பெண் பார்க்க வந்திருந்தார்கள். ஜாதகங்கள் ரொம்பப் பிரமாதமாகப் பொருந்தியிருந்தன. தரகர் மூலமான ஏற்பாடுதான் என்றாலும், ஏதோ கடனே என்றில்லாமல், கடமையே என்று தன் பொறுப்பை நிறைவேற்றியிருந்தார் தரகர். அவர் கொடுத்த பையனின் ஜாதகத்தை தங்களுடைய குடும்ப ஜோதிடரிடம் கொண்டு காண்பித்தபோது, ஜோதிடர் துள்ளி குதிக்காத குறைதான். ‘‘கிரிதரன், அற்புதமான பொருத்தம் சார். இந்த வாய்ப்பை நழுவ விட்டிடாதீங்க. ரெண்டு பேருக்கும் அன்யோன்யம், ரெண்டு பேரோட நீடித்த கல்யாண ஆயுள், அவங்களோட வாரிசுகள் எல்லாமே அமர்க்களமா அமையும்னு ரெண்டு ஜாதகமும் சொல்லுது.
அதனால பளிச்னு முடிச்சுடுங்க.’’ ‘‘ரொம்ப சந்தோஷம், ஜோசியரே,’’ என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கிரிதரன். பையன் ஜோராகவே இருந்தான். வெளிர் நீல முழுக்கை சட்டையும், அடர் நீல பேன்ட்டும் அவன் சிவந்த மேனிக்குப் பொருத்தமாகவே இருந்தன. உடன் அவனுடைய அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். அப்பாவின் தூய வெண்ணிற சட்டை, வேட்டி, தடித்த பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி, கைவிரலில் ஜொலித்த மோதிரம் எல்லாமே மிடுக்காக இருந்தன. அம்மாவும் உயர் அந்தஸ்தான தோரணைக்குச் சற்றும் குறைந்தவளாகத் தெரியவில்லை.
மாலதியின் அப்பாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. வந்தவர்களை வரவேற்கும் சாதாரணப் பேச்சில்கூட நடுக்கம் இருந்தது. காதிலும், மூக்கிலும், கழுத்திலும், கைகளிலும் டாலடிக்கும் அந்த அம்மாவின் வைர நகைகள், தான் அகலக்கால் வைத்து விட்டதை உணர்த்தின. ஐம்பது வயது மதிக்கத் தக்க அந்த அம்மாள் உடுத்தியிருந்த அதிநவீன பட்டுப்புடவை அவரைப் பார்த்து அலட்சியமாகச் சிரிப்பது போலிருந்தது. வந்தவர்களை ஹாலில் உட்கார வைத்துவிட்டு உள் அறையில் கையைப் பிசைந்தபடி நின்றிருந்த மனைவியிடம், ‘‘அலமு...! இவ்வளவு பெரிய இடம் என்று தரகர் சொல்லவே இல்லையே... நம்மால் சமாளிக்க முடியுமா?’’ என்று கேட்டார்.
‘‘நம் நிலைமையைப் பற்றியும் தரகர் அவர்களிடம் விஸ்தாரமாகச் சொல்லியிருப்பார். தைரியமாக இருங்கள்,’’ தன் படபடப்பை மறைத்தபடி சொன்னாள் அலமு.‘‘வந்து அலமு... மாலதிக்குப் பின்னால் சித்ரா, உமா என்று வரிசையாக அடுத்தடுத்துக் காத்திருக்கிறது...!’’ ‘‘முதலில் ஒன்றை அனுப்ப முடிகிறதா என்று பார்ப்போம்; அப்புறம் அடுத்ததுகளைப் பற்றிக் கவலைப்படலாம்.’’ ஹாலில் பையனின் அப்பா லேசாகக் கனைத்தார். ‘‘இதோ, இதோ வந்துவிட்டேன். அலமு, மாலதி கிட்டே டிபன் கொடுத்தனுப்பு’’ என்று கூறியபடி ஹாலுக்கு வந்தார், மாலதியின் அப்பா கிரிதரன்.
