கிருத்திகை - உத்திரம் - உத்திராடம்
“பாரினில் பணிபளு சேருமன்றி கடனுபாதை
தோன்றி வருத்துமே நூதன பொருட்களுஞ்
சேர பொருளுக்குத் தட்டுப்பாடு காணீரே!
பேரலைச்சல் பெருகிடவே சிறுதனஞ்சேர
சேர்ந்த தனமுவிரயமென ஓட குலப்பீடை
யுங் கூடி புத்திமுட்டென விளங்குமே.
குடமுனி ஈ வடிவாய் தொழுதயீசனை
தொழுதெழ பீடையகன்று பேரின்பஞ்
சேருமே.’’ (கருவூரார்)
அடுத்தவர் வேலையையும் தன் தலைமீது சுமந்து கஷ்டப்பட வேணும்; பொருட்களை புதிதாக வாங்க நேரிடும். அதனால் பணத்தட்டுப்பாடு கூடும். கடன் வாங்கிட நேரிடும். குடும்பத்தில் சிற்சில அற்ப சச்சரவுகள் தோன்றி மறையும். மனச்சங்கடங்கள் வந்து அகலும். திருச்சி-சேலம் பாதையில் உள்ள திருஈங்கோய் மலைவாழ்
சிவபெருமானை, ஒருசமயம் ஈயின் வடிவாய் அகத்தியர் தொழுது இன்புற்றார். அத்திரு ஈங்கோயிமலை சிவநாதனை தொழுது இன்பம் எய்தலாகும் என்பதாம்.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம்
“பணிக் குறையறுபடுமன்றி மேலோர் தம்
வொத்தாசை சேருமே தனவரத்து
தாமதமென நூதன பணியில் கூட்டுந் தோன்ற
லாகுமே பெண்டிரால் சுகமுண்டு கண்டீர்
அலைந்து நின்றாலுந் திரவியந் தன்னால்
சாந்தியுண்டென்றறி வாமன சேத்திரத்து
வோணத்து தொழுதெழ வாராத் தனம்
வருதலல்லால் நாடு தாண்ட யின்பமிகுமே.’’
(பாம்பாட்டிச் சித்தர்)
தொழிலில் இருந்துவந்த குறைபாடுகள் அகலும் நேரம் இது. பெரியோர்கள் ஒத்தாசை பற்பல வழிகளிலும் வந்து சேர்ந்து ஊக்கமும், உற்சாகமும் தந்துதவும். புதிய தொழில் அல்லது தொழிலில் சிறு மாற்றம் செய்ய புதிய கூட்டு ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம், மேன்மை ஏற்படும். திருவோண நட்சத்திரத்தில் வாமனதேவர் கோயிலுக்குச் சென்று ஆராதனை செய்தால், வெளிநாடு அல்லது வெளிமாநிலம் தொழில் நிமித்தம் செல்ல நேரிடும். வாராக் கடனும் வசூலாகுமே என்பதாம்.
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்
“ஏறுங் கீர்த்தி மிடுக்குங் கூடிடப் பாரே
ஆதாயமது மிகுத்தே வர வோய்வேது மேனிக்கு
மராமத்துப் பணியுஞ் சேர மாடி மனை யென
கொண்டாடுங்காலமிது தனவரத்து தடை
பட்டு நின்றாலுங் குதூகலத்துக் குறைவினையறி மாளய பட்ச விரதமிருந்து பித்ரு பீடை
யறுப்போருக்கு குலசம்பத்து குறைவின்றி
போமே’’ (கருவூரார்)
கீர்த்தி, புகழ் கூடும் நேரமிது. வாழ்வு மிடுக்குடன் நடக்கும். பல விதங்களிலும் ஆதாயம் கிட்டும். ஆனால், பணவரத்து தடைபட்டு தாமதமாகவே சேரும். எனினும் வீடு, மனை போன்றன செப்பனிடவும், புதிதாக கட்டவும் தக்க தருணம் இது. மகாளய பட்ச விரதம் இருந்து பித்ரு பூஜை செய்ய குல சம்பத்து என்றும் குறைவின்றி நடைபெறும் என்பதாம்.
