மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: இந்த ஆண்டு முழுவதும் நிதி நிலைமை ஒரே சீராக இருக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மன நிறைவைத் தரும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். ராகுவின் நிலையினால், அடிக்கடி ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, மருத்துவச் செலவுகளில் கொண்டுவிடும். கணவர் - மனைவியரிடையே அடிக்கடி கருத்துவேற்றுமை ஏற்படுவதால், மன நிம்மதி பாதிக்கப்படும். வழக்குகள் இருப்பின், எவ்வித முடிவும் தெரியாமல், நீடிக்கும். இரவு நேரப் பயணங்களின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. ருண, ரோக, சத்ரு, ஆயுள் ஸ்தானங்களுக்கு குரு பகவானின் சுபப் பார்வை உள்ளதால், எந்தப் பிரச்னையானாலும் உடனுக்குடன் நிவர்த்தியும் கிடைக்கும்.
உத்தியோகம்: உங்கள் ராசிக்கு ஜீவனாதி பதியான சனி பகவான், ஜீவன ஸ்தானத்திலேயே சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், வரும் ஒரு வருட காலம் நல்ல முன்னேற்றத்தைத் தந்தருள்வார். இருப்பினும், அதிக உழைப்பும், அலைச்சலும் வேலைச் சுமையும் உடலில் அசதியை ஏற்படுத்தும். சில தருணங்களில், மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். உணர்ச்சிவசப்படு வதைத் தவிர்ப்பது அவசியம். ஜென்மராசியில் ராகு அமர்ந்திருப்பதை மறந்துவிடாதீர்கள்! மறைமுகச் சூழ்ச்சிகளை உருவாக்குவதில் ராகுவிற்கு நிகர் ராகுவே!
தொழில், வியாபாரம்: மார்க்கெட் நிலவரம் போட்டிகள் நிறைந்தவையாகவே இருக்கும், இந்த ஆண்டு முழுவதும்! லாபம், ஏற்றத் தாழ்வின்றி நீடிக்கும். புதிய முயற்சிகளில், அளவோடு முதலீடு செய்யலாம். சக கூட்டாளிகளினால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பணத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். கூடிய வரையில் வெளியூர்ப் பயணங்களை ஒருவருட காலத்திற்குக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
கலைத்துறையினர்: கலைத்துறைக்கு ஆதிபத்யம் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவே அனுகூலமாக உள்ளனர் இப்புத்தாண்டில்! சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் முயற்சிகளுக்கு போதிய அளவிற்கு நிதியுதவி கிடைப்பது சற்று கடினம். அரசாங்க உதவியை எதிர்பார்ப்பதிலும் பயனில்லை!! பல திரைப்பட அரங்குகள் மீண்டும் திறக்கப்படுமளவிற்கு சூழ்நிலையில் முன்னேற்றமிராது. புதிய முயற்சிகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து இறங்குவது, அவசியம்.
அரசியல்துறையினர்: அதிக முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், ராகு, சனி பகவானின் நிலைகளினால், கட்சியில் விருப்பத்திற்கு மாறான சில பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். தசா புக்திகள் பாதகமாக இருப்பின், வழக்குகளைச் சந்திக்க நேரிடும். தேவையற்ற சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளில் தலையிடாமல் விலகியிருப்பது அவசியம். இத்தகைய தருணங்களில்தான், ஜோதிடம் எனும் அரிய வாழ்வுக் கலை நமக்கு தக்க வழிகாட்டி,
அவமானப்படாமல் நம்மைக் காப்பாற்றுகிறது.
மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன் மற்றும் வித்யாஸ்தானம் ஆகியவை வரும் ஆண்டு முழுவதும், தோஷமற்றுத் தொடர்வதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். உயர் கல்விக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
விவசாயத்துறையினர்: தண்ணீர், உரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மேகாதி பதியான புதன், சுப-பலம் பெற்றிருப்பதால், தண்ணீர் வசதி சற்று தாராளமாகவே கிடைக்கும். ஆண்டு முழுவதும் செவ்வாய் அனுகூல நிலையில் இருப்பதால், விளைச்சல்களுக்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். கனி வகைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏற்றுமதி அதிகரிக்கும். அதனால், லாபமும் உயரும். சிலருக்கு, புதிய விளைநிலம் வாங்குவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும்.
பெண்மணிகள்: ராகு ஒருவரைத் தவிர, மற்ற பிரதான கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாகவே சஞ்சரிக்கின்றனர், இந்த ஆண்டு முழுவதும்! திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். உத்தியோகத்திற்குச் சென்று வரும் கன்னியருக்கு, அலுவலகத்தில் வேலைச் சுமையும் பொறுப்பும் அதிகரித்தாலும், அதற்கேற்ற முன்னேற்றம் உண்டு. ராகுவின் நிலையினால், அடிக்கடி உடலுபாதைகள் ஏற்படக்கூடும். பரிகாரம் பலனளிக்கும்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். ஜென்மராசியில் ராகு நிலைகொண்டுள்ளதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!!
பரிகாரம்: 1.தினமும் ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்தோத்ரம், ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம், ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றை தினமும் படித்து வரவும்.
2. 48 சனிக்கிழமைகள் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ, அல்லது வீட்டின் பூஜையறையிலோ மாலையில் நல்லெண்ணெய் தீபம் ஒன்று ஏற்றிவந்தால் போதும். வழக்கமாக
பூஜையறையில் ஏற்றிவரும் தீபம் தனி. அதைப் பரிகார தீபமாகக் கருதக்கூடாது. மண் அகலில் தீபம் ஏற்றிவருவது அதிக பலனைத் தரும்.
3. பசுவிற்கு உணவளித்தலும், மகான்களின் ஜீவசமாதிகளில் நெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசிப்பதும், திருக்கோயில்கள் தரிசனமுமாகும்.
4. தேவையற்ற கவலைகள், தரக் குறைவான உணவகங்களில் உண்பது, இரவில் நெடுநேரம் கண்விழித்து, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றைப் பார்ப்பதைத் தவிர்ப்பது அவசியம்.