‘‘எனக்கு மாமா வரப்போறார்டி...’’ என்று தன் தோழியிடம் சொல்லியபடி உள்ளே வந்த பத்து வயது உமா, ஹாலில் இருப்பவர்களைப் பார்த்து விட்டு வெட்கத்துடன் பாவாடையைக் கையில் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினாள். ஜன்னல் வழியாக பதினைந்து வயது சித்ராவின் முகம் தெரிந்தது. அவள் மனசுக்குள், ‘பரவாயில்லே. மாலதி லக்கிதான்!’ என்று பாராட்டினாள். பையன் சேகர் எல்லாவற்றையுமே கவனித்தான். வாடகைக்கு இருக்கும் வீட்டைக்கூட, எளிமையானாலும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் என்று கூறுவதுபோலிருந்த உட்புற அமைப்பு அவனுக்குப் பிடித்திருந்தது.
நாணயம், நேர்மையுடன் ஏழ்மையும்கூட இருந்தால் அங்கே பரிபூரண சந் தோஷம் நிலவாது என்பதைப் புரிந்துகொண்டான். மாலதி வந்தாள். தான் ஏந்தி வந்த பலகாரத் தட்டை ஸ்டூல் மேல் வைத்துவிட்டுப் படபடக்கும் இதயத்துடன் அவர்களை நமஸ்காரம் செய்தாள். ‘‘இங்கே உட்காரம்மா,’’ என்றார் தரகர். ஒரு கைதியைப் போல் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்தாள் மாலதி. சேகரின் அம்மா தன் கூர்மையான பார்வையை மாலதி மேல் பதித்தாள். அப்பா பேப்பர் படிக்கும் சாக்கில் ஓரக் கண்ணால் மாலதியைப் பார்த்தார்.
சேகரோ சுவர்களில் மாட்டப்பட்டிருந்த படங்களைப் பார்ப்பதுபோலப் பாவனை செய்தான். ‘‘வைர மூக்குத்தி போட வேண்டியிருக்குமே என்று பயந்து, பெண்ணுக்கு மூக்குக் குத்தாமலேயே விட்டு விட்டீர்களா?’’ சேகரின் அம்மா திடுதிடுப் பென்று கேட்டாள். ‘‘ஹி... ஆமாம்... இல்லை இல்லை... கல்யாணத்தின் போதுகூட குத்திக் கொள்ளலாம்...’’ ‘‘நல்லாயிருக்கு நீங்க சொல்றது! மூக்கு குத்திக்கிறது இப்போ ஃபேஷனே இல்லை,’’ என்று கூறி கிரிதரனைத் தரகர் தற்காலிகமாகக் காப்பாற்றினார். ‘‘உண்மைதான். அது அவசியமில்லைதான்...’’ என்றாள் அம்மாள்.
‘‘டிபன் எடுத்துக்கோங்க!’’ மாலதியின் அம்மா உள்ளிருந்து சற்று எட்டிப் பார்த்து உபசரித்தாள். ‘‘சம்பிரதாயங்கள், லௌகீக விஷயம்...’’ தரகர் ஆரம்பித்தார்.‘‘அதற்கு முன் பையனுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறதா என்று தெரிய வேண்டுமே,’’ என்ற அப்பா சேகரைப் பார்த்து, ‘‘என் னடா?’’ என்று கேட்டார். அவன் வெட்கத்துடன் சிரித்தபடி தன் சம்மதத்தைச் சொன்னான். மாலதி போன்ற அழகி அவனுக்குக் கிடைக்க வேண்டும்! தன் எக்ஸிக்யூடிவ் பதவிக்கு. அழகான மனைவி கிடைத்தால் பெரிய சொஸைட்டியில் எப்பேர்ப்பட்ட மரியாதை...
‘‘அப்புறம் என்ன?’’ தரகர் அம்மாளைப் பார்த்தார். அம்மாள் கொஞ்சமும் தயங்காமல் தன் ‘டிமாண்டு’களைச் சொன்னாள். ‘‘வரதட்சணை ஐம்பதாயிரம்; வைரத்தோடு: மூக்குக் குத்தாவிட்டால் பரவாயில்லை. எவர்சில்வர் பாத்திரங்கள், பத்தாயிரம் ரூபாய்க்கு. வெள்ளிப் பாத்திரங்கள் மொத்தமாக இரண்டு கிலோ வைத்தால் போதும். கல்யாணச் சாப்பாடு அமர்க்களமாக இருக்க வேண்டும். கல்யாணம் பண்ணும் சத்திரம் சுமாராகவானும் இருக்க வேண்டும். எங்கள் பக்கம் இருநூறு பேராவது வருவார்கள். ஆங்... மறந்து விட்டேனே!
