வைகுந்தத்தில் துவார பாலகர்கள் இருவர். அவர்களில் ஒருவரின் பெயரால் விளங்கும் இந்த ஜய ஆண்டின் தொடக்க மாதமான சித்திரை மக்களின் மனதில் நம்பிக்கை ஒளியை கூட்டுகிறது. பகவான் கிருஷ்ணன் கையில் வைத்திருக்கும் பாஞ்ச சன்னியம் என்ற சங்கை அனுதினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதிக்க, குறைவற்ற வாழ்வும், வளமையும் கூடும் என சித்தர்கள் நூல் தெரிவிக்கின்றது. மேலும், இந்த ஜய வருட பொதுப் பலன்களைக் குறித்து காக புஜண்டப் பெருமான் இவ்வாறு கூறுகிறார்:
"புவியாங் கோளுக்கு நின்ற பருதி
போய் மதியானுக்கு மேனியானும்
சிரத்தானுமென தோடந் தோன்றப் பாரீரே-
ராசரால் புவியில் நன்மை யுண்டாம்-
மாரி பொய்க்க தட்டுப்பாடு நீருக்காம்-
தானிய விருத்தி கூடிடவே தாரணியில்
சுகம் தழைக்குமே"
என்றார். - ‘சற்று மழையின் அளவு குறைந்து தண்ணீருக்கு சிறு தட்டுப்பாடு வரும். நாடாளும் வேந்தர்கள் பெருநன்மை செய்து குடிகளை காப்பர். சுபிட்சம் மக்களுக்கு பெருகும். தான்ய விளைச்சல் மேன்மையுண்டு.’
அகத்தியர் வாக்கு:
"சயத் தாண்டு சூடேற்றமொடு
பகமை யேறுமென வறி - மேகப்
பீடை கூடிடவே பணி பெருக் கால்
உலகு சிறக்க கண்டோமே"
- ‘சற்று வெப்பம் கூடும். குடிகளுக்கு சர்க்கரை, சிறுநீரக பீடைகளால் சற்று வருத்தம் வரும். பணி பல வழிகளிலும் விருத்தி அடையும்.’
கிருத்திகை - உத்திரம்- உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு :
"அகத்தால் நோவ மேலோர் சாட
பொறுத்தே பின் செயம் பெறலாமே
தேடிய தனமும் விரயமாகி யலைந்து
கருமம் முடிக்குங் காலமிது- பெண்டிரால்
மேன்மையிருக்கு பின்னே காக்க
மென்ன கூறு! வடவேங்கடமேகித்
தொழுது மீள மேன்மையுண்டு
யுமக்கே."
(சட்டை முனி சித்தர்)
பெரியவர்களைக் குறைகூறி அதனால் அவர்கள் மனம் நோகச் செய்ய வேண்டாம். சற்று விரய நேரம் இது. பொறுத்துப் போவதே சிறப்பு. பெண் களின் ஒத்தாசை தக்க நேரத்தில் கிடைக்கும். திருவேங்கடவனை தரிசித்து வர இன்பம் சேரும்.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு :
"குதூகலமது குறைவின்றி கூடுமே
பொருளொத்தாசை செய்து பின்
பொல்லாப்படைய நேருமே - எண்ணியே
கருமஞ் செய துக்கமிலையே - வம்பொடு
வழக்கும் வறுத்துமிக் காலமாதலின் நூதன
வழி விடுத்து சோமகந்தனை வழிபட்டு
வரும் காலஞ் சீரடைய மிது அபாயமே"
(சட்டை முனி சித்தர்)
மகிழ்ச்சிக்கு குறைவில்லை. யாருக்கும் பொருள் ஒத்தாசை செய்ய வேண்டாம்; செய்யின் பின் சஞ்சலம் வரும். எந்தக் காரியத்தையும் தீவிர ஆலோசனைக்கு பின்னரே முடிவு எடுக்க நன்மையாகும். சோமாஸ்கந்தர் வழிபாடு செய்துவர, வரும் காலம் செழிப்பானதாகும்.
