சூரியன் வடபுறத்தில் இருந்து தென்புறம் நோக்கித் தனது பயணத்தைத் துவக்கும் காலம் இது. தட்சிணாயணத்தில் வரும் முதல் மாதம். அதாவது, தேவர்களுக்கு அந்தி சாய்ந்து இரவு துவங்கும் நேரமிது. நாம் தினந்தோறும் அந்தி சாய்ந்தவுடன் நம் இல்லங்களில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து வழிபடுவதைப் போல் தேவர்களும் அம்பிகையை நினைத்து பூஜிக்கும் நேரம் என்பதால்தான் ஆடி மாதம் முழுவதும் எங்கு நோக்கினும் பக்தித் திருவிழா களை கட்டுகிறது! ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோயிலும், வேப்பிலையும்தான்.
(தற்காலத்தில் ‘ஆடித்தள்ளுபடி’ தான் நினைவிற்கு வருகிறது என்பது வேறு விஷயம்) சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டி வைப்பார்கள். கோடைக்காலம் முடிந்து சீதோஷ்ண மாற்றத்திற்கு உள்ளாகும்போது நோய் தரும் பாக்டீரியா, வைரஸ் முதலியவை படையெடுக்கும்., உடலிலும் சூட்டின் வெளிப்பாடாக கட்டிகள் தோன்றும்., இவ்வாறாக தலையெடுக்கும் நோய்க்கிருமிகளிடமிந்து நம்மை பாதுகாப்பது வேப்பிலை.
உடல்சூட்டினைத் தணித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தருவது கூழ். எனவேதான் ஆடி மாதத்தில் வேப்பிலையும், கூழும் முக்கியத்துவம் பெறுகின்றன.அதுசரி, ஆடி மாதம் என்றாலே அம்மன்தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? அதோடு, ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம்? கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடிக்கு கடக மாதம் என்று பெயர். அதாவது, தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் வந்து இணையும் மாதம் இது.
சூரியனின் பிரத்யதிதேவதை பசுபதி எனப்படும் ஈஸ்வரன். சந்திரனின் பிரத்யதிதேவதை கௌரி எனப்படும் அம்பிகை. இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். புராணங்களிலும் பார்வதி தேவி தவமிருந்து இறைவனோடு இணைந்த காலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆடித்தபசு என்ற பெயரில் புகழ்பெற்ற சிவாலயங்களில் திருவிழா நடக்கின்றன. சக்தியோடு சிவம் இணைவதன் வெளிப்பாடாக ஆடியில் சூறைக்காற்று வீசுகிறது.
இறைவன் அம்பிகையோடு இணைந்துவிட்டதால் அம்பிகையை வணங்கினாலே இறைவனையும் சேர்த்து வணங்கியதாகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் ஆடி வெள்ளி இத்தனை மகத்துவம் பெறுகிறது. ஆடி மாதத்தில் ஒரு வேடிக்கை, புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது. அதுவும் பெண் வீட்டார் சீர் செய்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்வர். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும்.
அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று சினிமா வசனகர்த்தாக்களால் விளக்கம் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு அது. இன்னும் ஒரு சிலர் சித்திரையில் பிள்ளை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையை பரப்பி வைத்திருக்கிறார்கள். ஏன் திருமணமான முதல் வருட ஆடியில் மட்டும்தான் கருத்தரிக்க வேண்டுமா என்ன..? இரண்டாவது வருட ஆடியில் கருத்தரிக்க வாய்ப்பில்லையா? அல்லது இரண்டாவது குழந்தைதான் ஆடியில் கருவாக உருவாகாதா? அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டுமா?
மணமக்களை இணைத்து வைக்கத்தான் சீர் செய்வார்கள். பெண்ணை மட்டும் தனியாக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பிறந்த வீட்டார் சீர் வேறு வைக்க வேண்டுமா? இது என்ன வினோதம்? ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள். அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும். கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து, கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து.
புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என் பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் சென்றனர். திருமணத்திற்கு முன்னரே இவற்றையெல்லாம் சொல்லித் தந்தால் விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் பெண்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா?
திருமணம் முடிந்து இல்லத்தரசியான பின்னர்தானே பொறுப்பு வரும்! இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல; காலமெல்லாம் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக. கணவனின் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.
ஆடி மாதத்தில் குலதெய்வத்தின் கோயிலுக்குக் குடும்பத்துடன் செல்லும் பழக்கம் உடையவர்கள் சுபநிகழ்ச்சியினைத் தவிர்த்தனர். திருமணம் முடிந்த கையோடு தம்பதியரை பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தைத் தவிர்த்தனர். அதே நேரத்தில் கிரஹப்ரவேசம், வீடு குடி போதல், புதிய வீடு, நிலம் வாங்குதல், திருமண நிச்சயதார்த்தம், வளைகாப்பு முதலானவற்றை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால் தாராளமாக வீடு குடி போகலாம்.
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே வீடு குடிபோவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆடி மாதத்தில் தாராளமாக சுபநி கழ்ச்சி களைச் செய்யலாம். ஆடிப்பூரம் ஆண்டாளின் பிறந்த நாளாக வைணவத் திருத்தலங்களில் கொண்டாடப்படுகிறது. தனது பக்தியினால் கண்ணனையே கணவனாக அடைந்த காரிகையின் பிறந்த தினம் ஆடிப்பூரம். அந்நாளில் அனைத்து ஆலயங்களிலும் அம்பிகைக்கு வளைகாப்பு நடக்கும். ஆலயத்திற்கு வரும் பெண்களுக்கும் வளையல்களை பிரசாதமாக அளிப்பார்கள்.
ஆடி மாதம் முழுவதும் நம் இல்லம் நாடி வரும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் வளையல்களையும் சேர்த்து அளித்தால் நம் தலைமுறை தழைத்து வாழும். பெண்களுக்குரிய விரதங்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம். ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. அன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு புடவை ரவிக்கை சேர்த்து தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க, சகல சௌபாக்யங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு என்ற ஆடி மாதம் 18ம் தேதியன்று காவிரி முதலான நதிக்கரைகளில் பெண்கள் கூடுவர். மாங்கல்ய பலம் வேண்டி புதிதாக திருமாங்கல்யச் சரடினை மாற்றிக் கொள்வோரும் உண்டு. ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்பார்கள். ஆடி மாதத்தில் விதை விதைத்து தை மாதத் துவக்கத்தில் அறுவடை செய்வர். பொதுவாக உத்தராயணத்தை விட தட்சிணாயனத்தில் விளைச்சல் அமோகமாக அமையும். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நதிக்கரைகளில் முளைப்பாரி விழாவும், நதி நீரில் தீபம் மிதக்க விட்டும் வழிபாடு நடத்துவர்.
ஆடி அமாவாசை, முன்னோர்களை ஆராதிக்க உகந்த நாளாகும். ஜோதிட ரீதியாக தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் தாய் வீடான கடகத்தில் ஒன்றாக இணையும் நாளே ஆடி அமாவாசை. இந்த நாளில் ராமேஸ்வரம் முதலான சமுத்திரக் கரைகளில் முன்னோர்களுக்குரிய தர்ப்பண காரியங்களைச் செய்து வழிபட, பித்ரு சாபம் நீங்கும். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். நமது வம்சம் தழைக்கும். பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும்.
இதெல்லாம் ஏற்புடைய உண்மைகளே. இத்தனை சக்தி பெற்ற ஆடி மாதத்தினை வெறும் மாயை தரும் தள்ளுபடித் திருவிழாவிற்காக மட்டும் வரவேற்கக் காத்திருக்காமல், ஆடி மாதத்தின் உண்மையான மகத்துவத்தினைப் புரிந்து கொள்வோம். முன்னோர் சொல்லித்தந்த விரதங்களை மேற்கொள்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்!
திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.