மாப்பிள்ளை டிரெஸ்ஸுக்கென்று தனியே பத்தாயிரம்..’’ ஒவ்வொரு சொல்லுக்கும், பொடிப் பொடியாய் நொறுங்கிக் கொண்டிருந்தார் கிரிதரன். நொறுங்கிக் கொண்டே கையிருப்பு, பிராவிடன்ட் பண்டில் கிடைக்கக்கூடிய கடன், மனைவியின் நகைகளின் மதிப்பு, ஊரிலுள்ள நாலு கோட்டை வரப்பாடு நிலத்தின் விலை, நண்பர்கள் கொடுக்கக் கூடிய கடன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தார். பிறகு சொன்னார்: ‘‘வந்து... பண்ணிடலாமே... எல்லாம் பண்ணிவிடலாம்... ஒரு... ஒரு நிமிஷம்...’’ உள்ளே போனார். ‘‘அலமு...’’ என்று பதறினார்.
கொஞ்சம் இருந்தால் அழுது விடுவார்போலிருந்தது. ‘‘சரி என்று சொல்லுங்கள். பெரிய வரன். போனால் வராது. அடுத்ததுகளுக்கு பகவான் ஏதாவது வழி விடுவான்,’’ அலமுவின் கண்களிலும் நீர் தளும்பி விட்டது. உழைத்து உழைத்துக் கண்ட பலன், சேர்த்த பணமெல்லாம் இப்படி ஒரேயடியாகப் போய்விடுமா என்ன? ‘‘எப்படிப் பார்த்தாலும் குறையுமே அலமு...’’ ‘‘வரதட்சணை பணத்தை மட்டும் கல்யாணத்துக்கு அப்புறம் தருவதாகச் சொல்லிப் பாருங்களேன்.’’
என்னவோ இரண்டு பேருக்குமே பேரம் பேசுவோம், குறைப்போம், கெஞ்சுவோம் என்று தோன்ற வேயில்லை.
அடுத்ததுகளுக்குப் பண்ணும்போது தோன்றுமோ என்னவோ! அனுபவம்தானே அறிவு? கிரிதரன் திரும்பி வந்தார். ‘‘வந்து... வரதட்சணையிலே பாதி இப்போ தரேன்; மீதியைக் கல்யாணம் கழிஞ்சப்புறம்...’’ அவர் கெஞ்சுவதைப் பார்த்த மாலதிக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. மூக்கு நுனி சிவந்து விட்டது. காது மடல்கள் ஆரஞ்சு சுளைகளாய்ச் சிவந்தன. தரகர் நிலைமையைப் புரிந்துகொண்டு, ‘‘நீ உள்ளே போம்மா,’’ என்றார். மாலதி எழுந்தாள். தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சேகரிடம் முகத்தாலேயே சைகை செய்தாள். பிறகு உள்ளே சென்றாள்.
அவள் எதற்காகவோ தன்னை அழைக்கிறாள்; தன்னிடம் ஏதோ பேச விரும்புகிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். சேகர். ‘‘எக்ஸ்க்யூஸ் மீ. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் மாலதியுடன் கொஞ்சம் தனியே பேசலாமா?’’ கிரிதரனிடம் அனுமதி கேட்டான். ‘‘ஓ! ஓ!...தா... தாராளமாய்...’’ என்று அனுமதி கொடுத்த கிரிதரன் கூடவே என்னவோ ஏதோ என்று கலங்கவும் ஆரம்பித்தார். அறை வாசலில் நின்று சேகரின் வருகைக்காகக் காத்திருந்த மாலதியைப் பார்த்து அவனுடைய அப்பா தப்புக்கணக்குப் போட்டார்: ‘பெண் வேறே யாரையோ விரும்பறா போலிருக்கு.
