கழற்சிங்கர் 26.5.2014
கழற்சிங்கர், பல்லவ மன்னராகத் திகழ்ந்தவர். மிகச் சிறந்த சிவ பக்தராகவும் விளங்கியவர். ஒருமுறை அவர் மனைவி அங்குள்ள சிவாலயத்திற்கு தரிசனம் செய்யச் சென்றார். அப்போது செருத்துணை நாயனார் என்ற சிவனடியார் வாசமுள்ள மலர்களைக் கொண்டு ஈசனுக்கு மாலைகள் தொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அரசி, அந்த மலர்களின் வாசனையில் மயங்கி ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அதனால் சிவ அபராதம் ஏற்பட்டதாக எண்ணிய செருத்துணையார், அரசியின் மூக்கை அறுத்து எறிந்தார். அதைக் கேள்விப்பட்ட கழற்சிங்கர், ‘அந்தப் பூக்களை எடுத்த கைகளை ஏன் வெட்டி எறியவில்லை?’ எனக் கேட்டு அரசியின் கையை வெட்டினார். எந்தவகையில் யார் சிவ நிந்தனை செய்தாலும் மன்னருக்குப் பொறுக்காது. அவரது பக்தியை மெச்சிய ஈசன் உடனே அங்கு தோன்றி அம்மூவரையும் ஆட்கொண்டார்.
திருக்கோட்டியூர் நம்பி 29-5-2014
திருக்கோட்டியூரில் அவதரித்தவர். கோஷ்டி பூர்ணர் என்பது இவருடைய மற்றொரு திருநாமம். இவர் ஆளவந்தாருடைய சீடர். சர்வ காலமும் திருமந்திரத்தையும், சரம ஸ்லோகத்தையும் ஜபம் செய்வதிலேயே தன் காலத்தைக் கழித்தவர். இவருக்கு தெற்கு ஆழ்வான் என்ற புதல்வனும் தேவகி பிராட்டியார் என்ற புதல்வியும் இருந்தனர். ராமானுஜருடைய ஆசார்யத்வ நிர்வாகத்திற்கு மிக உதவியாக இருந்த திருமந்திர சரம ஸ்லோக அர்த்தங்களை ராமானுஜரின் கஷ்டமான நியமத்தினால் உள்ளம் உருகி உபதேசம் செய்தவர். திருமலையாண்டான் என்ற மகான் ராமானுஜரின் அதிவாதத்தால் கோபமுற்றார். அதனா லேயே தான் நிகழ்த்தி வந்த திருவாய்மொழி உபன்யாசத்தை நிறுத்தினார். இச்செய்தி அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கத்திற்கு விரைந்து வந்து, அவரை சமாதானப்படுத்தினார். ‘சாந்தீபனியிடம், பகவான் கிருஷ்ணன் வேதம் பயின்றது போலதான் எம்பெருமானார் உம்மிடம் திருவாய்மொழி கேட்பதும்’ என்று அவரது பெருமையை உயர்த்திப் பேசினார். ஆளவந்தாரின் திருவுள்ளமும் நிர்வாகமும்தான் அவர் வாதம் செய்ததன் உள் அர்த்தமே தவிர வேறெந்த நோக்கமும் இல்லை’ என்று திருமலையாண்டானிடத்தில் ராமானு ஜருடைய தனிச் சிறப்புகளை விவரித்துச் சொன்னார் திருக்கோட்டியூர் நம்பிகள். எம்பெருமானாரின் சம்பிரதாயப் பணி பரிமளிக்க முக்கியமாகத் திகழ்ந்த ஆச்சார்ய புருஷர், நம்பிகள். ராமானுஜரின் பரந்த மனப்பான்மையினைப் போற்றி அவரை எம்பெருமானார் என்றழைத்து, வைணவ சமயம் ‘எம்பெருமானார் தரிசனம்’ என்றே போற்றிக் கொண்டாடும்படி அனுக்கிரகம் செய்தார்.
