கிருத்திகை - உத்திரம் - உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“உவகை உலருமே யுற்றுப் பெற்ற யுறவும்
பகையென விலகுமே நாடி நன்மை பல
ஆற்றினுமே விழல் உண்ட நீரொப்ப வீணாகுமே
தனந்தானு விரயமாகி நற்கீர்த்தி கேடுய்ய
தீயோரு மேச நிற்குமிக் காலத்தே வாராகியை
தொழுது மங்களமெனத் துலங்க வருந்துவரது பட்டி டு மென்போமே’’
(பதஞ்சலி முனிவர்)
மனதில் சந்தோஷம் வற்றும் நேரமிது. ரத்த சொந்தங்களே பகை பாராட்டும் வேளை. நன்மை களை ஓடியோடிச் செய்தாலும், நட்பும் உறவும் குறை காணும் அன்றி பாராட்டாது. நாம் உழைத்தது எல்லாம் விழலுக்கு ஊற்றிய நீராகும். அபகீர்த்தியும் ஏற்படுமாதலால், செவ்வாய்க்கிழமை சப்த கன்னியரில் வாராஹி மாதாவை பக்தி சிரத்தையுடன் தொழுதுவர, வரும் துயரம் யாவும் அகன்று மனதில் புதுப்பொலிவு தோன்றும் என்றறிக.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“எடுத்த கருமமன்றி தொடுத்த பணியுங்
கூடி யின்பமேத்த பாரீர் பல காலமலைந்து
பணி செய்ய இக்காலமிது இன்புற்றுடுமே
அவஸ்தை பல வந்து வழிபல கண்டு நோவ
வே செய கருத்தாய் மேலோரைக் கலந்து
ஒரு வழி நிற்ப மேலாம் வாக்கு தாமே
வசைபாடுமாயின் வாக்கடக்கி நிற்ப நலமே
தனப்பீடை யேந்தமிக்காலஞ் சுகமாகவே
மந்தநாள் அனுமனை ஆராதித்தே யமர யழிவழியுமே’’
(அகப்பேய் சித்தர்)
எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்றாலும், அனுபவமிக்கோரைக் கலந்து ஆலோசித்து செயல்பட இன்பம் வரும். வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். பணக்கஷ்டம் தீர சனிக்கிழமை ஆஞ்சநேயரை தொழுதுவர மேன்மை சேரும்.
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“மணிமந்த்ரத் தால் பொருட் சேதமாம்
கொண்ட சுற்றத்தால் அகச்சாந்தி மறுபடுமாம்
தன் கரமே தன்னை யடிக்க யமைதியும்
திடச் சிந்தையுமே மேன்மைக்கு வித்தென
வுணரு. உன் பொருளுண்டுனக்குக்
கேடு புரிவார் கூடுங்காலமிது எவரையுஞ்
சதமென எண்ணாது தன்னாற்றல்
தன்னால் படுத்தறிந்து பணி செய பாங்கு
பிசகாது. சங்க நாள் அலமேறு நாதனை
ஆராதிக்க அனைத்து துக்கமுமகன்றே
ஆனந்தஞ் சேர கண்டோமே’’
(சிவ வாக்கிய சித்தர்)
உடல்நிலை சற்று பாதிப்படைந்து தேறும். சொந்த பந்தங்கள் மனது புண்படும்படி நடந்து கொள்வார்கள். நமது செய்கையால் நமக்கு சற்று அவப்பெயர் வந்து நீங்கும். மன தைரியமும் தெய்வ பக்தியும் மேன்மை தந்து உதவும். நமது பொருளை சாப்பிட்ட பின் நமக்கு தீங்கு செய்வார் நேசம் தன்னை ஒதுக்குவது நலம் தரும். யாருடைய தயவையும் நாடாது இருப்பது சேமம். வெள்ளிக்கிழமைகளில் திருவேங்கடவனைத் தொழுதிட மேன்மை உண்டு என்பதாம்.
திருவாதிரை - சுவாதி - சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“பணி மேன்மையுண்டா மாதாயப் பரலுங்
கூடுமென வறி நன்றே நாட்பட்ட
பீடையகல வாராத் தனமது வந்தண்டு
மென தெளிவீரே சுப விரயந்தன்னால்
கடனுபாதை தோன்றினும் பாதகமில்லை
போ பாதியவடைபடும் பாரு கற்ற
வித்தைக்கேற்ற பலனுஞ் சேரவே குறை
யெலாமோடி நிறைவென விளங்கும் வாழ்வே
தென்புலந் நின்றானை வியாழனுக் குற்றானை
தொழுதெழ முடியாததென உண்டோ யியம்பு’’
(அழுகணிச் சித்தர்)
பணி, தொழில் முன்னேற்றம் ஏற்படும். படித்த படிப்பு, கற்ற தொழிலுக்கு ஏற்ப பணி அமைந்து மனச்சாந்தி உண்டாகும். சிறு கடன்கள் தோன்றும் என்றாலும் அவை நல்ல காரியங்களை முன்னிட்டே. கடன்கள் விரைவில் அடைபடும். தட்சிணாமூர்த்தியை அனுதினமும் தொழுவார் எதையும் சாதிக்கலாமே என்பதாம்.
