ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் குரு பகவானின் சுப-பலத்தினால், குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். மேலும், உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் மனத்தில் ஆன்மிகச் சிந்தனை ஓங்கும். தீர்த்த தல யாத்திரை சித்திக்கும் பாடல் பெற்ற திருக்கோயில் தரிசனம் கிட்டும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளைகள் இருப்பின், இப்புத்தாண்டில் விவாகம் நடைபெறுவது உறுதி! நல்ல வரன் அமைவது, மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால், பல பெண்மணிகளுக்கு மழலைப்பாக்கியம் கிட்டும். பணப்பற்றாக்குறை ஏற்படாமலிருக்கப் பார்த்துக்கொள்வார், குரு! இருப்பினும், விரய ஸ்தானத்தில் பலம் வாய்ந்த ராகு நிற்பதால், வருமானத்திற்கு ஏற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். வீண் செலவுகள் என்று மனத்திற்குத் தெரிந்தாலும், அவற்றைத் தவிர்க்க இயலாது. சிறு, சிறு உடலுபாதைகளைத் தவிர மற்றபடி இந்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும்.
உத்தியோகம்: ரிஷப ராசியினருக்கு பாக்கிய ஸ்தானம் மகரமாகும்! அந்த ராசிக்கு அதிபதியான சனி, இந்தப் புத்தாண்டு முழுவதும் தனது ஆட்சிவீடான மகரத்திலேயே நிலைகொண்டிருக்கிறார். உத்தியோகத்திற்கு அதிபதியும், சனிதான்!! ஆதலால், இந்தப் புத்தாண்டில் நல்ல முன்னேற்றம் காத்துள்ளது, உங்களுக்கு! மேலதிகாரிகளின் ஆதரவு, நிர்வாகத்தினரின் பாராட்டுதல், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் பணிகளில் உற்சாகம் மேலிடும். தசா புக்திகளுக்கேற்ப, பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றிற்கும் வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வேலை மாற்றத்திற்கோ அல்லது புதிய வேலைக்கோ முயற்சிப் பவர்களுக்கு, வெற்றி கிட்டும்! ஒரு சிலருக்கு, இடமாற்றமும், அதன் காரணாமாக, சலுகைகள் அதிகரிப்பதும் இந்த ஆண்டில் உங்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகளில் சில ஆகும்.
தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வியாபாரத் துறைகளும்கூட, சனி பகவானின் அதிகாரத்தில்தான் உள்ளன. ஆதலால், இப்புத்தாண்டில் சிறந்த முன்னேற்றமும், நல்ல லாபமும், வியாபார அபிவிருத்தியும் கிடைக்கும். புதிய துறைகளில் தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற ஆண்டு இது! நிதி நிறுவனங்களின் உதவி தேடி வரும்!! கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, “கொரோனா”வினால் ஏற்பட்டிருந்த பின்னடைவு நீங்கும்.
கலைத்துறையினர்: சென்ற ஓராண்டிற்கும் மேலாக, காலம் என்றைக்கு மாறும்? என கவலையுடன் காத்திருந்த உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்! புதிய தயாரிப்புகளில் துணிந்து முதலீடு செய்யலாம் என்பதை கிரக நிலைகள் உறுதிசெய்கின்றன. குருவின் சாதகமான நிலையினால், பல கலைத்துறை அன்பர்களுக்கு, திருமண வாய்ப்பு உருவாகும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற இத் தமிழ்ப் புத்தாண்டு வழிவகுக்கும். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், நடிகர் - நடிகைகள் ஆகியோருக்கு சிறந்த புத்தாண்டு இது!!
அரசியல்துறையினர்: உங்கள் ராசிக்கு நாதனான சுக்கிரன்தான் அரசியல் துறைக்கும் அதிபதியாவார். சுபக்கிருது புத்தாண்டு முழுவதும் உங்களுக்கு அனுகூலமாகவே சஞ்சரிப் பதால், கட்சியில் ஆதரவு பெருகும். செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிட்டும். பொறுப்புள்ள பதவியொன்றை ஏற்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகின்றன. வழக்குகளில் சிக்கியிருந்தால், நீதிமன்றத்தின் மூலம் நிரபராதி என வெளிவந்துவிடுவீர்கள்!!
