பத்மாவிற்குப் பயமாக இருந்தது. தன் கண வரின் ஜாதகத்தை ஏன் ஜோதிடரிடம் காட்டினோம் என்று வேதனைப்பட்டாள். நடந்தது இதுதான். ஏழரைச் சனியின் பாதிப்பு இருக்குமா? கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ஏழரைச் சனி ஆரம்பம்... இதையெல்லாம் ஏதோ ஒரு டி.வி. நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டவள் இதற்குப் பரிகாரம் தேடி ஒரு ஜோதிடரை அணுகிக் கேட்டபோது அவர் சொன்னார்: “உங்கள் கணவருக்கு ஜல கண்டம் இருக்கிறது; நீர் நிலைகளுக்குப் போகும் போது கவனமாக இருங்கள்.”
அவ்வளவு தான், இவளுக்கு சனி ஆரம்பமாகி விட்டது. கணவருக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடப் பயந்தாள்! ஒருவேளை புரை ஏறி ஜல கண்டமாகி விட்டால்..?
ஜல கண்டேஸ்வரரை தரிசித்தாள். அங்கு மட்டுமல்ல, வேறெந்தக் கோயில் குளங்களிலும் கணவரை கை கால் கழுவக்கூட அனுமதிக்க வில்லை. எங்காவது வெளியூர் போனால் அந்த ஊர் ஆற்றின் அல்லது குளத்தின் அருகே அவரைப் போகவிடாமல் பாதுகாத்தாள். இத்தனை ஏன், கிணற்றைக் கூட எட்டிப் பார்க்கவிடாமல் தடுத்தாள்.
கணவர் சந்துரு என்கிற ராமச்சந்திரன் சிரித்தார். “உனக்கென்ன பைத்தியமா பத்மு? ஜல கண்டம் என்றால் அது தண்ணீரில் தான் வரவேண்டும் என்பதில்லை நான் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது கூட வரலாம். அதற்காக நான் ரோட்டில் நடக்காமலே இருக்க முடியுமா?” அவள் பதில் பேசாமல் இருந்தாள். சந்துரு தொடர்ந்து சொன்னார்: ‘‘இதோ பார், விதியை யாராலும் மீற முடியாது; மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது; உன் பிரார்த்தனைகள் மூலம் அதன் பாதிப்பை சற்றே குறைக்கலாம், அவ்வளவுதான்.
நல்ல பாம்பு சொல்லுமாம், ‘நான் மிதிச்சாரைக் கடிக்க மாட்டேன்; விதிச்சாரைத் தான் கடிப்பேன்’னு. ஆக மனசைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நீ உன் வேலைகளை செய்.” என்னதான் கணவர் சமாதானம் சொன்னாலும் இவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மிருத்யுஞ்ஜய மந்திரம் சொன்னாள்.
பிரதோஷ வழிபாடு செய்தாள். சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் இரு நேரங்களிலும் சிவன் கோயிலுக்குச் சென்றாள். பிரதோஷ காலங்களில் நெய்விளக்கேற்றி வழிபட்டாள். ஏதாவது திடீரென்று போன் வந்தால் ஒரு வேளை ஜல கண்டச் செய்தியோ என்று திடுக்கிட்டாள்.
கணவர் அலுவலகத்திலிருந்து வரச் சற்றுத் தாமதமானாலும் பயந்தாள். வாசலிலேயே காத்திருந்தாள். ‘நான் செய்த பூஜை வீண் போகாது; என் பிரார்த்தனை வீண் போகாது,’ என்று மனசுக்குள் பயந்து பயந்து வாழ்ந்தாள். சில சமயம், இப்படி யோசித்து யோசித்து சாவதை விட ஒரேயடியாகச் செத்துவிடலாமோ என்று கூடத் தோன்றும். ‘சாவதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் தேவை,’ என்பார் சந்துரு. கேட்கும் போது சரியாகத் தோன்றினாலும் சற்று நேரத்தில் மனம் மீண்டும் பழைய பாதைக்கு தான் போனது.
ஏன் ஆரூடம் கேட்டோம் என்று வேதனைப் பட்டாள். “நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடுங்கூற்றென் செயும்? - என்று பாடிப் பார்த்தாள். மனசுதான் கேட்கமாட்டேனென்கிறது; அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. இங்கும் அலை... கடல்... ஜலகண்டம்! திருஞான சம்பந்தர், கோளறு திருப்பதிகம் பாடி மரணத்திலிருந்து மீண்டு வரவில்லையா? அந்த வேயுறு தோளிறுபங்கனை வேண்டிக் கொண்டாள்.
எப்போதோ படித்த கதை நினைவுக்கு வந்தது. ஒரு எறும்பு தவம் செய்ததாம்.
