ஆண்டாள் (ஆடிப்பூரம்) 30-7-2014
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு துளசிச் செடியின் கீழ், பெரியாழ்வாருக்கு பூமிதேவியின் அவதாரமான ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அந்தத் தெய்வப் பெண்ணுக்கு ஆண்டாள் எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார், விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார். அந்த ஆண்டாள் வளர்ந்து பெரியவளாகி அந்த அரங்கனுக்கே துணைவியானாள். ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்தது எப்படி? ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணனிடம் பூமிதேவி, ‘‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள்?’’ என்று கேட்டாள்.
‘‘பூலோகத்தில் வாழ்ந்தும் இக சுகங்களில் பற்று வைக்காமல் என்னிடமே நித்தம் பக்தி செய்து என்னை நினைத்து எனக்குப் பாமாலையும், பூமாலை யும் தொடுத்துச் சாத்துகின்ற பாகவதர்களிடம் நான் அளவு கடந்த அன்பு செலுத்துவேன்,’’ என்றார் திருமால். உடனே பூமிதேவி, தான் அத்தகைய பக்தையாக பிறவியெடுக்க அருளவேண்டினாள். அப்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் நந்த வனத்தில் துளசி மாடத்துக் குக் கீழே சிறு குழந்தையாகத் தோன்றினாள் பூமாதேவி. வடபத்ரசாயி என்ற பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக விடியற்காலையில் பூக்குடலையுடன் நந்தவனத்திற்குச் சென்ற பெரியாழ்வார் கண்களில் பட்டாள்.
அன்றைய தினம் திரு ஆடிப்பூர சுக்லபட்ச சதுர்த் தசி செவ்வாய்க்கிழமை ஆகும். அந்த ஞானக் குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்த்து வந்தார் விஷ்ணு சித்தர். கோதை அந்த கோவிந்தன் நினைவாகவே வளர்ந்து வந்தாள் அவள் ஆடலிலும் பாடலிலும் மழலைச் சொற்களிலும் கண்ணனின் தொடர்பு காணப்பட்டது. அந்தக் கண்ணனையே ஆண்ட அவள் ஆண்டாள் எனப் பெயர் பெற்றாள். கோதை என்னும் தமிழ் வார்த்தைக்கு அழகிய கேசம், பூமாலை என்றும் அர்த்தம் உண்டு.
கோதை அருளியது திருப்பாவை என்ற பாடல் தொகுப்பு. இந்தச் சொல்லுக்கு சிறந்த நோன்பு என்று பொருள். ஆண்டாளும், அவளுடைய தோழிகளும் காத்யாயனி என்கிற உத்தமமான நோன்பைச் செய்ய மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரையே கண்ணன் வாழும் கோகுலமாக நினைத்து தன்னை ராதையாகவும் தோழிமார்களை கோபியர்களாகவும் கருதி நோன்பு நோற்றாள் ஆண்டாள். திருப்பாவை முப்பது பாடல் களிலும் ஸ்ரீமந்நாராயணனின் பெருமைகளை உள்ளம் குளிர தினம் பாடி மகிழ்ந்தனர்.
கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு விஷ்ணு சித்தர் உயர்ந்த ஞானத்தைப் போதித்தார். இளமை தொடங்கி எம்பெருமான் மீது பக்திப் பெருவேட்கை கொண்டு அவனையே தான் மணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்தாள் ஆண்டாள். கண்ணனையே சிந்திப்பதும் துதிப்பதுமாய் இருந்தாள். விஷ்ணு சித்தர் தினம் பூ கொய்து வந்து அதை மாலையாகக் கட்டி வடபெருங்கோயிலானுக்கு சாற்றுவதற்கு பூக்கடலையில் வைப்பது வழக்கம். தான் பெருமாளின் பேரெழிலுக்கு சமமானவள்தானா என்ற ஐயம் எழுந்தது ஆண்டாளுக்கு.
அதைத் தீர்த்துக் கொள்ள பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை தான் சூடி அழகு பார்த்து வந்தாள். பெருமாளும் அதை விருப்ப முடன் ஏற்றுக்கொண்டார். இது விஷ்ணு சித்தருக்கு தெரியாது. ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த மாலையைச் சூடி கண்ணாடியில் ஆண்டாள் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்ததை விஷ்ணு சித்தர் கவனித்துவிட்டார். உடனே ‘அபசாரம் செய்து விட்டாயே’ என்று மகளைக் கடிந்து கொண்டார்.
