விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: பெரும்பான்மையான கிரகங்களனைத்தும் உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக்கின்றனர், இப்புத்தாண்டு முழுவதும்! போதுமான அளவிற்கு பண வசதி இருக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதிபெற அனுகூலமான காலகட்டமிது! குடும்பத்தில், ஒற்றுமையும் லட்சுமி கடாட்சமும் நிலவும். புதிய வஸ்திரம் - ஆபரண சேர்க்கைக்கும் சாத்தியக்கூறு உள்ளதை, குரு, சுக்கிரன், ராகுவின் சஞ்சார நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சுப நிகழ்ச்சிகளும், சுப செலவுகளும் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் பெண், மாப்பிள்ளை அல்லது பிள்ளையின் வருகை மனத்திற்கு நெகிழ்ச்சியை அளிக்கும். செவ்வாயும் அனுகூலமாக இருப்பதால், பலருக்கு சொந்த வீடு அமையும்.
விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், மிக நல்ல வரன் அமையும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் பலம் வாய்ந்த குரு அமைந்திருப்பதால், பலருக்குப் புத்திர பாக்கியம் கிட்டும். தீர்த்த தல யாத்திரை சித்திக்கும். கிடைத்ததற்கரிய காசி, சார்தாம் எனப்படும் கேதார்நாத், கங்கோத்ரி, பத்ரிநாத், யமுனோத்ரி தீர்த்த யாத்திரை பாக்கியம் கிட்டும். அனுபவத்தில் பார்க்கலாம்! “ஜோதிடம்'' என்பது லக்ன சுத்தமாக 1.2 டிகிரி சாயமான கோணச் சுத்தமாகக் கண்டறியும் கணித முறையாகும். ஆதலால்தான், ஜோதிடம் என்றும் பொய்த்ததில்லை, சரியான கணித முறையில் கணித்துப்பார்த்தால்!!
உத்தியோகம்: கிரக நிலைகள் அனைத்தும் சிறந்த சுபபலம் பெற்று சஞ்சரிக்கின்றனர். அலுவலகச் சூழ்நிலை பணிகளில் உற்சாகத்தையளிக்கும். பலருக்கு சிறு பதவியுயர்வு கிடைப்பதற்கும் கிரகங்கள் சுப பலம் பெற்று வலம் வருகின்றனர். இந்த ஆண்டில் வேலை கிடைக்கவில்லையென்று, வருந்தும் விருச்சிக ராசியினர் எவரும் வருந்துவதற்கு வாய்ப்பில்லை, இந்த சுபகிருதுப் புத்தாண்டில் அந்த அளவிற்கு கிரகங்கள் அனுகூல நிலையில் சஞ்சரிக்கின்றனர்!
தொழில், வியாபாரம்: படிப்படியாக அபிவிருத்தி ஏற்பட்டு, இப்புத்தாண்டின் முடிவில், “கொரோனா”விற்கு முன் எவ்விதம் இருந்ததோ அதே போன்ற லாபகரமான நிலைக்கு தொழில் மற்றும் வியாபாரம் நல்ல நிலைக்கு வந்துவிடும் என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன. நிதிநிறுவனங்கள் முன்வந்து ஆதரவைத் தெரிவிக்கும். புதிய வர்த்தகத் துறையில் இறங்குவதற்கு அஸ்திவாரமாக அமையும், இந்த சுபகிருதப் புத்தாண்டு! வியாபாரத்தை மேலும் விருத்தி செய்வதற்கு அனைத்து நிதியுதவிகளும் எளிதில் கிடைக்கும். சிலர் சொந்தக் கட்டடத்திற்குத் தொழிலை மாற்றுவார்கள்.
கலைத்துறையினர்: புதிய வாய்ப்புகள் தேடிவரும். சிறு தயாரிப்பேயானாலும், லாபத்தைப் பெற்றுத் தரும். முடங்கிக் கிடக்கும் சினிமாத் துறை, புத்துயிர் பெறும். உலகளவில் பிரபலமடையும் வாய்ப்பும் கிட்டும், பல படங்களுக்கு என சுக்கிரன் மற்றும் ராகு, சனி ஆகியோரின் சஞ்சார நிலைகள் உறுதியாக எடுத்துக்காட்டுகின்றன.
அரசியல்துறையினர்: உங்கள் அரசியல் வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன, கிரகங்கள்! செல்வாக்கும் புகழும் கொண்ட மத்திய அமைச்சர் ஒருவரின் தொடர்பு உங்களைப் புகழ் ஏணியில் கொண்டுவிடும். புதிய பதவி ஒன்று கிடைத்தாலும் வியப்பில்லை!
மாணவ - மாணவியர்: வித்யா (கல்வி) ஸ்தானமும்), வித்யா காரகமும் (புதன்) தோஷமின்றி இருப்பதால், படிப்பில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். பலருக்கு படிப்பு முடிந்த உடனேயே நல்ல வேலையும் கிடைத்துவிடும், இப்புத்தாண்டில்!
விவசாயத்துறையினர்: கிரகநிலைகள் மிகவும் அனுகூலமாக உள்ளன. பருவ மழை பொய்க்காது பொழியும். பயிர்கள் செழித்து வளரும். விளைபொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். லாபகரமான ஆண்டு இது!
பெண்மணிகள்: மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கும் ஆனந்தமான புத்தாண்டு இது, விருச்சிக ராசி அன்பர்களுக்கு என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன.
அறிவுரை: கடின உழைப்பையும் வெளியூர்ப் பயணங்களையும் குறைத்துக்கொள்வது நல்லது!
பரிகாரம்: 1. பரிகாரத்திற்கு கேதுவை, செவ்வாய் கிரகமாகக் கருதிச் செய்யவேண்டுமெனக் கூறுகின்றன ஜோதிட நூல்கள். அதன்படி, அங்காரகத் திருத்தலமான வைதீஸ்வரன் கோயில் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்துவிட்டு தரிசித்துவிட்டு வந்தாலே போதும்.
2. வசதியுள்ள அன்பர்கள், குடும்பத்துடன் ஆலங்குடி சென்று, நெய் தீபம் ஏற்றி வைத்து குரு பகவானை தரிசித்து வருதல், வரும் ஒரு வருட காலத்திற்கு, கிரக தோஷங்களை அடியோடு போக்கும் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
3. வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது, மகான்கள், சித்த மகா புருஷர்கள் ஆகியோரின் பிருந்தாவனங்களிலோ (ஜீவ சமாதிகள்) இவை முடியாவிட்டால், வீட்டின் பூஜையறையிலோ ஐந்து நெய் தீபங்கள் ஏற்றிவருவது கைமேல் பலனளிக்கும் பரிகாரம். 24 வியாழக்கிழமைகள் செய்தால், அதன் பலன் ஒருவருட காலத்திற்குக் கிடைக்கும்.