கடகம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து, ராசியைப் பார்ப்பதால், பிரச்னைகளின் கடுமை குறையும். சனி பகவான், உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு மாறுவது, அளவோடு சிரமங்களை ஏற்படுத்தும். பொதுவாக, சனியின் அஷ்டம ராசி சஞ்சார தோஷம் சற்றுக் கடுமையாகவே பாதிக்கும் என்பது ஜோதிடக் கலையின் பொது விதியாகும். ஆனால், உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியே சனி பகவானாக இருப்பதால், பாதிப்பு கடுமையாக இராது (ஆதாரம்: "பிருஹத் ஜாதகம்" மற்றும் "பூர்வ பாராசர்யம்" ஆகிய மிகப் புராதன ஜோதிட நூல்கள்). ஆயினும், அலைச்சலும், குடும்ப சம்பந்தமான பிரச்னைகளினால், கவலையும், பண விரயமும் ஏற்படும். அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். ஜென்ம ராசிக்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், சனியின் தோஷம் பெருமளவில் குறைகிறது. ஆயினும், பரிகாரம் செய்வது நல்லது. குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில், பணம் விரயமாகும். வரன் பற்றிய விஷயங்களில் எவ்வித முடிவும் எடுக்க இயலாது மனத்தில் குழப்பம் ஏற்படும். உறவினர்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படக்கூடும். பங்குனி 24ந் தேதி சுக்கிரன் அனுகூலமாக மாறுவதால், குடும்பச் சூழ்நிலை சாதகமாக மாறும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு சனி பகவான்தான் அதிகாரியாவார். அவர், அனுகூலமற்ற ராசிக்கு மாறுவதால், உங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். எக்காரணத்தைக் கொண்டும், மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எத்தகைய தருணங்களில், எந்தெந்த விஷயங்களில் நாம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை வழிகாட்டி உதவும் நண்பன் ஜோதிடம்! சிறு தவறும், உங்கள் நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும். பங்குனி 23ம் தேதி வரை சுக்கிரன் அனுகூலமற்று இருப்பதால், உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரால் அவமானப்பட நேரிடும். மிக, மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டிய தருணமிது.
தொழில், வியாபாரம்: புதுப் போட்டிகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். தொழிலதிபர்களுக்கு, ஊழியர் சம்பந்தமான பிரச்னைகள், உற்பத்தியை பாதிக்கும். வருமானவரித் துறை அதிகாரிகளினால், பிரச்னைகள் ஏற்படக்கூடும். லாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, அரும்பாடுபடவேண்டியிருக்கும். இருப்பினும், ராசியை, குரு பகவானின் சுபப் பார்வை பலப்படுத்துவதால், நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. புதிய முதலீடுகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடுவது உங்கள் எதிர்கால நலனுக்கு உகந்ததாகும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.
கலைத் துறையினர்: சுக்கிரன் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதாலும், குரு பகவான் அனுகூலமாக உள்ளதாலும், சனியின் அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷம் அளவோடு நிற்கும். வாய்ப்புகள் குறையாது. இருப்பினும், கடுமையாக உழைக்க நேரிடும். வேலை வாங்காமல், கூலி கொடுக்க மாட்டார், சனி பகவான்! திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, பல காரணங்களினால், படத்தை முடித்து, வெளியிடுவதற்குத் தடங்கல்களும், அதனால் பல பிரச்னைகளும், பண விரயமும் ஏற்படும். நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதால், ஒப்பந்தப்படி கால்ஷீட் கொடுக்கமுடியாத நிலை உருவாகும்.
அரசியல் துறையினர்: மேலிடத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு பாதிக்கப்படும். நீதிமன்ற வழக்குகளில், சாதகமான தீர்ப்பை எதிர்பார்ப்பதில் பயனில்லை. முக்கிய விஷயங்களில் உங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடாமல், மௌனம் சாதிப்பது உங்கள் எதிர்கால அரசியல் நலனுக்கு உகந்ததாகும். சில தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு, தவறான முடிவுகள் எடுப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
மாணவ - மாணவியர்: இரவில் நெடுநேரம் கண் விழித்து படிப்பதையும், அவசியமில்லாமல் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதையும், தவறான பழக்க வழக்கங்களைக் கொண்ட சக மாணாக்கர்களுடன் பழகுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். விசேஷ உயர்கல்வி பயில வெளிநாடு செல்லவேண்டுமென்ற முயற்சிகளில் விசா கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.
விவசாயத் துறையினர்: விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். ஆயினும், வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். இரவு நேரப் பணிகளின்போது, சற்று விழிப்புடன் இருப்பது அவசியம். பழைய கடன்கள் மன நிம்மதியை பாதிக்கும். கால் நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும், ஜனனகால தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், புதிய கடனை ஏற்க நேரிடும். கூடிய வரையில் தவிர்க்க முயற்சிக்கவும்.
பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, பெரிய பிரச்னை என்று எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதை வாட்டி எடுக்கும். எளிய சிகிச்சையினால், உடனுக்குடன் குணமும் ஏற்படும். திருமண வயதிலுள்ள நங்கயைருக்கு, வரன் அமைவதில் குழப்பங்கள் மேலிடும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகக்கு, மேலதிகாரிகளினால் சிரமங்கள் ஏற்படும். பணிகளில் கவனமாக இருத்தல் வேண்டும. சக ஊழியர்களிடம் உங்கள் குடும்பப் பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டாம்.
அறிவுரை: உடல் நலனிலும், மன நலனிலும் நீங்கள் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். அஷ்டம ராசி சனி சஞ்சாரகாலத்தில் கடக ராசியினர் கடுமையாக பாதிக்கப்படமாட்டார்கள் என புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. இருப்பினும், அதன் தாக்கம் உங்கள் நலனை - குறிப்பாகக் கூறவேண்டுமென்றால், ஆரோக்கியத்தில் மிககவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும், ஆந்நூல்கள் விளக்கியுள்ளன. ஆதலால், உடல் நலனில் எச்சரி்க்கையாக இருக்கவும். வீண் கவலைகளைத் தவிர்ப்பது மன நலனுக்கு உகந்ததாகும்.
பரிகாரம்: மிகவும் அவசியம். தினமும் காலையில் ஸ்ரீகந்தர் சஷ்டிகவசமும், மாலையில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும் சொல்லி வந்தால் போதும். இரண்டுமே அளவற்ற மந்திர சக்தி பெற்றவை.
அனுகூல தினங்கள்: பங்குனி: 3, 4, 8-11, 16-18, 23-26, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 5 காலை முதல், 7 பிற்பகல் வரை.