இம்மாதப் பிறப்பு, கிருஷ்ணபட்ச பிரதமை என்பதால் வெப்பம் அதிகரிக்கும். ஆளும் அரசர்க்கு சவால்கள் மிகுத்து வரும். விசாக நட்சத்திரம் என்பதினால் செல்வம் செழிக்கும். தான்யங்களின் மதிப்பு ஏறும். கொண்டாட்டங்களும், குதூகலமும் மக்கள் மனதில் ஏற்படும். பரிகம் என்பது யோகமாயும், பாலவம் கரணமாயும் இருப்பதினால் பாலகர்களும் இளைஞர்களும் மகிழ்ச்சி மிகுந்து காணப்படுவர். வணிகம் சீரடையும். உலோகம் விலை, மதிப்பு கூடும். விஷ்ணுபவி புண்ணிய காலம் என்பதினால் பட்டு, ஆபரணம், அழகு சாதனங்கள் அதிக அளவில் வாணிபம் நடைபெறும். அயல்நாட்டு உறவு மேம்படும். நாடு சுபிட்சமடையும். பங்கு வாணிபம் சிறக்கும். கோள் நிலையம் கிரக நிலையை ஆய நாடி கூறுவதாவது:
"கொண்ட வயிசாக பகுளமே குரு
விருக்க வித்தையின் மதிப்பு கூடும்.
(பொருட்கள் விலை ஏற்றம் காணும்)
சொற்பமான சம்பத்துஞ் சேருமே
ஊரெல்லாங் கும்மி கொட்ட கண்டோமே."
- என்றார் புலத்தியர்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்...
"உறவால் தொல்லை உண்டாம் கைப்
பொருளும் விரயங் காணும் சச்சரவுடனே
சலசலப்புங் காணும். பொல்லாங்கும் பொறையும்
வறுத்தும் பாரு. பொறுத்தே நிற்ப பின்னே
பெருமேன்மை சித்திக்குமென்றறிவீரே
இடரறுபடவே இனிதுரை கமலவாணனை ஆராதித்து நிற்பீரே"
- கருவூர்ச் சித்தர்.
நெருக்கமான சொந்தங்களினால் அன்புத் தொல்லைகள் சேரும். கையில் உள்ள காசு கரையும். பொறாமையோடு கூடிய பழிச்சொல் கேட்க ஏதுவாம். மிகுந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்டு எதிர்கொள்ள, பிற்காலம் பெருமகிழ்வு அடைய ஏதுவாகும். ஏழுமலை உறை வேங்கடவாணனை அகசுத்தியுடன் ஆராதிப்போருக்கு இடர் இல்லை என்பதாம்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்...
"நாடி நன்மை செய்து அகம் வெம்புவீர்
உற்றுப் பெற்ற பேரும் தொல்லை தருமே
பணி விருத்தி கொண்டே திரவியம்
கூட்ட மாற்று வழி தனமும் முடங்கப் பாரீர்
முதலீடு பலவழி வருமய்யா கடனுங்கூடு
மென காட்டுதுமே எண்ணி கருமந் துணிய
காசினியில் மேன்மையுண்டாம். அயோத்தியானை
ஆராதிப்பீரே மேன்மை யட்டவே"
- புலத்தியச் சித்தர்.
தேடிச் சென்று பலருக்கு நன்மை செய்தாலும் மனது நோவு ஏற்படுத்துவர். சகோதர, சகோதரிகளும், பெண் பிள்ளைகளுமே சற்று சங்கடத்தை உண்டாக்குவர். பல வழியில் தனம் வந்தபோதும் முடக்கம் காணும். ராமரை ஆராதித்து வர மேலான வாழ்வு நிச்சயம் சேரும் என்பதாம்.
"தரமோங்கும் அன்றி தாரணியில்
கீர்த்தி மிகுத்து வரும் உட்பொதிந்த
ஞானவெளிப் பாடு கீர்த்திக்கு வித்தாமறி
கடல் தாண்டி பணியாற்றுஞ் சேதியுங்
கிட்டப் பாரு சுவாமி நாதனைத்
தானாராதிப்ப தப்பாது செயல் கீர்த்தி பெறுமே யறி."
- அகத்தியர்.
