19.3.2014 - காரைக்கால் அம்மையார்
புனிதவதியார் எனும் சிவபக்தை தனது கணவருடன் காரைக்கால் நகரில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் வெளியே சென்று வந்த அவள் கணவர் அவரிடம் இரண்டு மாம்பழங்களைத் தந்தார். தினமும் ஈசனின் பக்தர்களுக்கு உணவிடும் சேவை புரிந்து வந்த புனிதவதியார் அன்று தன் கணவன் தன்னிடம் தந்த மாம்பழங்களுள் ஒன்றை ஒரு சிவனடியாருக்கு உணவோடு இட்டார். அடியார் சென்ற உடன் வீட்டிற்கு வந்த கணவனுக்கு மதிய உணவு பரிமாறிய புனிதவதியார் மீதமிருந்த ஒரு மாங்கனியை இலையில் இட்டார்.
அதைப் பெரிதும் ரசித்து உண்ட கணவன், மீதமிருக்கக்கூடிய இன்னொரு மாங்கனியையும் பரிமாறுமாறு ஆணையிட்டான். திகைத்த புனிதவதி, தான் சிவனடியாருக்கு உணவோடு சேர்த்து அந்த மாம்பழத்தையும் அளித்ததைத் தன் கணவன் தவறாக நினைத்துவிடக் கூடாதே என்ற மனவேதனையில் அவள் ஈசனை வேண்டினாள். உடனே அவள் கையில் ஒரு மாங்கனி தோன்றியது. அதைக் கணவன் இலையில் இட்டாள். அதைப் புசித்த கணவன், அதன் தெய்வீக சுவையை உணர்ந்து வியப்புற்றான்.
முந்தைய மாங்கனியை விட இது மணத்திலும், சுவையிலும் அபூர்வமானதாக இருந்ததை அறிந்து இந்தப் பழம் மனைவிக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்டான். புனிதவதியும் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் விவரித்தாள். அதைக்கேட்டு அவளது தெய்வத் தன்மையை அறிந்துகொண்ட கணவன் அவள் காலடியில் விழுந்து அவளை வணங்கினான். கணவனே தன் காலடியில் விழுவதைக் கண்டு திடுக்கிட்ட புனிதவதி, அத்தகைய அபசாரத்துக்குத் தான் காரண மாகிவிட்டதை உணர்ந்து, மீண்டும் ஈசனை வேண்டினாள்.
இனி இந்த மானுடலைத் தான் தரிக்கலாகாது என்று கேட்டவள் தனக்குப் பேயுரு அருளுமாறு இறைஞ்சினாள். அப்படியே பேயுரு கொண்டு, தலையாலேயே நடந்து அவள் கயிலாயத்தை அடைந்தாள். அவளை எதிர் கொண்டழைத்த ஈசன் அவளை ‘அம்மையே’ என அழைத்து அவளைப் பெருமைப்படுத்தினார். இந்தக் குறிப்பிட்ட நாள், இன்றும் காரைக்காலில் மாங்கனித் திருவிழாவாக வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
28.3.2014 - தண்டியார்
தண்டியடிகள், பிறவியிலேயே பார்வையிழந்தவர். திருவாரூரில் வாழ்ந்து வந்தார். அவர் ஈசனிடம் மாறா பக்தியும் அன்பும் பூண்டவர். அவர் ஒரு முறை கமலாலயத் திருக்குளத்தை சுத்தம் செய்யும் பொருட்டு அதனைத் தூர்வாரும் திருப்பணியைச் செய்ய திட்டமிட்டார். குளக்கரையில் இருந்த மரத்தில் ஒரு நீண்ட கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டு குளத்தில் இறங்கி தூர் வாரினார். தூர் வாரிய சேற்றை கயிற்றைப் பிடித்துக் கொண்டு, மேலே கரைக்குக் கொண்டு வந்து கொட்டி வந்தார். அதனைக் கண்ட பிற மதத்தினர் அவரை ஏளனம் செய்தனர்.
அவற்றைப் பொருட்படுத்தாமல் தண்டியடிகள் தம் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அப்போது அவர்கள், ‘‘உனக்கு பிறவியிலிருந்து பார்வைதான் இல்லை என்று நினைத்தோம்; இப்போது காதும் கேளாதோ?’’ என்று கேட்டு மேலும் பரிகாசம் செய்தனர். அதைக் கேட்ட தண்டியடிகள், ‘ஈசனருளால் கண்பார்வை பெறுவேன்,’ எனக் கூறி குளத்தில் மூழ்கி எழுந்தார். உடனே அவர் பார்வை கிடைக்கப் பெற்றார். அவரைப் பரிகசித்தவர்கள் கண் பார்வையை இழந்தனர்.
4.4.2014 - நேசனார்
நெசவாளர் குலத்தில் பிறந்த அடியவர் நேசநாயனார். அவர் ஈசனிடம் மாறா பக்தி கொண்டவராக இருந்தார். அவர் துணி நெய்யும் நேரங்களில் கூட சிவ பஞ்சாட்சரத்தை இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருப்பார். அவ்வாறு ஈசனின் மந்திரத்தை ஜபம் செய்து கொண்டே நெய்த துணிகளைக் கொண்டு சிவனடியார்களின் உபயோகத்திற்கென கோவணம், மேல்துண்டு போன்றவற்றை தயாரித்து வழங்கி வரும் சிவத்தொண்டைப் புரிந்து வந்தார். நேசமுடன் இத்தொண்டினைப் புரிந்த அந்த அடியார் நேசநாயனார் என புகழ் பெற்றார்.
8.4.2014 - முனையாடுவார்
முனையாடுவார் எனும் சிவபக்தர் மதுரை மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார். அவர் போரிடுவதிலும், போர்த் தந்திரங்களிலும் மிகுந்த திறமை பெற்றவராக இருந்தார். மன்னர்கள் போரிடச் செல்லும்போது அவர்களோடு இணைந்து சென்று பகைவர்களை வெல்வதற்கு உதவி வந்தார். இதன் மூலம் அவர் பெரும் பொருள் ஈட்டினார். அதனைக் கொண்டு சிவனடியாரைப் போற்றியும், சிவாலயங்களைச் செப்பனிடும் பணியையும் செய்து வந்தார். அங்கிருந்த காசி விசுவநாதர் கோயிலின் கருவறை கோபுரத்தை எழுப்பித் தந்தார். சில்வார்பட்டி கிராமத்தில், இந்த முனையாடுவார் நாயனாருக்கு தனிக்கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
6.4.2014 - கணநாதர்
கணநாதர் சிவநெறிப் பணிகளிலும், சிவத்தொண்டு புரிவதிலும் சிறந்து விளங்கினார். தன்னை நாடி வரும் சிவபக்தர்களுக்கு திருக் கோயில் நந்தவன பராமரிப்பு, பூப்பறித்தல், மாலை கட்டுதல், அபிஷேகத்திற்கு திருமஞ்சன நீர் கொண்டு வருதல், திருக்கோயில் தரையைப் பெருக்கி சுத்தம் செய்யும் திருவலகிடல் எனும் தொண்டு செய்தல், நீர் விட்டுத் தரையை துடைக்கும் திருவலகிடல், திருமுறை ஓதுதல், சிவனடியார்களை வரவேற்று உபசரிக்கும் நெறி முறைகள் போன்ற சிவ சேவைகளை முறையாகப் பயிற்றுவித்து வந்தார். நடைமுறையில் தானே அதைக் கடைப்பிடித்தும் வந்தார். இவர் கணநாத நாயனார் என அழைக்கப்பட்டார்.
- ப.பரத்குமார்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.