நமிநந்தி அடிகள் 2.6.2014
திருவாரூர்த் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக் குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார். ஒருநாள் வீட்டிற்குச் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற நேரம் இல்லாது போயிற்று. உடனே அவர் கோயிலுக்கு அருகில் குடியிருந்த சமணர்களிடம் நெய் தந்திடக் கோரி வேண்டினார். மறுத்து விட்டனர். ‘அக்னியையே கையில் ஏந்தியிருக்கிறாரே சிவபெருமான், அவருக்கு நெய்விளக்கு எதற்கு?’ என்று கேலி பேசினார்கள். அப்போது இறைவன் ‘குளத்து நீரை இட்டு விளக்கு ஏற்றுக’ என்று அசரீரியாக ஆணையிட்டார். உடனே நமிநந்தி அடிகளும் கமலாலயக் குளத்து நீரைக் கொண்டு கோயிலுக்குள்ளே விளக்குகளில் விட்டு அவற்றை எரிய வைத்தார்.
சோமாசி மாற நாயனார் 3.6.2014
வேத சாஸ்திரங்களில் மிகுந்த புலமை கொண்ட ஒரு சிவ பக்தர், முறையாக சிவபஞ்சாகவுர ஜபம் செய்து வாழ்ந்து வந்தார். சிவனடியார்களைக் கண்ணும் கருத்துமாக உபசரித்து அவர்களுக்கு உணவிடுகின்ற தொண்டினையும் செய்து வந்தார். பலமுறை ‘சோம யாகம்’ என்ற யாகத்தை செய்து சிவபெருமானை வணங்கி வந்தார். இதனாலேயே அவர் சோமாசி மாற நாயனார் என அழைக்கப்பட்டார். அவர் தியாகேசப் பெருமானை சுந்தரர் மூலமாக தன்னுடைய யாகத்திற்கு வருமாறு அழைத்தார். சிவபெருமான் புலையன் வடிவத்தில் நான்கு நாய்களுடனும் தலையில் கள் பானை சுமந்தபடி மனைவியுடன் வந்தார். அதைக் கண்டு பயமும், அருவெறுப்பும் கொண்ட வேதியர்கள் யாகத்தைப் புறக்கணித்துவிட்டு ஓடினார்கள். சோமாசி மாறர் அவர்களிடம் இருந்த இறைத் தன்மையை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களைப் பணிந்து வரவேற்றார். வேடுவராக வந்த அம்மையும் அப்பனும் அவர்களை ஆட்கொண்டார்கள்.
சேக்கிழார் 2.6.2014
தொண்டை மண்டலத்தில் சேக்கிழார் என்ற தமிழ்க் கவிஞர் வாழ்ந்து வந்தார். அவர் தமிழகத்தில் உள்ள சிவன் திருக்கோயில்களுக்கு எல்லாம் சென்று சிவனை வழிபட்டார். அந்தவகையில் சிதம்பரம் நடராஜரையும் தரிசித்தார். அப்போது நடராஜர், ‘சிவனடியார்களின் பெருமைகளை விளக்கும் காப்பியம் இயற்றுக’ என்று அவருக்குக் கட்டளையிட்டார். இறைவனே சேக்கிழாருக்கு ‘உலகெலாம்...’ என்ற வரியையும் அமைத்துக் கொடுத்தார். சேக்கிழாரும் பெரிய புராணம் என்ற காப்பியத்தை சுந்தரமூர்த்தி நாயனாரைக் காவியத் தலைவனாக வைத்து இயற்றினார். அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் ஒன்பது தொகையடியார்களைப் பற்றிய விவரங்களை அவர் இயற்றிய பெரிய புராணம் தெரிவிக்கின்றது. சேக்கிழார் பெரிய புராணக் காப்பியத்தை எழுதி முடித்ததும் அனபாய சோழ சக்ரவர்த்தி, சேக்கிழாரையும் அவர் இயற்றிய பெரிய புராண நூற்கட்டுகளையும் தன் பட்டத்து யானை மேல் இருத்தி, தானே பின்னர் அமர்ந்து கவரி வீசி உலா வரச் செய்து சிறப்பித்தான்.
நம்மாழ்வார் 11.6.2014
திருமாலுடைய திவ்ய வடிவத்திலும் அவனுடைய மேன்மைக் குணங்களிலும் பல்வேறு திருவிளையாடல்களிலும் ஆழ்ந்து ஈடுபட்டவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். இவர்களில் நம்மாழ்வாரை உடலாகவும் (அவயவி), பிற ஆழ்வார்களை உறுப்புகளாகவும் (அவயவங்கள்) கருதுவது வைணவ மரபு. ஆழ்வார் அவதரித்தபோது ஞானத்தை மறைக்கக்கூடிய சடம் என்னும் மாயக்காற்று அவரை நெருங்க முற்பட்டது. அப்போது ஹுங்காரத்தினால் அதனை விரட்டியதாலே சடகோபர் எனப்பெயர் பெற்றார் நம்மாழ்வார்.
