மீனம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: மீனம் ராசி அன்பர்களுக்கு, ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. ஜென்ம ராசியில் குரு பகவான் அமர்ந்திருக்கின்றார். "ஜென்ம குரு வனத்திலே....!" என்றொரு மூதுரை நெடுங்காலமாக நம் நாட்டில் வழங்கிவருகிறது. அதாவது, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும்போது, குடும்பத்தைவிட்டு, தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும் என்பதே பொருள். ஸ்ரீராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசத்திற்குச் சென்றபோது, அவரது ஜாதகப்படி, குரு பகவான் அவரது ஜென்ம ராசியில் நிலைகொண்டிருந்ததே இத்தகைய பழமொழி ஏற்பட்டதற்குக் காரணமாகும். ஆயினும், மற்ற கிரகங்களின் நிலைகளைக் கணக்கில்கொண்டு, பலன் கூறினால்தான் சரியாக இருக்கும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாகவும், அலுவலகக் கடமைகள் காரணமாகவும், அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை ஏற்க நேரிடும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செலவு செய்வது மிகவும் அவசியம். சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் பூரண குணம் கிடைக்கும். உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படக்கூடும். சுக்கிரன் சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், பிரச்னைகள் அளவோடு நிற்கும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறை, சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. பொறுப்புகள் கூடும்; உழைப்பு கடினமாகும். நிர்வாகத்தினருடன் கருத்துவேற்றுமை உருவாகும். அத்தகைய தருணங்களில், உங்கள் கருத்துதான் சரி என்ற பிடிவாதத்தைவிட்டுவிட்டு, சற்று அனுசரித்து நடந்துகொண்டால், தேவை யற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிட முடியும். சக ஊழியர்களினாலும், மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். விழிப்புடன் இருக்கவேண்டிய தருணமிது.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும் சனி பகவானின் பொறுப்பில்தான் உள்ளது. வியாபாரத்தில், கடினமான போட்டிகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். மிகவும் பாடுபட்டே, லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். நிதிநிறுவனங்களினாலும், பிரச்னைகள் ஏற்படும். வியாபாரம் சம்பந்தமாக, வெளியூர்களுக்குச் செல்லும்போது, ஆரோக்கியக் குறைவினால், ஓய்வெடுக்கவேண்டி வரும். சகக் கூட்டாளிகளின் நேர்மையைச் சந்தேகிக்கும்படியான சூழ்நிலைகள் உருவாகும். இது உங்கள் மன நிம்மதியைப் பாதிக்கும்.
கலைத் துறையினர்: பெரும்பான்மையான கிரகங்கள், அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிக்கும் நிலையில், ஏழரைச் சனியும் ஆரம்பமாகிறது! எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வருமானம் குறையும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, பணப் பற்றாக்குறையினால், படங்கள் பாதியில் நின்றுபோகும். ஸ்டண்ட் நடிகர்கள் ஆபத்தான பாத்திரங்களில் நடிக்கும்போது, மிக, மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வற்புறுத்திக்காட்டுகின்றன. ஏனெனில், விபத்துகள் ஏற்படக்கூடும். அது சற்று கடுமையாகவே இருக்கும் என்பதை ஏழரைச் சனி எடுத்துக்காட்டுகிறது.
அரசியல் துறையினர்: கட்சியில், ஆதரவும், செல்வாக்கும் பாதிக்கப்படக்கூடும். மேலிடத் தலைவர்களுடன் அபிப்ராய பேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்துள்ள சுக்கிரன் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், பிரச்னைகள் அனைத்தும் அளவோடுதான் இருக்கும். பரிகாரம் அவசியம்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரியான புதன், சாதகமாக இல்லாத தருணத்தில், இந்த ஏழரைச் சனிக் காலம் ஆரம்பமாகிறது. சக மாணவ, மாணவியருடன் பழகுவதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம். விடுதிகளில், தங்கிப் படித்துவரும் மீன ராசி மாணவர்கள், தவறான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள சக மாணவர்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தானுண்டு; தன் படிப்புண்டு! என்று ஒதுங்கியிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மையை அளிக்கும்.
விவசாயத் துறையினர்: விளைச்சலும், வருமானமும் எதிர்பார்த்திருந்த அளவிற்கு இராது! ஆடு - மாடுகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதைகள் ஏற்படுவதால், வயல் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்த இயலாத சிரமங்கள் ஏற்படும். பழைய கடன்கள் தொல்லை தரும். பெண் அல்லது பிள்ளை விவாக சம்பந்தமாக புதிய கடன்களை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஓய்வில்லாத அலைச்சலும், உழைப்பும், குடும்பக் கவலைகளும் உடல் நலனை சற்று பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. தேவைக்கு அதிக தண்ணீர் வரத்தினால், பயிர்கள் சேதமடையும். சந்தையில் உங்கள் விளை பொருட்களுக்கு, குறைந்த விலைதான் கிடைக்கும். குறிப்பாக, இரவு நேர வயல் பணிகளில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும், விஷ ஜந்துக்களினால் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கை எனும் நீள் பாதைக்கு, ஒளி விளக்காகத் திகழ்கின்றது "ஜோதிடக் கலை"!
பெண்மணிகள்: ஏழரைச் சனியின் ஆரம்ப நிலையில் உள்ள உங்களுக்கு, ராசி நாதனும், அனுகூலமாக இல்லை! இருப்பினும், பெண்கள் நலன்களைப் பாதுகாக்கும் சுக்கிரன், சுப பலம் பெற்று விளங்குவதால், எந்தப் பிரச்னையானாலும், அளவோடுதான் இருக்கும். கணவருடன் அந்நியோன்யக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பப் பிரச்னைகளினாலும், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஏற்படும் பின்னடைவினாலும், கவலைகளினாலும் மன நிம்மதி பாதிக்கப்படும். ஆரோக்கியத்திலும், மிகக் கவனமாக இருத்தல் அவசியம். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கும், அலுவலகத்தில் ஏதாவதொரு ப்ிரச்னை ஏற்பட்டு, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மேலிடும். கருவுற்றுள்ள பெண்மணிகள், உடல் நலனை பேணிக்காப்பதில், அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அறிவுரை: சனி பகவான், ராசிக்கு விரய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளதால், பல வழிகளிலும் பணம் விரயமாகும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நல்லது. திட்டமிட்டுதான் செலவு செய்ய வேண்டும்.
பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, காளஹஸ்தி, பூவரசன்குப்பம், அஹோபிலம்,சிம்மாச்சலம் திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரங்களாகும். ஸ்வாதி நட்சத்திரத் தினத்தன்று, உபவாசமிருப்பதும், கைமேல் பலனளிக்கும் அற்புதப் பரிகாரங்களாகும்.
அனுகூல தினங்கள்: பங்குனி: 1, 2, 6-9, 13-15, 19-22, 26, 27.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 23 பின்னிரவு முதல், 25 வரை.