திருநாவுக்கரசர் 24.4.2014
இவர் திலகவதியாரின் இளைய சகோதரர். சமணத் துறவியாக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டார். சமணர்களின் மருந்தும், மந்திரமும் அவர் வயிற்றுவலியை தீர்க்கவில்லை. சகோதரி திலகவதியார் திருநீற்றை மந்திரித்து அவர் நெற்றியில் இட்டு அவர் நோயைப் போக்கினார். உடனே சமணம் துறந்து சைவம் தழுவினார் திருநாவுக்கரசர். அதனால் கோபம் கொண்ட சமணர்கள் அவரை பாறாங்கல்லில் கட்டி கடலில் எறிந்தார்கள். அந்த சமயத்தில் அவர் ‘சொற்றுணைவேதியன்’ எனும் பதிகத்தால் ஈசனைத் தொழுதார். கல்லே தெப்பமாக மாறி மிதக்க திருப்பாதிரிப்புலியூரில் கரை ஏறினார். ஈசனைத் துதித்து பல அற்புதமான பாடல்களை அவர் பாடி மகிழ்ந்தார். சிவாலயங்களில் உழவாரப் பணியைச் சிறப்பாக செய்து ஈசனருள் பெற்றார்.
உய்யக்கொண்டார் 30-4-2014
நாதமுனிகளுடைய பிரதம சிஷ்யரான இவர், நாதமுனிகள் அவதரித்து அறுபத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு சித்திரை மாதம் கார்த்திகை நட்ச த்திரத்தில் திருவெள்ளறை என்ற திருத்தலத்தில் அவதரித்தவர். இவரைப் பற்றி எம்பார், "லட்சுமி நாதனாகிற பெருங்கடலில் சடகோபர் ஆகிய மேகம், கருணை நீரைப் பருகி, நாதமுனிகளாகிற மழையைப் பொழிந்து, அந்நீர் புண்டரீகாக்ஷர் என்ற உய்யக்கொண்டார் என்னும் அருவி மூலம், ஆளவந்தாரை அடைந்தது" என்று போற்றியிருக்கிறார்.
பெருமை மிக்க சோழியர்கள் என்று கூறப்படும் (முன்குடுமி) ஸ்ரீவைஷ்ணவ பரம்பரையில் பிறந்தவர் பூர்வசிகை ஸ்ரீவைஷ்ணவோத்தமர். இவரைத் துதிக்காத ஆசார்யர்களே இல்லை. யதிராஜ ஸப்ததியில் வேதாந்த தேசிகர் ‘சுத்த ஸ்தவ மயம் சௌரேரவதார மிவாபரம்’ என்று போற்றுகிறார். (சுத்த சத்வயமயமான திருமேனியும் திருக்கண்களையும் கண்டு திருவெள்ளறை புண்டரீகாட்சனே இந்த புண்டரீகாட்சனாக அவதரித்தான் போலும்!) இவர் நாதமுனிகளை ஆசார்யாராக வரித்துப் பக்தி யோகத்தைப் பெற்று திவ்யப் பிரபந்தங்களை உபதேசம் பெற்றார். யோக ரகசியங்களையும் கற்றார்.
நாதமுனிகளிடமிருந்த எல்லா உபதேசங்களும் ஆளவந்தாரிடம் வந்து சேருவதற்கு முக்கிய காரணராய் இருந்தவர். இவரது ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்காரர், புண்டரீகதாசர் ஆகியோர். உலகப் பெருமாள் நங்கை என்று குருபரம்பரா சாரத்தில் வேதாந்த தேசிகர் அருளிச் செய்கிறார். பெரிய திருமுடி அடைவில் கோமடம் திருவிண்ணகரப்பன் இவருடைய சீடராவார்.
சிறுத்தொண்டர் 29.4.2014
திருச்செங்காட்டங்குடியில் வாழ்ந்து வந்தவர் சிறுத்தொண்டர். சிவனடியார்களை வரவேற்று உணவளித்து அவர்கள் கேட்டவற்றை கொடுக்கின்ற சிவத் தொண்டை புரிந்து வந்தார். ஒரு நாள் ஈசன் பைராகி வடிவத்தில் அவரிடம் வந்து சிறுத்தொண்டரின் மனைவி பிடித்துக்கொள்ள சிறுத் தொண்டர் வாளால் வெட்டிய அவர் மகனின் பிள்ளைக்கறி வேண்டும் என்றார். உடனே அவ்வண்ணமே பிள்ளைக்கறி அமுதைப் படைத்து பைராகிக்குப் படைத்தபோது, பைராகி அவர் மகனும் தன்னுடன் சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று கூறி அவர் மகனை கூப்பிடச் சொன்னார். அதன்படி அவர்கள் கூப்பிட அவர் மகன் உயிரோடு வந்தான். பைராகி வடிவில் வந்த ஈசன் அவர்களுக்கு திருவருள் புரிந்தான்.
