அப்பொருளை எல்லாம் சிவாலயத்துக்கும், சிவனடியார்களுக்குமே வழங்கி பேரின்பம் பூண்டார். இவ்வாறு ஈசனை சிந்தையிலிருத்திய தொண்டர், திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாம் பூமாலையால் இரவும் பகலும் பாடிப் பணிந்தார். எம்பெருமான் தொண்டர்க்குப் பேரருள் பாலித்தார். தமது புகழுடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் அடைந்தார் காரி நாயனார்.
எறிபத்த நாயனார் (1.3.2014)
இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய கரிகாற் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை முடிசூட்டிக் கொள்ளும் சிறப்புக் கொண்ட ஊர் கரூர்! அவ்வூரில் மணி மண்டபங்களும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்து விளங்கின. அமராவதி என்னும் வற்றாத நதி ஒன்றும் வளம் கொழிக்க ஓடிக்கொண்டிருந்து. அந்நதியின் இருபுறங்களிலும் பெருந்தவசிகள் ஆசிரமம் அமைத்து அருந்தவம் செய்து வந்தனர். இந்நகரத்தில் ஆனிலை என்னும் ஓர் ஆலயம் அமைந்திருந்தது. எம்பெருமானுக்கு பசுபதீசுரர் என்றும், ஆனிலையுடைய மகாதேவர் என்றும் நாமங்கள் உண்டு.
இத்தலத்தில் எம்பெருமானை காமதேனு வழிபட் டமையால் இப்பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆனிலைப் பெருமானை வழிபட்ட அடியவர்கள் பலருள், எறிபத்தர் என்பவரும் ஒருவர். இவர் சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீறு எந்நேரமும் ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். ஜடா முடியிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும், உருத்திராட்ச மாலைகளை அணிந்திருப்பார். சிவனடியார்களுக்கு எவ்வித துயரமும் நேராவண்ணம் அவர்களைப் பாதுகாத்து வருவதைக் தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
அதற்காக எந்நேரமும் ஒரு மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டிருப்பார்; அடியார்களுக்கு இடர் செய்யும் பகைவர் மீது அதனை எறிந்து, அடியார்கள் துயர் போக்குவார். இது காரணம் பற்றியே அவருக்கு எறி பக்தர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. காலப்போக்கில் அவரது காரணப் பெயர் வழக்கிலே வேரூன்றி அவருடைய இயற்பெயர் மறைந்து போனது. எறிபத்தர் பக்தியோடு நல்ல வீரத்தையும் பெற்றிருந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். கள்வர்க்கும் அஞ்சமாட்டார். நாட்டு மன்னனுக்கும் நடுங்க மாட்டார். அவர் பரமனுக்கும், பரமனது அன் பர்களுக்கும் மட்டுமே தலை குனிந்து வணங்கி நிற்பார்.
அவ்வூரில் இவரைப் போலவே ஆனிலை பெருமானிடம் பேரன்பு பூண்டிருந்த சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் இருந்தார். இவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். வயது முதிர்ந்தவர். முக்கண்ணனுக்கு, முத்துப்பனி தூங்கும் பூக்களால் மாலைகள் தொடுத்துச் சாத்தும் சிறந்த தொண்டினை தவறாது செய்து கொண்டிருந்தார். மலர்களை மாலையாக்கி, மகாதேவனது அரவம் அணி செய்யும் மேனியில் அழகுறச் சாத்தச் செய்வார். அன்றைய தினம் புரட்டாசித் திங்கள், அஷ்டமி திதி. பசுபதீசுரருக்குத் திருவிழாவும் கூட. கைலாசமே கருவூருக்கு வந்தது போன்ற எழிற்காட்சி! அந்த அஷ்டமி திதியன்று வைகறைப்பொழுது வழக்கம் போல் சிவகாமியாண்டார் பூக்களைக் கூடையில் நிரப்பிக் கொண்டு மன நிறைவோடு ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.
அப்பொழுது அரண்மனைச் சேவகர்கள் அவ்வழியே பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் நீராட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று யானைக்கு மதம் பிடிக்க, அது கட்டுக்கடங்காமல் ஓடத் தொடங்கியது. அப்பொழுது அவ்வழியாக மலர்க் கூடையுடன் சிவகாமியாண்டார் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். மக்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடுவதையும், யானை மதம் பிடித்து ஓடிவருவதையும் கண்டு சிவகாமியாண்டார் பயந்து நடுங்கி, பூக்கூடையுடன் ஓட முயன்றார். அவரால் முடியவில்லை. அதற்குள் மதக்களிறு அவரை நெருங்கி விட்டது.