இதுவரை எடுத்த முயற்சிகளினால் வெற்றி வந்து அண்டும். அதனால் தரம், புகழ் உயரும். ஞானவான் எனப் புகழப்படுவீர்கள். வெளிநாடு சென்று பணி செய்யும் பேறு பெறலாகும். சுவாமி மலை குடிகொண்டுள்ள சுவாமிநாத சுவாமியை ஆராதிக்க காரிய ஜெயம் உண்டு என்பதாம்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்...
"மங்களமே உண்டாம் தாமதமேயான
மணமுஞ் சேருமாம் குலத்திலானந்தஞ் சேர
எண்ணமெல்லா மீடேறுங் காலமிது. தன
வரத்து காணும். ஆடையாபரண சேர்க்கை
யுண்டாம். ஆதித்ய பூசை தன்னாலானந்த மடையலாகுமே."
- அகப்பைச் சித்தர்.
மங்களகரமான வாழ்க்கை அமையும். திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் இன்பம் வந்து தாண்டவமாடும். செல்வத்திற்கு குறையில்லை. ஆடை, ஆபரணம், பொருள் சேர்க்கை கிட்டும். சூரிய நாராயணரைத் தொழுவதும் சூரியனை ஆராதிப்பதும் பெரிய சந்தோஷத்திற்கு வித்தாகும் என்பதாம்.
திருவாதிரை, சுவாதி, சதயம்...
"சுப விரயமுண்டாம் வாகனமுங்
கூடுமென்போமே விரயமும் பற்பல
வழி வந்தே சேருமாயின் உண்டு பொருள்
வரத்து இச்சையடக்குமின் நா காண்மின்
பூசலை விலக்கி வாக்கு வாதம் தவிர்ப்ப
பேரிடர் நீங்குமே அப்பன் குற்றாலிங்கனை
ஆராதித்தே சிவனே யெண்ண பேரிடர் சரிந்து
பெருமை பட வாழலாகுமே"
- பாம்பாட்டி சித்தர்.
நல்ல காரியங்கள் பொருட்டு செலவினங்கள் கூடும். ஆனால், தனவரத்துக்கு பஞ்சமில்லை. ஆசைகளை கட்டுப்படுத்தவும். சூடான சொற்களை பயன்படுத்தாதீர். யாரோடும் வாக்குவாதம் வேண்டாம். குற்றாலிங்கப் பெருமாளை தரிசனம் செய்து நிற்ப குறைவற்ற வாழ்வை வாழலாகுமே.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி...
"கடனுபாதை கொண்டே ரதமொடு புவி
என உரிமையேந்தலாகுமே ஆபரணமும்
விரயங்காணப் பாரீர் அகச் சோர்வு
தம்மோடு உடற்சோர்வுங் கூடுங் கண்டீர்.
பெண்டிரால் தொல்லை பெற கடனுபாதை
கூடுமே. ஆரூர் தியாகேசனுத்திர பாகமுறை
கடனிவர்த்தீசனை ஆராதிப்ப பொருட்பீடை
யகன்றானந்தக் கும்பி கொட்டுவீரே."
- பாம்பாட்டியார்.
கடன் பெற்று வீடு, மனை, வாகனம் போன்றன வாங்க வழி அமையும். ஆபரணங்கள் நமது பராமரிப்பில் இருந்து விடுபட மனச்சஞ்சலம் தோன்றும். உடலில் சிறு பிணிகள் வந்து வாட்டும். பெண்களால் கலக்கம் உண்டாகும். திருவாரூர் தியாகரேசப் பெருமான் சந்நதியின் வடபுறம் அமைந்துள்ள கடன் நிவர்த்தீச் சுவரரை தொழுது நன்மை அடையலாம்.
பூசம், அனுசம், உத்திரட்டாதி...
"தர்மஞ் செய்ய தூண்டும் அறவழி
ஆனந்தங் காணும் ருத்ராபி டேகஞ்
செய்தே அருத்திரனை வழிபட
தீராப் பிணி தீரும் பிதுர் தோஷமகலும்
நீத்தோருஞ் சாந்தி பெறுவரே பணி மந்தங்
காணுமன்றி வாரிசார் தம்மை யண்டிய பீடை
அகலும் பிரிந்தே நொந்த தம்பதியர் கூடி
இல்லற சுகங் காண்பரே."
- சிவவாக்கிய சித்தர்.