மிருகசீரிடம், சித்திரை - அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு :
"கூட்டுப் பணி சிறக்கும் - அலைந்தே
கருமஞ் சித்தியாகப் பாரு. குலத்தில்
கேடு தோன்றுங் காலமிது - கண்டு
பணிந்து கருத்தாய் கருமஞ் செய்வீரே.
பிணி வறுத்துமாம் - நூதனமாய் களவும்
காணுமாம் - வள்ளி மணாளனை வணங்கிவர
வாட்டமது தனியுமென வன்மீக யாமும் ஓதினமே"
(வன்மீக சித்தர்)
கூட்டுத் தொழில் விருத்தி அடையும். எந்த சின்ன வேலைக்கும் பலமுறை அலைய நேரிடும்; சோர்ந்திட வேண்டாம். உடல் பீடை வருத்தும். பொருள் சேதம் காணும். திருமுருகனை ஆராதித்து வர மேன்மை கிட்டும்.
திருவாதிரை - சுவாதி - சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு :
கீர்த்தியும் சுகமும் கூடுமன்றோ -
கல்வி விருத்தி தன்னால் தனவிரயஞ்
சேருமே - சற்றே சஞ்சலம் குலத்து
தோன்றிட யடங்கி நிற்ப யமருமன்றோ
சோதனை - செயமே கண்டீர் வியாஜ்யப்
பஞ்சாயத்தும் - பணி வழி கடலுந் தண்ட
யோகஞ் சேருமே: சக்கரத் தண்ணலை அந்தி
வேலை யாராதிப் பாருக்கு சாதிக்கலா
மனைத்துமே"
(கமலமுனி சித்தர்)
புகழ் பெருகும். கல்வி செலவு கூடும். சிறு சிறு சச்சரவுகள் குடும்பத்தில் எழும். மிகுந்த பொறுமை கொண்டு சமாளிக்க நன்மை சேரும். கடல் தாண்டி தொழில் பொருட்டு ஏக வாய்ப்புண்டு. சக்கரத்தாழ்வாரைத் தொழுதுவர எதையும் எளிதில் சாதித்து வெற்றிக் கொடி கட்டலாம்.
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு :
"பல்வழி விரயங் காணும் காலமிது
பொல்லாக் காலமிது கொடியோர் கூடி
எதிராய் நின்று சதியுஞ் செய்வர் -
தனித்தே இறைதுணை யென யிருப்ப
இவரை வெல்வதெளிதே. கரப் பொருள்
சேதமுண்டு - சுபவிரயமுண்டு - வாகன
சேர்க்கையுங் காணும். காளிதேவி யருள்
பெற்று பெருமத வாழ்வை வாழலாகுமே"
(தன்வந்த்ரி சித்தர்)
காளி தேவியை பூஜித்து வர நல்ல முன்னேற்றம் சேரும். திரவியம் பற்பல வழிகளில் விரயமாகும் நேரம் இது. வேண்டாதவர்களும் பொறாமை குணமுடையோரும் கூடி நின்று நம்மை எதிரியாய் பார்ப்பர். ஆனாலும் தீமை வாராது. சுபவிரயமும் சேரும் என்பதினால் இன்புற்று இருக்கலாம்.
பூசம் - அனுசம் - உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு :
"வரும் தனந் தன்னாலின்பம் கிட்டும்-
பிரிந்தார் கூடிடப் பாரீர் - தாம்பத்யஞ்
சிறக்கும். காலந் தாழ்ந்த மணமும் நடந்திட
குல விருத்தி கூட மயங்கி நின்ற மயக்க
மறுபட்டு அகத்து பின்னை சாந்தி தோன்
றுமே. வியாழனை பஞ்சம தினத்து தொழுது
யெழ பற்பல பெருஞ் செல்வம்
பெற்றிடலாமே"
(திருமூலர்)
கைவிட்டுப் போன பொருள் மீண்டும் வரும். பிரிந்து சென்ற உறவினர் கூடுவர். தாம்பத்ய வாழ்வு சுவை தரும். திருமணம் தடை நீங்கப் பெற்று நடந்திடும். இதுவரை வாட்டிய சங்கடங்கள் யாவும் விலகும். குருபகவானை வியாழக் கிழமைகளில் ஆராதித்து வர குறை அறுபடும்.
