சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: அஷ்டம ஸ்தானத்தில் குருவும், பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சனியும் நிலைகொண்டுள்ள தருணத்தில், உங்கள் ராசிக்கு நாதனான சூரியனும் உச்ச பலம் பெற்றுள்ள நன்னாளில் சுபகிருது புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டு முழுவதும் வருமானம் போதிய அளவு நீடிப்பதால், பணப்பற்றாக்குறை இராது. திட்டமிட்டுச் செலவு செய்தால் சேமிப்பிற்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிலைமையையும் சீர்செய்து கொள்ளலாம். குடும்ப நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள குரு, அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகமாக இருக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு, எளிய மருந்துகளினால் பூரணகுணம் கிடைக்கும். கணவர் - மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களிடையே சிறு சிறு காரணங்களுக்காக வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும், அதனால் மனதில் “டென்ஷன்” ஏற்படும். பாக்ய ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டுள்ளதால், வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. தனஸ்தானத்திற்கு குருவின் பார்வை ஏற்படுவதால், கடன் வாங்கவேண்டிய அவசியம் இராது. சுக ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால், குடும்பத்தில் பெரிய பிரச்னை என்று எதுவும் ஏற்பட சாத்தியக்கூறு கிடையாது. கேதுவின் நிலை, முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் சிறிது குழப்பம் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், ஆவணி 21ம் தேதிக்குப் பிறகு
சாதகமான போக்கு ஏற்படும்.
உத்தியோகம்: ஜீவனகாரகரான சனி பகவான் யோக பலன்களை அளிக்கக் கூடியதும், அவரது ஆட்சிவீடாக விளங்குவதுமான மகரத்தில் நிலைகொண்டிருப்பது மிகவும் அனுகூலமான கிரக நிலையாகும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பையும் பணிகளில் உற்சாகத்தையும் அளிக்கும். தசா, புக்திகளுக்கேற்ப, சிறு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றிற்கும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு சென்று பணியாற்றும் ஆர்வம் இருப்பின், அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். ரஷ்யா - உக்ரைன் போரினால் உங்கள் வாய்ப்பிற்கும் பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார், சர்வ வல்லமை வாய்ந்த சனி! நிறுவன மாற்றத்திற்கு முயற்சிக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு, வெற்றிக்கனியை எளிதில் தந்தருள்வார் சூரிய புத்திரரான சனி!
தொழில், வியாபாரம்: லாபகரமான ஆண்டு இது என்பதை சனியின் நிலை உறுதி செய்கிறது. புதிய தொழில் துறைகளில் முதலீடு செய்வதற்கு அனுகூலமான ஆண்டாகும். சூரியன் உச்ச பலம் பெற்று விளங்குவதால், அரசாங்க உதவியும், அனுமதியும் எளிதில் கிடைக்கும். நிதியுதவி தேடி வரும். தமிழக அரசு புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் திட்டமிட்டு, பெரிய அளவில் முயற்சி செய்வதாலும், மத்திய அரசும் அதற்கு ஆதரவாகத் துணை நிற்பதாலும், சிம்ம ராசியில் பிறந்துள்ள தொழில்துறை பிரமுகர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு என்பதை சனியின் அனுகூலமான சஞ்சாரநிலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. வாய்ப்பினை லாபகரமாக பயன்படுத்திக்கொள்ள அரிய சந்தர்ப்பம் இது!
கலைத்துறையினர்: திரைப்படத் துறையினருக்கும், தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பாளர்களுக்கும் சுக்கிரன் சுபபலம் பெற்றிருப்பது இந்தப் புத்தாண்டு லாபகரமான வாய்ப்பாக அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது, “கொரோனா” சூழ்நிலையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கலைத்துறைக்கு புத்துயிர் ஊட்டும் ஆண்டு இந்த “சுபகிருது”. வரும்
மாதங்கள் இதனை நிரூபிக்கும்!
அரசியல்துறையினர்: சம்பந்தப்பட்ட கிரகங்கள் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அனுகூலமாகவே வலம் வருகின்றனர். கட்சியில் செல்வாக்கு உயரும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம். மத்திய மந்திரி ஒருவரின் தொடர்பு பல நன்மைகளைப் பெற்றுத் தரும். உங்களால் கட்சி பல மடங்கு பலம் பெறவுள்ளதையும், பலர் உங்கள் கட்சியில் சேர்வதற்கும் சாத்தியக்கூறு உள்ளதையும் சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சஞ்சார நிலைகள் உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகின்றன.
மாணவ - மாணவியர்: இந்தப் புத்தாண்டு, சிம்மராசியில் பிறந்துள்ள மாணவ மணிகளுக்கு மிகச் சிறந்த ஆண்டாகும், எந்தத் துறையில் தகுதி பெறவேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ அதே துறையில் உங்களுக்கு மிக நல்ல பிரசித்திப் பெற்ற கல்லூரியில் இடம் கிடைக்கும் என புதனின் நிலை உள்ளங்கை நெல்லிக்கனியென எடுத்துக்காட்டுகிறது. அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாட்டின் உண்மையான பலமும், செல்வமும் நீங்கள்தான்! சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பல அரிய சந்தர்ப்பங்களை உங்களுக்கு வாரி வழங்கவுள்ளது!
விவசாயத்துறையினர்: “சுபகிருது” ஆண்டு, உங்களுக்குப் பல சுப பலன்களை அளிக்கவுள்ளதை செவ்வாய் மற்றும் சுக்கிரன், சனி ஆகிய பிரதான கிரகங்களின் சஞ்சார நிலைகள் உணர்த்துகின்றன. வயலைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம் கிரகங்கள் அளிக்கும் யோகபலன்களை!
பெண்மணிகள்: குடும்பத்தில் உள்ள உறவினர்களிடம் சற்று அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் நடந்துகொள்வது மன நிம்மதி பாதிக்கப்படாமல் இருக்க உதவும். குடும்ப நிர்வாகம் நல்லபடியே நடக்கும். பணவசதிக்குக் குறைவிராது. உடல்நலனிலும் கவனமாக இருங்கள். சிறு, சிறு உபாதைகள் ஏற்படக்கூடும்.
அறிவுரை: வருமானம் வருகிறதே என்று வாரி இறைத்துவிடாதீர்கள்! விலையுயர்ந்த ஆபரணங்கள், வெள்ளியிலான பொருட்கள், பணம் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பாக்ய ஸ்தானத்திற்கு தோஷம் உள்ளதால், இந்த அறிவுரை!!
பரிகாரம்: 12 சனிக்கிழமைகள் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டின் பூஜையறையிலோ மாலையில் எள்ளெண்ணெய் தீபம் ஏற்றிவந்தால், ராகுவினால் ஏற்படும் கடுமையான தோஷம் நீங்கிவிடும். ஒவ்வொரு சொட்டு எண்ணெய்க்கும் அத்தனை சக்தி!
2. காளஹஸ்தி திருத்தல தரிசனம், மிகச் சிறந்த பரிகாரமாகும்.