கும்பம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம்: குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பிரவேசிக்கிறார். கோள்சார விதிகளின்படி, இவர் சுமார் இரண்டரை வருட காலம் கும்ப ராசியில் சஞ்சரிக்க வேண்டும். கும்பம், சனியின் ஆட்சிவீடாக இருப்பதால், சிரமங்கள் மிகக் கடுமையாக இராது. குடும்பப் பொறுப்புகளினால், அதிக அலைச்சலும், பிரயாணங்களும், மனக் கவலையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும். வரவும், செலவும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். மனமிருந்தாலும், எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது. தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிக்கடி ஏதாவதொரு ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதால், மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கண்டச் சனி அதிகார காலத்தின்போது, திருமண முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு இருப்பதை காளிதாஸரின் "உத்திர காலாம்ருதம்"என்னும் ஜோதிட நூல் விளக்கியுள்ளது. தவறான வரன்களை நிச்சயித்துவிடக்கூடும். வரனைப் பற்றி தீர விசாரித்து, ஆழ்ந்து யோசித்து, பெரியோர்களைக் கலந்துகொண்டு, நிர்ணயம் செய்வது, சாலச் சிறந்தது. திருமணம் என்பது, மணமகன், மணமகள் ஆகியோரின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வைபவமாகும். ஆதலால்தான், ஜோதிடம் என்ற வாழ்க்கைக் கலை இந்த எச்சரிக்கையை விடுக்கின்றது. இருவரின் இருப்பினும், சுபச் செலவுகள் அதிகளவிலேயே இருக்கும். கூடிய வரையில், வீண் அலைச்சல்களையும், கடின உழைப்பையும் தேவையற்ற கவலைகளையும் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நெருங்கிய உறவினர்களின் மறைமுகத் தொல்லைகள் வேதனையைத் தரும்.
உத்தியோகம்: பொறுப்புகள் கூடும். சக்திக்கு மீறி உழைக்க வேண்டிவருவதால், பார்த்துவரும் வேலையில் வெறுப்பும், விரக்தியும் மேலிடும். ஒருசிலர் மேலதிகாரிகளின் சீற்்றத்திற்கு ஆளாகக்கூடும். நியாயமாக உங்களுக்கு அளிக்கவேண்டிய ஊதிய உயர்வு, ஒத்திப்போடப்படும். அதனால், பணியில் அதிருப்தி உருவாகும். வேறுவேலைக்குச் சென்று விடலாம் என்ற மனப்போக்கு ஏற்படக்கூடும். பொறுமை, நிதானம் அவசியம். உணரச்சிவசப்படுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
தொழில், வியாபாரம்: நன்றாக நடந்துவந்த விற்பனையில், பின்னடைவு ஏற்படக்கூடும். லாபம் குறையும். சந்தை நிலவரம் புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும். சகக் கூட்டாளிகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்து, வேலைபார்க்கும் ஊழியர்களினால், பிரச்னைகள் ஏற்படும். "படுத்தால், பிரச்னை; எழுந்தால் கவலை...!" என்ற நிலைதான். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைப்பதும் கடினம். உற்பத்தியாளர்களுக்கு, மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதால், பணப் பிரச்னை ஏற்படக்கூடும்.
கலைத் துறையினர்: எதிர்பார்த்திருந்த புதிய வாய்ப்புகள், ஏமாற்றத்தைத் தரும். வருமானம் பாதிக்கப்படும். ஸ்டண்ட் நடிகர்கள் ஆபத்தான பாத்திரங்களில் நடிக்கும்போது, விழிப்புடன் இருப்பது அவசியம். ஏனெனில், ஜென்மச் சனி ஏற்படுத்தும் தோஷத்தினால், விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது அவசியம்.
அரசியல் துறையினர்: இம்மாதம் முழுவதும், கிரக நிலைகள் சாதகமாக இல்லை. பேச்சிலும், செயலிலும் பிற தொடர்புகளிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது, மிக, மிக அவசியம். சிலர்நீதிமன்ற வழக்குகளில் அகப்பட்டுக்கொள்ள சாத்தியக்கூறு உள்ளது. தனக்குத் தானே எதிரியாக செயல்படுவதற்கு, கிரக நிலைகளின்படி, வாய்ப்புள்ளது. உங்கள் எதிர்கால அரசியல் முன்னேற்றம் இதனால் பாதிக்கப்படக்கூடும்.
மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன் மற்றும், இதர கிரகங்கள் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி, நீடிக்கிறது. ஜென்ம ராசி தோஷத்தினால், அடிக்கடி ஆேராக்கியக் குறைவு ஏற்படக்கூடும். சற்று கவனமாக இருந்தால் தவிர்க்கலாம்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள், அனுகூலமில்லாத நிலைகளில் சஞ்சரி்க்கும் நிலையில், சனி பகவானும், ஜென்ம ராசிக்கு மாறுவது சிரமங்களை ஏற்படுத்தும். உழைப்பிற்கேற்ற விைளச்சலும், வருமானமும் கிடைப்பது கடினம். வருமானமும் சிறிதளவு குறையும், கால்நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். பழைய கடன்கள் நீடிப்பதால், மனத்தை கவலை அரிக்கும்.
பெண்மணிகள்: உங்கள் ஆரோக்கியத்தைச் சற்று கவனித்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. குறிப்பாக, வயது சம்பந்தமான உபாதைகள், மாதவிடாய்க் கோளாறுகள், கை, கால்கள், மூட்டுகள் ஆகியவற்றில் வலி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்படக்கூடும்.
அறிவுரை: கூடியவரையில், அதிக உழைப்பையும், தேவையற்ற கவலைகளையும், குறைத்துக்கொள்ளல் அவசியம்.
பரிகாரம்: தினமும், ஒரு தஸகம் ஸ்ரீமத் நாராயணீயம் படித்து, ஸ்ரீகுருவாயூரப்பனை பூஜித்துவந்தால் போதும். கண்டச்சனி தோஷத்திற்கு கண் கண்ட பரிகாரமிது.
அனுகூல தினங்கள்: பங்குனி: 1, 2, 6-9, 13-15, 19, 20, 24-26, 30.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 21 மாலை முதல், 23 பின்னிரவு வரை.