தனுசு
15-3-2023 முதல் 13-4-2023 வரை(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குடும்பம்: பங்குனி மாதம் 15ம் தேதியுடன் கடந்த ஏழரை வருடங்களாக உங்களை வருத்தி வந்த "ஏழரைச் சனிக் காலம்" நீங்கி, நல்ல காலம் உதயமாகிறது. ஜோதிடக் கலையின் கோள்சார விதிகளின்படி, ஏழரைச் சனிக் காலம் என்பது, கிரகணக் காலம் போன்றதாகும். சிலருக்கு, மிகக் கடினமான சோதனைகளும், பலருக்கு மிதமான துன்பங்களும் ஏற்படும். அவரவரது ஜாதகத்தின் பூர்வபுண்ணிய ராசியின் அடிப்படையில்தான் சனி பகவான் தனது ஏழரைக் கால அதிகாரத்தின்போது சிரமங்களை ஏற்படுத்துவார் என்பதையும் "பூர்வ பாராசர்யம்", "காலப்ரகாஸிகா" ஆகிய புராதன ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. பகவானே தர்மத்தின் சக்தியை எடுத்துக்காட்டுவதற்காக, தானே மானிடப் பிறவியாக அவதாரங்களை எடுத்தபோது, அவரையும்கூட இந்த ஏழரைச் சனி விட்டுவைக்கவில்லை என்பதற்கு பல நிகழ்ச்சிகள் சான்றாக உள்ளன! குடும்பப் பிரச்னைகள் படிப்படியாக நீங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம். வீண் செலவுகள் குறையும். வருமானம் உயரும். தொடர்ந்து பல காலம் மனத்தை வருத்திவந்த பழைய கடன்கள் அடைபடுவதற்கு வழிபிறக்கும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், தடங்கல்கள் விலகி, நல்ல வரன் அமையும். மனத்தில் அமைதியும் தெளிவும் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்டுவந்த பகையுணர்வு நீங்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம்.
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்டுவந்த, பல பிரச்னைகள் நீங்களே வியக்கும்படி நல்லபடி தீரும். நிம்மதியாக பணிகளில் கவனம் செலுத்தலாம். பலருக்கு, வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் தனுர் ராசி அன்பர்களுக்கு, விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, வேலைபார்க்க வேண்டுமென்ற விருப்பமிருப்பின், இம்மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து அதற்கான திட்டங்களையும், பூர்வாங்க முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். ஏற்கெனவேயே அந்நிய நாடுகளில் வேைலபார்த்துவரும் தனுர் ராசியினருக்கு, பல நன்மைகள் ஏற்படவுள்ளன.
தொழில், வியாபாரம்: அதிர்ஷ்டகரமான காலட்டம் ஆரம்பமாகியுள்ளது, இம்மாதத்தில்! வர்த்தகத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பின்னடைவு நீங்கும். விற்பனை அதிகரிக்க ஆரம்பிக்கும். லாபமும் படிப்படியாக உயர்வதை அன்றாட விற்பனையின்மூலம் அறிந்துகொள்ள முடியும். சகக்கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் கைகொடுக்கும். ரஷ்யா - உக்ரைன் போரினால், பாதிக்கப்பட்டிருந்த நிலை மாறி, புதிய விற்பனை நிறுவனங்களிலிருந்து, ஆர்டர்கள் வர ஆரம்பிக்கும். அதன் காரணமாக, லாபம் உயரும், இனி புதிய முயற்சிகளிலும் முதலீடுகளிலும், விஸ்தரிப்புத் திட்டங்களிலும், மனத்தைச் செலுத்தலாம். நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும்.
கலைத் துறையினர்: கலைத் துறையை தங்கள் பிடியில் கொண்டுள்ள சுக்கிரன், மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்வதாலும், ஏழரைச் சனி முடிந்துவிட்டதாலும், அதிர்ஷ்டகரமான காலகட்டம் ஆரம்பமாகியுள்ளது என உறுதியாகக் கூறலாம். திரைப்படத் தயாரிப்பளர்கள், இயக்குநர்கள், நடிகர் மற்றும் நடிகையர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.
