ரிஷபம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: குரு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் அனுகூலமான நிலைகளில் இம்மாதம் முழுவதும் சஞ்சரிக்கின்றனர். இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமாகிய மகரத்தில் நிலைகொண்டிருந்த சனி பகவான், அவருடைய மற்றொரு வீடும், உங்கள் ராசிக்குத் தொழில் ஸ்தானமுமாகிய கும்ப ராசிக்கு மாறுகிறார். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும். நிதிநிலைமை திருப்திகரமாக உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும், பண வசதி நல்லபடி இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள்! ஒரு சிலருக்கு, வீடு மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. சொந்த வீடு அமைவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என செவ்வாயின் சஞ்சார நிலை உணர்த்துகிறது. விரயத்தில், ராகு இருப்பினும், ஆரோக்கியம் நல்லபடியே நீடிக்கும் இம்மாதம் முழுவதும்!!
உத்தியோகம்: உத்தியோகத் துறை, சனி பகவானின் அதிகாரத்தில்தான் உள்ளது. தொழில் ஸ்தானத்தில், சனி நிலைகொண்டிருப்பதன் பலன்களை "பாஸ்கர ஸம்ஹிதை" என்னும் பண்டைய நூல் விவரித்துள்ளது. வேலை வாங்குவதில், கண்டிப்பான முதலாளி சனி! அதே தருணத்தில், உழைப்பிற்கேற்ற கூலி கொடுப்பதிலும் நியாயமானவர், அவர்!! அவரது கும்ப ராசி சஞ்சார காலத்தில், ரிஷப ராசி உத்தியோகஸ்தர்களுக்கு, கடுமையான உழைப்பையும், சக்திக்கு மீறிய பொறுப்புகளையும், அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்லவேண்டிய அவசியத்தையும், அசதியையும் ஏற்படுத்தினாலும், ஊதியம் மற்றும் பதவி உயர்வையும், தவறாமல், அளித்தருள்வார்.
தொழில், வியாபாரம்: இந்த இரு துறைகளுக்கும்கூட, சனி பகவான்தான் அதிபதி! இவரது கும்ப ராசி சஞ்சார காலத்தில், நல்ல லாபத்தைக் கொடுப்பார். அதே தருணத்தில், கடினமான போட்டிகளையும், வெளியூர்ப் பயணங்களையும் அனுபவிக்கவேண்டி வரும். சில தருணங்களில், சகக் கூட்டாளிகளினாலும், ஊழியர்களினாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஜனன கால தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், வருமான வரித் துறையினால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கூடியவரையில், ஆவணங்களைச் சரிபார்த்து, பிழை ஏதும் இல்லாமல் வைத்துக்கொள்வது, இத்தருணத்தில் மிகவும் அவசியம். அளவோடு புதிய முதலீடுகளில் இறங்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள், தொழில் முன்னேற்றத்திற்கு உதவும்.
கலைத் துறையினர்: சனி மட்டுமல்லாமல், திரைப் படத் துறைக்கு அதிகாரம் கொண்ட சுக்கிரனும், மிகவும் அனுகூலமாக இருப்பதால், இத்துறையில் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் மற்றும் நடிகைகள், விநியோகஸ்தர்கள் ஆகிய அனைவருக்கும் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய மாதம் இப்பங்குனி!! குருவும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நாதசுரக் கலைஞர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள், ஓதுவா மூர்த்திகள், கிராமீய நாடகக் கலைஞர்கள் ஆகியோர் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
அரசியல் துறையினர்: அரசியலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், மகிழ்ச்சியான மாதமிது! கட்சியில் உருவாகியிருந்த உட்பூசல்கள் இம்மாதம் நி்வர்த்தியாகும். எந்த அணியில் சேர்வது? என்ற குழப்பத்திலேயே ஆழ்ந்து வந்த உங்களுக்கு, மன நிம்மதியும், தெளிவும் ஏற்படும். அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலில், மிக முக்கியமான பொறுப்பு ஒன்று உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன் எவ்வித தோஷமுமில்லாமல் சஞ்சரிக்கின்றார். வித்யா ஸ்தானமும், நல்ல சுப பலம் பெற்று நீடிப்பதால், படிப்பில் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வுகளில், கிரகிப்பு சக்தியும், மிகத் தெளிவாக பதிலளிக்கும் திறனும், ஓங்கும். இவை உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
விவசாயத் துறையினர்: சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனைவரும், சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிடைப்பது நிச்சயம். அடிப்படை வசதிகளான தண்ணீர், விதை, உரம், கால்நடைகள் ஆகியவற்றிற்கு எவ்விதக் குறைவும் இராது. அரசாங்கச் சலுகைகள் சரியான தருணத்தில் கிடைக்கும். புதிய சலுகைகள் கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும்தான் பெண்மணிகளின் வாழ்க்கைத் தரத்தை, நிர்ணயிப்பவை என காளிதாஸரின் "உத்திரகாலாம்ருதம்" விவரித்துள்ளது. இந்த இருவருமே உங்களுக்கு பலம் பெற்று, உலா வருவதால், இப்பங்குனியில், பொங்கும் பல நன்மைகள் உங்களுக்குக் கிட்டும். திருமண வயதிலுள்ள நங்கையருக்கு, மனத்திற்கு உகந்த வரன் தேடி வரும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அதிர்ஷ்டகரமான மாதமிது! வேலைக்கு முயற்சிக்கும் நங்கையருக்கு, வெற்றி நிச்சயம்.
அறிவுரை: சுப பலம் பெற்றுள்ள குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் கொடுப்பதை, விரயம் செய்துவிடாமல், திட்டமிட்டு செலவு செய்யுங்கள். எதிர்காலத்திற்கென்று, சேமித்துவைக்க, அரிய வாய்ப்பிது!!
பரிகாரம்: சனி மற்றும் ராகுவின் நிலைகளினால், அதிக உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும், அசதியும், உடலை வருத்தும். மனத்தில் சற்று விரக்தியும் ஏற்படக்கூடும். ஆதலால், பரிகாரம் இத்தகைய துன்பங்களை அடியோடு போக்கும். 24 சனிக்கிழமைகள் அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் எரியும் தீபத்தில் சிறிது எள்ளெண்ணை சேர்த்துவரலாம். 2, காகத்திற்கு, சிறிது நெய், பருப்பு, கருப்பு எள் சேர்த்த ஐந்து சாத உருண்டைகளை தி்னமும் வைப்பது, அற்புதமான பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள்: பங்குனி: 3-8, 13-15, 20-23, 27.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 1,2. மீண்டும் பங்குனி 28 பிற்பகல் முதல், 30 வரை.