ஆயில்யம் - கேட்டை - ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு :
"விவாதந் தன்னை விடுத்தே தன்
பணி தனில் சிரத்தை சேர்த்து நாடிய
குலத்தே பிதுர் தோஷமறுத்தே நிற்ப
தடையான சுபமும் சுபமாய் நடந்தேறுமே.
அம்மையப்பனருள் மண்டி கிடக்க
அகச்சுமை பையவே யகலும் பாரீர் -
மேனியை பேணி நிற்ப பெருந் துக்கமது
விலக்கலாகுமே. கும்பி வழி பீடை
காணுமே யன்னை கோமுகியைத்
தொழுது வர கூடிடுமே மங்களமான
வாழ்வு தானே"
(பாம்பாட்டிச் சித்தர்)
விவாதம் செய்வதனை நீக்கவும். எடுத்த காரியத்தில் அதிக அக்கறை தேவை. குடும்பத்தில் இருக்கும் பிதுர் தோஷத்தை விலக்க முற்படவும். உடம்பை நன்கு கவனித்து வரவும். வயிறு சம்பந்தப்பட்ட ரோகங்கள் வந்து மறையும். கோமாதா பூஜை குடும்பத்தின் மேன்மையை கூட்டும்.
அசுவினி - மகம் - மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு :
"ஏக்கம் மிகுத்து வரும் -
அலைச்சலுடன் தன விரயமுமுண்டாம்-
உறவால் தொல்லை கொண்ட நட்பினால்
ஊறு என விளங்க கண்ட வாழ்வு
கனவே என விளங்க - நீண்டனுசரித்து
நடப்ப செயமாகுமே - வைரியர் செயம்
பெற சோரலாகாது துணிந்தே பணிதோற்ற
செயமே யெந்நாளுமே"
(அகத்தியர்)
பலவித எதிர்பார்ப்புகள் தோன்றும். வீண் அலைச்சலும், மனச்சோர்வும் உண்டாகும். எடுத்த காரியங்கள் தள்ளிப் போவதினால் கனவுகளில் வாழ்வதாய் உறவார் பேசுவர். அனைத்து சாரா ரையும் அனுசரித்து வாழ்தல் நலம். துணிச்சலுடன் சோர்வின்றி பணி செய்ய வெற்றி நிச்சயம்.
பரணி - பூரம் - பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு :
"கடனுபாதை தோ ன்றுமே -
மாட்சிமை பெறுமே - வாட்டிய
பிணி விலக்கம் பெற்றிடுமே -
சோதாயை கொண்டாடி நிற்ப
தம் மனம் வொப்ப மணமே நடந்தேறுமே -
ரத கஜ பதாதி யோகமொடு
பெரு வாழ்வு வாழுமிக்காலமே"
(கொங்கண சித்தர்)
கடன் தொல்லை விலகி உற்சாகம் பிறக்கும். வீடு, கன்று போன்றவை விருத்தியாகும். வாட்டிய நோய்கள் குணமடையும். ஆண்டாள் நாச்சியாரை தொழுதுவர விரும்பிய மணம் நடந்தேறும். வாகன சேர்க்கை, வேலையாள் வரவு, கவுரவம் சேரும்.
"கொண்டதோர் செயத் தாண்டு
மேடத்தே மாந்தரெலாங் கொண்
டாடி மகிழ் வெய்துவர், பெண்டிருக்கு
மேன்மை யுண்டாம் - மறைந்த
செல்வமும் மானச் சேரும். பொய்யா
மொழிக்கு புகழ் கூடுமே"
(அகத்தியர்)
இதுவரை பொய் மொழி பேசி வாழ்க்கையை வாழ்ந்தோர் இனி திருந்திய வாழ்வை வாழ்வர். இந்த ஆண்டு செயமாண்டு. எல்லோரும் ஏதேனும் ஒருவிதத்தில் இன்பத்தை அனுபவிப்பர். மறைந்த செல்வங்களின் விவரங்கள் தெரிய வரும் என்பதாம்.
நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.