திருக்குருகூரில் வேளாண் குலத் தோன்றலான காரியார்-உடைய நங்கையார் தம்பதிக்கு வைகாசி விசாகத் திருநாளில் தெய்வாம்சம் மிக்க குழந்தையாகப் பிறந்தவர். பிறந்தது முதலே உலக இயல்புக்கு மாறுபட்டு பாலுண்ணாமலும், அழாமலும், சிரிக்காமலும், இயல்பான நியதிக்கு மாறுபட்டு விளங்கினார். திருக்குருகூரில், ஆதிநாதப் பெருமாள் கோயிலின் அருகே ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் புளிய மரத்தின் கீழ் முதல் 16 ஆண்டுகள் அசைவற்ற யோக நிலையிலே கிடந்தவர்.
இவர் இப்படி யோகத்தில் இருந்தபோது திருக்கோளூரை சேர்ந்த மதுரகவியாழ்வார் வடதேச யாத்திரையாகச் சென்றிருந்தார். அவர் அயோத்தியில் இருந்தபோது தென் திசையிலே பெரியதொரு ஒளியைக் கண்டார். அதைத் தொடர்ந்து வந்த அவர், திருக்குருகூரை அடைந்தார். அங்கு நம்மாழ்வாரை கண்டார். அவரிடம் வேதாந்த விசாரமாக கேள்வி ஒன்று கேட்க, அப்போதுதான் சடகோபர் முதன்முதலாக வாய் திறந்து பேசினார். அதிலிருந்து தொடர்ந்தது அவருடைய அருள்மொழிப் பிரவாகம். நம்மாழ்வார், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார்.
அவற்றை முறையே ரிக், யஜுர், அதர்வன, சாம ஆகிய நான்கு வேதங்களுடன் ஒப்பிடுவர். இதனால் பெரியோர்கள் இவரை வேதம் தமிழ் செய்த பிரான் எனப் போற்றுவர். ஆழ்வாரின் நான்கு பிரபந்தங்களுள் 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி, ஒரு மணி மகுடம் போலத் திகழ்கிறது. ஆழ்வார்களின் காலத்திற்குப் பிறகு மறைந்து கிடந்த பாசுரங்களை வைணவ ஆசாரியர் நாதமுனிகள் மீட்டு வெளிக்கொணந்தார். அது நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரத்தின் உதவியாலேதான்.
உடையவர் ராமானுஜருக்கு திருவாய்மொழி மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. திராவிட வேதம் என்றும் உபநிஷத்துகளின் சாரம் என்றும் பக்தர்களுக்கு அமிர்தம் போன்றது என்றும் கொண்டாடப்படும் திருவாய்மொழிக்கு ராமானுஜரின் நியமனத்தின் பேரில் பல உரைகள் இயற்றப்பட்டன. அவற்றின்
காரணமாக திருவாய்மொழியின் சிறப்புகளை நாம் இன்றும் உணர முடிகிறது.
பராசர பட்டர் 12-6-2014
அரங்கனது அரவணைப் பிரசாதத்தால் கூரத்தாழ்வாருக்குத் திருக்குமாரராக அவதரித்த ஆசாரிய புருஷர். ஆளவந்தாருடைய திருவுள்ளம் உகக்கும் வண்ணம் ராமானுஜர் தாம் இட்ட பிரதிக்ஞைப்படி பராசரப் பட்டர் என்ற திருநாமத்தை இவருக்குச் சூட்டினார். இந்த பட்டரின் ஆசார்யன் எம்பார் ஆவார். தமிழ் இலக்கண நூல்களிலும் மிக உயர்ந்த புலமை பெற்ற இவர் நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார். நாலாயிரம் திவ்யப் பிரபந்த வ்யாக்யானங்களிலேயே இவருடைய கருத்தாழ மும், சொல்நயமும்தான் மிகச் சிறப்பானது என்று பெரியவர்கள் மதிப்பிடுவார்கள்.