மங்கையர்க்கரசி 1.5.2014
சோழ மன்னனின் மகள், குருவழிபாட்டைப் பெரிதும் மதித்து வந்தார். நின்றசீர் நெடுமாறனின் மனைவி. நெடுமாறன் மதுரையை ஆண்டபோதும் சமண மதத்தில் ஈடுபாடு கொண்டார். அதனால் சிவனடியார்களின் வெறுப்புக்கு ஆளானார். நோய் கண்டும் பெரிதும் துன்புற்றார். தன் கணவரின் மனதை மாற்ற மங்கையர்க்கரசி பெரும் முயற்சி எடுத்தார். தன்னால் முடிந்த சிவகைங்கர்யங்களைச் செய்தார். ஒரு நாள் ஞானசம்பந்தப் பெருமான் அவர்கள் அரண்மனைக்கு எழுந்தருளினார். அவரின் திருவாயால் ஈசனின் பெருமைகளைக் கேட்ட நெடுமாறன் சைவசமயத்திற்கு மாறினார். அவரைப் பற்றியிருந்த நோயும் நீங்கியது. மங்கையர்க்கரசியும் நின்றசீர் நெடுமாறனும் பின் பல்லாண்டு காலம் சிவ சேவை செய்து பின் ஈசனடி சேர்ந்தனர்.
ராமானுஜர் 4-5-2014
ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்திற்கே கிரீடமாக விளங்கிய இந்த மகா ஆசார்யன் ஸ்ரீபெரும்புதூர் க்ஷேத்திரத்தில், ஆசூரி வம்சத்தில், கேசவ ஸோமயாஜி தீட்சிதருக்கும் காந்திமதி அம்மையாருக்கும் சித்திரைத் திருவாதிரையில் புதல்வராய் அவதரித்தார். இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள் இவரது மாமாவான பெரிய திருமலை நம்பிகள் இவருக்கு இளையாழ்வார் என்ற பெயரைச் சூட்டினார். தனது பால்யத்தில் யாதவப்பிரகாசர் என்னும் அத்வைத சன்யாசியிடம் வேதாந்த பாடம் கற்றார்.
தான் கல்வி கற்கும் காலத்தில் உபநிஷத்திற்கு விரோதமான விளக்கத்தை யாதவப் பிரகாசரிடமிருந்து கேட்டு, அதனால் மனம் நொந்து, அதற்கு உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உண்மையான அர்த்தத்தைத் தனது குருவிற்கே உபதேசித்து அவரிடமிருந்து விலகினார். காஞ்சி வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார். அப்போது ஆளவந்தாரால் ‘ஆம் முதல்வன்’ என்று விசேஷ அனுக்ரகம் பெற்றவர். பின்பு ஆளவந்தாரைச் சந்திக்க திருவரங்கம் சென்ற அவரால், ஆளவந்தாரை உயிர்நீத்த பூதவுடலாகத்தான் தரிசிக்க முடிந்தது.
அந்த நிலையிலும் ஆளவந்தாருடைய வலது, கைவிரல்கள் மூன்று மடங்கி இருக்கக் கண்டு அருகில் இருந்தோர்களால் ஆளவந்தாரின் மூன்று மனக்குறைகளையும் அறிந்து கொண்டார். அவை: 1. வ்யாஸ சூத்திரத்திற்கு ஆழ்வார்கள் மற்றும் ஆளவந்தாரின் உள்ளம் உகக்கும்படி ஸ்ரீபாஷ்யம் என்னும் கிரந்தத்தைச் செய்தல்.
2. நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்யானம் செய்தல். 3.பராசர, வ்யாஸாதிகள் திருப்பெயர்களை இரண்டு பிள்ளைகளுக்கு இட வேண்டும். அவற்றைத் தீர்ப்பதாக அரங்கனைத் தியானித்து சூளுரை செய்தார் ராமானுஜர். அப்படி சூளுரை விடப்பட்டவுடன் ஆளவந்தாரின் திருவுடலில் மூன்று விரல்களும் நிமிர்ந்தன. இதனைக் கண்ட எல்லோரும் இவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சோழ அரசனால் பல இன்னல்களுக்கு ஆளாகி தமிழகத்தை விட்டுப் பலநாள் மேல்நாட்டில் வசித்து வைணவத் திருப்பணியை மிக விசேஷமாகச் செய்தார்.
ஆளவந்தாருடைய சீடர்களான திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்திரார்த்தத்தையும், சரமஸ்லோக அர்த்தத்தையும், திருமாலையாண்டானிடம் திவ்யப் ப்ரபந்த வ்யாக் யானத்தையும், திருவரங்கப் பெருமாள் அரையரிடம் திருவாய்மொழி, கண்ணிநுண் சிறுத்தாம்பு மற்றும் திவ்ய பிரபந்தங்களையும், பெரிய திருமலை நம்பியிடம் ராமாயண வ்யாக்யானமும் பெரிய நம்பியிடம் பஞ்ச ஸம்ஸ் காரமும் திருமந்த்ரம் த்வயம் சரமச்லோக உபதேசமும் பெற்றார்.
மேலும் திருவரங்கப் பெருமாள், செல்வம் முற்றும் திருத்தி தனது செங்கோலின்கீழ் கொண்டு வந்தார். ராமானுசரை இவரது சீடரான திருவரங்கத்து அமுதனார் என்பவர் ராமானுச நூற்றந்தாதி என்ற பிரபந்தத்தை இவர்மீது இயற்றிப் போற்றினார். இவரது நூல்கள் ஸ்ரீபாஷ்யம், கத்யத்ரயம், வேதாந்தசாரம் வேதார்த்த சங்கிரஹம், கீதாபாஷ்யம் என்பன. இவரின் ஆயிரமாவதாண்டு 2017ல் கொண்டாடப்படவுள்ளது.
எங்களாழ்வான் 2-5-2014
திருவரங்கத்திற்கு அருகில் உள்ள திருவெள்ளறை க்ஷேத்திரத்தில் அவதரித்தவர், ஸ்ரீபாஷ்யத்தை குருகைப்பிரான் பிள்ளானிடம் உபந்யாசமாகக் கேட்டு மகிழ்ந்தவர். நடாதூரம்மாள் அவர்களை ஸ்ரீபாஷ்யத்தில் மிகப்புலமை பெற்று ஸ்ரீபாஷ்ய சிம்மாசனாதி என்ற விருதை அவரது வம்சம் இன்றும் தாங்கி வரும்படிச் செய்தவர்.
விரன்மிண்டர் 3.5.2014
திருவாரூரில் திருவருள்புரியும் தியாகராஜப் பெருமானை வணங்கச் செல்பவர்கள் முதலில் ஆலயத்தில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் குழுமியிருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னரே ஆலயத்தினுள் சென்று ஈசனை வணங்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்பட்டு வந்தது. ஒரு சமயம் தனது அவசரத்தால் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள சிவனடியார்களை வணங்காது தியாகராஜரை தரிசிக்கச் சென்றார். அப்போது அங்கு இருந்த விரன்மிண்டர், அடியவர்களை வணங்காது புறக்கணித்த சுந்தரரையும், அவருக்கு தரிசனம் தந்த தியாகராஜப் பெருமானையும் ‘புறகு’ என்ற அடியார் கூட்டத்திலிருந்து நீக்கி விட்டார். இதனால் மனம் வருந்திய சுந்தரர் ஈசனிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். அதை அறிந்த விரன்மிண்டர் சுந்தரரை அடியார்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அடியவர் பெருமைகளை போற்றி பதிகம் பாட ஆணையிட்டார். அதற்கான முதல் வரியையும் அவரே அருளினார். சுந்தரரும் அவ்வாறே திருத்தொண்டர் தொகை பாடியருளினார். உண்மையில் திருத்தொண்டர் தொகை உருவாவதற்கு மூல காரணமாய் இருந்தவர் விரன்மிண்டர்தான்.