அது தனது துதிக்கையால் சிவகாமியாண்டார் தோளில் பிடித்திருந்த பூக்கூடையைக் கழியோடு பற்றி இழு த்து வீதியில் சிதறடித்தது. ஆனால், அவரை ஒன்றும் செய்யவில்லை. இந்த சமயத்தில், அவ்வழியே வந்து கொண்டிருந்தார் எறிபத்தர். அவரது காதுகளில் அந்தணரின் ஓலக்குரல் விழுந்தது. அவர் வேகமாக ஓடிவந்து சிவகாமியாண்டாரை அணுகி, நடந்த விவரம் கேட்டார். ‘சிவனடியார்களுக்கு வழி வழியாகப் பகையாக இருப்பது யானை ஒன்றுதான்; அதனை இப்பொழுதே கொன்று வீழ்த்துகிறேன்’ என்று சூளுரைத்தார். பட்டத்து யானை சென்ற திசை நோக்கி ஓடினார்.
இவர் சீறி எழுந்த காட்சி பெருங்காற்றும், வெந்தணலும் கலந்து பொங்கி எழுந்தது போல் இருந்தது ! எறிபத்தர் வேகமாக ஓடிச்சென்று யானையின் முன்னால் நின்றார். திடுக்கிட்டுத் தடுமாறிய யானை, அவரை நோக்கி துதிக்கையை உயர்த்தியபடி பாய்ந்தது. எறிபத்தர் கோபாவேசத்துடன், கோடாரியை எடுத்து பலமாக வீசி பூக்கூடையைப் பற்றி இழுத்த அந்தத் துதிக்கையைத் துண்டு பட்டுக் கீழே விழுமாறு செய்தார். அதுமட்டுமல்ல, தன்னைத் தடுக்க வந்த பாகனையும் வெட்டி வீழ்த்தினார். பட்டத்துயானை வெட்டுபட்டதை மன்னருக்கு அறிவித்தனர். இதைக்கேட்டு மன்னர் புகழ்ச்சோழர் மனம் பதறினார். அவரது கோபம் எல்லை மீறியது.
அக்கணமே எறிபத்தரைப் பழிவாங்கப் புறப்பட்டார். புரவியில் வேகமாக வந்த அவர், பட்டத்து யானை இறந்து கிடக்கும் இடத்தை அடைந்தார். யானையும் யானைப்பாகனும் கொலையுண்டு கிடப்பது கண்டு மனம் கலங்கிய மன்னர், அவர்கள் பக்கத்தில் கோடாரியும் கையுமாக கோபத்தோடு நின்று கொண்டி ருக்கும் எறிபத்தரையும் பார்த்தார். நெற்றியிலே திருநீறு, மேனியிலே திருநீறு, தலையிலே, கையிலே, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள்... இப்படி காட்சி தந்த எறிபத்தரைப் பார்த்தும் மன்னருக்கு எதுவுமே விளங்கவில்லை.
மன்னர் அவரைத் திருத்தொண்டராக எண்ணினாரே தவிர, கொலைகாரராக எண்ணவே இல்லை. உடனே, கூடியிருந்த மக்களிடம் ‘இக்கொலைகளைச் செய்தது யார்?’ என்று கேட்டார். அனைவரும் எறிபத்தரைச் சுட்டிக்காட்டினர். புகழ்ச்சோழர் வியப்பு மேலிட, எறிபத்தரைப் பார்த்தார். வீரமும் கோபமும் நிறைந்திருக்கும் அவ்வடியாரது முகம் கருணை பொங்க விளங்குவது கண்டு மேலும் கு ழப்பமடைந்தார். இப்படி கொலைகளைச் செய்யும் அளவிற்கு இத்தொண்டருக்குக் கோபம் வரவேண்டுமாயின் பட்டத்து யானை எவ்வளவு பெரும் தவறு செய்ததோ என்று யோசிக்க ஆரம்பித்தார்.
அரசர் குதிரையை விட்டுக் கீழே இறங்கி, எறிபத்தர் முன்சென்று அவரை வணங்கினார். ‘‘சுவாமி, இங்கு நடந்தவை பற்றி அடியேன் எதுவும் சரியாக அறிந் திலேன். உங்கள் முகத்தைப் பார்த்ததும்தான் உண்மை புரிகிறது, தங்கள் திருவுள்ளம் வருந்தும்படியான செயல் இங்கு நடந்துள்ளது என்று. ஐயனே, நடந்த தவறுக்குப் பாகனையும், யானையையும் தண்டித்தது போதுமா? அருள்கூர்ந்து உத்தரவிடுங்கள்,’’ என்று பணிவுடன் கேட்டார். ‘‘மன்னா, மதக்களிற்றையும், பாகனையும் கொன்றேன். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?