திருவாதிரை - சுவாதி - சதயம்
“தனலாபங் கிட்டும் நாளெல்லா முழைத்து
நாழியரிசி யீட்டுவீரே உறவெல்லாம்
உபத்திரவமே யீச கவுரவக் கேடு
வந்தண்டுமே மணிமந்திரத்தால் விரயமுங்
காலமிது திரவியந் தனக்கே களவு
போகவே கைப்பொருள் விரயமுமாகவே
சாலை யோரந் தட்டவே எண்ணித் துணிக
யெக் கருமந்த தனையுமே கோகுலாட்டமி
விரதமிருந்து கோவர்த்தனகிரியை சுமந்து
ஆநிரை காத்தானடி போற்ற வில்லங்கமேது.’’
(இராமதேவர்)
பண வரத்து சேரும். உழைப்பதற்கேற்ற ஊதியம் குன்றும். உறவுக்காரர்களால் தொல்லை யுண்டு. பண விரயம் ஏற்படும். சாலை வழி சிறு விபத்து வந்து மறையும். எந்த காரியத்திலும் தீர ஆலோசனை செய்து பின் இறங்கவும். கோகுலாஷ்டமி அன்று விரதம் அனுஷ்டித்து, கிருஷ்ண பரமாத் மாவை தொழுவாருக்கு எந்தக் குறையும் வாராது. மேன்மையும் மகிழ்ச்சியும் பொங்கும் என்பதாம்.
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி
“பொன்னொடு பொருளுக்கு விரயமுஞ்
சேதமுமுண்டே வீண்பழி சொல் சொல்லி
விபரீதங் காணும் அம்பொடு வழக்குந்
தோன்றும் காசினியில் குலத்து பூசல்வந்தே
ஊரார் நகைக்க ஆழ்ந்தே பொறுத்து
மேலோர் வழி நடப்ப வருமின்னல் பாங்
குடனகலப் பாரே மூலமிருப்ப மூலமாங்கண
நாதனை வன்னி வேரிருக்க தொழுதெழ
இடும்பையிலா யின்னலிலா யின்ப வாழ்வு
வாழலாகு மிந்நாளே’’ (குதம்பைச் சித்தர்)
பொன் பொருளுக்கு சேதம் ஏற்படும். அதாவது, வீண் விரயமாகும். மற்றவர்கள் நம்மை குறை கூறும் காலம். வீண் வழக்கு தோன்றும் என்பதினால், சொற்போர், கருத்து மோதல் போன்றவற்றை தவிர்ப்பது நலம். மிகுந்த பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். பெரியோர்கள் ஆலோசனை பெற்று அதன்படி வாழ்வது, நடப்பது நன்று. வன்னிமர விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை, வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட சங்கடமும் விலகி, பேரின்ப பெருவாழலாகுமே என்பதாம்.
பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி
“தடை யாயிரமது வந்தோடும் குருதி வழியுறவு
உபாதை யீச விவாதமறுபடுதலாக நன்றே
உபதேசமதனை விடுத்து யுழைத்தே யுண்ணுங்
கூட்டத்து வாரிசென யுணர்ந்தலு மேன்மையே
பணியொன்று முடிக்க பலமுறை தாவநன்றே
தன விரயமுண்டு. ஆயுள் பலமுண்டு
வந்த ரோகமகலுங் காலமிது விருந்தோம்
பலும் பீதாம்பரமுங் கூடிடப் பாரே ஈரேழி
லேகங்குறைய நின்ற திருமலை தீர்த்தமாடிட
வருங்காலமது பொன்னொக்கு மிகையிலையே.’’ (கோரக்கர்)
இம்மாதம் தடைகள் கூடும். தந்தைவழி வாக்கு வாதம், விவாதம், கருத்து மோதலை தவிர்க்க நன்மை சேரும். ஒரு வேலையை முடிக்க பல தடவை முயல வேண்டுவது அவசியமாகும். உடல் உபாதை நீங்கும் காலமிது. சுபச்செலவுகள் வரும். ஆடை ஆபரணச் சேர்க்கையால், பொருள் சுபவிரயம் காணும். திருப்பதி மலையில் உள்ள தீர்த்தங்களில் நீராடி மீள வருங்காலத்தில் செல்வ செழிப்புக்கு எந்த குறையுமில்லை என்பதாம்.
