22.9.2014 -அருணந்தி சிவாச்சாரியார்
அருணந்தி சிவாச்சாரியார், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியோர்களுள் ஒருவர். இவர் சைவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார். இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர்.
இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடு களில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார். பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர், தன்னுடைய மாணவர்களில் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடம் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத்தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்றார்.
மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரைவிட வயதில் இளையவர். எனினும், அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார், இடையே குறுக்கிட்டு, ‘ஆணவம் என்றால் என்ன?’ என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்துகொண்ட மெய்கண்டார், அவரை நோக்கி, “நீர் நிற்கும் நிலைதான் அது’’ எனக் கூற, அருணந்தியார் தனது தவறை உணர்ந்து, மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, ‘சிவத்தின் மேல் தெய்வமில்லை, சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை’ என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றான ’இருபா இருபது’ என்னும் நூலும் இவர் இயற்றியதே.
4.10.2014 - ஸ்வாமி தேசிகன்
வைணவ குரு பரம்பரையில் முக்கியமானவராகக் கருதப்படும் ஸ்வாமி தேசிகன், காஞ்சியில் தூப்புலில் அவதரித்தார். இவரது தாயார் தோதாரம்மாள், தகப்பனார் அனந்தசூரி. இவரது ஆசாரியன் அப்புள்ளார் என்ற மஹனீயர். ஸ்வாமி தேசிகனின் குமாரர் நாயினாசார்யர். பகவத் ராமானுஜ சித்தாந்தத்தை பிரபலப்படுத்தியவர். திருவோண நட்சத்திரத்தில் புரட்டாசி மாதத்தில் அவதரித்தவர். திருவேங்கடமுடையானின் ‘மணி’ அம்சமாக அவதரித்தவர். தமிழிலும் வடமொழியிலும் பல நூல்களையும் ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார். இவரின் வைணவத் தொண்டை புகழ்ந்து ஸ்ரீநங்கநாயகி இவரை வேதாந்தாசார்யார் என்று நாமகரணம் இட்டார்.
தமது ஆசாரியன் அப்புள்ளாரிடமிருந்து கருட மந்திர உபதேசம் பெற்று அவரின் அருளால் கல்விக் கடவுளான ஹயக்ரீவரின் அருளைப் பெற்று மஹா வித்வானாக விளங்கினார். தசாவதாரம், ராமனைப் பற்றிய ரகுவீரகத்யம், கிருஷ்ணனைப் பற்றி கோபாலவிம்ஸதி, கருடனைப் பற்றி கருடதண்டகம், சக்கரத்தாழ்வாரைப் பற்றி ஸுதர்ஸனாஷ்டகம், திருவரங்கனைப் பற்றி பாதுகா ஸஹஸ்ரம், திருவேங்கடவனைப் பற்றி தயா ஸதகம் மற்றும் பல திவ்ய தேச எம்பெருமான்களைப் பற்றி பல துதிகளை இயற்றியுள்ளார். இவை அனைத்தும் பக்தர்களின் நித்ய பூஜைகளில் இடம் பெற்று பலரும் பலன்களைப் பெற்று வருகின்றனர். தமது இறுதி காலத்தில் திருவஹிந்திரபுரத்தில் வாசம் செய்தார். இவராலேயே செதுக்கப்பட்ட இவரின் திருவுருவத்தை அத்தலத்தில் தரிசிக்கலாம்.
3.10.2014 - ஏனாதி நாயனார்
ஏனாதி நாத நாயனார் சோழநாட்டிலே எயினனூரிலே சான்றோர் குலத்தில் தோன்றியவர். தொன்மை திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலைத்து நின்ற இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் கடமையாற்றி வந்தார். அதன் மூலம் வரும் பொருள் வளங்களால் சிவனடியார்களை உபசரிக்கும் பேரன்பினராய் விளங்கினார். ஏனாதிநாதர் வாட்படை பயிற்றுவிக்கும் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்ப்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர். இதனால் அவரது தாய் முறையிலான அதிசூரன் என்பானுக்கு அத்தொழில் வருவாய் குறைந்தது.
