ஏயர்கோன் கலிக்காமர் 21.6.2014
சிவபெருமானையே தூதராக, தன் காதலி பறவைநாச்சியாரிடம் அனுப்பிய காரணத்தால் சுந்தரர் மேல் தீராப்பகை கொண்டார் கலிக்காமர் எனும் சிவபக்தர். ஆனால், அடியார்கள் இருவரையும் இணைத்து வைக்க ஈசன் திருவுளம் கொண்டார். கலிக்காமருக்கு தீராத வயிற்றுவலியை உண்டு பண்ணி சுந்தரரால் அந்த நோய் தீரும் என்று உரைத்தார். சுந்தரர் கலிக்காமரைக் காண ஏற்பாடுகள் செய்யப்படுவதை அறிந்த கலிக்காமர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனம் வருந்திய சுந்தரர் தானும் அதே கத்தியால் குத்திக் கொண்டு இறக்க முடிவு செய்ய, அப்போது ஈசன் சுந்தரமூர்த்திநாயனரைத் தடுத்தார்; கலிக்காமரை உயிர் பெறச் செய்தார். அடியார்கள் இருவரும் ஈசன் அருளால் நண்பராயினர்.
மாணிக்கவாசகர் 12.7.2014
திருவாதவூரில் பிறந்தவர் திருவாதவூரார். மதுரை அரிமர்த்தன பாண்டிய மன்னனின் அமைச்சராகத் திகழ்ந்தவர். ஈசனின் இணையடியைப் பற்றிய திருவாதவூரார், மன்னரின் குதிரைப்படைக்கான குதிரைகளை வாங்கும் பொறுப்பை மேற்கொண்டார். குதிரை வாங்கச்சென்ற வழியில் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் குருந்த மரத்தடியில் குருபரன் ஈசனின் தரிசனம் கிட்டியது. தான் வந்த வேலையை மறந்து குதிரைகள் வாங்க வைத்திருந்த பொன்னையும் பொருளையும் திருப்பெருந்துறை ஆலயத் திருப்பணிக்கே செலவழித்தார். விவரம் அறிந்த மன்னன், அவரை தண்டிக்க முற்பட்டான். அப்போது ஈசன் நரிகளை பரிகளாக்கி, லீலை புரிந்தார். தன் அடியவரின் பக்தியை உலகறியச் செய்தார். ஈசன் புகழை நாத்தழும்பேறப் பாடிய திருவாதவூரார் மாணிக்கவாசகரானார்.
வடக்கு திருவீதி பிள்ளை 7-7-2014
இவர், நம்பிள்ளையின் பூரணமான அன்புக்குப் பாத்திரமானவர். ‘ஈடு’ என்ற மகா கிரந்தத்தை ஓலைச்சுவடியில் பதிப்பித்தவர். வைராக்ய புருஷர். அஷ்டாதச ரகசிய கிரந்தங்களையும் அருளிய பிள்ளை லோகாசார்யரும் ‘ஆசார்ய ஹ்ருதயம்’ அருளிச்செய்த அழகிய மணவாளைப் பெருமாள் நாயனாரும், இவருடைய திருக்குமாரர்கள். கூரகுலோத்தமதாசர் இவருடைய மாணாக்கர் ஆவர். நம்பிள்ளையின் ஈடு முப்பத்தாறாயிரப்படியை நூல் வடிவமாகச் செய்து இன்றும் பகவத் விஷயம் என்ற பெயரில் ஸம்பிரதாயத்தில் விசேஷமாக அனுஸந்தானம் செய்ய உதவிய மகான் இவ்ர்.
கூர்ம ஜயந்தி - 23.6.2014
உலக நன்மைக்காக அமிர்தம் பெற வேண்டி, தேவர்களும் அசுரர்களும் வாசுகி எனும் நாகத்தை கயிறாக்கி மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலை கடையத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மந்தாரமலை ஆதாரம் நிலையாக இல்லாததால் சரியத் தொடங்கியது. அப்போது ஸ்ரீமந்நாராயணன், கூர்மம் எனும் ஆமை வடிவம் எடுத்து அந்த மலையத் தாங்கி பாற்கடலைக் கடைய பேருதவி செய்தார். அவர் கூர்ம வடிவம் எடுத்த நாள் கூர்ம ஜயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. வால்டேர் அருகில் உள்ள கூர்மம் ஆலயத்தில் திருமாலை ஆமை வடிவிலேயே தரிசிக்கலாம். ஸ்ரீரங்கம் தசாவதார சந்நதியிலும் கூர்ம மூர்த்தியை தரிசிக்கலாம்.
