மகரம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: ஏழரைச் சனியின் ஜென்மச் சனிக் காலம் முடிந்து, கடைசி பகுதி ஆரம்பமாகியுள்ள நிலையில், சூரியனும், சுக்கிரனும், செவ்வாயும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர், இந்தப் பங்குனி மாதம் முழுவதும்! இதே தருணத்தில், உங்கள் ராசியின் களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு, குருபகவானின் சுபப் பார்வையும் கிடைக்கிறது. வருமானத்திற்குக் குறைவிராது. இதுவரை தொடர்ந்து ஏற்பட்டுவந்த அலைச்சலும், வெளியூர்ப்பயணங்களும் இனி இராது. வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குருவின் நிலையினால், வரவிற்கு ஏற்ற செலவுகளும் இருப்பதால், சேமிப்பிற்கு சாத்தியக்கூறு இல்லை!! திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். தவறான வரனைத் தேர்ந்ெதடுப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதால், தீர விசாரித்து, அதன் பிறகே வரனை நிச்சயிக்க வேண்டும். திருமணச் செலவுகள் எதிர்பார்த்ததைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும். சுக்கிரனின் நிலையினால், உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். நீதிமன்ற வழக்குகளில், நியாயம் கிடைக்கும்.
உத்தியோகம்: ஜென்மச் சனியினால், ஏற்பட்டிருந்த தோஷம் நீங்கிவிட்டது. நிர்வாகத்தினர் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோரின் ஆதரவு கிடைக்கும், தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு ஊதிய உயர்வையும், பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். சக ஊழியர்களின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலையில்லாமல் வருந்தும் மகர ராசியினருக்கு, அதிகம் பாடுபடாமல், மனத்திற்கு உகந்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்குக்கூட பகுதிநேர பணி கிடைப்பதற்கு வழி செய்வார் சனி பகவான்! உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தொழில், வியாபாரம்: ஜென்மச் சனி தோஷத்திலிருந்து இப்போது விடுபட்டுள்ள உங்களுக்கு, பிற கிரகங்களும்கூட சிறந்த சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏற்ற தருணமிது. அன்றாட விற்பனையை ஆராய்ந்தாலே இந்த உண்மை தெரியும். நிதி நெருக்கடி தீரும். ஏற்றுமதித் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் வர ஆரம்பிக்கும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும், அதன் மூலம், தொழிலை விஸ்தரிப்பதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் இம்மாதம் உங்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளில் சில ஆகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சந்தை நிலவரம் விற்பனையை அதிகரிப்பதற்கு அனுகூலமாக இருக்கும்.
கலைத் துறையினர்: சுக்கிரன், அனுகூல நிலையில் சஞ்சரிப்பதால், கலைத் துறை அன்பர்களுக்கு, மிகவும் அனுகூலமான மாதம் இப்பங்குனி! திரைப்படத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். தயாரிப்பாளர்களுக்கு, நிதியுதவி எளிதில் கிட்டும். மாநில அரசின் ஆதரவு உற்சாகத்தைத் தரும். உங்கள் திரைப்படங்கள் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஏராளமான ஊழியர்களுக்கு, இருண்ட காலம் நீங்கி, நல்ல காலம் உதயமாகிறது. பின்னணிப் பாடகர்களுக்கு, நல்ல வாய்ப்புகளும் , புகழும் கிட்டும். சிலருக்கு, அரசியல் தொடர்புகளினால், நன்மைகள் கிட்டும்.
அரசியல் துறையினர்: ஜென்ம ராசியில் நிலைகொண்டிருந்த சனி பகவானால், பல ஏமாற்றங்களுக்கும், மனக் குழப்பங்களுக்கும், பிரச்னைகளுக்கும் ஆளாகி, மனோ தைரியம் குன்றிருந்த அரசியல் துறையினருக்கு, புத்துயிர் அளிக்கும் மாதம் இந்தப் பங்குனி! பல புதிய தயாரிப்புகள் வரவிருப்பதால், நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் தேடிவரும். மக்களிடையே புகழ் ஓங்கும். வருமானமும் உயரும். அர்த்தாஷ்டகத்தில் ராகு நிற்பதால், ஆடம்பரச் செலவுகளில் பணம் விரயமாகும். கட்டுப்படுத்திக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.
மாணவ - மாணவியர்: சனி பகவான், ஜென்ம ராசியை விட்டு, விலகிவிட்டதால், மனத்தில் அமைதி பிறக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த குழப்பங்கள், சபலங்கள், கல்வி முன்னேற்றத்தில் பின்னடைவு ஆகியவை நீங்கி மனம் அமைதிபெறும். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். கிரகிப்புத் திறனும், நினைவுத் திறனும் அதிகரிக்கும். உடலை வருத்திவந்த தோல் சம்பந்தமான உபாதைகள் நீங்குகின்றன. வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள்!!
விவசாயத் துறையினர்: செவ்வாய், உங்களுக்குச் சற்று தாராளமாகவே நன்மைகளைச் செய்வதற்கு ஏற்றபடி சஞ்சரிக்கின்றார். விளைச்சலும் வருமானமும் மனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய கால்நடைகள் சேரும். "கோ சாலைகளுக்கு" மிகவும் உதவிகரமான மாதமாகும், இந்தப் பங்குனி. விளைச்சலும், வருமானமும், பால் விற்பனையும் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
பெண்மணிகள்: அனைத்துவிதங்களிலும், உற்சாகமான மாதமாகும். உடலை வருத்திய உபாதைகள் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமைந்து திருமணமும் நடைபெறும். வேலைக்கு முயற்சிக்கும் பெண்களுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குத் திருப்தியளிக்கும் உத்தியோகம் கிடைக்கும் என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன.
அறிவுரை: பல மாதங்களுக்குப் பிறகு, முதன் முறையாக கிரக நிலைகள் அனுகூலமாக மாறியுள்ளன. குறிப்பாக, ஜென்மச் சனி தோஷம் நீங்குகிறது. இதனை "கண்டச் சனி" எனக் கூறுவர் பெரியோர். இனி கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பரிகாரம்: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிராகாரத்திலுள்ள, சித்தர் சந்நிதியில் வியாழக்கிழமைதோறும் நெய் தீபம் ஏற்றிவைத்து தரிசிப்பது கைமேல் பலனளிக்கும். இதற்கு வசதியற்றவர்கள், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் செய்யலாம். அதே பலன் கிட்டும்.
அனுகூல தினங்கள்: பங்குனி: 1-3, 6-9, 13-16, 22-24, 27, 28.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 19 முதல் 21 மாலை வரை.