மனது தரும சிந்தையில் ஈடுபடும். பிறருக்கு நன்மை செய்து மகிழ நேரிடும். ருத்ராபிசேகம் செய்வதும், சிவனின் உருத்திர வடிவை தொழுதேத்துவதும், பிதுர் தோஷத்தை அகற்றும் தொழிலில் மந்த நிலை உண்டாகும். குழந்தைகள் சற்று உடல்நலம் குன்றுவார்கள். பிரிந்து வாழ்ந்த தம்பதியர் கூடி வாழ்ந்து இன்புறுவர் என்பதாம்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி...
"முன்னை வினை யகல முத்துக் குமரனை
போற்றுதும் பெண்டிரின் சாபக் கேடு
கறைந்திடுமிக் காலமே பொருளுக்கு வழிபல
விரயங்காட்டு மெனினு முயிர் சேதமறு படுமே.
வித்தை விருத்தி சிசுக்குண்டாம் சாலை வழி
நேருங் கண்டம் பொருளுக்கே கேடு
செய்யுமல்லாலொச்சமேது, எண்ணித் துணிய
இடும்பை யிலை, மங்கள வார விரதமிருந்து
வயித்தீசனடி யமர் முத்துக் குமாரனை
தொழுதுய்வீர் இத் திங்களே"
- திருப்பதஞ்சலி சித்தர்.
முன்னை பிறப்பில் வந்த சாபம் தீரும். குழந்தைகளுக்கு கல்வி, தொழில் விருத்தி கிட்டும். சாலையில் செல்லுகையில் சற்று கவனம் தேவை. எந்த காரியத்திலும் நிதானத்தை கைப்பற்றவும். வைத்தீஸ்வரன் கோயிலில் குடிகொண்டுள்ள அருள்மிகு முத்துக்குமார சுவாமியை சரணடைந்து வழிபட்டுவர இம்மாதம் சிறப்புடையது என சொல்லலாம்.
அசுவினி, மகம், மூலம்...
"அலைச்சல் காணும் மேனி சோரும்
திரவியமுடையும் பயணமுண்டா
யினும் வீணே பலனில்லா
சொல்லை சொல்லியிடும்பை சேர்ப்பீர்
அகச்சுமை கூடும். வருங்காலத்தை
எண்ணியே அச்சங்கூட காலபயிரவரைத்
தியானித்து ஈடில்லாயின் பமடையலாமே."
- புலிப்பாணி சித்தர்.
இம்மாதம் அலைச்சல் அதிகம் சேரும். உடல் சோர்வு கூடும். வெளியூர் பயணம் தன்னால் பெருநன்மை இல்லாதுபோகும். வார்த்தையே சங்கடத்தை உண்டாக் கும். மனது சோர்வு அடையும். வருங்காலம் பயமுறுத்தும். கால பைரவ பூஜையால் வெற்றிவாகை சூடலாம்.
பரணி, பூரம், பூராடம்...
"பணி விருத்தி காணும் செல்வ
செழிப்பும் உண்டாம் பெரும் பணி
கீர்த்தியுடன் கூடும் பயணத் தாலின்ப
முங் கீர்த்தியுண்டாம். வியாச்சியமும்
வெல்ல ஏதுவாமே சங்கரனாரை
தொழுது அவனாராதனை ஆற்றுவார்க்கு
தொல்லை இல்லை இம்மயிலே சொன்னோமே."
- காகபுஜண்டர்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் சேரும். செல்வமும் குறைவின்றி கூடும். வெளியூர் பயணங்கள் செல்வத்துடன், செல்வாக்கையும் சேர்க்கும். சங்கரனாரை ஆராதித்து ஆக்கம் பெறலாம் என்பதாம்.
"ரம்பா திருதியை தன்னில் பட்டு
வத்திரந் தரித்து திருமகளை துதிப்போருக்கு
வற்றா தனஞ்சேரும் ஆயுளும் நீளும்
தீராப் பகை யொடு போருந் தீருமே."
- புலிப்பாணியார்.
வைகாசி சுக்கில திருதியை ரம்பா திருதியை என்பார்கள். இந்நாளில் பட்டு வஸ்திரம் உடுத்தி மகாலட்சுமி கோயில் சென்று நெய் தீபமிட்டு மகாலட்சுமி பூஜை ஆற்ற சகல சம்பத்தும் குறைவின்றி சேரும். நீண்ட வாழ்நாள் கூடும். நீண்ட நாள் பகை அகலும் என்று அறிக.
நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.