இறைவனுக்குப் பூச்சுமந்து சென்ற சிவகாமியாண்டார் என்னும் அந்தணரின் கையிலிருந்த மலர்க்கூடையைப் பட்டத்து யானை பிடித்து இழுத்து நிலத்தில் கொட்டி நாசப்படுத்தியது. இத்தகைய தகாத செயலைப் பட்டத்து யானை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த பாகனையும் கொன்றேன்,’’ என்று எறிபத்தர் சொன்னதைக் கேட்டு மன்னர் மேலும் வருந்தினார். பக்தியோடும், பயத்தோடும் மீண்டும் அந்த அடியாரை வணங்கினார். மன்னர் மனதில் தம் மீது ஏதோ ஒரு பெரும் பழி வீழ்ந்துவிட்டது போன்ற பெரும் சுமை ஏற்பட்டது.
அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ‘‘பட்டத்து யானை என்னுடையது. அது செய்த தவறுக்கு நான்தான் காரணம். தங்களைப் போன்ற சிவனருட் தொண்டர்களுக்குத் தாங்க முடியாத அளவிற்குக் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்துமாறு நடந்து கொண்ட நான் இனியும், இவ் வுலகில் இருந்து என்ன பயன்? நானும் தங்களால் தண்டிக்கப்பட வேண்டியவனே. ஐயனே, தயவு செய்து என்னையும் இவ்வாளால் தண்டியுங்கள்,’’ என்று கூறிய அரசர் தன் உடைவாளைக் கழற்றி அடியாரிடம் நீட்டினார்.
மன்னரின் ஈடு இணையற்ற உத்தமமான அன்பிற்கு முன்னால் தம் பக்தி எம்மாத்திரம் எ ன்று எண்ணி, நிலை தடுமாறிய எறிபத்தர், சட்டென்று உடைவாளை மன்னரிடம் இருந்து எடுத்துக் கொண்டார். தலை தாழ்த்தி, வெட்டுப்படுவதற்கு வாகாக வணங்கி நின்றார், மன்னரின் ஒவ்வொரு செயலையும் பார்த்து பதறிப்போனார் எறிபத்தர். அவரது உள்ளத்தில் இனம் தெரியாத ஒருவித உணர்ச்சி வெள்ளப் பிரவாகமாக ஓடியது ! ‘‘ஐயோ! எவ்வளவு தவறான செயல்களைச் செய்துவிட்டோம்! சமன் செய்து சீர் தூக்குவது போல், நேர்மை குன்றாது ஆட்சி புரியும் மன்னனின் மாண்பினை உணராது போனேனே!
உயர்ந்த பண்பும், பக்தியும் கொண்டுள்ள தொண்டருக்குத் துரோகம் செய்து விட்டேனே! திருவெண்ணீற்றுக்குத் தம் உயிரையே இழக்கத் துணிந்த இந்த பக்தனுக்கா பாதகம் செய்தேன்! இவர் அரசர் அல்ல, அடியார்களின் அன்பர். இவரது பட்டத்து யானையையும் பாகனையும் கொலை செய்தேனே! கொற்றவனாக இருந்தும் எனது கொலை பாதகத்திற்கு தண்டனை கொடுக்க எண்ணாது தம்மையே அல் லவா மாய்த்துக் கொள்ளப் பார்க்கிறார். இவர் அருள் வடிவ மானவர். அன்பின் திருவுருவமானவர். அகிலமே போற்றுதற்குரிய திரு அவதாரச் செம்மல்.
அரனாருக்கும், அவரது அடியார்களுக்கும் உண்மையிலேயே துரோகம் செய்தவன் நான். நான்தான் மடியவேண்டியவன். இவ்வாறெல்லாம் தமக்குள் எண்ணிப் புண்பட்ட எறிபத்தர், கையிலிருந்த உடைவாளால் தம் கழுத்திலே வைத்து அறுத்துக் கொள்ளப் போனார். எறிபத்தரின் செயல் கண்டு திடுக்கிட்டுப் போன மன்னன், ‘‘கற்றறிந்த அறிவுச் செம்மலே! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? இது கொடுமை, கொடுமை,’’ என்று கூறியவாறே, அவரது கையிலிருந்த உடைவாளை பற்றிக் கொண்டார்.