சங்கர ஜயந்தி 4.5.2014
ஆந்திர கர்நூல் மாவட்டத்திலுள்ள சைலம் கோயிலில் தங்கி தவத்தில் ஆழ்ந்து சிவானந்தலஹரி என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தபோது அவரைப் பலியிட்டு சித்திகள் பெற அவரிடமே அனுமதி பெற்ற உக்கிரபைரவன் என்பவன் அவரைக் கொலை செய்ய வாளை ஓங்கினான். உடனே, முதல் மாணாக்கனும், மெய்க்காவலனுமானவன் மேல் லக்ஷ்மிநரசிம்மர் ஆவிர்பவித்து அவனுடன் போரிட்டு கொன்று ஆதிசங்கரரைக் காப்பாற்றினார். பூரியிலுள்ள (ஒரிசா) கோவர்த்தன மடமான ‘விமலா பீடத்தை’ தனது மூத்த மாணாக்கனான சனந்தரிடம் ஒப்படைத்தார்.
ஆதிசங்கரர் ‘சௌந்தர்யலஹரி’ மற்றும் ‘சிவானந்தலஹரி’ என்னும் நூல்களை எழுதினார். இவ்விரண்டும் பதினெண்சித்தர்களின் இந்துமதச் சாரமே ஆகும். காஷ்மீர குருவழி ஆச்சாரியார் மண்டனமிச்ரருடனும் அவரது மனைவியான சரசவாணியுடன் வாதிட்டபோது இல்லறம் என்னும் அகத் துறையின் மோகம், ஈகம் (மணம்), போகம், தாகம் என்னும் நான்கினுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இல்லற இன்பம் அறிய, அப்போது மாண்ட காசி மன்னன் அமருகனின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து 48 நாட்களுக்கு மேல் அரசியுடனும், மற்றையோருடனும் இன்பம் துய்த்து, ஈக, போக, தாகங்களை அனுபவித்தார் ஆதிசங்கரர்.
ஆதிசங்கரரின் உடலை தீவைத்துக் கொளுத்த முயன்ற போது மீண்டும் தன் உடலில் புகுந்து தீப்புண்களுடன் உயிர் தப்பினார். இடுப்புக்குமேல் பகுதிகள் தீக்காயங்களுக்கு உள்ளாயின. பின்னர் அவர் தனது தவறுணர்ந்து இமயமலை நோக்கி இறுதி சித்திப் பயணம் மேற்கொண்டார். சரசவாணி இல்லறம் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு பெண்ணின்பம் துய்த்த பின்னரே ஆதிசங்கரர் பதில் அளித்ததால் அவருக்கு ‘சரசுவதி’ என்றும் ‘சர்வக்ஞர்’ என்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
முதலியாண்டான் 5-5-2014
இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள (பூவிருந்தவல்லி, வரதராஜபுரம்) புருஷ மங்கலம் என்னும் (பேட்டை) தலத்தில் சித்திரை மாதம் புனர்வஸு நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் ஆனந்த தீட்சிதர்; தாயார், நாச்சியார் அம்மாள். வாதூல கோத்ரத்தில் பிறந்தவர். தாசரதி, ராமானுசன், பொன்னடி ஸ்ரீவைஷ்ணவதாசன். திருமறு மார்பன் ஆகியன இவரது பிற நாமங்கள். ராமானுசரிடம் சேர்ந்த முதல் சீடர். இவருக்கு சகல கிரந்தங்களையும் உபதேசித் தவர் எம்பெருமானார் ஆவார். இவர் எம் பெருமானார்க்கு மருமகனாயும், திருவடி களுமாய் திரிதண்டமுமாய் விளங்கியவர்.
ராமானுசருடைய விக்ரகத்தை இவரது குமாரரான கந்தாடையாண்டான் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்தார். அங்கு ராமானுசரின் சடாரிக்கு முதலியாண்டான் என்றே திருநாமம்.பெரிய நம்பியின் குமாரத்தியான அத்துழாயின் திருமாளிகை யில் சகலவித கைங்கரியங்களை செய்து எம் பெருமானாரால் பாராட்டு பெற்றவர். கந்தாடை வம்சத்திற்கு முக்கியமானவர். இன்றும் முதலியாண்டான் வம்சத்தினர். திவ்யதேச கைங்கர்யத்தில் பங்கு கொண்டு வைஷ்ணவத்தை வளர்த்து வருகின்றார். ராமானுசர் வடநாடு சென்றபோது அணியரங்கன் ஆலயத்தில் ஸ்ரீகார்ய கைங்கர்யத்தை செவ்வனே நடத்தி ராமானுசரால் போற்றப்பட்ட உத்தமர்.
