ஜய வருடம், ஆடி மாதப் பிறப்பின் பலனை கோரக்கர் தம் பாடலில் விவரிக்கின்றார்.
‘‘மதிமறைய பித்ரு பிண்டம் வோங்குயர்
திரவியமீயுமென வறி வாயு வேகம் சூடேறி
பாயப்பாரு மேதினியில் பொருளுக்கு
பீடையுண்டு வாணிப தேக்கமாகும்
ஆணொடு பெண்ணுமலைந்துண்ண
பக்தி பெருக அடிகோளு மாடியே’’
ஆடி அமாவாசையில் இந்தமுறை கண்டிப்பாக இறந்தவர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைத்து வேண்டுதல் செய்தால், இதுவரை பித்ருக்களுக்கு படையல் வையாத பிசகு நீங்கும். குடும்பம் விருத்தி அடையும். பொருளாதாரம், குல அபிவிருத்தி ஆகும். காய்ச்சல், சளி போன்றனவற்றை சூடான காற்று கொண்டு வரும். வாணிபம் சற்று தொய்யும். பொதுவாக பணப்பிரச்னை குடிகளிடத்தில் காணப்படும். ஆண், பெண் இருபாலரும் உழைத்தே குடும்பத்தை கணக்கிட்டு சிக்கனமாக நடத்த வேண்டியிருக்கும். ஆனால், மக்களிடையே பக்தி வெள்ளம் பெருக்கெடுக்கும் என்பதாம்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு...
‘‘மனக்குறையுண்டு மனை மாட்சிமை சேரவே
தனத்துக் கலைந்து சோரவும் வேண்டுமே
வரும் தனமது கரைந்தோட மூதாதைய ராஸ்தி
தன்னால் மேன்மையுண்டென்றறி பணி மாற்றமொரு
யேற்றமுங் காணலாமே மேனிக்குற்ற உண்டி
யுண்டு காயம் பேண நன்றா மென்றறி சுங்க
வாரத்தே நம்பெருமானை தொழுதே யுய்ய லாமே’’
- கோலர் சித்தர்.
வீடு கட்டும் யோகம், மராமத்து செய்யும் பாக்யம் சேரும். தனம் வந்து விரயம் ஆகும். சுபச் செலவுகள் உண்டு. தொழில் முன்னேற்றத்துடன் சிறு மாற்றமும் ஏற்படும். உடலில் சிறு தொந்தரவுகள் வரலாம். உணவில் கவனமாய் இருக்க வும். வெள்ளிக்கிழமை திருவரங்கனை தொழுதுவர மேன்மை உண்டாம்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு..
‘‘மறைவிடத்து அவஸ்தை காணும் உறவால்
தொல்லை வந்தே யோடும் அலைச்சலது
கூடும் பொருளை பேணி திட்டமிட்டே
சீரிய செயலாற்ற மேன்மையாம் காலத்துகடனாற்ற
காரிய விக்கினந் தாமுடையப் பாரே
ராசரால் மேன்மை சேர நந்தி தேவனை
பிரதோஷ காலத்தாராதித் துய்யலாமே’’
- சிவ வாக்கியர்.
உடலில் மறைவிடத்தில் ரோகம் வந்து விலகும். உறவினருடன் எச்சரிக்கையாய் பழகவும். திட்டமிட்டு செலவு செய்வது நலம். நேரம் தவறாது பணி செய்ய, தடையாவும் தவிடு பொடி ஆகும். நந்தி தேவனை பிரதோஷ காலத்தில் பிரார்த்தித்து வர வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு...
‘‘வீண் வழக்கு வந்தகலும் பொல்லாக்
காலமிது பொறுத்துப் போவதே மாண்பு
உறவுந் நட்புமே கூடிக் கெடுக்குமய்ய
பெண்டிரால் அபகீர்த்தியாம் அடுத்தே
குலத்து பூசலுங் கூடுமாம் வரலட்சுமி
நோன்பிருந்து அலைமகளை ஆராதிப்ப
துன்பமெலாமின்பமென கொட்டிடு முரசே’’
- சதாசிவ பிரம்மம்.
வம்பு வழக்கு வந்து விலகும். பொறுமையாக, பேச்சைக் குறைத்து அமைதியாய் இருக்க வேண்டும். நண்பருடனும், நெருக்கமான உறவினருடனும் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் சிறு பூசல் வந்து விலகும். வரலட்சுமி நோன்பு இருந்து மகாலட்சுமியை வேண்டி நின்றால் வாழ்வு இன்பமயமாகும்.
திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
‘‘கண்ணென கடமை யொழுகவே
கவுரவங் கீர்த்திக்கு கேடிலையே
பொருள் வரத்து கூடும் பிணியுங்
கட்டுக்குள்ளே கடனுடன் விளங்குமாயே
குல சம்பத்துண்டாம் தீர்த்த யாத்திரையுஞ்
சேர இறையருள் சித்திக்கும் மூதாதையராசி
யொடு ஆஸ்தியுஞ் சேர குறையினி குன்ற
பாரே கைப்பிள்ளையை கை தொழ கூடுமின்
பமது குறைவிலையே’’
- பொய்யாமொழி சித்தர்.
கடமையை கண்போல் காத்து ஆற்றவும், புகழ், கவுரவம் ஓங்கும். பணவரவு கூடும். கடனும் நோயும் கட்டுக்குள் இருக்கும். இறைவனை தொழ பல கோயில்களுக்கு செல்வீர்கள். குறைகள் அகலும். விநாயகரைத் தொழுதுவர இன்பம் கூடும் என்பதாம்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
‘‘வியாழனால் உண்டு மேன்மை
முன்னை நோவச் செய்தான் இனி
பேரின்பமீய்வான் மங்களச் சேதி
ஈவான் வம்ச விருத்தி சேர்ப்பான்
பகை அறுப்பான் பொருளீவான்
வைரியரை யவ் வஞ்சகரை நாசமாக்கு
வான் நல்லனவெல்லாம் இனி வருந்தா
மாயினும் கருடாழ்வாரை பொற்சோதி
ஏற்றி தொழ இன்பமது பேரின்பமாகுமென
பேசு கிளியே’’
- பாம்பாட்டிச் சித்தர்.
குருபகவான் ஆசியினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முன்னில் பற்பல சங்கடங்கள் குருவால் ஏற்பட, அவை யாவும் விலகி இன்பம் பயக்கும். சுபச் செய்திகள் குடும்பத்தை எட்டும். நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற வம்ச விருத்தி ஏற்படும். எதிரிகள்
நாசமாவர். பெருமாள் கோயிலில் கருடாழ்வார் சந்நதியில் நெய்தீபம் ஏற்றி தொழுது வந்தால் அனைத்து நலன்களும் உண்டாகும்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
‘‘மேனி தீயும் கடனுபாதை சேரும்
மணி மந்திர விரயங் காணுந்தனமென வறி
தடையான மணமுங் கல்வியும் மனையும்
இனித் தடையறுபட பாரு அபகீர்த்தி
அகலவே இனி பொற்காலமென புவியில்
பேசு நாவடக்கி நற்சொல்லோதிட
சாதிக்கலாமெனவறிந்து நன்று கார்த்திகை
நாளதனிலே தென் பழனியானை கொண்
டாடி பணிந்தெழ யியலாததேது யியம்பு’’
- நந்தி தேவனார்.
உடலுக்குப் பிணி வந்து வாட்டும் காலமிது. கடனுபாதை ஏற்படும். கல்வித்தடை, திருமணத் தடை விலகும். இதுவரை இருந்த அவப்பெயர், அவமானம் இனி மெல்லவே விலகும். பேச்சைக் குறைத்து, இனிமையாக உறவாடி நிற்க எதையும் எளிதில் சாதிக்கலாகுமே. ஆடிக்கிருத்திகையன்று தென்பழனி தண்டாயுதபாணியை ஆராதிக்க வெற்றி கொடி நாட்டலாம்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
‘‘இறையருள் கூடும் கூடவே அலைச்சலு
முண்டு ஈன்றார் தம்மால் தொல்லை
யுண்டாம் தன்னறிவு கூறாக்கி யடிபற்
றுவாருக்கு செயமே காலமெல்லாங் கருதி
சொன்னோம் வாகன வழி தொல்லை வந்திடும்
கவனமே வியாஜ்ஜியமெல்லாம் வெற்றி
யீய சாதிப்பாரனைத்து மென கீர்த்தி கிட்டுமே
மகாபலியை மந்தநாள் நவமுறை வலம்
வந்தே தீபங் கொண்டாராதிப்ப ஜலந்தாண்டி
பொருள் தேட வல்லானாம் பாரு’’
- இராம தேவச் சித்தர்.