பெரியாழ்வார் 7-7-2014
பெரியாழ்வாருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் விஷ்ணு சித்தர். பாண்டிய ராஜ சபையில், திருமாலின் மேன்மையை இவர் நிரூபித்தார். அதற்குப் பரிசாகப் பொற்கிழியை விஷ்ணு சித்தருக்கு வழங்கி, அவரை பட்டர் பிரான் எனக் கொண்டாடினான், அரசன் வல்லப தேவன். பட்டத்து யானை மீது அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றான். அப்போது தமது பக்தனின் பெருமையை நேரில் காண கருடன் மீது எழுந்தருளினார் திருமால்! பெருமாளின் திவ்ய வடிவைக் கண்ட ஆழ்வார், பெருமாளுக்கு திருஷ்டி படுமோ என அஞ்சினார்.
உடனே பட்டத்து யானை மேல் இருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு எம்பெருமானுக்கு, எத்தகைய ஊறும் ஏற்படாதிருக்க திருப்பல்லாண்டு பாடினார். இதனாலேயே இவர் பெரியாழ்வார் என அனைவராலும் இன்றுவரை கொண்டாடப்படுகிறார். பெரியாழ்வார் கண்ணன் பக்தியில் திளைத்தவர்.கண்ணனின் வடிவழகையும், பல்வேறு விளையாடல்களையும் நினைத்து நினைத்து உருகி நின்றவர். யசோதாவாகவே தம்மை உருவகித்துக்கொண்டு அந்த மாயக் கண்ணனை தாலாட்டி சீராட்டி மகிழ்ந்தவர். தன்னுடைய அனுபவங்களை தேனினும் இனிய செந்தமிழ்ப் பாசுரங்களாக வடித்தார்.
அத்தகைய உயர்ந்த கிருஷ்ண பக்தி இருந்ததனால்தான், பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த பரமாத்மா ஓடி வந்து ஆழ்வாரின் மனக்கடலில் வாழப் புகுந்தான். ‘‘பனிக்கடலில் பள்ளி கோள் பழகவிட்டு, ஓடி வந்தென் மனக் கடலில் வாழவல்ல மாய மணாள நம்பி...” என்று ஆழ்வார் பூரித்துப்போய் பாடுகிறார். வைகுந்தம், துவாரகை போன்ற இடங்களை விட்டுவிட்டு பெரியாழ்வாரின் இருப்பிடத்தை நாடி வந்த வனல்லவா அந்தப் பரந்தாமன்! ஆழ்வார் தமது இறை தேடல் அனுபவத்தை வெகு சிறப்பாகக் கூறுகிறார். ‘‘காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை, நீரும் இல்லை.
பரந்தாமா! உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்” என்கிறார். தேவையற்ற முயற்சிகளிலும் கவலைகளிலும் அழுந்திக் கிடந்த என்னை உன்னுடைய பேரருளால் அஞ்சேல் என அபயம் அளித்துக் காப்பாற்றினாய். அருளே வடிவான உன்னைக் காணும்போது ‘காலும் எழா, கண் நீரும் நில்லா, குரல் மேலும் எழா’ என்று உளம் நெகிழ்ந்து பாடுகிறார். பரந்தாமனுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்தாலே போதும் என்பது உட்பொருள்.
‘ஓம் நமோ நாராயணா’ என்ற திருமந்திரத்தை ஓதாமல் இருக்க நேரிடுமாயின், அந்த நாளே தமக்கு உணவு கிட்டாத, பட்டினி கிடக்கும் நாள் என்கிறார் பெரியாழ்வார். அன்றாடம் இறைவனை நினைக்க வேண்டும். அவனைத் தொழ வேண்டும் அவன் நாமங்களைப் பாட வேண்டும் என்பதே அவர் விருப்பம். ஏழலகும் உண்ட தூமணி வண்ணனை நினைக்காத வலிய நெஞ்சுடையவர்கள் பூமிக்குப் பாரமே எனவும் மொழிகிறார் ஆழ்வார்.
அதே சமயம் பக்தர்களின் பெருமை களையும் போற்றுகிறார்: ‘நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாதத்துளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.’ பரந்தாமனின் அருளைப் பெற ஆயுள் முடியும் காலம் வரை காத்திருக்காதீர்கள். மூப்பு எய்தும்போது நம்முடைய மனம் வாக்கு உடல் எல்லாம் நலிந்த நிலையில் இருக்கும். அப்போது ஆண்டவனை நினைப்பது அரிது. ஆகவே திடமாக இருக்கும்போதே பக்தி பண்ணப் பழகிவிடுங்கள் என்று போதிக்கின்றார்.