சேகரிடம் சொல்லி எங்கள் காதல்ல குறுக்கிடாதீங்கன்னு சொல்லப் போறா!’ தரகர், சேகரின் அம்மா, அலமு, சித்ரா, உமா யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. ‘‘வந்து... வரதட்சணையில் பாதியை, கல்யாணத்துக்கு அப்புறம் தருவதாக அப்பா சொன்னார்...’’ மாலதி ஆரம்பித்தாள். ‘‘ஆமாம்,’’ சேகர் பதில் சொன்னான். ‘‘அதை ஒப்புக் கொள்ளாதீர்கள்.’’ ‘‘என்ன?’’ ‘‘ஆமாம். முழு வரதட்சணைப் பணத்தையும் தந்தால் கல்யாணப் பேச்சைத் தொடரலாம். இல்லாவிட்டால் வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம், என்று சொல்லிவிடுங்கள்.’’
‘‘மாலதி...!’’ ‘‘ஆமாம். அப்பாவின் நிலைமை எனக்குத் தெரியும். இந்த ஒரு கல்யாணத்துக்காக எத்தனை பேரிடம் அவர் கடன் வாங்கப் போகிறார்; எப்படியெல்லாம் தத்தளித்துத் திண்டாடப் போகிறார் என்றும் தெரியும். இதோ பாருங்கள், என்னைப் பிடித்துவிட்டதாகவும் என்னைத் திருமணம்
செய்துகொள்ளச் சம்மதம் என்றும் சொல்லி விட்டீர்கள். அப்பா பேச்சை நம்பி, என்னைக் கல்யாணம் செய்துகொண்டபிறகு, அப்பாவால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் என் கதி என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
உங்கள் அம்மாவும் அப்பாவும் என்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? ஏன், நீங்களே என்னை வெறுக்கலாம். வெறும் பணத்துக்காகத்தானே இந்தக் கல்யாணம் என்ற சம்பிரதாயம்?’’ ‘‘வந்து... மாலதி...’’ ‘‘அதனால் தான் சொல்கிறேன். முழு பணமும் கொடுக்க முடியுமானால் கல்யாணம். இல்லாவிட்டால் வேறே இடம் என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிவிடுங்கள். உங்கள் பதவிக்கும் அந்தஸ்துக்கும் இதற்கும் மேலே கொடுத்துப் பெண் கொடுக்கும் இடங்கள் நிறைய உண்டு. நானும் நாள்தோறும், வந்து போகிறவர்களை நமஸ்கரித்து எழுகிறேன்.
இரண்டு பேருக்குமே அவரவர் தகுதிக்கேற்ப இடம் அமையும்...’’ திடுக்கிட்டான் சேகர். ‘சாதாரண விஷயம்தான். ஆனால், நிச்சயம் இது பூதாகாரமாக உருவெடுக்கும்’ என்று அவனுக்குத் தீர்மானமாகப்பட்டது. ‘‘மாலதி... ஐ... ஐ ஆம் வெரி ஸாரி. இவ்வளவு ஆழமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை...’’ என்று தழுதழுக்கக் கூறியவன், அவள் கண்களில் வழிந்த நீரைத் துடைக்கக் கைதூக்கி, பிறகு கட்டுப்படுத்திக் கொண்டு ஹாலுக்கு வந்தான். ‘‘அப்பா...’’ என்று திடமான குரலில் ஆரம்பித்தான்.
தான் எவ்வளவோ மெதுவாகப் பேச நினைத்தும் உணர்ச்சி வேகத்தில் கொஞ்சம் சத்தமாகவே பேசி விட்டிருந்தாள் மாலதி. அவள் பேசியதெல்லாம் வெளியே ஹாலில் இருந்தவர்களின் காதுகளில் விழுந்தது. சேகர் மேலும் பேசத் துவங்குமுன், ‘‘நாங்களும் கேட்டோம்ப்பா,’’ என்றார் அவன் அப்பா. பிறகு தம் மனைவியிடம் திரும்பி, ‘‘ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கொள்வதை அந்தப் பெண் விரும்பவில்லை.
ஒரே ஒரு உண்மையைச் சொல்லி அதற்குப் பலனிருந்தால் பண்ணிக்கொள்வது என்று சுத்தமான மனத்துடன் இருக்கிறாள். இதோ பார், இவள்தான் எனக்கு மருமகள்,’’ என்றார். ‘‘தப்பு என் பேரில்தான். வியாபாரமா பேச வந்தோம்? கல்யாணம்தானே?’’ என்று குற்ற மனப்பான்மையுடன் பொதுவாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் சேகரின் அம்மா!
பிரபு சங்கர்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.