‘ஆகாமாவை’ என்றழைக்கப்படும் ஸ்திர மாதங்களில் முதன்மையானது ஆவணி. ஆவணி, கார்த்திகை, மாசி, வைகாசி ஆகியவற்றின் சுருக்கமே (அந்தந்த மாதங்களின் முதலெழுத்துகள் சேர்ந்ததே) ஆகாமாவை. இந்த மாதங்களில் முறையே சிம்மம், விருச்சிகம், கும்பம், ரிஷபம் ஆகிய ஸ்திர ராசிகளில் சூரியன் சஞ்சரிப்பதால் இவை ஸ்திர மாதங்கள் எனப் பெயர் பெற்றன. இவற்றில் சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆவணி மாதம் முதலிடத்தைப் பிடிக்கிறது.
நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஆட்சி பலத்து டன் சஞ்சரிக்கும் நேரம் ஆதலால் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் முழுமையான வெற்றி பெறும் என முன்னோர்கள் நம்பினார்கள். சூரியனே ஆத்மகாரகன், கண்ணுக்குத் தெரிந்த கடவுள். அவர் முழு பலத்துடன் அமர்ந்திருக்கும் நேரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று காத்திருப்பர். ஆடியில் குலதெய்வத்தை வழிபட்டு ஆவணியில் திருமணம், கிரகப்பிரவேசம் முதலான நிகழ்வுகளை நடத்துவர். ஆவணியை வடமொழியில் சிராவண மாதம் என்றழைப்பர். ‘வட்டம் கழிச்ச எட்டாம் நாள் கிருஷ்ணன் பொறப்பு’ என்பார்கள் கிராமத்தில்.
அதாவது சிராவண மாதத்தில் பௌர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில் கிருஷ்ணன் அவதரித்தான் என்பது இதன் பொருள். ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கோகுலாஷ்டமி என்றும் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கண்ணனின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இதில் ஜோதிட ரீதியாக நாம் கவனிக்க வேண்டிய அம்சம் எதுவெனில் அசுப திதியாக நாம் எண்ணி, சுபநிகழ்ச்சியைத் தவிர்க்கும் அஷ்டமியில் ஆண்டவன் அவதரித்திருக்கிறான் என்பதே. முக்கியமாக கோகுலாஷ்டமி நாளில் சூரியன் ஆட்சி பலத்துடனும், சந்திரன் உச்ச பலத்துடனும் சஞ்சரிப்பர்.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாள் ஓணம் பண்டிகையாக கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, ஜாதி, மத பேதம் மறந்து கேரள மாநிலத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும், அரசு தரப்பிலும் வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படும் பண்டிகை இது. கொல்லம் என்றழைக்கப்படும் மலையாள வருடப் பிறப்பு நாளாகவும் இந்த நாள் சிறப்பு பெறுகிறது. ஆண்டவன் வாமனனாக அவதரித்த திருநாளே ஓணம் பண்டிகை.
மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்ணை தானமாகப் பெற்ற கையோடு உலகளந்த பெருமாள் ஆக உயர்ந்து நின்று, ஓர் அடியால் விண்ணையும், இரண்டாவது அடியால் மண்ணையும் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பிய நாள். இந்த நாளில் தங்களது அரசனான மகாபலி பாதாள லோகத்தில் இருந்து தங்களைக் காண வருவதாக கேரளத்து மக்கள் நம்புகின்றனர். அவரை வெகு சிறப்பாக வரவேற்கும் வகையில் வீதியெங்கும் பூக்கோலம் போட்டு அலங்கரிக்கின்றனர். புத்தாடை அணிந்து தங்கள் அரசனை வரவேற்கின்றனர்.
ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக உலகம் முழுவதும் உற்சாகமாக அனுசரிக்கப்படுகிறது. ஏழை பணக்காரன் பேதமின்றி எல்லோராலும் கொண்டாடப்படும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி. அவரவர் சக்திக்கு ஏற்றவாறு களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபடுகிறோம். மேற்சொன்ன இந்த மூன்று பண்டிகைகளையும் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?
கோகுலாஷ்டமி, ஓணம் பண்டிகை (வாமன ஜெயந்தி), விநாயகர் சதுர்த்தி என கடவுளர்களின் பிறந்த நாளை வகுத்து கொண்டாடச் செய்தனர் நம் முன்னோர்கள். ஜோதிட ரீதியாக உற்று நோக்கினால் நிதர்சனமான ஒரு உண்மை புலப்படும். ஆவணி மாதத்தில் இடம்பிடிக்கும் இந்த பண்டிகை நாட்களில் சூரியன் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிப் பார். ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றையும் சந்திரனுக்கு உரிய நட்சத்திரங்களாக ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது.
