மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில், குரு பகவான் நிலைகொண்டிருப்பது, நன்மை தராது எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை! அதே ஜோதிடக் கலையில், அந்த ஜென்ம ராசி குருவின் ஆட்சிவீடாக இருப்பின், பாதிப்பு பெருமளவில் குறைந்துவிடும் எனவும் விளக்கியுள்ளது. மீனம், குருவின் ஆட்சிவீடாகும். ஆதலால், அவரால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு தாயே, தன் குழந்தைக்கு தீமை செய்ய முடியுமா? இது ஒருபுறமிருக்க, சனி பகவான் லாப ஸ்தானத்தில் சிறந்து சுபபலம் பெற்று சஞ்சரிக்கின்றார். குரு, மீன ராசிக்கு பூர்வ புண்ணியம், களத்திரம், பாக்கியம் ஆகிய இடங்களையும் தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துகிறார். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். செலவுகளும் அதற்கேற்றாற்போல் ஏற்படுவதால், சேமிப்பிற்குச் சாத்தியக்கூறு இல்லை. ஆயினும், செலவுகள் பெரும்பாலும் சுபச் - செலவுகளாகவே இருப்பதால், பணம் விரயமாவதைப் பற்றி கவலை ஏற்படாது.
உத்தியோகம்: அஷ்டமத்தில் (8ம் ராசி) கேது நிலைகொண்டிருப்பதால், அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும். ஜீவன காரகரான சனி பகவான், லாபஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிறு பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. பலருக்கு, இடமாற்றமும், அதன் மூலம் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்களுக்கு, உடனுக்குடன் புதிய வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரம்: இப்புத்தாண்டு முழுவதும் முக்கிய கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். புதிய முதலீடுகளில் துணிந்து இறங்கலாம். லாபஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சனி பகவான், உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கிறார். வர்த்தகத் துறையினருக்குச் சந்தை நிலவரம் மேலும் சாதகமாக மாறும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசாங்கச் சலுகைகள் எளிதில் கிட்டும். வர்த்தகத் துறையினருக்கு, சுப கிருது புத்தாண்டு அரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவுள்ளது. இதனை அனுபவத்தில் காணமுடியும்.
கலைத்துறையினர்: கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரன், சுப-பலம் பெற்று சஞ்சரிப்பதால், மேலும் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார், இப்புத்தாண்டில்! நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு, உங்களுக்கு உதவ முன்வருவார்கள். தயாரிப்பாளர்களுக்கு, இது ஓர் அரிய சந்தர்ப்பம். உலகளவில் உங்கள் திரைப்படம் புகழைப் பெறுவதற்கு கிரக நிலைகள் சிறந்த சுப பலம் பெற்றுள்ளன. வாய்ப்பினை நழுவ விட்டுவிடாதீர்கள்!!
அரசியல்துறையினர்: உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமையவுள்ளது, இந்த சுப கிருது புத்தாண்டு! செல்வாக்கும், செல்வமும் நிறைந்த பிரமுகர்களின் தொடர்பும், அதன்மூலம் புதிய வாய்ப்புகளும் கிட்டும். லாபம் ஒருபுறமிருக்க, உங்களுக்கு உலகளவில் புகழ் கிடைக்க, சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. பயன்படுத்திக்கொள்வது, உங்கள் திறனில் உள்ளது!
மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதனும், சுப பலம் பெற்று வலம் வருவதால், படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். ஐஏஎஸ்., ஐபிஎஸ் போன்ற துறைகளில் நீங்கள் கவனத்தைச் செலுத்தலாம். இன்றைய கல்வியே நாளைய உங்கள் எதிர்காலம் என்பதை மறந்துவிடாதீர்கள்!! எத்தகைய தருணங்களில், எந்தத் துறைகளில் மனத்தைச் செலுத்தினால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதை அவரவரது ஜாதகத்தின் கிரக நிலைகளிலிருந்தும் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிந்து கொள்ள முடியும். இந்த அரிய சந்தர்ப்பத்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது.
விவசாயத்துறையினர்: உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிடைக்க உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. விவசாயத்திற்கு அத்தியாவசியமான அடிப்படை வசதிகளுக்கு, குறைவில்லாமல் பார்த்துக்கொள்கிறார் மேகாதிபதியான புதன். விவசாயத் துறையினருக்கு, சுப கிருது புத்தாண்டு, ஒரு அரிய வாய்ப்பாகும். உங்கள் விளைச்சல்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் நிதி நிலைமையை சீர்செய்துகொள்ள அரிய வாய்ப்பினை எடுத்துத் தருகிறது, இப்புத்தாண்டு!!
பெண்மணிகள்: பல அம்சங்களிலும், மீன ராசிப் பெண்மணிகளுக்கு, இப்புத்தாண்டு பல நன்மைகள் ஏற்படவுள்ளன. பலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். திருமண வயதிலுள்ள பெண்மணிகளுக்கு நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சிக்கும் நங்கையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். மேலும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வமுள்ள கன்னியருக்கு உரிய உதவிகள் கிட்டும்.
அறிவுரை: தனஸ்தானத்தில், வலிமை வாய்ந்த ராகு இருப்பதால், கைப்பணம் வேகமாகக் கரையும். அஜாக்கிரதையினால், நண்பர்களுக்கு உதவ சக்திக்கு மீறிய வாக்களித்துவிட்டு, பின்பு தவிப்பீர்கள்! ராகுவிற்கு பரிகாரம் செய்வது மிகவும் அவசியம். சனி பகவானுக்கு, பரிகாரம் அவசியமில்லை!!
பரிகாரம்: 1. திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, திருமோகூர் ஆகிய திருத்தலங்கள் தரிசனம் ராகு, மற்றும் கேதுவினால் ஏற்படும் தோஷங்களை அடியோடு போக்கிவிடும். இவற்றில் ஒரு திருத்தலத்தை தரிசித்தாலும் போதும்.
2. 24 சனிக்கிழமைகள் திருக்கோயில் ஒன்றில் மாலையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவது ராகுவினால் ஏற்படும் தோஷத்தை அடியோடு போக்கிவிடும். அதேபோன்று, 24 செவ்வாய்க்கிழமைகள் திருக்கோயில் ஒன்றில் மாலையில் பசு நெய் தீபம் ஏற்றிவருவது கேதுவினால் ஏற்படும் தோஷங்களை அடியோடு போக்கிவிடும். நம்பிக்கை வைத்துச் செய்து, பயனடையுமாறு பிரார்த்தித்துக்கொள்கிறோம். இவ்விரு பரிகாரங்களும், பூர்வ ஜென்ம நிர்ணய ஸாரம் எனும் மிகப் புராதன நூலில் கூறப்பட்டுள்ளன. 2. புண்ணிய நதி ஒன்றில் புனித நீராடுவது, குருபகவானுக்கு மிகவும் பிடித்த பரிகாரமாகும்.
3. பசுவிற்கு உணவளிப்பது, ராகுவிற்கு பிரீதியைத் தரும். 4. சனிக்கிழமைகளில் ஏழை ஒருவருக்கு உடுக்க வஸ்திரம் கொடுப்பதும், உணவளிப்பதும், ராகுவின் தோஷத்தை உடனடியாகப் போக்கும்.