மகரம்
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: ஏழரைச் சனியின் நடுப்பகுதி நடைபெறும் தருணத்தில், சுபகிருது புத்தாண்டு பிறக்கிறது! ஜென்ம ராசியில், ஆட்சியில் சனி!! வாக்கு, தனம், குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாயின் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. திருதீய ஸ்தானத்தில் குரு! அர்த்தாஷ்டகத்தில் சூரியன், ராகு, புதன் சேர்க்கை - இத்தகைய நிலையில், சுபகிருது புத்தாண்டு பிறக்கிறது, மகர ராசி அன்பர்களுக்கு!! சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்களினால் நன்மைகள் ஏற்படும். மேலும், களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைக்கிறது. வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். இருப்பினும், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட வாய்ப்பில்லை. திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டு அதன் பின்பு வரன் அமையும். குடும்ப நிர்வாகத்திற்காக அதிக அலைச்சலும், கடின உழைப்பும் ஏற்படும்.
உத்தியோகம்: உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது சற்று கடினம். ஜீவன ஸ்தானத்தில் கேது நிற்பதால், பலருக்கு நிறுவன மாற்றம் ஏற்படக்கூடும். சக ஊழியர்களின் மறைமுகப் பேச்சுகள் மனதில் வேதனையை ஏற்படுத்தும். மகரம், சனி பகவானின் ஆட்சிவீடாகத் திகழ்வதால், உங்கள் வேலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை பொறுமையுடன் சிறிது வளைந்துகொடுத்து நடந்துகொள்ளுங்கள்! புதிய வேலைக்கு முயற்சிக்கும் மகர ராசியினருக்கு, மனத்திற்கு திருப்தியளிக்கும் வேலை கிடைப்பது கடினம். கிடைத்ததை ஒப்புக்கொள்வது எதிர்கால நலனுக்கு உகந்ததாகும்.
தொழில், வியாபாரம்: போட்டிகள் அதிகரித்தாலும், லாபம் மட்டும் ஒரே சீராக நீடிக்கும். நிதி நெருக்கடி கவலையை அளிக்கும். கூட்டாளிகள் ஏற்படுத்தும் பிரச்னைகளினால், தொழிலில் விரக்தியும், அதிருப்தியும் ஏற்படும். புதிய முதலீடுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். நிதிநிறுவனங்களின் ஆதரவு கிடைப்பதிலும் பிரச்னைகள் ஏற்படும்.
கலைத்துறையினர்: இப்புத்தாண்டில், அளவோடு நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவரும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், புதிய முதலீடுகளில் துணிந்து இறங்கலாம். திரைப்படத் தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து, புதிய படங்களை எடுக்கலாம். லாபகரமாக இருக்கும். அரசாங்க ஆதரவு எளிதில் கிடைக்கும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு பக்க பலமாக துணை நிற்கும்.
மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன், சூரியன் மற்றும் ராகுவுடன் இணைந்து, மேஷத்தில் சஞ்சரிப்பது, நன்மைகளை அளிக்கக்கூடியதல்ல! மனதில் பலவித சஞ்சலங்கள் ஏற்படுவதால், பாடங்களில் மனம் செல்வது மிகவும் கடினமாகும். அடிக்கடி ஏதாவதொரு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, மருத்துவரிடம் செல்லவைக்கும். எளிய சிகிச்சையினால், பூரண குணம் கிட்டும். பாடங்களில், மனதை ஊன்றிச் செலுத்த முடியாது. பரிகாரம் உதவும்.
பெண்மணிகள்: அளவோடு சில நன்மைகளை நீங்கள் இப்புத்தாண்டில் எதிர்பார்க்கலாம். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். வருமானத்திற்குள் குடும்பத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். அடிக்கடி ஆரோக்கிக் குறைவு ஏற்படுவதால், உடல் ஓய்விற்குக் கெஞ்சும்! சிறு பாதிப்பு ஆனாலும், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்! கைப்பணத்தை எண்ணி, எண்னிச் செலவழிக்கவும். கூடியவரையில் கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள்.
பரிகாரம்: 1. சனி மற்றும் வியாழக்கிழமைகளில் உபவாசமிருத்தல், மிகச் சிறந்த பரிகாரமாகும். பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.
2. திருமலை வேங்கடத்து இன்னமுதன் தரிசனம் இத்தகைய கிரக தோஷங்களை அடியோடு போக்க வல்லது.
3. வசதியுள்ள அன்பர்கள், வீட்டில் சுதர்ஸன ஹோமம் செய்வது நல்லது.
4. 12 வெள்ளிக்கிழமைகள் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் தீபம் ஏற்றி வரவும். சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டின் பூஜை யறையிலோ, மாலையில் ஐந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றிவருவது தன்னிகரற்ற பரிகாரமாகும். எளிதாக இருக்கிறதே என்று எண்ணிவிடாதீர்கள்! ஒவ்வொரு துளி எண்ணெய்க்கும் அளவற்ற சக்தி உள்ளது!!
5. சனிக் கிழமைகளில் உபவாசமிருத்தல் நல்ல பலனையளிக்கும். இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். பிரசித்தி பெற்ற பூவரசன் குப்பம் ஸ்ரீ பிராண லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைபெறும் சுவாதி ஹோம தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
6. மயிலாடுதுறையை அடுத்த, மிகவும் புராதனமானதும், புராணங்கள் போற்றிப் புகழ்வதுமான, தேரழுந்தூர் திருத்தலம் பல ரகசிய சக்திகளைக் கொண்ட க்ஷேத்திரமாகும். அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆமருவியப்பனின் (பசுவைத் தழுவி நிற்பவன்) அழகு மட்டும் அல்ல. சக்தியும் விவரிக்க இயலாதது.
7. தினமும் ஸ்ரீ மஹாலட்சுமி அஷ்டோத்திரம், கங்காஷ்டகம், ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகரின் ஸ்ரீ ஸ்துதி ஆகியவற்றை படித்து வரவும்.
8. வசதி இருப்பின், ஒருமுறை பரமபவித்ரமான கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு வரவும்.அனைத்து துன்பங்களுக்கும் காரணமான சகல பாவங்களையும் நீக்கி நல்வாழ்வினை அளிக்கும் மகத்தான கருணை கொண்டவள், மகரிஷிகளால் ஸ்ரீ பாகீரதியென போற்றிப் பூஜிக்கப்படும் ஸ்ரீ கங்காதேவி.