பஸ் ஏறியதில் இருந்து விக்ரம் கவனித்துக் கொண்டுதான் வருகிறான் அந்தப் பெண்ணை. முகத்தில் எந்தச் சலனமுமில்லாமல் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள் அவள். புடவைத் தலைப்பால் கழுத்து, பிடரியை முழுவதுமாக மூடியிருந்தாள். வயதென்னவோ நிச்சயம் இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். முகத்தின் களையும், செழிப்பும் அவளுடைய சலனமற்ற தன்மையையும் மீறி வெகு அழகாக அவளுடைய இளமையை பறைசாற்றின. பார்வையாலேயே அவளை சாப்பிட்டுக்கொண்டு வந்த அவன், உடம்பாலும் அவளை ருசிக்க முடியுமா என்று ஏங்கினான்.
அவன் நினைப்புக்கு உதவுவதுபோலவே புஸ்ஸென்று நின்றுவிட்டது பஸ். பஞ்சர். அந்தப் பத்தரை மணி ராத்திரியில் எங்கே டயர் மாற்றுவது, எப்படிப் பயணத்தைத் தொடருவது? ‘‘இன்னும் ஒரே ஒரு கிலோமீட்டர் தொலைவுதான் போகணும். அதுக்குள்ளாற இப்படி ஆயிடுச்சே!’’ என்று அலுத்துக்கொண்டார் ஓட்டுநர். ‘‘டெப்போவுக்கு போன் பண்ணலாமா?’’ நடத்துநர் கேட்டார். ‘‘ஆனா இந்த நேரத்துல யார் போன் எடுப்பாங்க?’’ ‘‘அதுவும் சரிதான். இதோ ஒரு கிலோ மீட்டர்தானே, ‘பாஸஞ்சரை வெச்சுக்கிட்டு அப்படியே பஸ்ஸைத் தள்ளிகிட்டு வந்திடுங்க’ன்னு சொன்னாலும் சொல்வானுங்க’’ என்று சொல்லி சலித்துக்கொண்டார் ஓட்டுநர்.
என்ன செய்வது என்று இருவருக்குமே புரியவில்லை. பரிதாபமாக பஸ்ஸில் கடைசியாக இப்போது பயணம் செய்து கொண்டிருக்கும் ஏழெட்டு பேரையும் பரிதாபமாகப் பார்த்தார்கள். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த பயணிகளும், இனி பஸ் அங்கிருந்து நகராது; மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்வதற்கும் இந்த ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் இயலாது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அந்த வழியாக வரும் வேறு ஏதேனும் வாகனத்தில் ‘லிஃப்ட்’ கேட்டு அந்த உதவியில் வீடுபோய்ச் சேர முடியுமா என்றும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால், அப்படி எந்த வாகனமும் வருவதாகத் தெரியவில்லை. ஒருவேளை அப்படியே வந்தாலும், அந்த வாகனம் பெரிய மனது பண்ணி நிறுத்தி, ஏற்றிச் செல்லுமா என்பதும் சந்தேகமே... போய்ச் சேரவேண்டிய கடைசி நிறுத்தத்துக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னால் இப்படி பஸ் பழிவாங்கிவிட்டதே என்றாலும் வெகு தொலைவில் நின்று கழுத்தறுத்து அவதிப்பட வைக்கவில் லையே என்ற அளவில் அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தார்கள். அதனாலேயே பிற வாகன உதவியை எதிர்பார்ப்பானேன், பொடிநடையாகப் போய்விடலாம் என்று தீர்மானித்து ஒருசில நிமிட நேரத் தயக்கத்துக்குப் பிறகு, அப்படியே செய்தார்கள். அந்தப் பெண்ணும்.
விக்ரமுக்கு சபலம். அந்தப் பெண்ணைத் தொடர்ந்தாலென்ன? அவன் இந்த இரவில் வீட்டிற்குப் போய் தூங்கத்தான் போகிறான். மறுநாள் பெரிதாக நிறைவேற்ற வேண்டிய வேலை எதுவும் இல்லை. இந்த இரவைத்தான் சற்று வித்தியாசமாகக் கழிப்போமே என்று அந்தப் பெண்ணைப் பார்த்தபடியே யோசித்தான். அந்தப் பெண்ணும் அவனுடைய மனநிலையைப் படித்தவள்போல அவனை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு முன்னே சென்றாள். அவள் தனியே போக பயந்துகொண்டு தன் உதவியை எதிர்பார்க்கிறாளோ என்று விக்ரமுக்கு சந்தேகம் எழுந்தது.
அப்படி உதவியாகப் போனால் அதையே சலுகையாக எடுத்துக்கொண்டு அத்துமீறலாமே! துணை வரும் உதவிக்காக அவள் இந்த ‘பிரதி உதவி’யைச் செய்ய மாட்டாளா? ஆனால், அவள் அவனிடம் அப்படி துணைக்கு வருமாறு கோரவில்லை. சும்மா ஒரு பார்வை பார்த்ததோடு சரி. உடனே அவள்பாட்டுக்கு செல்ல ஆரம்பித்தாள். அதுவும் நிதானமாக. எந்த அவசரமும் காட்டாமல். அப்படியானால், அவள் அவனுக்கு ஏதோ சமிக்ஞை காட்டுகிறாள் என்றுதான் அர்த்தம். உடன் வந்தவர்கள் வேகவேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்ட பிறகு, சற்றும் பதட்டப்படாமல் முன்னே செல்லும் அவளைப் பின் தொடர்வது, இந்த சந்தர்ப்பத்தைத் தன் வேட்கை தீர்க்கப் பயன்படுத்திக்கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டான் விக்ரம்.
