மேஷம்
14.4.2021 முதல் 14.5.2021 வரை(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: ராசிக்கு அதிபதியான செவ்வாய், மற்றும் சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சஞ்சார நிலைகள் அனுகூலமாக உள்ளன. வருமானம் தொடர்ந்து நல்லபடி நீடிக்கிறது. சென்ற மாதம் மன அமைதியை பாதித்துவந்த குடும்பப் பிரச்னைகளின் கடுமை குறைவதை அனுபவத்தில் காணலாம். சூரியன், ராகுவின் நிலைகளினால், ஆரோக்கியத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய மாதமிது. சரீரத்தில் ஏற்படும் அதிக உஷ்ணத்தினால், அடிக்கடி அசதியும் சோர்வும் மேலிடும். உடல், ஓய்விற்குக் கெஞ்சும். வெளியூர்ப் பயணங் களினாலும்,அதிக அலைச்சலினாலும் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும். வாக்கு ஸ்தானத்தில் ராகு, நீச்ச நிலையில் அமர்ந்திருப்பதால், பேச்சில் நிதானம் அவசியம். மேஷ ராசியினருக்கு இரு பலவீனங்கள் பிறவியிலேயே உண்டு: 1. அவசர முடிவுகள் 2. முன்கோபம், பிடிவாதம். அவர்களது நற்குணங்கள் அனைத்தும் இவ்விரு பலவீனங்களின் காரணமாக மறைந்துவிடுகின்றன. திருமண முயற்சிகளில் தடங்கல்கள் நீடிக்கும்.
உத்தியோகம்: அலுவலகச் சூழ்நிலை உற்சாகத்தையளிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பொறுப்புகளும் வேலைச் சுமைகளும் சக்தியை மீறியதாக இருக்கும். வேலை வாங்கினாலும் அதற்கேற்ற கூலி கொடுக்கும் நியாயவான் சனிபகவான்! கொரானா உருவாக்கிய சூழ்நிலையினால், வேலையை இழந்து வருந்தும் மேஷ ராசியினருக்கு, வேறு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். ஆட்சி பெற்றுள்ள சனிபகவானுடன் நீச்சகுரு இணைந்திருப்பதால், சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதாலும், அவர்களின் சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதாலும், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர்ப்பது மிகவும் அவசியம். ஜோதிடம் எனும் வாழ்க்கைக் கலை, அத்தகைய முக்கிய தருணங்களில் தக்க வழிகாட்டி உதவுகிறது.
தொழில், வியாபாரம்: உற்பத்தியும், விற்பனையும் தொடர்ந்து அதிகரிக்கும். மந்த நிலையிலிருந்துவந்த சந்தை நிலவரம் சாதாரணமான சகஜநிலைக்கு மாறும்., நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். அரசாங்கக் கொள்கைகள் தொழில், வியாபார அபிவிருத்திக்கு ஆதரவாக மாறும்.
கலைத் துறையினர்: சுக்கிரனின் நிலையினால் பல நன்மைகளை நீங்கள் இம்மாதம் எதிர்பார்க்கலாம். கொரானா காரணமாக, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு, புதிய வாய்ப்புகள் உருவாகும். மீண்டும் புத்துயிர் பெற்று, தழைக்க, கிரக நிலைகள் மிகவும் சாதகமாக உள்ளன. இயக்குநர்களுக்கு, புதிய சந்தர்ப்பங்கள் கைகொடுக்கும். அரசியலில் பிரவேசிக்க ஆர்வம் மேலிடும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பது, சுக்கிரனும் செவ்வாயும். ராகுவிற்கும் அதில் அளவோடு பொறுப்பும் உண்டு (ஆதாரம்: ப்ருகத் சம்ஹிதை, அர்த்த சாஸ்திரம்) சுக்கிரனும், செவ்வாயும் சிறந்த சுப-பலன் பெற்றிருப்பதால், நல்ல முன்னேற்றம் ஏற்படுவது உறுதி. ஜனன கால கிரக நிலைகள் அனுகூலமாக இருப்பின், அரசாங்கப் பதவி ஒன்று கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. மத்திய - மாநில அரசுகளில் செல்வாக்கு மிகுந்த அதிகாரிகளுடன் தொடர்பும், அதனால் நன்மைகளும் ஏற்படும்.
மாணவ - மாணவியர்: இம்மாதமும் கல்வித் துறைக்கு ஆதிபத்யம் கொண்டுள்ள கிரகங்கள் சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், படிப்பில் ஆர்வம் மேலிடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று திகழ்வீர்கள். இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டாம். ஏனெனில், உடல் நலன் சிறிது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விவசாயத் துறையினர்: அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. வயல் பணிகளில் உழைப்பு கடுமையாக இருப்பினும், அதற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிடைப்பதால், மனத்தில் உற்சாகம் மேலிடும். அரசாங்க ஆதரவு தேடி வரும்.