துலாம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: சென்ற இரண்டரை வருடங்களாக, சனி பகவானின் அர்த்தாஷ்டக சஞ்சார நிலையினால், பல வகைகளிலும் பிரச்னைகளையே சந்தித்தும், மன நிம்மதியை இழந்தும் வருந்திய துலாம் ராசி அன்பர்களுக்கு, அந்தத் தோஷம் இப்போது அடியோடு விலகிவிட்டது. ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். வரவும், செலவும் சரிசமமாகவே இருக்கும். சேமிப்பிற்கு சாத்தியக்கூறு கிடையாது. மனைவியின் உடல்நலனிலும் முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டுவந்த தடங்கல்கள் நீடிக்கின்றன. மன நிம்மதியை பாதித்துவந்த பல பிரச்னைகள் நல்லபடி நீங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம். கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் நிலவும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளையின் வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒருசிலருக்கு, வீடு மாற்றமும் ஏற்படக்கூடும். அவரவரது தனிப்பட்ட ஜாதகத்தை ஆரரய்ந்து பார்த்து உறுதிசெய்துகொள்ளலாம்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவானின் சஞ்சார நிலை அனுகூலமாக மாறுவதால், அலுவலகத்தில் ஏற்பட்டுவந்த பல பிரச்னைகள் நீங்கி, நன்மைகள் ஏற்படும். சிலருக்கு, நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. மேலதிகாரிகளுடன் ஏற்பட்டுவந்த கருத்துவேறுபாடுகள் விலகுவதால், மன நிம்மதியுடன் உங்கள் பணிகளில் கவனத்தைச் செலுத்தலாம். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வெற்றி கிடைக்கச் செய்திடுவார் சனி, வெளிநாடுகளில் பணியாற்றிவரும் துலாம் ராசி அன்பர்களுக்கு, பிரச்னைகள் நீங்கி, நல்ல காலம் பிறந்துள்ளதே இப்போது.
தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரித்து, விற்பனையை உயர்த்துவதற்கு ஏற்ற மாதம் இந்தப் பங்குனி. சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைப்பது, தக்க தருணத்தில் உதவும் புதிய கிளைகள் திறப்பதற்கு, கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சந்தை நிலவரம் சாதகமாக உள்ளதை, கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. புதிய துறைகளில் காலடி பதிப்பதற்கு அனுகூலமான காலகட்டமிது. ஏற்றுமதி - இறக்குமதித் துறை அன்பர்களுக்கு, லாபகரமான மாதமாகும். ரஷிய - உக்ரைன் போரினால், தடைப்பட்டிருந்த வெளிநாட்டு ஆர்டர்கள், மீண்டும் வர ஆரம்பிக்கும்.
கலைத் துறையினர்: ஓரளவு நன்மைகளை இம்மாதம் எதிர்பார்க்கலாம். ஏனெனில், சுக்கிரன் பூரண சுப பலம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, திரைப்படத் துறை மற்றும் சின்னத் திரைக் கலைஞர்களுக்கும், அளவோடு லாபம் கிடைக்கும். சக்திக்கு மீறி, முதலீடு செய்து படத் தயாரிப்பில் ஈடுபடவேண்டாம். நன்மைகளும், பிரச்னைகளும் மாறி, மாறி ஏற்படக்கூடிய மாதமிது கலைத்துறை அன்பர்களுக்கு! திருமணமான கலைத்துறையினருக்கு, குடும்பச் சூழ்நிலை நிம்மதியைத்தரும். கவலையளித்துவந்த பல பிரச்னைகள் சமரசத்தில் முடியும்.
அரசியல் துறையினர்: கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. இருப்பினும், சிலரது மறைமுக சூழ்ச்சிகளும், பேச்சுக்களும் மனத்திற்கு வேதனையை அளிக்கும். மேலிடத் தலைவர்களின் ஆதரவு சற்று குறையும், கட்சி மாறிவிடலாம் என்ற எண்ணம் மனதில் தீவிரமாக வளரும். உட்கட்சிப் பூசல்களினால், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் உருவாகும். எந்தக் குழுவில் சேர்வது? என்பதை நிர்ணயிக்க இயலாமல், குழப்பம் மேலிடும்.
மாணவ - மாணவியர்: சனி பகவானின் அர்த்தாஷ்டக தோஷம் நீங்கிவிட்டதால், மனத்தில் ஏற்பட்டிருந்த, தாழ்வு மனப்பான்மை அகலும். மீண்டும் பாடங்களில் மனம் ஈடுபடும். உடல் நலனிலும் முன்னேற்றத்தைக் காணலாம்.
விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிடைக்கும், இருப்பினும், கைப்பணம் பலவழிகளிலும் விரயமாகும், என்றோ பட்ட கடன்கள் கவலையை அளிக்கும். கால்நடைகள் நோயினால் பாதிக்கப்படக்கூடும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: நிம்மதியான மாதமிது, பெண்மணிகளுக்கு. முக்கியமாக, உடலை வருத்திய பல உபாதைகள் நீங்கும். குடும்பச் சூழ்நிலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்குவதால், மனத்தில் அமைதி பிறக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பல நன்மைகள் காத்துள்ளன. சனியின் அர்த்தாஷ்டக தோஷத்தினால், வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்பினால், மனம் தளர்ந்துவந்த உங்களுக்கு அந்நிலை படிப்படியாக மாறுவதை அனுபவத்தில் காணலாம். வேலையில்லாத பெண்களுக்கு, முயற்சி வெற்றியளிக்கும். திருமண வயதை அடைந்துள்ள கன்னியருக்கு வரன் அமைவதில் சிறு தடங்களும், குழப்பமும் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும்.
அறிவுரை: துலாம் ராசி அன்பர்களுக்கு, கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக மாறியிருப்பதால், அளவோடு நன்மைகளை எதிர்பார்க்கலாம். சப்தமஸ்தானத்தில் ராகு நீடிப்பதால், மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பரிகாரம் தோஷத்தைப் போக்கும்.
பரிகாரம்: தினமும் ஒரு ஸர்க்கமாவது மத் சுந்தர காண்டம் படித்துவருவது, நல்ல பலனையளிக்கும். சுந்தர காண்டத்திற்கு, "சர்வ கிரக தோஷப் பரிகார ரத்னம்" என்ற பெருமையும் சர்வதோஷ நிவாரணி என்ற புகழும் உண்டு. கைமேல் பலன் கிட்டும். பலனடைந்தவர்கள் ஏராளம், ஏராளம்.
அனுகூல தினங்கள்: பங்குனி: 1, 2, 6-9. 14-17, 20-22. 26-28.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 11 இரவு முதல், 13 வரை.