விருச்சிகம்
15-3-2023 முதல் 13-4-2023 வரை(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: இதுவரை, உங்கள் ராசிக்கு நன்மை செய்யும் மகரத்தில் சஞ்சரித்த சனி பகவான், அர்த்தாஷ்டக தோஷத்தை விளைவிக்கும் கும்ப ராசிக்கு மாறுவது, நன்மை செய்யாது. ஆயினும், குருவும், ராகுவும் அனுகூலமாக உள்ளனர் இம்மாதம் முழுவதும்! வரவும், செலவும் சமமாக இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வார், சுப பலம் பெற்றுள்ள குரு பகவான். ராகுவின் சுப பலத்தினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், கருத்துவேற்றுமைகள் மனத்தில் "டென்ஷனை" ஏற்படுத்தும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. சிறு விஷயங்களுக்குக்கூட அதிக உழைப்பும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கவலைகள் உருவாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் ெவற்றிபெறும். சுபச் செலவுகளில் பணம் விரயமாகும். வெளியூர்ப் பயணங்களின்போது, பணம், பொருட்கள் களவு போகக்கூடும். நண்பர்களுக்கு, உதவி செய்வதற்காக உத்தரவாத கையெழுத்து போடுவதையும், பிறரிடம் கடன் வாங்கிக் கொடுப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமென கிரக நிலைகள் முன்னெச்சரிக்கை செய்கின்றன.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி, அர்த்தாஷ்டக ராசிக்கு மாறுவதால், பணிகளில் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். அலுவலகப் பொறுப்புகளில் பொறுமை அவசியம். எக்காரணத்தைக் கொண்டும் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலைபார்க்கும் இடத்தில், நீங்களுண்டு; உங்கள் வேலையுண்டு என்று இருப்பது உங்கள் நலனுக்கு உகந்ததாகும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்யும் விருச்சிக ராசியினர், தரகர்களிடம் பணம் கொடுத்து, ஏமாந்துவிடவேண்டாம். ஏனெனில், உத்தியோகம் சம்பந்தமான கிரகங்கள் சாதகமாக இல்லை. தற்காலிகப் பணிகளில் உள்ளவர்களுக்கு, பணி நிரந்தரமாவதில் தடங்கல்கள் ஏற்படும். பொறுமை அவசியம்.
தொழில், வியாபாரம்: நியாயமற்ற போட்டிகளைச் சமாளித்து, லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். சந்தை நிலவரமும், அனுகூலமாக இருக்காது, இம்மாதம் முழுவதும்! தொழில் துறையினர், உற்பத்தியை அளவோடு வைத்துக்கொள்வது, சரக்குகள் தேங்கிவிடாமலிருப்பதற்கு உதவும். புதிய முதலீடுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய தருணமிது என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை உருவாகும். நிதிநிறுவனங்களினால் பிரச்னைகள் ஏற்படும்.
கலைத் துறையினர்: இம்மாதம் முழுவதும், கலைத் துறைக்கு அதிகாரம் பெற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் உருவாகும். குறிப்பாக, தயாரிப்பாளர்களுக்கு, திரைப்படம் பாதியில் நின்றுபோகும்! எதிர்பார்த்திருந்த பண உதவி கைக்குக் கிடைப்பதில் ஏமாற்றமே மிஞ்சும். இருப்பதைக் கொண்டு, சமாளிக்க வேண்டிய மாதமாகும். திட்டமிட்டுச் செலவு செய்தால், கஷ்டமில்லாமல் கடந்துவிடலாம் இப் பங்குனி மாதத்தினை!!
அரசியல் துறையினர்: சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவருமே உங்களுக்கு அனுகூலமாக இல்லாத நிலையில், சனியும் பாதக நிலைக்கு மாறுவதால், சற்று சிரமமான காலகட்டமிது என்றே கூறவேண்டியுள்ளது. கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் உருவாகக்கூடும். மேல்மட்டத் தலைவர்கள் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். மக்களிடையேயும் செல்வாக்கு குறையும். பேச்சிலும், அரசியல் தொடர்புகளிலும் எச்சரிக்கையுடனும், சாதுர்யத்துடனும் நடந்துகொள்ளவேண்டிய மாதமிது! தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், சட்ட சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும் சாத்தியக்கூறும் உள்ளது.
மாணவ - மாணவியர்: வித்யா ஸ்தானமும், கல்விக்கு அதிபதியான புதனும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், படிப்பில் நல்ல ஈடுபாடு நீடிக்கும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சனியின் நிலையினால், சில தருணங்களில் ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். ஆதலால், இரவு நேரத்தில் அதிகமாகக் கண்விழித்துப் படிக்க வேண்டாம்.
விவசாயத் துறையினர்: விவசாயத்திற்கு அதிகாரியான செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், வயல் பணிகள் கடுமையாக இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சலும், லாபமும் இராது. அண்டை நிலத்தவரோடு மனஸ்தாபம் ஏற்படும். சற்று விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் நடந்துகொள்வது, அவசியம்.
பெண்மணிகள்: குரு பகவான், உங்கள் பக்கம்தான்! ஆனால், பெண்மணிகளின் நன்மைகளுக்கு, சுக்கிரனும் பொறுப்பாவார் என பண்டைய ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. இம்மாதம் சுக்கிரன் அனுகூலமாக இல்லை. குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். இருப்பினும், கணவருடன் கருத்துவேற்றுமை, அந்நியோன்யக் குறைவு ஆகியவை மன நிம்மதியைப் பாதிக்கக்கூடும். பரிகாரம் உதவும்.
அறிவுரை: எத்தகைய சூழ்நிலையிலும், முன்கோபத்தையும், உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்கவும்.
பரிகாரம்: தினந்தோறும் ஸ்ரீமகாலட்சுமியையும், ஸ்ரீஅம்பிகையையும் பூஜித்துவந்தால் போதும். எத்தகைய தோஷமானாலும், சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.
அனுகூல தினங்கள்: பங்குனி: 2-4, 9-12, 17-19, 23-26, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 14 முதல், 16 மாலை வரை.