அவ்வமயம் அனைவரும் வியக்குமாறு விண்ணிலே பொன்னொளி பிறந்தது.
எம்பெருமானின் திருவருளினால் அசரீரி வாக்கு மண்ணில் இருந்தோர் கேட்கும் வண்ணம் எழுந்தது: ‘‘அன்பிற் சிறந்தவர்களே, உங்களுடைய தொண்டின் பெருமையை உலகெல்லாம் அறிந்துகொள்ளும் பொருட்டே இன்றைக்கு இவை அனைத்தும் நடந்தன.’’ இறைவனின் தெய்வ வாக்கைக் கேட்டு எறிபத்த நாயனாரும், மன்னரும் இறைவனைத் தியானித்தபடியே நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். இறைவனின் திருவருளால் இறந்த உயிர்கள் அனைத்தும் உயிர் பெற்றன. அதுபோலவே சிவகாமியாண்டார், பூக்கூடையிலும் பூக்கள் தானாகவே நிறைந்தன.
சிவகாமியாண்டார் எம்பெருமானின் திருவருளை நினைத்து மகிழ்ந்தவாறே, ஆனிலை அப்பரை வழிபடப் புறப்பட்டார். இந்நிகழ்ச்சி மன்னரையும், எறிபத்த நாயனாரையும் நண் பர்களாக்கியது. எறிபத்தர் வாள் களைந்து, சோழமன்னரின் தாள் பணிந்தார். சோழரும் அவரது அடி வீழ்ந்து வணங்கினார். சோழமன்னர், பட்டத்து யானை மீதேறி அரண்மனைக்குப் புறப்பட்டார். எறிபத்த நாயனார், நிலவுலகில் நெடுங்காலம் வாழ்ந்து திருத்தொண்டுகள் பல புரிந்தார். இறுதியில் எம்பெருமானுடைய சிவகணத் தலைவராகிப் பேரின்ப வீட்டில் வாழ்ந்தார். அதுபோலவே புகழ்ச் சோழனும் சிறப்புடன் ஆட்சி புரிந்து பேரின்ப வீடு கண்டான். சிவகாமியாண்டாரும் பரமனுக்குத் திருத்துழாய்க் கைங்கரியம் செய்து பூவுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து பிறவாப் பெருவாழ்வு பெற்றார்.
கோச்செங்கட் சோழ நாயனார் (25.2.2014)
வளம்மிக்க சோழநாட்டில் எழிலோடு காணப்படுகிறது, திருவானைக்காவல். இங்கே காவிரி நதி வற்றாது ஓடிக்கொண்டிருந்தது. காவிரியாற்றின் கரையிலே சந்தரதீர்த்தம் என்னும் பெயருடைய பொய்கை ஒன்று அமைந்திருந்தது. அப்பொய்கை கரையிலே குளிர்ச்சோலை ஒன்று உண்டு. அச்சோலையிலுள்ள வெள்ளை நாவல் மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. ஒரு வெள்ளை யானை நாள்தோறும் தனது துதிக்கையால் நீரும், மலரும் எடுத்துவந்து இந்த சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. இதனாலேயே அப்பகுதிக்குத் திருவானைக்காவல் என்ற பெயர் வழங்கலாயிற்று.
அங்குள்ள நாவல் மரத்தின் மீதிருந்த சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து லிங்கத்தின் மீது விழாதவாறும் நூற்பந்தல் அமைத்தது. வழக்கம்போல் சிவலிங்கத்தை வழிபட வரும் வெள்ளை யானை சிலந்தி வலையைக் கண்டு எம்பெருமானுக்குத் தூய்மையற்ற குற்றமான செயலை சிலந்தி புரிந்துவிட்டதே எனச் சினந்து கொண்டு நூற்பந்தலைச் சிதைத்துப் பின்னர் சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றது. வெள்ளை யானையின் இச்செயலைக் கண்டு வருத்தமுற்ற சிலந்தி, யானை சென்றதும் மீண்டும் முன்போல் நூற்பந்தலிட்டது.
இவ்வண்ணம் சிலந்தி வலை பின்னுவதும் யானை அதனைச் சிதைப்பதுமான செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே இருந்தன. ஒருநாள் சிலந்திக்கு கோபம் வந்தது. தான் கட்டும் வலையை அழித்திடும் யானையைக் கொல்ல முடிவு கட்டியது. வழக்கம்போல் சிவபெருமானை வழிபட வந்த யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடித்தது சிலந்தி. இதனால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. உள்ளிருந்த சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தி விஷம் தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது.