அருணகிரிநாதர் 11.7.2014
பதினைந்தாம் நூற்றாண்டில் காவிரிப் பூம்பட்டினத்தில் அவதரித்தவர். இளமையிலேயே தேவாரம், திருமந்திரம், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை நன்கு கற்றார். ஆனால், கற்றபடி கந்தனை நினையாமல், கண்டபடி மயக்கும் மங்கையரை நாடினார். பொன், பொருள் மட்டுமா, பொன்னான மேனிப் பொலிவையும் இழந்தார். எல்லாம் இழந்து மனம் நொந்த அவர் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரின் அருளால் முருகனை உபாசிக்கத் தொடங்கினார். முருக தரிசனம் கிட்டாத வேதனையில் அண்ணாமலை கோபுரத்தின் உச்சியிலிருந்து ‘முருகா’ எனக் கூவியவாறு கீழே விழுந்த அவரை எந்த வேளையும் காக்கும் கந்தவேள், கைத்தாங்கலாகத் தாங்கி காப்பாற்றினார்; ‘சும்மா இரு, சொல்லற...’ என்றும் உபதேசித்தார். அதோடு ‘முத்து...’ என அடியெடுத்துக் கொடுத்தார். ‘முத்தைத்திரு பத்தி...’ என முருகன் மேல் கவி பாடத் துவங்கி, எண்ணற்ற திருப்புகழ்களை இயற்றிய பேறு பெற்ற அருணகிரியாரின் திருநட்சத்திரம் இன்று.
ஆனித் திருமஞ்சனம் 4.7.2014
ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள், சிதம்பரம் தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது ஆனித் திருமஞ்சனத் திருவிழா. இதற்குப் பத்து நாட்கள் முன்னரே ஊர் திருவிழாக்கோலம் பூண்டு விடுகிறது. முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்க, ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு தேரிலிருந்து இறங்கும் நடராஜப்பெருமான் ஆடி அசைந்து ஒயிலாக ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கே அவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். மறுநாள் சிவகாமியம்மையும் நடராஜமூர்த்தியும் சித்சபையில் பக்தர்களுக்கு தரிசனமளிப்பர். அன்றிரவு தங்கத்தால் செய்யப்பட்ட இரு குடங்களில் இருவருக்கும் அபிஷேகம் நடக்கும். அந்நிகழ்வோடு கொடி இறக்கப்பட்டு ஆனிப்பெருவிழா நிறைவுபெறும். புதிதாகத் திருமணமான தம்பதியர் இந்த சமயத்தில் இங்கு வந்து ஐயனையும், அம்மையையும் தரிசித்தால் தீர்க்க சௌமாங்கல்யமும், நல்புத்திரப் பேறும் கிட்டும் என்பது ஐதீகம்.
அமர்நீதி நாயனார் (ஆனி பூரம் 2.7.2014)
அமர்நீதியார் ஒரு சிறந்த சிவபக்தர். அவரைச் சோதிக்க நினைத்த பஷ்ரமன் முனிவர் வேடத்தில் வந்து அவரிடம் ஒரு கோவணத் துணியைக் கொடுத்து அதை பத்திரமாக வைத்திருக்கும்படியும், சில நாட்கள் கழித்து தான் திரும்ப வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறிச் சென்றார். சில நாட்களில் முனிவர் தந்த துணி மாயமாய் மறைந்துபோயிற்று. மீண்டும் முனிவர் உருவில் வந்த பரமன் துணியைத் திரும்ப கேட்க அமர்நீதியார் உண்மையைச் சொல்லி மன்னிக்க வேண்டி நின்றார். பரமன் அதே போன்ற இன்னொரு துணியைக் காட்டி, அதற்கு ஈடான துணியைக் கேட்டார். துணி மட்டுமல்ல, பொன் பொருள் என எவ்வளவு வைத்தும் அந்தத் துணியின் எடைக்கு ஈடாகாததைக் கண்ட அமர்நீதியார் தன் குடும்பத்துடன் மறுபக்கத் தராசில் அமர தராசு சமன் எடை ஆயிற்று. முனிவராக வந்த பரமன் அவர்களுக்குக் காட்சி தந்து அருள்பாலித்தார்.
நாதமுனிகள் 9.7.2014
‘நாதமுனிகள் அவதார நன்னாள் ஆராவமுதே’ என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியானது, திருக்குடந்தையாகிய கும்பகோணம் சார்ங்கபாணி என்று புகழ்பெற்ற ஆராவ முதன் மீது பாடிய பாடலாகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திவ்யதேசங்கள் என்று பெருமை பெற்றவை. திவ்ய தேசங்களை தவிரவும் ஆழ்வார்களின் பாடல் பெறாத பல அபிமானத் தலங்களும், புராணத் தலங்களும், பரிகாரத் தலங்களும் நாடெங்கும் நிறைந்துள்ளன. அவை அனைத்திலும் ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்கள் பூஜாமுறையில் வழக்கத்தில் இருக்கின்றன.