மனவருத்தத்தால் பகவானுக்கு அன்று அவர் மாலை அணிவிக்கவில்லை. அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பகவான் தோன்றினார். ‘ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே நறுமணம் மிக்கதும் எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும்; ஆதலின் அத்தன்மையான மாலையே கொண்டு வருவாய்’ எனச் சொன்னார். தனக்கு மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் என விஷ்ணுசித்தர் தெரிந்துகொண்டார். அன்று முதல் சூடிக்கொடுத்த நாச்சியார் எனப் புகழப்பட்டாள் ஆண்டாள்.
பின்பு தந்தையாரிடம் நூற்று எட்டு திருப்பதிகளில் உள்ள பெருமாளின் பெருமைகளை விளக்கச் சொல்லிக் கேட்டாள் ஆண்டாள். அவ்வகையில் அரங்கநாதனின் பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள். ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு வசமாகி கோதையை திருமணம் செய்துகொண்டார்.
ஆளவந்தார் 9-8-2014
வைஷ்ணவ குரு பரம்பரையின் தலைவராயிருந்த ஆளவந்தார்தான் வைணவ சம்பிரதாயம் தழைக்க வழிவகுத்தவர். நமக்கு ராமானுஜரை தேடிக் கொடுத்த பெருமை பெற்றவரும் இவரே. நாலாயிர திவ்ய பிரபந்தகளை நமக்கு கிடைக்க வழி செய்தவரான நாதமுனிகளின் பேரன் இவர். ஆளவந்தார், தாது வருடம் ஆடி மாதம், உத்திராட நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருக்கு யமுனைத் துறைவர் என்று பெயரிட்டனர். இவருக்கு மணக்கால் நம்பி என்ற பெரியவர் நாராயணனின் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.
ஆளவந்தார் தமது ஆறாவது வயதில் மகாபாஷ்ய பட்டர் என்கிற பண்டிதரிடம் வேத சாஸ்திரங்களைக் கற்றார். அப்போது கோலாகல பண்டிதன் என்பவர் அந்த சோழ நாட்டு அரசவை வித்வானாக இருந்தார். அவர் பிற அறிஞர்களை எல்லாம் வாதத்தில் வென்று அவர்களிடமிருந்து கப்பம் வாங்கி வந்தார். அப்பண்டிதர் மகாபாஷ்ய பட்டரிடமும் கப்பம் வாங்கி வர தனது ஆட்களை அனுப்பினார். இதைக் கண்ட ஆளவந்தார் தன் குருவிற்கு பதிலாகத் தாமே சென்று வாதிட்டு வர விரும்பினார். மகாபாஷ்ய பட்டர் சிறுவனான ஆளவந்தாரை அனுப்ப மனமின்றி வருந்தினார்.
ஆளவந்தார் அவரை சமாதானப்படுத்தி, வந்தவர்களிடம் தன்னை ஒரு பல்லக்கில்தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். காவலர்கள் இந்த விஷயத்தை அரசரிடம் சொல்ல அரசனும் மற்றவர்களும் கோபமாய் வியந்து அச்சிறுவனை அழைத்துவர பல்லக்கை அனுப்பி வைத்தனர். யமுனைத் துறைவரும் தன் குருவை வணங்கி அரசவைக்குப் பல்லக்கில் சென்றார். அரசவையில் தமக்கு ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டார். கோலாகலன் அவருடைய வயதையும் வடிவத்தையும் கண்டு நகைத்தார்.
இதையறிந்து கொண்ட யமுனைத் துறைவன் ‘என்னுடைய வயதைக் கண்டு ஏளனமாக நினைக்க வேண்டாம். துணிவிருந்தால் என்னோடு வாதிடும்’ என்றார். கோலாகலப் பண்டிதன் ‘நீயோ சிறு பிள்ளை. உனக்குத் தெரிந்த விஷயத்தைப்பற்றி நீயே பேசு’ என்று ஏளனமாகக் கூறினார். யமுனைத் துறைவரும் தயங்காமல் நான் இப்போது மூன்று விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன். நீர் அவற்றை மறுப்பீரா? அப்படி மறுத்தால் நான் தோற்றதாக தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.