திருக்கயிலாய மலையில் சிவகணத்தவருள் புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் இருந்தனர். இவர்களுக்குள் சிவத்தொண்டில் தாமே சிறந்தவர் என்று கருதி ஒருவருக்கொருவர் பொறாமையும், கோபமும் கொண்டு கொதித்தெழுந்தனர். புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகப் பிறக்குமாறு சபித்தான். பதிலுக்கு மாலியவான் புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தான். இவ்வாறு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்த இரு சிவகணத்தவர்களும் எம்பெருமானுக்கு செய்த திருத்தொண்டால் வீடு பேற்றை எய்தினர். இறைவன் யானைக்கு சிவபதம் அளித்தார்.
சிலந்தியைச் சோழர் குலத்தில் உதித்து கோயில்கள் அமைத்துச் சிவத் தொண்டு புரிய அருள் செய்தார். யானையைக் கொல்லச் சிலந்தி முதலில் முயன்றதால் அதற்கு மட்டும் மறுபிறப்பு ஏற்பட்டது. சிலந்தியும், வெள்ளை யானையும் எம்பெருமான் அருளால் வீடுபேறு பெற்று முன்போல் சிவகணத் தலைவர்களாய் எம்பெருமானுக்குத் திருத்தொண்டு புரியலாயினர். சோழ அரசரான சுபவேதர், மனைவி கமலாவதியாருடன் சோழவளநாட்டை அரசு புரிந்து வந்தான். திருமணமாகி நெடுநாட்களாகியும் மக்கட் பேறு இல்லாமல் வருந்திய மன்னன் மனைவியாருடன் தில்லையை அடைந்து அம்பலவாணரது திருவடியை வழிபட்டு பெருத்த வமிருந்தார்!
கூத்தப்பெருமான் திருவருள் புரிந்ததற்கு ஏற்ப சிலந்தி வந்து கமலாவதியின் மணிவயிற்றில் கருவாய் அடைந்தது. மணிவயிற்றில் கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணம் நெருங்கியது. அப்பொழுது ஜோதிட வல்லுனர்கள் இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேயானால் மூவுலகத்தையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடியவனாக இருப்பான் என்றார்கள். ஜோதிடர் மொழிந்தது கேட்டு கமலாவதியார், ஒரு நாழிகை தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் எ ன்ற எண்ணத்தில் தம்மைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கட்டளையிட்டார்.
அவ்வண்ணமே அரசியாரைக் கட்டினர். ஜோதிடர் சொல்லிய நல் லவேளை நெருங்கியதும் அரசியார் ஆணைப்படி கட்டவிழ்த்தார்கள். அரசியாரும் அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அரசியார் தலைகீழாக தொங்கியதால் சற்று நேரம் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. அரசியார் அன்பு மேலிட அக்குழந்தையை உச்சிமோந்து ‘செல்வக்கோச் செங்கணான்’ என்று வாஞ்சையோடு கொஞ்சினாள். ஆனால், அரசியார்க்கு, அக்குழந்தையைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பாக்கியம் இல்லாமற் போனது. குழந்தை பிறந்த சற்று நேரத்திற்கெல்லாம் அரசியார் ஆவி பிரிந்தது.
சுபதேவர் தமது மகனை வளர்த்து வில் வித்தையில் வல்லவனாக்கி வேதாகமங்களிலும் மேம்பட் டவனாக்கினார். உரிய பருவத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த அவனை ஆளாக்கினார். சுபதேவர் மகனுக்கு முடிசூட்டிவிட்டு காடு புகுந்து அருந்தவம் புரிந்து எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்தார். கோச்செங்கட் சோழர் இறைவன் அருளால் முற்பிறப்பை உணர்ந்து அரனார் மீது ஆராக்காதல் பூண்டு ஆலயம் எழுப்பத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டி யானை நுழையாதபடி சிறு வாயில் அமைத்தார்.
மற்றும் சோழ நாட்டில் ஆங்காங்கே அழகிய அம்பலங்கள் அநேகம் கட்டி முடித்தார். இவர் எம்பெருமானுக்கு எழுபது கோயில்களும், திரு மாலுக்கு மூன்று கோயில்களும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் கோச்செங்கட் சோழர் தில்லையில் தங்கி தியாகேசப் பெருமானை முக்காலமும் முறையோடு வழிபட்டுத் தில்லையம்பலத்து ஆடுகின்ற கூத்தபிரானது பாத கமலங்களில் வைகி இன்பமெய்தினார்.
தொகுப்பு: ப.பரத்குமார்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.