அதனால் ஏனாதிநாதர் மீது பொறாமையுற்ற அவன் வீரர் கூட்டத்தோடு சென்று ‘வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது’ என அவரைப் போருக்கு அறைகூவியழைத்தான்; ஏனாதியார் போர்க்கோலம் பூண்டு ஏறுபோல் புறப்பட்டார். அவரிடம் வாள் வித்தை பயிலும் காளை யரும் வாள் வீரரான அவரது சுற்றத்தலைவரும் அவரின் இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர். ‘நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம். போரில் வென்றார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்’ என்று அதிசூரன் கூறினான்.
ஏனாதிநாதரும் அதற்கு இசைந்தார். இருவரிடையே நடந்த வாட் போரில் அதிசூரன் தோற்றோடினான். தன் மானமிழந்ததற்கு நொந்து, இரவு முழுவதும் நித்திரையின்றி ஆலோசித்தான் அதிசூரன். இறுதியில் ஏனாதி நாதரை வஞ்சனையால் கொல்ல எண்ணினான். “நம் இருவருக்கும் துணைவருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டும் நாளை விடியற்காலத்தே வேறோர் இடத்தில் போர் செய்வோம், வாரும்’’ என்று ஏனாதிநாதருக்குச் சொல்லியனுப்பினான். அதுகேட்ட ஏனாதிநாதர், சுற்றத்தார் யாரும் அறியாதபடி அவன் குறித்த போர்க்களத்திற்கு சென்று அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார்.
தீங்கு குறித்து அழைத்த தீயோனாகிய அதிசூரன், ‘திருநீறு தாங்கிய நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதிநாதர்’ என அறிந்து முன் எப்பொழுதுமே திருநீறிடாத அவன், நெற்றி நிறைய வெண்ணீறு பூசி நெஞ்சத்து வஞ்சனையாகிய கறுப்பினை உட்கொண்டு, வாளும் கேடயமும் தாங்கி தான் குறித்த இடத்திற்குப் போனான். அங்கு நின்ற ஏனாதி நாதரைக் கண்டு அவரை அணுகும் வரை தனது நெற்றியை கேடயத்தால் மறைத்துக் கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான்.
ஏனாதிநாதர் சமயம் தெரிந்து அவனை எதிர்த்துப் பொருத முற்பட்ட வேளையில், அதிசூரன் தன் முகத்தை மறைத்த கேடயத்தை சிறிது விலக்கினான். அப்பொழுது அவனது நெற்றியிலே திருநீற்றினைக் கண்ணுற்றார் ஏனாதிநாதர். கண்டபொழுதே ‘கெட்டேன் இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். அதனால் இவர்தம் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்’ என்று தம் கையிலுள்ள வாளையும், கேடகத்தையும் நீக்கக் கருதினார்.
ஆயினும் ஆயுதம் இல்லாதவரைக் கொன்றார் என்ற பழி இவரை அடையாதிருத்தல் வேண்டும் என்று எண்ணி, வாளையும், பலகையையும் கையில் பற்றியபடியே போர் செய்வார் போல் எதிர் நின்றார். அந்நிலையில் முன்னே நின்ற தீவினையாளனாகிய அதிசூரன் தனது எண்ணத்தை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான். சிவபெருமான் ஏனாதிநாதருக்கு எதிரே தோன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட்படையினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.
12.10.2014 - திருநாளைப்போவார்
தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்தில் மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால் ‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். அர்ச்சனைக்காக கோரோசனை கொடுப்பார்.
பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார். ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார். அங்கு சென்று வாயிலினின்று இசைபாடி நின்றார். அப்பொழுது பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்த்தற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். நேர்த் தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார் பணிந்தெழுந்து வீதிவலம் வந்தபோது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம் தோண்டுவதற்கு அமைவாயிருப்பது கண்டு அவ்வாறே செய்தார். பின் கோயிலை வலம் வந்து நடமாடி விடைபெற்று தம்மூர் சேர்ந்தார்.
