கன்னி
15-3-2023 முதல் 13-4-2023 வரை(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
குடும்பம்: குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் சேர்ந்து சுபபலம் பெற்று சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும் கும்ப ராசிக்கு மாறுவது சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக அணியாகும். வருமானம் திருப்திகரமாக உள்ளது. குடும்பத்தில் வீண் செலவுகள் குறையும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனத்திற்கு நிம்மதியை அளிக்கும். திருமண முயற்சிகள் எளிதில் கைகூடும். ராகுவின் அஷ்டம ஸ்தான சஞ்சார நிலையினால், அவ்வப்போது சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். இருப்பினும், கவலை தரும் அளவிற்கு பெரிய பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில், மேஷத்தின் பாதி தூரத்தை ராகு கடந்துவிட்டதால், அவரது தோஷமும் குறைகிறது (ஆதாரம் : "கால ப்ரகாஸிகா" மற்றும் "ஜோதிட அலங்காரம்" ஆகிய பண்டைய ஜோதிட கிரந்தங்கள்.
உத்தியோகம்: "ஜீவன காரகர்" எனப் போற்றப்படும் சனி பகவான், உங்களுக்கு மிகவும் ஆதரவாக மாறுவதால், தற்போது பார்த்துவரும் உத்தியோகத்தில், நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நிறுவன மாற்றத்திற்கு விருப்பமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். தற்காலிகப் பணியாளர்களுக்கு, வேலை நிரந்தரம் உறுதி. வெளிநாடு சென்று, பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களுக்கு, மிகவும் அனுகூலமான காலகட்டமிது. ஏற்கெனவேயே அந்நிய நாடுகளில் வேலை பார்த்துவரும் கன்னி ராசியினருக்கு, சலுகைகள் கூடும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், பதவியுயர்விற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: மிகவும் அனுகூலமான மாதமிது. தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய கிளைகள் திறப்பதற்கு ஏற்ற மாதமாகும். ஆயத்த ஆடைகள், தங்க ஆபரணங்கள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றின் விற்பனை எதிர்பார்ப்பிற்கு அதிகமாகவே அதிகரிக்கும். இவற்றில் ஈடுபட்டுள்ள விற்பனையாளர்களுக்கு லாபம் பல மடங்கு அதிகரிக்கும். புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாதமிது. பங்குச் சந்தைத் துறையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு, லாபகரமான காலகட்டமாகும். வெளியூர்ப் பயணங்கள் விற்பனையை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். அலைச்சலும், வெளியூர்ப்பயணங்களும் அதிகமாக இருப்பினும், அதற்கேற்ற லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஆகிய அனைவருக்கும் நல்ல லாபத்தை, சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய மூவரும் பெற்றுத் தருவார்கள். அஷ்டம ஸ்தானத்தில் ராகு தொடர்ந்து நீடிப்பதால், வெளியூர்ப் பயணங்களின்போது ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கலைத் துறையினர்: சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்ற நிலைகளில் சஞ்சரிக்கின்றன. புதிய வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் பின்னடைவையே சந்தித்து வந்த இத்துறைக்கு, புத்துயிர் அளிக்கும் அளவிற்கு நன்மை செய்ய காத்துள்ளன, இந்தப் பங்குனி மாதத்தில். நிதி நிறுவனங்களின் ஆதரவு எளிதில் கிட்டும். திரைப்படத் துறையினருக்கு, அதிர்ஷ்டகரமான மாதமிது என உறுதியாகக் கூறலாம். புதிதாக சினிமாத் துறையில் காலடி பதிக்க ஆர்வம் மிகுந்துள்ளவர்களுக்கு, வாய்ப்புகள் கதவைத் திறக்கும். வருமானமும் உயரும். உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ள இம்மாத கிரக நிலைகள் ஓர் அரிய வரப்பிரசாதம் எனக் கூறினால் அது மிகையாகாது.
அரசியல் துறையினர்: சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய மூவரும் அரசியல் துறையுடன் சம்பந்தப்பட்ட கிரகங்களாவர். இம்மூவரும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும். கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சித் தலைவர்கள் முக்கிய விஷயங்களில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அனைத்து கட்சிகளிலும் நிலவும் உட்கட்சிப் பூசல்களிலிருந்து, தனித்து நிற்கும் மனவுறுதியை செவ்வாய் அளித்தருள்கிறார். இதுவே வரும் மாதங்களில் உங்களுக்கு முக்கிய பதவியொன்றைப் பெற்றுத் தரவுள்ளது.
மாணவ - மாணவியர்: மிகவும் சாதகமான மாதம் இது. பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். படித்தவற்றை, தேர்வுகளின்போது, மிகத் தெளிவாக எழுதுவதற்கு நினைவாற்றல் உதவும், உயர் கல்விக்கு வெளிநாடு செல்ல விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே திட்டமிடலாம். ஆசிரியர்களின் ஆதரவும், உதவியும் தக்க தருணத்தில் கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: வயல்களிலிருந்து வீசும் தென்றல்காற்று, உங்கள் உழைப்பின் உயர்வையும், பலனையும் எடுத்துக்காட்டும். எதிர்பார்ப்பிற்கு சற்று அதிகமாகவே விளைச்சல் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதாரத்தை சீர்திருத்திக்கொள்ள ஏற்ற மாதம் இந்தப் பங்குனி. ஜனன கால கிரக நிலைகள் அனுகூலமாக இருப்பின், புதிய விளைநிலம், வீடு, கால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. அரசாங்க உதவியும், சலுகைகளும் எளிதில் கிடைக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலனுக்கு குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் சுப பலம் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய கிரக நிலை இம்மாதம் அமைந்துள்ளதால், கன்னி ராசியில் பிறந்துள்ள அனைத்து பெண்மணிகளுக்கும், மகிழ்ச்சிகரமான காலகட்டம் இது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் நலன்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது மன நிம்மதியைத் தரும். வேலைக்கு முயற்சிக்கும் பெண்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும், அஷ்டம ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள ராகுவினால், சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். இந்தத் தோஷம் பரிகாரத்திற்கு உட்பட்டதேயாகும்.
அறிவுரை: பெரும்பான்மையான கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. பிரச்னைகளை ஏற்படுத்துவது, ராகு மட்டுமே. இரவு நேரப் பயணங்களிலும், வாகனம் ஓட்டுவதிலும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரின் ஆேலாசனை பெறுவது நல்லது.
பரிகாரம்: ஒருமுறை திருநாகேஸ்வரம் அல்லது காளஹஸ்தி சென்று தீபமேற்றி வைத்து தரிசித்துவிட்டு வந்தால், மிக நல்ல பலன் கிட்டும். ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயில் தரிசனமும் ராகுவின் தோஷத்தை உடனடியாகப் போக்கும் மகத்தான சக்திவாய்ந்தது.
அனுகூல தினங்கள்: பங்குனி: 1-3, 6-8, 12-15, 20-22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 9 மாலை முதல், 11 இரவு வரை.