கடவுள் காட்சி அளித்தாராம். எறும்பு வரம் கேட்டது: ‘நான் கடித்தவுடன் சாக வேண்டும்.’ கடவுளும் தந்தேன்’ என்று சொல்லி மறைந்தார். எறும்பு தான் பெற்ற வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டி எதிரில் வந்த மனிதனைக் கடித்ததாம். அவன் உடனே அதை அடித்துத் தேய்க்க, மரணத் தறுவாயில் எறும்பு நினைத்ததாம்: “நான் கேட்ட வரம் தப்பு. யார் சாக வேண்டும் என்று நான் சரியாகக் கேட்கவில்லை.” இப்படி நினைத்தபடியே உயிரை விட்டதாம் இந்தக் கதை நினைவுக்கு வர, இப்படி ஏதாவது தான் கேட்ட வரத்திலும் தப்பு இருக்குமோ என்று கவலைப் பட்டாள், பத்மா.
அன்று, பத்மா நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். இன்னும் இவள் கணவர் வீடு திரும்பவில்லை. நேரமாகிக் கொண்டிருந்தது. ஏதோ வேதனை மனதைப் பிசைந்தது. என்ன ஆயிற்றோ தெரியவில்லையே, பகவானே... அப்போது ஒருவர் வேகமாக வந்தார். அவர், கணவரின் அலுவலக நண்பர். பல தடவை இவள் வீட்டிற்கு வந்திருக்கிறார். “என்ன ஆச்சு? ஏன் இத்தனை நேரம்? உங்க ஃபிரண்ட் எங்கே?” இவள் பயத்துடன் கேட்டாள். ‘‘சந்துரு ஆபீஸிலே இருந்து வரும்போது...” ‘‘வரும் போது..?”
‘‘ஒரு தண்ணி லாரியிலே அடிபட்டு...” ‘‘ஐயய்யோ ஜல கண்டம் பலிச்சுடிச்சே... கடவுளே என்னை ஏனிப்படி சோதிக்கறே?” அன்று சந்துரு என்ன சொன்னார்..?
‘‘எனக்குத் தரையிலும் கண்டம் வரலாம்...அதுக்காக நான் நடக்காமல் இருக்க முடியுமா?” கடவுளே... கதறியபடி மயங்கிச் சாய்ந்தாள் பத்மா.
இவள் கண் விழித்தபோது - ஒரு மருத்துவமனையின் அவசரப் பிரிவுப் பகுதியில் தான் குழாய்கள் புடை சூழப் படுத்திருப்பது புரிந்தது. ஐயய்யோ எனக்கு என்ன ஆயிற்று?
இவள் எழ முயன்றபோது அவளை இரு கரங்கள் அழுத்திப் பிடித்துப் படுக்க வைப்பது தெரிந்தது. அந்தக் கரங்கள் இவள் கணவரின் அன்புக் கரங்கள்...
“நீங்களா..? உங்களுக்கு ஒண்ணு மில்லையே..?” படபடப்புடன் கேட்டாள். சந்துரு சிரித்தார். “பைத்தியம். இப்படியா மனசைப் போட்டுக் குழப்பிப்பே? நான் ஆபீஸிலே இருந்து வரும்போது தண்ணி லாரியிலே அடிபட்டு ஒருத்தர் நடுவீதியிலே ரத்த வெள்ளத்துலே கிடந்தார். அவரை ஆம்புலன்ஸிலே ஏத்தி ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டு வர லேட்டாயிடிச்சு. கையிலே இன்னிக்கு செல்போனும் எடுத்திட்டுப் போகலே.
நீ கவலைப்படப்போறியேன்னு என் ஃபிரண்ட் கிட்டே சொல்லி அனுப்பினேன். அது தான் தப்பாயிடிச்சு. முழுசையும் கேட்காம நீயா கற்பனை பண்ணிட்ட... ஜல கண்டத்திலே நீயே மூழ்கி மூர்ச்சை ஆயிட்டே... இது தான் நடந்தது...” “என் தெய்வமே” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட பத்மா, தாலியைக் கண்களில் ஒற்றிக் கொண்டு சந்தோஷமாக அழ, அவள் கரங்களை அன்புடன் பற்றினார் சந்துரு. ‘‘உன் பயம் தான் கண்டம், உன் பீதி தான் கண்டம், உன் எதிர் மறை நினைவுகள் தான் கண்டம். பாரதியார் பாட்டுத் தெரியுமா?
“பயமெனும் பேயதனை அழித்தே பொய்மைப் பாம்பைப் பிளந்து உயிர் குடிப்போம்..” - இந்தப் பயப் பாம்பை நீக்கிவிட்டால் நமக்கு எந்தக் கண்டமும் இல்லை. புரியுதா?” என்று ஆதூரத்துடன் சொன்னார். பத்மா புரிந்தது என்பதைப் போல் மெல்லத் தலை அசைத்தாள். அவள் உள்ளத்தில் உறுதி சேர்ந்தது. இறைவன் தீர்மானித்திருப்பவை அவனது விருப்பம்போல அவன் நிர்ணயித்த நேரத்தில் அதுபாட்டுக்கு நடக்கும். எதையும் எதிர்பார்த்து மனங்குழம்பி, இன்றைய வாழ்க்கையை நாமே ஏன் சோகமாக்கிக்கொள்ள வேண்டும்? வீட்டிற்கு வந்த பத்மா பூஜையறையில் கண்மூடி பிரார்த்தனையில் ஆழ்ந்தாள். அவளுடைய உள்ளம் தெளிவடைந்திருந்தது.
விமலா ரமணி
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.