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“வாட்டிய பீடை வாடுமென்றறிவீரே
வாராத் தனமும் வந்தின்பந் தருமே
கூடா வுறவுங் கூடிக் களிப்ப பொருளால்
வந்த பீடை படப்பாரீர் முன்
னோர் பொருளாலாதாயஞ் சேரவே
அம்பலதரிசனங் கிட்டுமென்றறிவீரே
உமைபங்காளனை பொன்னம்பலத்தே புதவாரம்
பூசிப்போருக்கு எண்ணிலா யின்பஞ் சேரு
மென்றே சாத்திரஞ் சொல்ல கண்டோமே”
(காக புஜண்டர்).
இதுவரை உடலை வாட்டிய நோய் அகலும். வாராது தாமதம் காட்டிய தனமும் வந்து அண்டும். இதுவரை கருத்து மாறுபாடு கொண்டு பிரிந்திருந்த உறவும் சேரும் என்று உணர்க. மூதாதையர் ஆஸ்தியினால் ஆதாயம் உண்டாகும். பற்பல ஆலய தரிசனமுஞ்சேரும். சிதம்பரம் நடராஜப் பெருமானை புதவாரம் தொழ எண்ணற்ற சம்பத்தும், மகிழ்வும் பெருகும் என்பதாம்.
பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“சருமப்பீடை தோன்றியே மறையுமன்றி
நேத்திரடன தோஷமுங்கூட காணீரே
பாதைவழி பாதகஞ் சேர மந்தனார் பீடை
விரயம் பல பொருளுக்கு தந்து பணி
முடக்கஞ் செயுமே கடனுபாதை தன்னால
ச்சமே காணுமே வியாச்சிய விவாதமும்
வில்லங்கமே யீய நன்றே ஆதித்ய கிருதய
வாக்கியமதனை நவமுறை நாளிலோதியே
தெளிவெய்த நலமே’’
(அகத்தியர் முனி)
தோல் நோய்கள், கண் நோய்கள் தோன்றி மறையும். சாலை வழி பயணத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும். சனிபகவானின் நோக்கால் விரயம் பல வழி வந்து மறையும். கடன்கள் கலக்கத்தை தோற்றுவிக்கும். கோர்ட் விவகாரங்கள் மனசங்கடம் தரும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்ய தீங்கு பற்றாது, இன்பம் சேரும் என்பதாம்.
ஆயில்யம் - கேட்டை - ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“துணையென வானோரிருக்க குறை
நீங்கும். கடல் தாண்டிய பணியொடு
வாணிபமுஞ் சேர பொற்காலமிது புண்ணிய
மேலோரோடு இராசர் நேசமிகுத்துவர
நூதன கூட்டு நாடிவரப் பாரு மராமத்து
பணியொடு மச்சு மனை கட்ட காலமிது
சாசனமாமே பொன்னால் பொருளால்
கீர்த்தி சேர இன்பவுலா செயுந் திங்களிக் கன்னியே
யாதலின் பயிரவப் பூசை கண்ணேறு கழிக்குமே’’
(சட்டை முனிச் சித்தர்)
இறையருள் நிறைந்திருக்கும். அயல் நாடு வர்த்தகம், வேலை அமையும். சிலருக்கு அரசாங்க ஒத்தாசையும் கிடைக்கும். புகழ், கவுரவம் மேலோங்கும். பலர் அயல் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வர். பைரவரைத் தொழுது வர கண் திருஷ்டிக் கேடு அகலும் என்பதாம்.
அசுவினி - மகம் - மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“அகத்திலாயிரஞ் சலனந் தோன்றுமன்றி
வச்சத்திற்குக் குறைவிலையே மெத்தவே
மேனி வருத்த மனத்திடமொடு எதையும்
வெல்லலாகுமே உற்றாரெலாங் கூடி
யொத்தாசைக்கு வர வருங்காலமின்பம்
உண்டென்றறி யச்சமதனை களைந்து
அம்மையப்பனை செங்கோள் குன்றங் கண்டாராதிப்ப
குறையகலுந் திண்ணஞ் சொன்னோமே’’
(பொய்யாமொழி சித்தர்)
மனதில் தேவையற்ற பயம் வந்து மறையும். உடல்நிலையும், மனநிலையும் பாதிப்படையும். தெரிந்தவர்கள், உறவினர்கள் யாவரும் ஒத்தாசைக்கு வருவர் வருங்காலம் இன்பமயமானது என்பதில் ஏது சந்தேகம்? திருச்செங்கோட்டு மலை அப்பனை தொழுதக்கால் எல்லா ஏக்கமும் தீரும் என்பதாம்.
பரணி - பூரம் - பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
“பெண்ணாட் பீடையுண்டாம் பெரும்
பிணியும் வறுத்துமென்றுணரு
கரப் பொருளுக்கு ஆது வந்துருமே
கள்வர் தம்மொடு கலக்கமே வந்திடப்
பாரு காசினியில் வழித் தடத்து வம்பு
வந்தகல சூதுங் கவ்வுங் காலமிது
கருதியே அயனை கடுமாமுடி கோயில்
நின்றாராதித்தே விமோசனங் காணலாமே’’
(பாம்பாட்டிச் சித்தர்)
பெண்டிரால் கலகம் வரும் காலம். உடல் உபாதைகளும் தோன்றி மறையும். கைப்பொருள் நட்டம் காணும். திருடர் பயம் வந்து மறையும். வழித்தடத்தில் எச்சரிக்கையுடன் பயணிப்பது இன்பம் பயக்கும். கொடுமுடி சென்று பிரம்ம தேவனை வழிபட வரும் தொல்லை ஒதுங்கும் என்பதாம்.
நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.