ஆயில்யம் - கேட்டை - ரேவதி
“உண்டியிட்டு உவகை பெறலாகுமே
உன்னத யிறை தரிசித்து யின்படையலாகுமே
பொன்னை விரயஞ் செய மண்ணை கிரயஞ்
செயலாகுமே நன்மை யயலாருக்காற்ற
கீர்த்தி பெருகுமே. வாட்டிய வழக்கும்
பஞ்சாயத்தும் துண்டாகி இன்பமே யீய
குறையெலா மகலு மென்றறிவீரே தரும
கரும தானம் பெறவே கடனுபாதை யகலுமே
குலவிறை குறையருபட ஆற்றுங் கருமமே
ஆக்கமதனை குலத்துக் கீய வாழ்வாதாரமது
அவுய்யுமென்றறிவீரே.’’ (அகப்பேய்ச் சித்தர்)
அன்னதானம், விருந்தோம்பல் போன்றனவற்றால் மனம் நிம்மதி அடையும். தீர்த்த யாத்திரை செல்வர் பலர். கடன் வாங்கியேனும் வீடு, மனை கிரயம் செய்யும் காலமிது. புகழ், கௌரவம் மேலோங்கும். இதுவரை மனதை வாட்டிய வழக்கு, பஞ்சாயத்து போன்றவை முடிவுக்கு வரும். குறையில்லா பெருவாழ்வு இனி வாழலாகும். தர்ம கர்மாதிபதி யோகத்தால் திரவியம் கிட்டும். குலதேவதை பூஜை செய்து, குலதெய்வத்தை சந்தோவுப்படுத்துதல் அவசியம். இதனால் செழிப்பான வாழ்வு சேரும் என்பதாம்.
அசுவினி - மகம் - மூலம்
“வற்றாத செல்வமே வளமை தரும்; அவ்
வளமை வந்தண்டுங் காலமிது பெரு
விரயந் தானானபோதும் செயமே பெருங்
காலமிது. வாட்டிய வாதுஞ் சூதுமழிய
கீர்த்தியுங் கொப்பளிக்க வாட்டிய பீடை
வாடியோட, பின்னமான உறவு பளிங்
கொப்ப மிளிர தொட்டதெல்லாம் பொன்னாகப்
போகுது பாரு. அழிக்க நின்ற மாந்தர்
கெட விழியார நோக்கு அருண சட்டி
யந்நாள் குமார தரிசனதோடு யபிடேகமாற்றி
பூசிப்ப வெற்றிக்கென்ன பஞ்சமியம்பு.’’
(கொங்கண யாமுனிச் சித்தர்)
பெரும் செல்வம் சேர்ந்து வளமையான வாழ்வு வரும் காலமிது. இதுவரை எத்தனையோ செலவு செய்து வெற்றி பெற்றாலும் இனி வரப்போகும் வெற்றி வாழ்வில் நிலைத்திருக்கும். நம்மை அழிக்க எண்ணி சதி செய்தவர்கள் நம் கண் முன்னே கெடுவர். உறவில் வந்த விரிசல்கள், கருத்து வேற்றுமை மறைந்து ஜோதி போல் உறவு மிளிரும். தொட்டதெல்லாம் விருத்தியே. குமார தரிசனம் தன்னை அபிஷேகம் உள்ளிட்ட பூஜையோடு சூரிய சஷ்டி திதியில் செய்ய வாழ்வில் எந்நாளும் இன்பமும் ஆனந்தமுமே என்பதாம்.
பரணி - பூரம் - பூராடம்
“தேடிய தனத்தை புதைத்தது போலாகும்
செய் புண்ணியஞ் சிரங்காக்க யேணி
யொப்பவே ஊறாருக்காற்றிய சேவை
புண்ணியமின்றி கெட நட்புங் கேடு
செய்ய வீண் பழியோடு யபகீர்த்தியுங்
கூட பன்முறை யெதையுங் சோதித்தே
செயல்பட காப்பே அன்னை மகா
லட்சுமியை அத்தமன வேலை
வாவமுதால் தீபமேற்றி மூலமந்திரஞ் சாற்றிட
பின் யேற்றமிருக்கு ஏதுக்கு வீண்விவாதமே.’’
(பொய்யாமொழிச் சித்தர்)
பணம் முடங்கும். அவசரகதிக்கு நமது பணம் உதவாது போகும். தம்மிடம் உதவி பெற்றோர் நன்றி பாராட்டாது போவர். பொறாமை கொண்டு தீங்கு செய்ய எண்ணம் கொள்ளும் எதையும் ஒன்றுக்கு பலமுறை யோசனை செய்து ஆலோசித்து செயலில் இறங்குவதே சிறப்பு. சூரியன் மறையும் நேரம் நெய் விளக்கு ஏற்றி மகாலட்சுமி மூல மந்திரத்தை ஜெபித்துவர குறையில்லா மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும் என்பதாம்.
நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.