சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும். சூரியன் நீண்ட நேரம் ஒளி வீசி ‘ஓவர்டைம்’ வேலை பார்ப்பது போன்று நாமும் நமது உச்ச பட்ச உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய காலம் இது.
சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். பெயருக்கு ஏற்றாற் போல் தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. ஆம், இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இத னைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்குக் காரணம்.
இதன் காரணமாகவே இந்த மாதத்தில் ‘அகஸ்’ என்றழைக் கப்படும் பகல் பொழுதின் அளவும் அதிகரித்திருக்கிறது. ‘ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையில் ஆனி மூலம் அரசாளும், பெண் (கன்னி) மூலம் நிர்மூலம் என்பதே ஆகும். அதாவது, ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும்.
பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசயோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி. அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது. பெண் மூலம் நிர்மூலம் என்ற சொற்றொடருக்கு உண்மையான காரணம் இதுதான்: கன்னி மாதம் என்ற ழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாள், அஷ்டமி அல்லது நவமியோடு இணைந்து வரும். அதாவது, துர்காஷ்டமி அல்லது ஆயுத பூஜையோடு இணைந்து வருகிற நாள். இந்த நாட்களில் அசுரர்களை அம்பாள் நிர்மூலம் ஆக்கினாள் என்பதால் பெண் (கன்னி-புரட்டாசி) மூலம் நிர்மூலம் என்ற சொல்வழக்கும் தோன்றியது.
அதன் உண் மையான பொருளை உணராமல் பொதுவாகவே மூல நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஆகாது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். அதே போன்று ‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது’ என்ற சொல் வழக்கையும் நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்தில் மூத்த பிள் ளையாகப் பிறந்த ஆணுக்கு, மூத்தவளாகப் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தவறாகப் பொருள் காண்கிறோம். ஆணோ, பெண்ணோ ஒரு பிள்ளையோடு நிறுத்திவிடுகிற இந்த காலத்தில் தலைச்சனுக்கு தலைச்சனைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது விவரம் தெரிந்தவர்கள் வாதம்.
உண்மையில் இந்த சொல்வழக்கிற்குப் பொருள் என்ன தெரியுமா? ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்), அதே ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல். இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாது தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி விடுகிறோம்.
ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். குறிப்பாக பழனியில் ஜேஷ்டாபிஷேகம் வெகு பிரபலம். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.
இந்த நாளில் உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெரிய நிர்வாகத்தைக் கட்டி ஆளும் தொழில் அதிபர்கள் யாவரும் அருகில் உள்ள ஆலயத்தில் ஆண்டவனுக்கு விசேஷ அபிஷேகத்துடன் கூடிய பூஜைகள் செய்து வழிபட்டால் அவர்களது நிர்வாகம் செழிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அண்ட வெளியை ஆய்வு செய்கின்ற அமெரிக்க விஞ்ஞானிகளும் கூட அம்பலத்தில் ஆடுகின்ற ஆடலரசனை, நடராஜப் பெருமானை ‘அஸ்ட்ரானமி’ எனப்படும் ஆகாய அறிவியலின் ஆண்டவனாக ஏற்றுக்கொள்கின்றனர்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம் ஆக விளங்குவது சிதம்பரம். சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடக்கும். மார் கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆருத்ரா தரிசனப் பெருவிழாவும், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்தி ரத்தை மையமாகக் கொண்டு ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இவ்விரு நாட்களிலும் நடராஜப்பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஆடிக்கொண்டே கனக சபைக்குள் எழுந்தருளும் தரிசனக் காட்சியினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர்.
ஆனித் திருமஞ்சன நாள் அன்று சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில், அதாவது, கன்னி ராசியில் சந்திரனும் சஞ்சரிப்பர். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கின்ற இவ்விரு கோள்களும் மிதுனம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் நேரமே ஆனித் திருமஞ்சன நாள். மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுமே புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகள். கல்விக்கு அதிபதி புதன். அதிலும் வானவியல் அறிவினைத் தருவது புதன். ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமானை தரிசிக்க வானவியல் ஆய்வாளர்கள் நிறைய பேர் வருவதை நாம் இன்றும் காண முடியும்.
ஆனி மாதத்தில் வானம் தெள்ளத் தெளிவாகக் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே சென்னையில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள ஆலங்காயம் உள்பட அனைத்து வானவியல் ஆய்வு மையங்களிலும் இந்த ஆனி மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஓய்வின்றி செயல்படுவர். பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக அணுகாமல், அதனை ஆழ்ந்து ஆராயும் பக்குவத்தைத் தருபவர் புதன். அதனால்தான் அவரது ஆட்சியினைப் பெற்ற மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே ஆராய்ச்சி செய்யும் குணத்தினைப் பெற்றிருப்பர்.
ஆக, அவரது ரா சிகளில் ஆன்ம காரகன் ஆகிய சூரியனும், மனோகாரகன் ஆகிய சந்திரனும் சஞ்சரிக்கும் இந்த ஆனித் திருமஞ்சன நாள் ஆய்வாளர்களுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். புதனுக்கு உரிய மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆனி மாதம் அறிவியல் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவினைத் தரும் மாதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லைமை, அனுபவபூர்வமான உண்மை.
திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.