தெளிய தமிழ் மறைகளை தெரிய வைக்கும் வித்தகர். விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு அருளிச்செயல் துணைகொண்டு செய்த இவரது விரிவுரையான பகவத் குணதர்ப்பணம் என்ற நூல் எல்லாத் தரப்பினராலும் பாராட்டப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தை பருவமாய் இருக்கும் காலத்தில் ராமானுஜருடன் வாதிட வந்த வித்வஜ்ஜன கோலாகல பண்டிதன் என்ற அத்வைதியை வீதியில் மறித்து ‘யதிராஜரான ராமானுஜருடன் வாதிடும் முன் என் கேள்விக்கு பதில் கூறும்’ என்று சவால் விடுத்தவர். பிறகு கையளவு மணலை எடுத்து ‘இதில் எவ்வளவு மணல் இருக்கின்றது?’ என்றும் கேட்டார்.
பண்டிதன் திகைத்து ‘மணலை எண்ண முடியுமோ?’ என்று குழப்பமாக பதில் கூறினான். உடனே பட்டர் ‘இதில் ஒருபிடி மணல் இருக்கிறது’ என்று சுலபமாகக் கூறத்தெரியாத நீர் ராமானுஜரிடம் வாதிட முடியுமோ?’ என்று கேட்டார். பண்டிதன் திகைத்து, மகிழ்ந்து, ‘பறப்பதின் குஞ்சு தவழுமோ!’ என்று புகழ்ந்தான். இந்த பால வித்வானின் பெருமைக்குக் காரணமான தந்தையார் கூரத்தாழ்வானையும், ஆசார்யர் எம்பாரையும் பாராட்டி மகிழ்ந்து, ராமானுஜரின் அடியாராகத் துறவறம் பூண்டார். ‘பேரருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ எனவும் அழைக்கப்பட்டார்.
பராசர பட்டர், அரங்கன்-ரங்க நாச்சியார் திருவருளால் வளர்க்கப்பட்ட செல்லப் பிள்ளை. இவரது வாழ்க்கையும் இவருடைய அரங்கன் சேவையும் ‘ரங்கஸ்ரீ’ ஆக இன்றும் பரிமளிக்கிறது. அரங்கனது திரு அத்யயன உற்சவத்தில் மேல்நாட்டு வேதாந்தியை வெல்வதற்கு காரணமாயிருந்தது திருநெடுந்தாண்டகம். இந்த நிகழ்ச்சி திருமொழி திருநாளுக்கு முன்தினம் கொண்டாடப்படுகிறது. இவரை அரங்கனின் தத்துப்பிள்ளை என்றே போற்றுவர். இவர் அருளிச் செய்த நூல்கள்: ரங்கராஜஸ்தவம், குணரத்தினகோசம், சஹஸ்ரநாம பாஷ்யம், கிரியாதீபம், அஷ்டச்லோகீ, த்விச்லோகி, தனிச்லோகி. இவர் தாம் வேண்டிக் கொண்டபடியே ஒரு கைசிகத் துவாதசியில் தனது முப்பத்திரண்டாவது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
திருவாய்மொழிப் பிள்ளை 11-6-2014
திருவாய்மொழிப்பிள்ளைக்கு திருஅவதார ஸ்தலம் பாண்டிய தேசத்தில் குண்டிகை. அவருடைய மற்ற திருநாமங்கள் திருமலை ஆழ்வார் சைலேசர் என்பன. பஞ்ச சம்ஸ்காரங்களும் திருவாய்மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களும் பிள்ளை லோகாசாரியரால் உபதேசிக்கப் பெற்றார். இவருக்கு ஈடு முதலான பகவத் விஷயங்களை உபதேசித்தவர் நாலூர் ஆச்சான் பிள்ளை என்பார். பாஷ்யாதி கிரந்தங்களையும் ச்ருத பிரகாசிகையையும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் உபதேசம் பெற்றார். இவருக்கு ஆசார்ய ரகசிய கிரந்தங்களும் ஆசார்ய ஹ்ருதயமும் உபதேசித்தவர் கூரகுலோத்தம் தாசர். மற்ற ரகசிய கிரதங்களை எல்லாம் விளாஞ்சேலைப் பிள்ளையிடம் கற்றுக்கொண்டார். திருநகரியை வாசஸ்தலமாகக் கொண்டு பெரியாழ்வார் திருமொழிக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம் அருளினார். இவரது சிஷ்யார் பெரிய ஜீயர் என்னும் மணவாள மாமுனிகள் முக்கியமானவர்.