1. உமது தாய் மலடி,
2. இந்நாட்டு அரசன் தர்மவான்,
3. மகாராணி பதிவிரதை.
இவற்றைக்கேட்ட கோலாகலப் பண்டிதன் மிகவும் குழம்பினார். மறுக்க இயலாமல், ‘நீரே பதிலையும் சொல்லி விடும்’ என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். யமுனைத் துறைவன் மூன்று கேள்விகளுக்கும் சாதுர்யமாக பதிலளித்தார். முதல் விஷயம், ஒரு மரம் தோப்பாகாது என்பார்கள். எனவே ஒரே பிள்ளையாகிய உம்மைப் பெற்ற உம்முடைய தாயை மலடி என்று கூறுவதில் தவறில்லை. இரண்டாவதாக மகாராஜா தர்மவான் அல்ல. சாஸ்திரப்படி அரசனின் ஆட்சிக்குட்பட்டவர்கள் செய்யும் பாவங்களும் அதாவது, நீர் பிற அறிஞர்களிடம் கப்பம் வாங்குவது போன்ற பாவங்களும் அரசனையே சேரும் என்பதால் அவரை தர்மவான் என்று கூற முடியாது. மூன்றாவதாக, மகா ராணி பதிவிரதை அல்ல.
சாஸ்திரப்படி குழந்தை பிறக்கும்போது கந்தவர்களுக்குப் பின்னர் நடக்கும் சடங்குகளில் அதற்குரிய தேவர்களுக்கும் திருமணத்தின்போது அக்னி தேவனுக்கும் அர்ப்பணித்த பின்பே கணவரிடம் ஒரு பெண் ஒப்படைக்கப்படுகிறாள். ஆகவே மகாராணி பதிவிரதை அல்ல என்று கொள்ளலாம். சபையிலிருந்து வித்வான்களும் மற்றவர்களும் ஆரவாரித்தனர். அரசி ஓடோடி வந்து யமுனைத் துறைவனை அணைத்துக்கொண்டு ‘எனை ஆளவந் தீரோ?’ என்று கூறி மகிழ்ந்தாள். அதனால்தான் அதுமுதல் யமுனைத் துறைவனுக்கு ஆளவந்தார் என்ற பெயர் ஏற்பட்டது.
அரசனும், ‘இப்பிள்ளை தோற்பான். அப்படியில்லையெனில் அவனுக்கு பாதிராஜ்யம் அளிப்பேன்’ என்று கோலாகனிடம் கூறியிருந்ததால் அதன்படி பாதி ராஜ்யத்துக்கு ஆளவந்தாரை அரசனாக்கினான். மணக்கால் நம்பி பல முயற்சிகள் செய்து ஆளவந்தாரை அணுகி அவருக்கு கீதோபதேசம் செய்து, வேதங்களின் அர்த்தங்களையும் உபதேசித்து, அவர் சாஸ்திர ஞானசீலராய் அரங்கத்தரவினையானின் கைங்கர்யங்களில் ஈடுபட வைத்தார். மேலும் வைணவ மதத்தை பரப்பி புகழ் பெற்றார்.
மூர்த்தி நாயனார் 2-7-2014
சிவாலயங்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து தொண்டு செய்து வந்தார் மூர்த்தி எனும் அடியார். அப்போது அந்நாட்டை ஆண்ட மன்னன் வேற்று மதத்திற்கு மாறியதால் சிவாலயங்களுக்கு வழங்கி வந்த சந்தனக் கட்டைகளுக்கான நிதியுதவியை நிறுத்தினான். வேறு பக்தர்களும் அதற்கான நிதியை வழங்கக்கூடாது என உத்தரவிட்டான்.
