15-5-2023 முதல் 15-6-2023 வரை
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை
குடும்பம்:
சனி, குரு, சூரியன் ஆகிய மூவரும் சுபபலம் பெற்று, உங்களுக்குப் பல நன்மைகளை அளிக்கவுள்ளார்கள். வைகாசி 15ம் தேதி வரை அனுகூலமற்ற நிலையிலுள்ள சுக்கிரனும், 16ம் தேதியிலிருந்து அனுகூலமாக மாறுகிறார்! பல வருடங்களாக ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டிருந்த நிலையும் இப்போது மாறிவிட்டது. வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள், இனி கட்டுப்படும். குடும்பச் சூழ்நிலையில் நல்ல மாறுதலைக் காணலாம். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். திருமண முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பிரச்னைகள் இனி இராது. பெண் அல்லது பிள்ளை திருமண வயதிலிருந்தால், நல்ல வரன் அமையும். குழந்தைகளின் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண முடியும். பலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படக்கூடும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அவற்றிலிருந்து விடுபட்டு, மன நிம்மதி பெறுவதற்கு ஏற்ற மாதம் இந்த வைகாசி!
உத்தியோகம்:
ஜீவன காரகரான சனி பகவான், அவரது ஆட்சி வீடான கும்ப ராசியில் சுப பலம் பெற்று நிலைகொண்டுள்ளதால், நீங்களே எதிர்பாராத பல நன்மைகள் உங்களைத் தேடிவரும். கொடுப்பதில், சுக்கிரனுக்கும், ராகுவிற்கும் அடுத்தபடியாக சனி பகவானைத்தான் போற்றுகிறது, ஜோதிடக் கலை! மேலதிகாரிகள், நிர்வாகத்தினர், சக ஊழியர்கள் ஆகிய அனைவரும் உங்களுக்கு ஆதரவாக நிற்க இருப்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமிருப்பின், அதற்கான முயற்சிகளில் இம்மாதம் ஈடுபடலாம். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், ஊதிய உயர்வு மற்றும் பதவியுயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ேவலைக்கு முயற்சிக்கும் தனுர் ராசியினருக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், வேலை கிடைக்கும். தற்காலிகப் பணிகளில் உள்ளவர்களுக்கு, பணி நிரந்தரமாகும்.
தொழில், வியாபாரம்:
வர்த்தகத் துறையினருக்கு, மிகவும் அனுகூலமாக அமைந்துள்ளன, கிரக நிலைகள் இம்மாதம். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு, அனைத்து உதவிகளும் உங்களைத் தேடி வரும். சந்தை நிலவரம் அனுகூலமாக உள்ளது இம்மாதம் முழுவதும்! புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஏற்ற கால கட்டம் இப்போது உருவாகியுள்ளது. பயன்படுத்திக்கொள்வது, உங்கள் திறன்! உள்நாட்டுச் சந்தைகளிலும், உங்கள் சரக்குகளுக்கு, நல்ல வரவேற்பு இருக்கும் என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன.
கலைத்துறையினர்:
கலைத் துறைக்கு அதிபதிகளான அனைத்து கிரகங்களும் சிறந்த சுப பலம் பெற்று வலம் வருவதால், லாபகரமான மாதம் இந்த வைகாசி என உறதியாகக் கூறலாம். பல காரணங்களினால், சென்ற சில வருடங்களாகவே நிலைகுலைந்திருந்த திரைப்படத் துறையும், கலைத் துறையின் ஓர் அங்கமே. இத்துறையும் இப்போது புத்துயிரும், புது பலமும் பெற ஆரம்பித்துள்ளது. இம்மாதம் மிகவும் ஆதரவாக அமைந்திருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தயாரிப்பாளர்களும் , இயக்குநர்களும் நீண்ட உறக்கத்திலிருந்து விழித் தெழவேண்டிய கால கட்டம் ஆரம்பித்துள்ளதை இந்த வைகாசி மாதம் நிரூபிக்கிறது.
அரசியல் துறையினர்:
அரசியல் சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால், கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அதுபற்றி கவலைப்படாமலிருக்கலாம். ஏனெனில், கிரகநிலைகளின்படி, சட்டப் பிரச்னை எதிலும் அகப்பட்டுக்கொள்ளும் சாத்தியக்கூறு இல்லை.
மாணவ – மாணவியர்:
கிரக நிலைகள் தொடர்ந்து சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட மாணவர்களின் நட்பு கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவும், விசேஷ வழிகாட்டுதல்களும் படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்கும். உயர்கல்விக்கு உதவி கிடைக்கும்.
விவசாயத் துறையினர்:
லாபகரமான மாதமாகும் இந்த வைகாசி! அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறைவுமிராது. அரசாங்க ஆதரவு எளிதில் கிட்டும். இயற்கை வேளாண்மைப் பொருட்களுக்கு (organic products) நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆயுர்வேதத் தைலங்கள், சூரணங்கள் ஆகியவற்றிற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதனால், லாபம் பெருகும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும், பழ ரசங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கும் யோகமும் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிறு அளவில் முதலீடு செய்து, ஆரம்பித்தாலும், வெகுவிரைவில் வளர்ச்சியடைந்துவிடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்மணிகள்:
அனைத்து அம்சங்களிலும், மகிழ்ச்சிகரமான மாதம் இந்த வைகாசி, தனுர் ராசியில் பிறந்துள்ள மங்கையருக்கு! குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, பிரச்னை இல்லாத மாதம். வேலை பார்க்கும் நங்கையர்க்கு, நன்மைகள் அதிகரிக்கும். விவாக வயதிலுள்ள கன்னியருக்கு, மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு, நல்ல வேலை கிடைக்கும்.
அறிவுரை:
கைப் பணத்தை நிதானமாக செலவழியுங்கள். கடின உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்:
தினமும் அபிராமி அந்தாதி, மீனாட்சி பஞ்ச ரத்தினம், மகாலட்சுமி அஷ்டோத்ரம், கந்தர் சஷ்டி கவசம், லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம் ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றை, காலை, மாலை இருவேளைகளிலும் படித்து வரவும். பலன் பல மடங்கு அதிகரிக்கும்.
அனுகூல தினங்கள்:
வைகாசி: 1-3, 7-9, 13, 14, 18-20, 25-27, 31, 32.
சந்திராஷ்டம தினங்கள்:
வைகாசி: 10 காலை முதல், 12 இரவு வரை.