இந்த திவ்யபிரபந்தங்களை நமக்கு காட்டிக் கொடுத்தவர் என்ற பெருமை சிதம்பரம் அருகில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுமன்னார்குடியில் அவதரித்த புண்ணிய சீலரான நாதமுனிகள் அவர்களையே சாரும். அதற்கு மூல காரணமாயிருந்தது, மேலே குறிப்பிட்ட ஆராவமுதே என்ற திருக்குடந்தைப் பெருமாளைப் பற்றிய பாடலாகும். நாதமுனிகள் கி.பி.822ல் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவ்வூரில்தான் தமிழகத்தின் தாகத்தை ஓரளவு தீர்க்கும் வீராணம் ஏரி உள்ளது.
அதனாலேயே இவ்வூர் பெருமாளுக்கு வீரநாராயணப் பெருமாள் என்பது திருநாமம். இவ்வூரில் அவதரித்த நாதமுனிகள் மூலமாக திவ்யபிரபந்தங்கள் கிடைத்ததால் இப்பெருமாளுக்கு ‘காட்டும் மன்னார்’ என்ற திருநாமமும் உண்டு. எனவே இத்தலம் காட்டுமன்னார் கோயில் அல்லது காட்டுமன்னார்குடி என வழங்கப்படுகிறது. ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இம்மகான், வீர நாராயணப் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். இவர் பல கலைகளை அறிந்தவர். யோகாப்யாசமும் கைவரப் பெற்றவர்.
குருகூரிலிருந்து காட்டுமன்னார்குடிக்கு வந்த பக்தர்கள் சிலர் ஒரு திருவாய்மொழியை அழகுறப் பாடுவதைக் கேட்டார் நாதமுனிகள். அது கேட்டு மனம் உருகிய அவர், ‘‘யார் இயற்றிய பாடல் இது?” என்று கேட்டார். ‘‘இது ஒரு பாடல் மட்டுமல்ல, நாலாயிரம் பாடல்கள் உள்ளன,” என்று அவர்கள் பதிலிறுத்தார்கள். ஆனால், இந்தப் பாசுரம் தவிர பிற அனைத்தும் தங்களுக்குத் தெரியாது என்றும் ஒப்புக்கொண்டனர். அதோடு, ஆழ்வார் திருநகரியில் பாரங்குசதாஸர் எனப்படும் மதுரகவிதாஸர் என்பவரை சந்திக்கும்படி யோசனையும் கூறினர்.
இவரும் ஆழ்வார்திருநகரிக்கு விரைந்து மதுரகவிதாஸரைத் தொழுது மற்ற பாசுரங்களைக் கூறுமாறு கேட்டார். அவர் தனக்கும் பிற பாடல்கள் பாடமாகவில்லை என்றும், நம் மாழ்வாரின் சீடரான மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுன் சிறுதாம்பு’ பதிகத்தை பன்னீராயிரம் முறை ஜபித்தால் ஆழ்வார் மூலம் அப்பாடல்கள் அனைத்தையும் உபதேசமாகப் பெறலாம் என்றும் தெரிவித்தார். நாதமுனிகளும் அப்பாசுரத்தை ஜபம் செய்து வரவே யோகத்தில் ஆழ்வார் காட்சி தந்து இவருக்குத் தமிழ் மறையான நாலாயிர திவ்ய பிரபந்தங் களை உபதேசித்தார்.
இவரும் திருவாய்மொழிக்கு ‘பக்தா மிருதம்’ என்ற தனியனை அருளிச்செய்தார். தமிழ் மறையான திவ்யப் பிரபந்தத்திற்கு தாளமும், பண்ணும் வழங்கினார். தமிழ் மறை தந்த வள்ளல் என்று போற்றப்பட்டார். இவரே திவ்யப் பிரபந்தத்திற்கு முதல் வாய்மொழி உரையாசிரியராவார். தனது மருமகன்களான மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவரின் துணை கொண்டு இவர்கள் மூலமாக திருவரங்கத்தில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை வைணவ உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் அருளிச் செய்த மற்ற நூல்கள்: நியாய தத்துவம், யோக ரகசியம், புருஷநிர்ணயம்.
தொகுப்பு: எம்.என்.ஸ்ரீநிவாசன், பரத்குமார்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.