திருஞான சம்பந்தர் 13.6.2014
சீர்காழி குளத்தருகே கருவிலேயே திரு கொண்ட திருஞான சம்பந்தர் உமையவளின் முலைப்பால் அருந்தி, ‘தோடுடைய செவியன்’ என்று பாடினார். கிரகங்களின் பாதிப்பு களிலிருந்து மானிடர் உய்ய கோளறு திருப்பதிகம் பாடிய ஞானக் குழந்தை இவர். மயிலையில் சிவநேசன் செட்டியாரின் மகள் பூம்பாவை சிவ பூஜைக்கு மலர் பறிக்கச் சென்றபோது பாம்பு கடித்து இறந்தாள். சிவநேசர் தன் மகளின் அஸ்தியை ஒரு கலசத்தில் இட்டு பத்திரமாக வைத்திருந்தார். ஞானசம்பந்தர் மயிலைக்கு எழுந்தருளியபோது மகளின் அஸ்தி அடங்கிய பானையை மயிலை திருக்குளத்தின் கரையில் வைக்கச் செய்து ‘மட்டிட்ட...’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி கபாலீஸ்வரனை துதிக்க, அஸ்திக் கலசம் வெடித்து பூம்பாவை புது மலரென மலர்ந்தெழுந்தாள். 63 நாயன்மார்களில் முக்கியமான தேவார மூவரில் இந்த ஞானக் குழந்தையும் ஒருவராக வீற்றிருந்து ஈசன் கழலை அடைந்தார்.
திருநீலநக்க நாயனார் 13.6.2014
நீலநக்கர் எனும் சிவனடியார் மிகச் சிறந்த சிவ பக்தராய் வாழ்ந்து வந்தார். தினமும் அவர் சிவாலயங்களுக்கு தன் மனைவியுடன் சென்று ஈசனை தரிசித்து மகிழ்வார். ஒருநாள் அவர் சிவ தரிசனம் செய்தபோது லிங்கமூர்த்தத்தின் மீது ஒரு சிலந்தி ஊர்ந்தது. அதைக்கண்ட அவர் மனைவி அந்த சிலந்தியை வாயால் ஊதி தள்ளினாள். அப்போது அவள் எச்சில் லிங்கத்தின் மீது தெறித்தது. சிவ அபராதம் செய்த மனைவியை ஆலயத்திலேயே விட்டுவிட்டு நீலநக்கர் வீடு திரும்பினார். அன்றிரவு அவரின் கனவில் ஈசன் தோன்றி ‘உன் மனைவியின் எச்சில் படாத இடங்களில் எல்லாம் என் உடம்பில் கொப்புளங்கள் தோன்றியுள்ளது. என்னே உன் மனைவியின் பக்தி!’ எனக் கூற, தவறை உணர்ந்த நீலநக்கர் தன் மனைவியை மீண்டும் அழைத்து வந்து சிவ கைங்கர்யங்களை தொடர்ந்து இறுதியில் முக்தி பெற்றார்.
திருவரங்கப் பெருமாள் அரையர் 13-6-2014
இவர் ஸ்வாமி ஆளவந்தாரின் குமாரர் மட்டுமல்லாமல், நேர் மாணாக்கரும் ஆவர். திவ்யப் பிரபந்தங்களுடைய அர்த்தங்களை ஆளவந்தாரிடமிருந்து கற்று ராமானுஜருக்கு உபதேசித்தவர். நம்பெருமாளிடம் நாள்தோறும் அருளிச் செயலை அபிநயித்து அரங்கன் உகக்கும்படி அரையர் சேவை செய்ததால் ‘திருவரங்கப் பெருமாள் அரையர்’ என்று வழங்கப்பட்டார். ராமானுஜரின் பஞ்சாசார்யருள் (ஐந்து ஆசான்கள்) இந்த ஸ்வாமியும் ஒருவர். இவரது தம்பியர் தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியோர்.
தொகுப்பு: எம்.என்.ஸ்ரீநிவாசன், பரத்குமார்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.