(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
15-5-2025 முதல் 14-6-2025 வரை
குடும்பம்: லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ள நிலையில், சுக்கிரனும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். களத்திர ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்ந்திருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். சிறு உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி, யோசனை பெறுவது நல்லது. நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் பெண் அல்லது பிள்ளை அல்லது மாப்பிள்ளையின் வரவு குடும்பத்தை உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். களத்திர ஸ்தானத்தில் சனி பகவானும், ராகுவும் சேர்ந்திருப்பதால், கணவர் – மனைவி, குடும்பப் பொறுப்புகள் காரணமாகவோ அல்லது உத்தியோகம் காரணமாகவோ, தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். லாப ஸ்தானத்தில், குரு அமர்ந்து, களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால், விவாக முயற்சிகள் வெற்றிபெறும். ஒருசிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
உத்தியோகம்: ராசி நாதனாகிய, சூரிய பகவான், ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள இத்தருணத்தில், சனி – ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வேலை பார்க்கும் இடத்தில், பணிச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருக்கும். ஆயினும், அதற்கேற்ற ஊதியமும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள், தங்கள் – தங்கள் பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: கிரக நிலைகளின்படி, இம்மாதம் முழுவதும் சந்தை நிலவரம் உதவிகரமாக அமைந்திருக்கும். உங்கள் சரக்குகளுக்கு, நல்ல விலை கிடைக்கும். உற்பத்தியை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம். நிதி நிறுவனங்கள் உதவிகரமாக ஒத்துழைக்கும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப் பொருட்கள் நியாயமான விலைக்குக் கிடைக்கும்.
கலைத் துறையினர்: வாய்ப்புகளும், வருமானமும் ஒரே சீராக இருக்கும். மக்களிடையே செல்வாக்கு உயரும். சங்கீத வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், நடிகை – நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு லாபகரமான மாதமாகும் என்பதை சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், படப்பிடிப்பிற்காக, வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறும் உள்ளது.
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவும், மக்களிடையே செல்வாக்கும் உயரும். புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், செல்வாக்கு நிறைந்த அரசியல் கட்சி ஒன்றிற்கு மாறும் வாய்ப்பும் உள்ளது.
மாணவ – மாணவியர்: புதன் உள்ளிட்ட மற்ற கிரகங்களும் சாதகமாக சஞ்சரிப்பதால், கல்வி முன்னேற்றம் நீடிக்கிறது. விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் முன்னணியில் நிற்பீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, உங்கள் பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள் என்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்கள், ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றன. விளைச்சலும், வருமானமும் ஒரே சீராக இருக்கும். தண்ணீர்ப் பற்றாக்குறை, சிறிதும் இராது.
கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: ராசியின் களத்திர ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சனி மற்றும் ராகுவை, மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தனது 9-ம் பார்வையினால், தோஷத்தைப் போக்குவதால், கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் ஓங்கும். வேலைக்குச் சென்று – வரும் சிம்ம ராசி பெண்மணிகளுக்கு, பணிச் சுமை அதிகரித்தாலும், அதற்கேற்ப ஊதிய உயர்வு கிடைப்பது, மகிழ்ச்சியை அளிக்கும்.
அறிவுரை: களத்திர ஸ்தானத்தில், சனி – ராகு இணைந்திருப்பதால், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். சாதாரண உபாதையாகத் தோன்றினாலும், மருத்துவ நிபுணரிடம் காட்டி, சிகிச்ைச பெறுவது நல்லது. மேலும், தன்னையும் அறியாமல், மனைவி செய்யும் சிறு தவறுகளைப் பெரிதாக்கி, குற்றம் கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில், ஒரு ஏழைக்கு உணவளித்தால், தோஷம் நீங்கும் என, “பரிகார ரத்தினம்” எனும் புராதன நூல் கூறுகிறது.
- அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலை – பிரதோஷ காலத்த்ில், நான்கு சனிக்கிழமைகளில், மூன்று மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றி வரவும்.
- கோயிலுக்குச் செல்லமுடியாதவர்கள், அவரவர் வீட்டிலுள்ள பூஜையறையில் நெய் தீபங்களை ஏற்றி வரலாம்.
- இயலாதவர்கள், லிக்ித ஜெபமாகக் கருதப் பட்டு போற்றப்படும் “ÿ ராம ஜெயம்” எனும் தாரக மந்திரத்தை நோட்டுப் புத்தகங்களில் எழுதி, உங்கள் வீட்டுப் பூஜையறையில் வைத்து, கற்பூராரத்திக் காட்டி வணங்கிவந்தாலே போதும்.
அனுகூல தினங்கள்
வைகாசி : 1-3, 6, 7, 11-14, 18, 22-24, 28-30.
சந்திராஷ்டம தினங்கள்
வைகாசி : 8 காலை முதல், 10 காலை வரை.