அதனால் சந்தனக் கட்டை இல்லாத நிலையில் மூர்த்தி தன்கையையே சந்தனக் கட்டையாக பாவித்து சந்தனக் கல்லில், ரத்தம் சொட்ட கை எலும்புகள் தெரியும்வரை இழைத்தபோது ஈசன் அவரைத் தடுத்தாட்கொண்டார். கொடுங்கோல் மன்னன் இறந்துவிட, பட்டத்து யானை பரமனருளால் மூர்த்தியை மன்னனாகத் தேர்வு செய்ய, அவரும் அன்று முதல் விபூதி, ருத்ராட்சம், சடைமுடி மூன்றையும் தன் அரசு பரிபாலனச் சின்னமாக ஏற்றுக்கொண்டு மூர்த்தி நாயனாராக ஆட்சி செய்து இறுதியில் சிவபதம் அடைந்தார்.
பெருமிழலைக்குறும்பர் 2-8-2014
சுந்தரமூர்த்தி நாயனாரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தவர் பெருமிழலைக் குறும்பர் எனும் அடியார். தன் குருவின் மற்றொரு பெயரான நம்பியாரூரார் என்பதையே மந்திரமாக ஜபம் செய்து தியானம் செய்து வந்தார். அதன் பயனால் அட்டமாசித்திகளும் அடைந்தார். தன் குரு யானை மீதேறிக் கைலாசம் செல்வதை ஞான திருஷ்டியால் அறிந்தார். குரு இல்லாத இவ்வுலகில் தான் வாழ்ந்து என்ன பயன் என நினைத்து தன் யோகசக்தியால் தனது ஆத்மாவை சிரசில் உள்ள பிரமரந்திர சக்கரத்தின் மூலம் வெளியேற்றி ஈசனுடன் இரண்டறக் கலந்தார்.
சேரமான் பெருமான் நாயனார் 3-8-2014
மிகச்சிறந்த சிவபக்தனாகவும் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் பேசும் மொழிகளை உணரக் கூடியவராகவும் இருந்தவர் சேரநாட்டு மன்னன் சேரமான் பெருமான். அதனால் அவர் கழறிற்றறிவார் எனும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தார். ஒரு சமயம் அவர் யானையின் மீது பவனி வந்தபோது துணி வெளுக்கும் தொழில் புரியும் ஏகாலி ஒருவர் உடலில் உவர்மண் உலர்ந்த நிலையில் எதிரே வர, அவரை திருநீறு பூசிய சிவனடியார் என நினைத்து யானையிலிருந்து இறங்கி வந்து அவரை வணங்கினார் சேரமான் பெருமாள். எப்போதும் சிவபக்தியிலேயே திளைத்து சிவபூஜையை தினமும் தவறாமல் செய்து வந்தார். அவரின் பூஜையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நடராஜப் பெருமான் தன் சிலம்பொலியை அவர் கேட்குமாறு செய்வார். அவ்வளவு பக்தியை ஈசன் மீது கொண்டிருந்தார் சேரமான் பெருமான் நாயனார்.
புகழ்ச்சோழர் 2-7-2014
புகழ்ச்சோழர் எனும் மன்னன் கருவூரை ஆண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். ஒரு முறை அவர் தன் எதிரி மன்னரோடு போரிட்டபோது அதில் மாண்ட பகைவர்களின் தலைகளைக் கொண்டு வந்து அவர் முன் போர் வீரர்கள் கொட்டினர். அவற்றில் ஒன்று ஜடாமுடியுடனும் சிவச் சின்னங்களுடனும் இருப்பதைக் கண்டு சிவ அபராதம் செய்து விட்டதாக வருந்தினார் புகழ்ச்சோழர். அந்த தலையை தங்கத்தட்டில் ஏந்தி தீ மூட்டி அத்தீயை மும்முறை வலம் வந்து தீயில் மூழ்கி ஈசனின் கழலினை அடைந்தார்.
கலிய நாயனார் 6-8-2014
கலியன் எனும் வணிகன் சென்னை திருவொற்றியூரில் உள்ள சிவாலயத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றும் திருப்பணியைச் செய்து வந்தார். நீண்ட வருடங்களாக அத்திருப்பணியைச் செய்ததால் அவரிடமிருந்த செல்வங்கள் தேய்ந்து வறுமை நிலையை அடைந்தார். எண்ணெய் வாங்க பணம் இல்லாத நிலை யை அடைந்தபோது அக்கைங்கரியத்தை நிறுத்த மனமில்லாத கலியன் தன் ரத்தத்தையே எண்ணெயாக்கி விளக்குகளை எரிக்கத் துணிந்து தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முற்பட்டபோது ஈசன் அவரைத் தடுத்தாட்கொண்டு அருளினார். அன்றிலிருந்து கலியன், கலியநாயனாரானார்.
