சிம்மம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: இதுவரையில், உங்களுக்குச் சாதகமாக சஞ்சரித்த சனி பகவான், அனுகூலமற்ற கும்ப ராசிக்கு மாறுவது, நன்மை தராது! சுக்கிரன் மற்றும் செவ்வாய், கேது ஆகியோர் சாதகமாக உள்ளனர். கும்ப ராசி, சிம்ம ராசியினருக்கு களத்திர ஸ்தானமாகும். அதாவது, மனைவியைக் குறிக்கும் ராசி. இத்தருணத்தில் குருவும் உதவிகரமாக இல்லை!! கணவர் - மனைவியரிடையே கருத்துவேற்றுமை ஏற்பட்டு, குடும்ப அமைதி பாதிக்கப்படக்கூடும். மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். வரவிற்கு மேல் செலவுகள் ஏற்படுவதால், பணப் பிரச்னையும் கவலையை அளிக்கும். சுக்கிரனும், செவ்வாயும் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், அவ்வப்போது நிதியுதவியும் எளிதில் கிடைக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். திருமண முயற்சிகளில் தடங்கல் ஏற்படும்.
உத்தியோகம்: உங்கள் ராசிக்கு, ஜீவனாதிபதியான சுக்கிரனும், பாக்கியாதிபதியாகிய செவ்வாயும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஜீவன காரகரான சனி பகவான், கும்ப ராசிக்கு மாறியிருப்பதால், அன்றாடப் பணிகளில் உழைப்பு சற்று கடினமாக இருக்கும். அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை ஏற்க நேரிடும். மற்றபடி, அலுவலகத்தில், எவ்விதப் பிரச்னையும் ஏற்படுவதற்கு, கிரக ரீதியில் சாத்தியக்கூறு கிடையாது. புதிய வேலைக்கு முயற்சிக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு, வேறு வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
தொழில், வியாபாரம்: சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! விற்பனையும், லாபமும் படிப்படியாக அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுவர வேண்டியிருக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
கலைத்துறையினர்: வருமானம் உயரும். புதிய வாய்ப்புகள் உற்சாகத்தை ஏற்படுத்தும். திருமணமாகியுள்ள கலைத்துறையினருக்கு, குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். கணவர்-மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும். தற்போதைய தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், விவாகரத்தில் முடியும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. திரைப்படத் துறையினருக்கு, பெண் நடிகை ஒருவரால், அவப்பெயர் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. ஆடம்பரச் செலவுகளிலும், உல்லாசப் பயணங்களிலும் பணம் விரயமாகும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள் இதுவரை சாதகமாக இல்லாததால், கட்சியில் நிலவிய உட்பூசல்களினால், மன அமைதி பாதிக்கப்பட்ட உங்களுக்கு, மனத்தில் ெதளிவு பிறக்கும். உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றபடி, கவலைப்படும் அளவிற்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை, இந்தப் பங்குனி மாதத்தில்.
மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றத்திற்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள் அனைவரும் உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும். பாடங்களில் மனம் உற்சாகத்துடன் ஈடுபடும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் கூடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள். சனி பகவானின் நிலையினால், தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது, உங்கள் நலனுக்கு உகந்ததாகும்.
விவசாயத் துறையினர்: செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரனும் அவருக்குப் பக்க பலமாக வலம் வருவதால், விளைச்சலும், வருமானமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பது மனத்திற்கு உற்சாகத்தையளிக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். சனியின் நிலையினால், சில குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம்.
பெண்மணிகள்: கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வலியுறுத்துகின்றன. குடும்பப் பிரச்னைகள் வேதனை தரும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது. எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான பயம் மனத்தை அரிக்கும். உறவினர்களின் மனப்பான்மை வேதனையை அளிக்கும்.
அறிவுரை: சனி பகவானின் நிலை மட்டும் இம்மாதம் அனுகூலமாக இல்லை. மற்ற முக்கிய கிரகங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான்! இங்கே கூறியுள்ள பரிகாரங்கள் மிகவும் அவசியம். அவையனைத்தும் எளிதானவை. ஆயினும், சக்திவாய்ந்தவையாகும். செய்து, பலனடையுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
பரிகாரம்: 24 சனிக்கிழமைகள் உங்கள் வீட்டுப் பூஜையறையில், மாலையில் மண் அகலில் ஐந்து எள் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். சனிக்கிழமை ஒன்றில் திருமலை - திருப்பதி சென்று, திருவேங்கடத்து இன்னமுதனை தரிசித்துவிட்டு வந்தாலும் போதும்.
அனுகூல தினங்கள்: பங்குனி: 4-6, 10-12, 17-19, 23-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 7 பிற்பகல் முதல், 9 மாலை வரை.