அரசியல் துறையினர்: கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுத் தருவார்கள் புதனும் சனி பகவானும். சிலருக்கு, கட்சிமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உருவாகும். அது உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு, உதவிகரமாக அமையும்.
மாணவ - மாணவியர்: கல்வியில் ஏற்பட்டுவந்த பல பிரச்னைகள் நீங்கும். குடும்பச் சூழ்நிலையினால், அடிக்கடி பள்ளியை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் சென்ற சில வருடங்களாகவே ஏற்பட்டிருக்கும். அந்நிலை, மாறி ஒரே பள்ளியில் தொடர்ந்து படிக்கும் அனுகூலமான நிலை உருவாகும், இது உங்கள் கல்வி முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும். எவ்விதக் கலக்கமுமின்றி, பாடங்களில் மனத்தைச் செலுத்த இயலும்.
விவசாயத் துறையினர்: சனி பகவானின் அனுகூலமற்ற நிலையினால், பல வகைகளிலும் பிரச்னைகளையே சந்தித்து வந்த உங்களுக்கு, அவையனைத்தும் நீங்கி, மன நிம்மதியுடன் வயல் பணிகளில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது, சனிக்கிரகத்தின் கும்ப ராசி மாறுதல். ஜனன கால ஜாதகத்தில், செவ்வாய் சுப பலம் பெற்று, அவரது அதிகார காலமும் சேர்ந்திருப்பின், புதிய விளைநிலம் மற்றும், புதிய கால்நடைகளை வாங்கும் யோகமும் கிட்டும். பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற தருணம் இந்தப் பங்குனி மாதம்! நவீன விவசாய வசதிகள் கிட்டும். பலருக்கு, விளைபொருட்களை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் யோகம் ஏற்படுவதையும் செவ்வாய் மற்றும் சனியின் சஞ்சார நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன.
பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, அனுகூலமான மாதமாகும். முக்கியமாக, உடலைத் தொடர்ந்து வருத்திவந்த உபாதைகள் இனி படிப்படியாக நீங்குவதால், அன்றாட வாழ்க்கையில் உற்சாகம் ஏற்படும். கால் வலி, மூட்டுவலி, மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள், தலைவலி, தலைச்சுற்றல் ஆகியவை நீங்களே வியக்கும் அளவிற்கு குணமாவதை அனுபவத்தில் பார்ப்பீர்கள்!! திருமண வயதுப் பெண்களுக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் நங்கையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். ஜீவன காரகரான சனி பகவான் அனுகூல நிலைக்கு மாறிவிட்டதால்! கிரக தோஷத்தினால் புத்திர பாக்கியம் தடைப்பட்டிருந்த பெண்மணிகளுக்கு, மழலைப் பேறு கிடைக்க தற்போதைய கிரக நிலை அனுகூலமாக உள்ளது.
அறிவுரை: தொடர்ந்து ஏற்பட்டுவந்த பல பிரச்னைகளினால், உங்கள் மனத்தில் எதிர்மறையான எண்ணங்களே (Negative thoughts) மனத்தை வாட்டியிருக்கும். தற்போது கிரக நிலைகள் அனுகூலமாக மாறியிருப்பதால், அத்தகைய வீண் கவலைகளிலிருந்து, நீங்களே உங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். நல்ல காலம் பிறந்துள்ளது. ஆதலால், கற்பனையான கவலைகள் இனி வேண்டாம்.
பரிகாரம்: தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபத்தில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துவிட்டு தரிசித்து வரவும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் குடமுழுக்கு வைபவத்திற்கு முன், மந்திர சக்திவாய்ந்த யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நுழைவாயிலை அலங்கரிக்கும் ராஜகோபுரத்திலிருந்து, கருவறை வரை இத்தகைய யந்திரங்கள் மந்திர சக்தி ஊட்டப்பெற்று, குறிப்பிட்ட இடங்களில் பதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சக்திவாய்ந்த யந்திரங்களை வீடுகளில் வைத்திருக்க இயலாது! ஆதலால்தான், மக்களின் நலன்களைக் கருதி, திருக்கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அனுகூல தினங்கள்: பங்குனி: 1, 4-8, 12-15, 19-22, 27, 28.
சந்திராஷ்டம தினங்கள்: பங்குனி: 16 மாலை முதல், 18 வரை.