கூற்றுவனார் 24-7-2014
தஞ்சாவூரைச் சேர்ந்த களந்தை எனும் சிற்றரசை ஆண்டு வந்தான் போர்த்திறமையில் வல்லவனான கூற்றுவன் எனும் மன்னன். சோழ நாட்டின் பல சிற்றரசர்களை போரில் வென்று அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான். சோழநாடு முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். சிறந்த சிவபக்தனாக அவன் திகழ்ந்ததால் சோழ நாட்டு மன்னனாக தனக்கு முடிசூட்டிட தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரரிடம் வேண்டினான். அவர்கள் மறுத்துவிடவே நடராஜப் பெருமானை அவன் வேண்ட, நடராஜப் பெருமான் தன் திருவடியையே மணிமுடியாக அவன் தலையில் வைத்து ஆட்கொண்டருளினார்.
சுந்தரமூர்த்தி நாயனார் 3-8-2014
சர்வாலங்காரங்களுடன் மணமகன் கோலத்தில் மணமேடை மீது வீற்றிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் முன் ஈசன் முதியவர் வடிவில் தோன்றி சுந்தரர் தன் அடிமை என்றும் அதற்கு ஆதாரமாக சுந்தரரின் தாத்தா எழுதிக் கொடுத்த ஓலைச்சுவடி தன்னிடம் உள்ளது என்று சொல்லி, சுந்தரரிடம் அவ்வோலைச் சுவடியைக் காட்டினார். சுந்தரர் அதைப் பிடுங்கி தீயில் எறிய, நகைத்த முதியவர் அது அந்த ஓலைச்சுவடியின் பிரதி என்றும் அசல் ஓலைச்சுவடி திருவெண்ணெய்நல்லூரில் தன் வீட்டில் இருப்பதாகவும் கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்தினுள் ஈசனின் கருவறையுள் முதியவர் மறைய அவரை திட்டிய முதல் வரியையே ‘பித்தா பிறை சூடி’ எனும் பாடலாகப் பாடி சிவனடியாராகி சுந்தரமூர்த்தி நாயனாராக ஆனார். இவருக்காக திருவாரூர் தியாகராஜர் காதலுக்கு தூது போன பெருமை பெற்றவர். ஒரு கவிகூட ஈசனின் அடி முடி தேடி நாரணனும் நான்முகனும் அன்னப்பறவையாகவும் வராகமாகவும் மாறி சிரமப்பட்டிருக்க வேண்டாம். சுந்தரரின் காதலுக்கு தூது செல்ல ஈசன் பரவை நாச்சியார் இல்லத்திற்கு அடிக்கடி வரும் போது பரவை நாச்சியார் வீட்டு வாசலில் நின்றிருந் தால் கூட ஈசனின் அடி முடியை சுலபமாக தரிசித்திருக்கலாம் என்று பாடியுள்ளதிலிருந்தே சுந்தரமூர்த்தி நாயனாரின் பெருமை விளங்கும்.
கோட்புலி நாயனார் 6-8-2014
சோழர்களின் படைத்தளபதி கோட்புலியார். சிவாலய அன்னதானத்திற்கான நெல் அளிக்கும் திருப்பணி புரிந்து வந்தார். அதற்காக நெல்லை பெரியதொரு களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்தார். ஒருமுறை அவர் போருக்குச் சென்றிருந்தபோது நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசி பட்டினியால் வாடிய அவருடைய உறவினர்கள் அந்த நெல்லை பயன்படுத்தி விட்டனர். போரிலிருந்து திரும்பிய கோட்புலியார் சிவ கைங்கரியத்திற்காக வைத்திருந்த நெல்லை அபரித்த அவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தி தன் சிவபக்தியை மெய்ப்பித்தார்.
தொகுப்பு: எம்.என்.ஸ்ரீனிவாசன், ந.பரணிகுமார்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.