இவ்வாறு அயலூர்களிலேயுள்ள திருகோயில்கள் பலவற்றிற்கும் சென்று திருத்தொண்டு புரிந்துவந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. அதனால் அன்றிரவு கண்துயிலாது கழித்தார். விடிந்ததும் தில்லைபதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும் நினைத்து போகாது தவித்தார். மீண்டும் ஆசை அளவின்றிப் பெருகவே ‘நாளைப்போவேன்’ என்று கூறி நாட்களைக் கழித்தார். இவ்வாறு நாள் கழிதல் பெறாதவராய் ஒருநாள் தில்லைத் திருத்தல எல்லையைச் சென்று சேர்ந்தார்.
எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும் வேள்விப் புகையைக் கண்டார். வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார். தாம் பிறந்த குலத்தினை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது வலங்கொண்டு சென்றார். இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை வீதி வலம் வந்தவர் ‘மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடங்கும்பிடுவது எவ்வண்ணம்?’ என்று எண்ணி ஏக்கத்துடன் துயில் கொண்டார்.
‘இன்னல் தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே’ என்று வருந்தித் துயில் கொள்பவராகிய நந்தனாரது வருத்ததை நீக்கியருளத் திருவுளங்கொண்ட தில்லைக் கூத்தப் பெருமான், ‘என்று வந்தாய்?’ என்னும் புன்முறுவற் குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க ஏரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்’’ என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி தில்லைவாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினார்.
அந்நிலையில் தில்லைவாழந்தணர்கள் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது கட்டளையினை உணர்ந்து ‘எம்பெருமான் அருள் செய்தபடி பணிசெய்வோம்’ என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்து திருத்தொண்டராகிய திருநாளைப்போவரை அடைந்து, ‘ஐயரே, அம்பலர் திருவடிகளால் உமக்கு வேள்வித் தீ அமைத்துத் தரவந்தோம்’ என வணங்கினார். தெய்வமறை முனிவர்களும் தெந்ன்திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு தீயமைத்தார்கள். நாளைப்போவார், இறைவன் திருவடிகளை நினைத்து அத்தீக்குழியினை அடைந்தார்.
எரியை வலம் கொண்டு கைதொழுது அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் செங்கமல மலரில் உதித்த பிரம்மதேவனைப் போன்று செந்தீயில் வந்தெழுந்த அந்தணனாகத் தோன்றினார். அதுகண்டு தில்லை வாழந்தணர்கள் கைதொழுதார்கள். திருத்தொண்டர்கள் வணங்கி மனங்களித்தார்கள். வேள்வித்தீயில் மூழ்கி வெளிப்பட்ட திருநாளைப் போவாராம், மறைமுனிவர் அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல் வணங்க, தில்லைவாழந்தணர் உடன்செல்லத் திருக்கோயிலின் கோபுரத்தைத் தொழுது உள்ளே சென்றார்.
உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார். உடன் வந்தோர் யாவரும் அவரைக் காணாதவராயினர். நாளைப்போவார் அம்பலவர் திருவடியிற் கலந்து மறைந்தமை கண்டு தில்லைவாழந்தணர்கள் அதிசயித்தார்கள். முனிவர்கள் துதித்துப் போற்றினார்கள். வந்தணைந்த திருத்தொண்டராகிய நந்தனாரது வினைமாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமில்லா ஆனந்தக் கூத்தினர் அருள் புரிந்தார்.
5.10.2014 - நரசிங்க முனையரையர்
தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசு புரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்தவர். சிவனடியார்களின் திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பணிந்தார். சிவன் கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தார். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.
திருவாதிரை நாள்தோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேஷ பூஜை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய’’ ஒருவரும் திருநீறு அணிந்து வந்தார். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இகழ்ந்து அருவருத்து ஒதுங்கினர். நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார்.
நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார். நரசிங்கமுனையரையர் ஒரு நாள் வீதிவலம் வந்தபொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர், சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார்.
சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியை பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையரையர் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றார்.
9.10.2014 - ருத்ரபசுபதியார்
பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்தது திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ ருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இரு கைகளையும் தலைமேற் குவித்துக் கொண்டு சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடைவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலா சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.
தொகுப்பு: ந.பரணிகுமார்,
எம்.என் ஸ்ரீநிவாசன்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.