நடாதூரம்மாள் 12-5-2014
இவர் காஞ்சியில் பிறந்தவர். வரத விஷ்ணு என்பது இயற்பெயர். எம்பெருமா னாருடைய மருமகன் வம்சமானதால் இவரை நடாதூரம்மாள் என்று அழைத்தனர். ஸ்ரீபாஷ்யத்தைப் பல முறை எங்களாழ் வானிடம் உபதேசமாகக் கேட்டு ஸ்ரீபாஷ்ய சிம்மாசனாதிபதி என்ற விருது பெற்றவர். எங்களாழ்வானுடைய சீடர். காஞ்சி க்ஷேத்திரத்தில் பகவத் ராமானுசருடைய அர்ச்சா விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தவர். ஸ்ரீவத்ஸ கோத்ரத்தைச் சார்ந்தவர்.
இவருடைய சீடர் வேத வ்யாஸ பட்டருடைய பேரனாகிய சுதர்சன பட்டர். இவர் ஸ்ரீபாஷ்யத்திற்கு ச்ருதப்பிரகாசிகை என்று அம்மாள் சாதித்ததை பட்டோலை செய்தவர். இவருக்கு திருவெள்ளறை க்ஷேத்ரத்தில் எங்களாழ்வான் திருவடியில் வீற்றிருந்த திருக்கோலத்தில் அர்ச்சா விக்ரகம் உள்ளது. இவர் காஞ்சி வரதருக்கு கைங்கர்யம் செய்து வந்தார். பெருமானுக்கு பால் நைவேத்தியம் செய்யும்போது சூடு, சுவை போதுமானதாக சமர்ப்பிப்பார். அதனால் மகிழ்ந்த பெருமான் இவரை ‘அம்மா’ என்று அழைத்தாராம்.
இசைஞானியார் 12.5.2014
சடைய நாயனாரின் மனைவி, இசைஞானியார். ஆதிசைவ குலத்தில் பிறந்தவர். ஈசனின் அருளால் இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் பேறு கிட்டிற்று. இல்லத்தரசியான இவர் தினமும் சிவபூஜை செய்ததோடு சதா சர்வகாலமும் சிவசிந்தனையிலேயே இருந்தார். எந்தப் பொருளாக இருந்தாலும் ஈசனுக்கு அர்ப்பணம் செய்த பின்னரே, தான் உபயோகிக்கும் வழக்கத்தை கடைப்பிடித்தவர். திருநாவலூர் ஈசனையே பெரிதும் வணங்கி சிவனருள் பெற்றவர் இவர்.
திருக்குறிப்புத் தொண்டர் 13.5.2014
துணி வெளுக்கும் ஏகாலியர் இனத்தைச் சேர்ந்த சிவனடியார் திருக்குறிப்புத் தொண்டர். ஈசனடியார்களின் தேவைகளைத் தாமே குறிப்புணர்ந்து பூர்த்தி செய்து சேவை புரிந்து வந்தார். பிறரின் மனக்குறிப்பறிந்து சேவை செய்ததால் அவர் திருக்குறிப்புத் தொண்டர் என அழைக்கப்பட்டார். ஈசன் அவரை சோதனை செய்ய எண்ணி சிவனடியாரைப்போல் வேடம் பூண்டு கந்தலாடை அணிந்து திருக்குறிப்புத் தொண்டரின் இல்லம் வந்தார். அவரின் கந்தலாடையை வெளுத்துத் தருகிறேன் என திருக்குறிப்புத் தொண்டர் வாங்கியவுடன் பெருமழை கொட்டியது. துணியை தோய்த்து உலர்த்தி சலவை செய்து குறித்த நேரத்தில் தரமுடியாமல் போயிற்று. அதனால் சிவ அபராதம் செய்ததாகக் கருதிய திருக்குறிப்புத் தொண்டர் சலவைக் கல்லிலேயே தன் தலையை மோதி இறக்க முனைந்த போது ஈசன் அவரை ஆட்கொண்டருளினார்.
-ந.பரணிகுமார்
எம்.என்.எஸ்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.