மாணவ - மாணவியர்: உயர் கல்விக்கான உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்! ஆசிரியர்களின் ஆதரவும், ஆசியும் கிட்டும். வெளிநாடுகளில் கல்வி பயின்றுவரும் மாணவ - மாணவியர் அவரவரது பிராஜெக்ட்களை குறித்த காலகட்டத்தில் முடித்து, சமர்ப்பித்துவிடுவீர்கள்!! பலருக்கு, படிப்பு முடிந்தவுடன், நேர்முகத் தேர்வுகளின் மூலம் நல்ல வேலை கிடைத்துவிடும். உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருவின் சுபப் பார்வை ஏற்படுவதால், மனதில் உயர்ந்த சிந்தனைகள் ஏற்படும். பாடங்களில் மனதை ஊன்றிப்
படிப்பீர்கள்.
விவசாயத்துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்யம் கொண்டுள்ள, செவ்வாய் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஆதரவாகவே சஞ்சரிக்கின்றார். பாக்கியாதிபதியான சனியும், உங்கள் பக்கம்தான்!! ஆதலால், நல்ல விளைச் சலும், வருமானமும் கிடைக்கும். சந்தை நிலவரம் சாதகமாகவே நீடிக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள அருமையான சந்தர்ப்பம் இது!!
பெண்மணிகள்: குடும்ப நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் குரு பகவானும், பெண்மணிகளின் நலன்களுக்கு அதிகாரம் பெற்ற சுக்கிரனும் சுப-பலம் பெற்றிருப்பதால், சுபக்கிருது புத்தாண்டு, சுபமான ஆண்டாகும், பெண்மணிகளுக்கு!! விவாகமான பெண்மணிகளுக்கு, மகிழ்ச்சியான ஆண்டு. கருத்தரிப்பதற்கு ஏற்ற காலகட்டமிது! குடும்ப நிர்வாகத்தில் பிரச்னை எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யம் ஓங்கும். வேலைக்கு முயற்சிக்கும் கன்னியருக்கு, எளிதில் வேலை கிட்டும். வேலை பார்க்கும் மகளிருக்கு, அலுவலகச் சூழ்நிலை, மன நிம்மதியைத் தரும்.
அறிவுரை: விரயஸ்தானத்தில், பலம் வாய்ந்த ராகு நிலைகொண்டிருப்பதால், எவ்வளவு வருமானம் வந்தாலும், ஏதோ ஒரு வழியில் பணம் செலவழிந்துவிடும். வீண் செலவுகளைக் கட்டுப் படுத்த இயலாத சூழ்நிலையை உருவாக்கிவிடுவார், ராகு! ஆதலால், கைப்பணத்தைச் சிக்கனமாகச் செலவழிப்பது நல்லது.
பரிகாரம்: 1. ராகுவிற்குப் பரிகாரம் அவசியம். ஒருமுறை திருநாகேஸ்வரம் திருத்தல க்ஷேத்திரம் சென்று 12 எள் எண்ணெய் தீபம் ஏற்றி வைத்து தரிசித்துவிட்டு வருவது மிகச்சிறந்த பரிகாரமாகும். இதற்கு வசதியில்லாத ரிஷப ராசி அன்பர்கள் கீழ்க்கண்ட ராகு தியாயன ஸ்லோகத்தை தினமும் சொல்லி அவரை மனத்தால் நினைத்து நமஸ்கரித்து வந்தாலே போதும். தோஷம் அடியோடு நீங்கும்.
“அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம் ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம் தம்ராஹும் ப்ரணமாம்யஹம்” ஸ்ரீ வேத வியாஸ பகவான், உலக நன்மைக்காக அருளிய மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம், படித்துப் பயன் பெறும்படி பிரார்த்திக்கின்றோம்! 2. பைரவர் தரிசனம். அஷ்டமிதிதியன்று தரிசிப்பது கைமேல் பலனளிக்கும்.
3. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரம். 4. தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்து, ஸ்ரீமுருகப் பெருமானை பூஜித்து வந்தால் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும்.
5. திருவையாறு அருகிலுள்ள, ஸ்ரீகால பைரவர் கோயில் தரிசனம் விரயஸ்தான ராகுவிற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும். 6. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும், 108 முறை ராம நாமம் ஜெபித்தல், அற்புத பலனளிக்கும்.