இறைவனின் அனுக்கிரஹம் அதிகம் சேரும். பெற்றவர்கள், உற்றவர்களோடு கருத்து மோதல் சேரும். அறிவைக் கூர்மையாக்கி சிந்தித்து நடக்க, வெற்றியே. வாகனத்தில் செல்லுகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். கோர்ட், பஞ்சாயத்து எல்லாம் ஜெயமடையும். மகாபலி ஆஞ்சநேயரின் அம்சம். எனவே, சனிக்கிழமை தோறும் ஒன்பது முறை அனுமனை தீபமேற்றி வலம்வர பெரும் செல்வந்தராகலாம். பல நாடுகளைக் கண்டு
வரலாம்.
அசுவனி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
‘‘தனமது தானே விரயங்காணும்
ரத கஜ பதாதி யோகஞ் சேரும்
மண்ணாளும் வேந்தரும் பணிந்து நட்பு
பேண மேலோர் நேசங்கூட, என்பு
கூடுந் தலத்து வேதனை வந்தே விலகும்
பாரு நந்தனார் கசாயங் காய்ச்சியிட்டு
தண்டுவட மூட்டு பிணி நீக்கி யின்ப
மெய்து இதயப் பீடை காணுமது தனை
கண்காணித்து தப்ப ஆயுள் நீளுமே
வழக்கு எலாம் தவிடு பொடியாகப் போகும்
பாரு அன்னை ஆதிமகா சக்தியை
அஸ்தமனப் போதாராதிக்க ஆயுளொடு
ஆனந்தமாக அரசாளலாகுமே’’
- கோரக்கர்
பணம் விரயம் ஆகும். வாகனச் சேர்க்கை உண்டாகும். பெரிய மனிதர்கள் நட்பு கிடைக்கும். மூட்டு வலி, தண்டுவடப் பகுதியில் பீடை ஏற்பட்டு விலகும். நந்தனார் கசாயம் உண்ண, உடனே பிணி விலகும். இதயக் கோளாறு தோன்றும். ஆரம்பத்திலேயே கண்காணிக்க நோய் அகலும். ஆதிபராசக்தியை தினமும் மாலைப் பொழுதில் தொழுதுவர ஆனந்த வாழ்வு வாழலாகுமே.
பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
‘‘தொழில் மேன்மை சேர தனமேன்மை
தர பாம்பிரண்டும் நன்மையே செய
என்ன குறை யியம்பு மனை விருத்தியாம்
மாடுகன்று கூட்டங் குன்றுமாம்
ஆபரணச் சேர்க்கை யுண்டாம்
முன்னைப் பகை பின்னை மாறி நட்பென
துலங்க மனையாளும் அகம் புகுவாள்
அகம் மிக மாறியே பட்ட துயரெல்லாம்
இனி யின்பமே யென்ன இறையருளால்
எதையுமே யெட்டலாகுமே ஆடலரசனை
அன்றாட மேத்துவார்க்கு அவன் தரிசனங்
கிட்டுதல்லால் பிறவியின்றி
பேரின்பமாகுமே வாழ்வு’’
- கொங்கண மகரிஷி.
தொழில் நல்ல அபிவிருத்தி காணும். பணவரத்துக்கு பஞ்சமில்லை. ராகு-கேது இனி நன்மை செய்யும். வீட்டு உபயோக சாமான்கள் வாங்க, வீட்டை இடித்து கட்ட, மராமத்து பணிகள் செய்ய முற்படுவீர்கள். விவசாயம், பண்ணைத் தொழில் சற்று சறுக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். பகை கொண்டவர் இனி நட்பு பேணுவர். மனைவி மனம் மாறும். சண்டை குறையும். நடராஜப் பெருமானை அனுதினமும் ஆராதித்து வர அவனது தரிசனத்து டன் பிறவாமை பெறலாகுமே.
‘‘சய தட்சிணாயனப் பூரத்தே
சுவர்ண கவுரி விரதங்காப்போர்
செல்வந்தராவாரே தூர்வா கணநாத துதி
பிணி யற்றோரே மித்திர சப்தமி விரத
ங்காப்போர் பிறவாரே’’
-அகத்தியர்.
ஜய வருடம் தட்சிணாயனம் என்பதின் துவக்கமே ஆடி மாதம். சுவர்ண கவுரி விரதம் இருப்பவர் செல்வந்தர் ஆவர். தூர்வா கணபதி விரதம் இருப்போர் பலசாலிகளாகவும் நோயற்றவர்களாகவும் இருப்பர். மித்திர சப்தமி விரதமிருப்போர் பிறவிப் பிணியை வெல்வர்.
நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.