தொடர்ந்தான். வேட்கை ஏற ஏற, திட்டங்கள் அற்புதமாக அவன் மூளையில் உதித்தன. அவள் இடது பக்க சாலையில் திரும்பிப் போனாளானால் அங்கே அவனுக்கு ஒரு வசதி இருக்கிறது - மயானம்! உள்ளே பல கல்லறைகள். அவற்றில் ஒன்றையே படுக்கையாக்கிக் கொண்டு விடலாம்... தனியாகத்தான் இந்தப் பெண் இந்த ராத்திரியில் வருகிறாள் என்பதால் இவள் எதற்கும் தயாரானவளாகவே இருப்பாள். பணத்தால் சுலபமாக மடக்க முடிந்தால் நல்லது; இல்லாவிட்டால் - பலவந்தம்தான்! அதோ, தான் எதிர்பார்த்ததுபோல இடதுபக்க சாலையில் அவள் திரும்பினாள்.
அவனுடைய மனப்போக்கைப் புரிந்துகொண்டுதான் அவள் அப்படி செல்கிறாளோ? அட! சொல்லி வைத்தாற்போல மயானத்திற்குள்ளேயே போகிறாளே! அவன் உடலில் தினவு கூடிற்று. மயானத்துக்குள், சாலையோர விளக்கு ஒன்று லேசாக ஒளி உமிழ்ந்தது. அந்த ஒளியில் மணிரத்னம் படம்போல ‘சில்-அவுட்‘டில் தெரிந்தாள் அவள். அதோ புடவைத் தலைப்பைக் கீழே விடுகிறாள். தலைமுடியை ஏன் இப்படிப் பிரித்து விட்டுக் கொள்கிறாள்? கைகள் இரண்டும் விறைத்தபடி நீட்டியிருக்க புடவை இடுப்பிலிருந்து கீழே தொங்கி தரையில் புரள, தலைமுடி காற்றில் வீசி அலைய, நடப்பதே தெரியாமல் - கால் தரையில் பாவாததுபோல நடந்து இதென்ன அந்தப் பெரிய கல்லறையின் மீதுபோய் அமர்கிறாளே!
விக்ரமுக்கு லேசாக வியர்த்தது. திடீரென்று அவள் விசும்புவது கேட்டது. என்னவோ பேசுகிறாள். “அப்பா நான் வீட்டுக்கு வந்திட்டேம்ப்பா. நான் உயிரோட இருந்தபோது இப்படி ராத்திரி லேட்டா வர்றியேன்னு கேப்பீங்க. இப்ப தற்கொலை பண்ணிக்கிட்டு நான் ஆவியா சுத்தறபோது மட்டும் கேக்க மாட்டேங்கறீங்களேப்பா... வா சுமிதான்னு சொல்லுங்கப்பா... மனிதப் பிறவியிலே இல்லாத பாசம், இங்கே ஆவி உலகத்திலே உண்டுப்பா... நான் வீட்டுக்கு வந்திட்டேம்ப்பா...’’ விக்ரமுக்கு விழிகள் கண்களை விட்டுத் தெறித்து வெளியே விழத் துடித்தன.
உச்சி முதல் பாதம் வரை உதறல். முகம் கோணிக்கொண்டது. திரும்பினான். பிடரியில் கால் பட ஒரே ஓட்டம். காம உணர்ச்சிகள் எல்லாம் பஸ்பம். “நேத்து ஒரு தமாஷ் தெரியுமா?“ சுமிதா கேட்டாள். “என்னடி... தைரியசாலிப் பெண்ணே! நேத்து யார் மாட்னாங்க?’’ தோழி கேட்டாள். நேத்து ராத்திரி பாட்டியை ஊர்ல கொண்டு விட்டுட்டு பஸ்ல திரும்பினேனா? ஒரு தடியன் ஆரம்பத்திலேருந்தே என்னை முறைச்சுக்கிட்டு வந்தான். ஆம்பளைங்க சலனப்படக் கூடாதுன்னு நான் எப்பவுமே புடவைத் தலைப்பால கழுத்தை மூடிக்கிட்டு, முகத்திலே உணர்ச்சியே காட்டாம வருவேனா.
அதை அவன் எப்படி எடுத்துக்கிட்டானோ தெரியல. டயர் பஞ்சராகி பஸ் நின்னுடிச்சு. அவனோ என் பின்னாலயே துரத்திக்கிட்டு வந்தான். ஒரு ஐடியா பண்ணேன். வழியிலே இருந்த மயானத்துக்குள்ளே நுழைஞ்சேன். ஆவி மாதிரி நடிச்சேன். அவ்ளோதான்! ஆள் உடனே ஆவிபோல காணாமப் போயிட்டான்’’ சிரித்தாள் சுமிதா. “நீ எமனாச்சே... உன்னைக் கட்டிக்கறவன் என்ன பாடு படப் போறானோ!’’ என்று வியந்தாள் தோழி.
பிரபுசங்கர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.