அதாவது ஆத்மகாரகனாகிய சூரியன் தனது சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும் காலத்தில் மனோகாரகனாகிய சந்திரன் தனக்குரிய மூன்று நட்சத்திரங்களிலும் சஞ்சரிக்கும் நாட்களில் மேற்சொன்ன இந்தப் பண்டிகைகள் வரும். ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி மாத ஹஸ்த நட்சத்திர நாளில் விநாயகர் சதுர்த்தி, ஆவணித் திருவோணத்தன்று வாமன ஜெயந்தி எனும் ஓணம் பண்டிகை என சந்திரனின் நட்சத்திர நாட்களில் பண்டிகை வரும்படி அமைத்திருக்கிறார்கள்.
இந்நாட்களில் இறைவனை எண்ணித் துதிப்பது நல்லது. இதனால் நமக்குள் உண்டாகும் ஆணவம் அகன்று நல்ல அறிவினைப் பெறவேண்டும், அகந்தையை விடுத்து உறவினர்களோடும், நண்பர்களோடும் ஒன்றாக இணைந்து பண்டிகையாகக் கொண்டாடும்போது மனதளவில் புத்துணர்ச்சி அடைய வேண்டும்
என்பதே இதன் நோக்கம். காரணமின்றி எந்த ஒரு காரியத்தையும் நம் முன்னோர்கள் நம்மைச் செய்யச் சொல்லவில்லை! ஆவணி மாத மூலம் நட்சத்திர நாள் பரமேஸ்வரனுக்கு மிகவும் உகந்தது.
மதுரையில் ஆவணி மூலத்தை முன்னிட்டு சித்திரைத் திருவிழாவிற்கு இணையாக 12 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். பிட்டுக்கு மண் சுமத்தல், கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், நரியினை பரியாக்கி, பரியினை நரியாக்கிய இறைவனின் திருவிளையாடல் உற்சவம் ஆகியவை முக்கியமானவை. ஐந்தாம் நாள் உற்சவத்தன்று ஆட்சிப் பொறுப்பினை மீனாட்சியிடம் இருந்து சுந்தரேஸ்வரர் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். ஆவணியில் இருந்து சித்திரை வரை சுந்தரேஸ்வரரும், சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சியும் மதுரையை ஆட்சி புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இதிலும் ஜோதிட ரீதியான ஒரு உண்மை புலப்படும். அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்திற்கு உரிய கோள் சூரியன். அந்தச் சூரியன் மேஷ ராசியில் உச்ச பலம் பெற்று சஞ்சரிக்கும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அன்னை ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறார். அதே சூரியன் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலம் பெறும் ஆவணி மாதத்தில் சுந்தரேஸ்வரர் ஆட்சிப் பொறுப்பினை சுமக்கத் தொடங்குகிறார். ஆண்டவனும் கூட கிரஹ நிலையை அனுசரித்தே ஆட்சி நடத்துகிறார்
என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்!
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. குறிப்பாக அரசியல்வாதிகள், கருவூல அதிகாரிகள், மருத்துவர்கள், அரசுப் பணியில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், வங்கிகளில் அதிக அளவில் பணம் கையாளும் அதிகாரிகள், நகைக்கடை அதிபர்கள் ஆகியோர் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் கிருத்திகை இணையும் நாளில் சூரியனை பூஜித்தால் சிறப்பான முன்னேற்றத்தினை அடைவர். இந்த வருடம் அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.
ஜய வருடம், ஆவணி மாதம் 29ம் நாள் (14.9.2014), ஞாயிற்றுக்கிழமை அன்று கிருத்திகை நட்சத்திரம் இணைகிறது. கிருத்திகை சூரியனுக்கு உரிய நட்சத்திரம். சூரியனின் ஆட்சி பலம் நிறைந்த ஆவணி மாதத்தில், சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமையில், சூரியனுக்கு உரிய நட்சத்திரமான கிருத்திகையில், அதுவும் சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெறும் காலத்தில் சூரிய பகவானை வழிபடுவதால் நினைத்த காரியம் கைகூடும். உயர்பதவி கிட்டும். தொழில் சிறக்கும். ஆவணியில் ஆதவனை ஆராதிப்போம், ஆனந்தம் அடைவோம்.
திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.