மிதுனம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: கோள்சார விதிகளின்படி, இந்தப் பங்குனி மாதம், உங்களுக்குப் பல யோக பலன்களை அளிக்க உள்ளது. பங்குனி 15ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தினமாகும்! கடந்த இரண்டரை வருடங்களாக அஷ்டமச் சனி நிலையினால், பலவிதத் துன்பங்களையும், உடல் உபாதைகளையும், பிரச்னைகளையும் சந்தித்து வந்த உங்களுக்கு, அந்தத் தோஷம் நீங்குகிறது. பல குடும்பப் பிரச்னைகள் படிப்படியாக தீர ஆரம்பிப்பதால், மனத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த "டென்ஷன்" மனநிலை நீங்கும். மனத்தில் அமைதி பிறக்கும். பூர்வ புண்ணிய ராசியில் கேது அமர்ந்திருப்பதால், தீர்த்த, தல யாத்திரை சென்று வருவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. லாப ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சுக்கிரன் மற்றும் ராகுவினால், நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கு சுக்கிரனின் நிலை சுப பலம் பெற்றுள்ளது. குரு பகவான் அனுகூலமற்று சஞ்சரிப்பதால், அதிக அலைச்சலும், பிரயாணங்களும் அசதியை ஏற்படுத்தும். மற்றபடி, கவலைப்படுமளவிற்கு எந்த கிரகமும் அமைந்திருக்கவில்லை!! நீதிமன்ற வழக்குகள், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் நல்லபடி தீர்வதால், மனத்தில் நிம்மதி நிலவும்.
உத்தியோகம்: சென்ற சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேலாகவே பணியாற்றும் இடத்தில், சக்திக்கு மீறிய உழைப்பும், பொறுப்புகளும் இருந்தும்கூட, உங்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு, சலுகைகள் ஆகியவை மறுக்கப்பட்டு வந்ததால், மனத்தில் வெறுப்பும், விரக்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கும். அந்நிலை, சனியின் கும்ப ராசி மாறுதலினால், மாறும். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை துளிர்க்கும். பலருக்கு, வேலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவரவரது தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், குறிப்பாக எந்தத் தேதியில் அந்த மாற்றம் ஏற்படக்கூடும் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். புதிய வேலைக்கு முயற்சிப்பதற்கு அனுகூலமான மாதம் இந்தப் பங்குனி.
தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரம் ஆகிய இரண்டு துறைகளும் சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. வரும் பங்குனி 15ம் தேதியிலிருந்து அவர் சாதகமாக மாறுவதால், வர்த்தகத் துறையினருக்கு, லாபகரமான மாதமிது. புதிய முதலீடுகளில் இறங்குவதற்கு தக்க தருணமாகும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய வாய்ப்புகள் கதவைத் திறக்கும். லாபம் படிப்படியாக உயரும். தொழிற் சாலையை விஸ்தரிப்பதற்கு அனைத்து உதவிகளும் உடனுக்குடன் கிடைக்கும். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும். அரசாங்க அனுமதி எவ்விதப் பிரச்னையுமின்றிக் கிடைக்கும். உற்பத்தியாளர்களுக்கு, அவசியமான அடிப்படை மூலப்பொருட்கள் நியாயமான விலைக்குக் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, தற்காலிகமாக நின்றுபோயிருந்த வெளிநாட்டு ஆர்டர்கள் வர ஆரம்பிக்கும்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருக்கும் இத்தருணத்தில், சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தை விட்டு, பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுவது, கலைத் துறையினருக்கு அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை கிடைத்துள்ளதைக் குறிப்பிடுகிறது. சென்ற சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகவே, பின்னடைவையே கண்டு, துவண்டிருந்த இத்துறையினருக்கு நல்லகாலம் பிறந்துள்ளது என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன. முக்கியமாக, திரைப்படத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான மாதமாகும், இந்தப் பங்குனி.
அரசியல் துறையினர்: இந்திய அரசியலில் எதிர்பாராத பல மாறுதல்கள் ஏற்படவுள்ளதை இம்மாத கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதன் காரணமாக, நீங்கள் பல புதிய முடிவுகளை எடுக்கவேண்டிய அவசியமேற்படும். உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணத்தில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை சனி, ராகு மற்றும் சுக்கிரனின் சஞ்சார நிலைகள் உணர்த்துகின்றன. இந்நிலையினால், எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உருவாகும். நல்ல முடிவெடுப்பதற்கு, சுக்கிரனின் நிலை உதவுகிறது. மனத்தில் ஏற்பட்டுவந்த தடுமாற்றம் இனி நீங்கும். மனத்தில் தெளிவு பிறக்கும்.
மாணவ - மாணவியர்: வித்யா காரகரும், வித்யா ஸ்தானமும் சுப பலம் பெற்றிருப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இம்மாதத்தில். சனி பகவானின் அஷ்டம ஸ்தான சஞ்சாரத்தினால் ஏற்பட்ட தோஷம் நீங்கிவிடுவதால், உடலில் ஏற்பட்ட அசதி, சோர்வு ஆகியவை நீங்கி உற்சாகம் மேலிடும். கிரகிப்பு சக்தி உயரும். உயர் கல்விக்கு, பல வித உதவிகள் கிடைக்கும். வெளிநாடு சென்று, விசேஷ கல்வி பயில்வதற்கு ஆர்வமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் ஈடுபடலாம், இந்தப் பங்குனி மாதத்தில்!!
விவசாயத் துறையினர்: செவ்வாய், ஜென்ம ராசியில் நிலைகொண்டிருப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். அதனால், தினமும் வயல் பணிகளைக் கவனிப்பதற்கு இயலாமற் போகும். மற்றபடி, விளைச்சல் திருப்திகரமாகவே இருக்கும். சிறு, சிறு மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை.
பெண்மணிகள்: சனி பகவானின் அஷ்டம ராசி சஞ்சாரத்தினால் தொடர்ந்து ஏற்பட்ட கவலைகள், வீண் அலைச்சல்கள், வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் ஆகியவை நீங்கும். திருமண வயதை எட்டியுள்ள கன்னியருக்கு, வரன் அமைவதில் ஏற்பட்டிருந்த தடங்கல்கள் விலகி நல்ல வரன் அமையும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் கவலையளித்த பல பிரச்னைகள் விலகி, மனம் அமைதி பெறும். பணிகளில் கவனம் செலுத்த இயலும்.
அறிவுரை: சுமார் இரண்டரை ஆண்டுகளாக வருத்திவந்த சனி பகவானின் அஷ்டம ராசி சஞ்சார தோஷம் விலகிவிட்டது. குறிப்பாக, உடல் நலனில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். பாக்கிய ஸ்தான சனி அளிக்கும் நன்மைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! விரயம் செய்து விட வேண்டாம்!!
பரிகாரம்: தினமும் உங்கள் இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் (மறைந்த முன்னோர்கள்) மனத்தால் நினைத்து, பூஜித்துவந்தால் போதும். அளவற்ற நன்மைகள் உங்களைத் தேடி வரும்.
அனுகூல தினங்கள்: பங்குனி: 1, 2, 6, 7, 11-15, 19-22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 3ம் தேதி முதல், 5 காலை வரை.