தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குடும்பம்: சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோரால் நன்மைகள் உண்டாகும், இப்புத்தாண்டில்! குருவின் நிலை அளவோடு அனுகூலத்தைச் செய்யும். மற்ற கிரகங்களால் நன்மை ஏதும் கிடைக்காது!! வரவும் - செலவும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். இருப்பினும், கடன் வாங்கவேண்டிய அவசியமிராது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, கணவர்-மனைவி தாற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். திருமண முயற்சிகளில் வரன் அமைவதில் தாமதம் ஏற்படும். மனைவியின் ராசி தனுசு ஆனால் கணவருக்குச் சிறிது ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். விபரீதப் பிரச்னைகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை இப் புத்தாண்டில்!!
உத்தியோகம்: 7½சனியின் கடைசி பகுதியில் ஜீவனகாரகரான சனிபகவான் சில நன்மைகளைக் கொடுத்தருள்வார் என ஆதி ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன. அவதாரப் புருஷரான ஸ்ரீ கிருஷ்ணனையே ஒருசமயம் 7½ சனிபிடித்துவிட்டது! அதனால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வீண் அபவாதம் ஏற்பட்டது. அதற்குப் பிரதியாக, 7½சனி முடிவில் ஜாம்பவானின் பெண்ணாகிய ஜாம்பவதியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தனது தேவியாக அடைவதற்கு சனிபகவான் அருள்புரிந்ததாக வரலாறு ஒன்று உண்டு. சிறு பதவியுயர்வு ஒன்றை, நீங்கள் இப்புத்தாண்டில் எதிர்பார்க்கலாம். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பதவியுயர்வுதான்! காலந்தாழ்த்திக் கிடைக்கிறது இப்போது!!சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும். கொரோனா காரணமாக வேலையை இழந்து, இன்னமும் வேறு பணி கிடைக்காத தனுர் ராசியினருக்கு, நல்ல வேலை இப்போது கிடைப்பது ஆறுதலைத் தரும்.
தொழில், வியாபாரம்: பல காரணங்களினால் உற்பத்தியும், லாபமும் அதிகரிப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்றாற்போல் போட்டிகளும் அதிகரிக்கும். முக்கியமாக ஏற்றுமதி, இறக்குமதி துறையினருக்கு டாலர் இந்திய நாணயம் மதிப்பு ஏற்றத்தாழ்வால் உங்கள் லாபம் குறையாது. அதற்கேற்றவகையில் திட்டமிட்டு, உற்பத்தியை அதிகரித்து சரக்குகளை வைப்பில் வைத்துக் கொள்வது நன்மை தரும். வெளிநாட்டு ஆர்டர்களை எதிர்பார்த்து, முன்னதாகவே சரக்குகளை உற்பத்தி செய்து வைத்துக் கொள்வது ஒரு தன்னம்பிக்கையுடன்கூடிய நடவடிக்கையாகும்.
கலைத்துறையினர்: சுக்கிரனும், செவ்வாயும் புத்தாண்டு முழுவதும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சென்ற பல மாதங்களாக, வருமானமே இல்லாமல் துன்புற்றிருக்கும் ஏராளமான கடைநிலை ஊழியர்களுக்கு, புதிய பணி கிடைத்து மீண்டும் வருமானம் கிடைக்க வழிவகுத்துத் தருவார்கள், சுக்கிரனும் செவ்வாயும்!
அரசியல்துறையினர்: கட்சியில் செல்வாக்கு உயரும். மேலிடத் தலைவர்களின் ஆதரவு நீடிக்கும். பிற கட்சியிலிருந்து அழைப்பு வரும். சபலத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். குருவின் ஆதிக்கத்திலுள்ள தனுர் ராசியினர், அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாவார்கள், துலாம் ராசியினரைப் போல! ஆத்ம பலங்கொண்ட தனுர் ராசி அன்பர்களுக்கு, மனோபலம்
குறைவு! இந்த பலகீனத்தாலேயே, அடிக்கடி எதிலும் ஓர் தீர்மானமான முடிவை எடுக்கமுடியாமல் துன்பப்படுவார்கள்.
மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன், ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஓரளவே அனுகூலமாக நிலைகொண்டுள்ளார். புதன் ஓர் சாத்வீகமான கிரகமாவார். அதாவது, பரம சாது! கோள்சாரத்தில் தன்னுடன் இணைந்துள்ள மற்ற கிரகங்களுக்கு ஏற்ப, தன்னைச் சரிசெய்துகொள்பவர். அதாவது, தனக்கென்று ஓர் தீர்மானமான மனவுறுதி இவருக்குக் கிடையாது!! ஆதலால், இந்த ஆண்டு தனுர் ராசி மாணவ - மாணவியர் சற்று அதிகமாக பாடுபட்டுப் படிக்க வேண்டும். பரிகாரமும் உதவும்.
விவசாயத் துறையினர்: உங்களுக்கு பல யோகபலன்கள் காத்துள்ளன. விளைச்சலும், கால்நடைகளும் அபிவிருத்தி அடையும். அடிப்படை வசதிகள் குறைவில்லாது கிடைக்கும். அரசாங்க ஆதரவுகளும், சலுகைகளும் தேடிவரும். பழைய கடன்கள் தீரும்.
பெண்மணிகள்: பெண்களின் நலனுக்கு, ஆதார கிரகம் சுக்கிரன். அவர் இந்தாண்டு முழுவதும் சுப-பலம் பெற்றுத் திகழ்கிறார். ஆதலால், தனுர் ராசியில் பிறந்துள்ள பெண்களுக்கு, பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. வேலைக்கு முயற்சிக்கும் நங்கையருக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு நல்ல வரன் அமையும்.
அறிவுரை: 1. திட்டமிட்டு செலவு செய்யுங்கள். 2. மாணவ - மாணவியர் தங்கள் நண்பர்களுடன் அதிக நெருக்கம் காட்டாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: 24 வியாழக்கிழமைகள் பகல் உணவு ஒருபொழுது மட்டும் உணவருந்தி இரவில் உபவாசமிருத்தல் நல்ல பரிகாரமாகும். இரவில் பால், பழம் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
2. மாணவ - மாணவியர் தினமும் ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்லோகம் சொல்லி வருதல்.
3. தினமும் காலையில் நீராடி உங்கள் இஷ்ட தெய்வத்தைப் பூஜித்து வாருங்கள்.
4.திருமலை இன்னமுதன் திருவேங்கடவன் தரிசனம் நல்ல பரிகாரமாகும்.
5. தினமும் காகத்திற்கு நெய், பருப்பு, எள் சேர்த்த ஐந்து சாத உருண்டைகள் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும். இந்தப் பரிகாரத்தில் பல சூட்சுமங்கள் மறைந்துள்ளன.
6. திருநள்ளாறு சனி பகவான் தரிசனம் நல்ல பலனளிக்கும்.
7. மிகப்புராதனமானதும், அளவற்ற சக்திவாய்ந்ததுமான பூவரசன் குப்பம் ஸ்ரீ லட்சுமிநரசிம்மரை நெய்தீபம் ஏற்றிவைத்து தரிசித்துவிட்டு வருவது சிம்மராசி அன்பர்களுக்கு கைமேல் பலனளிக்கும் உயர்ந்த பரிகாரமாகும்.
8. வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திவ்ய தரிசனம் மிகச்சிறந்த பரிகாரமாகும்.
9.தினமும் காலையில் ஒரு ஸர்க்கம் ஸ்ரீ மத் சுந்தரகாண்டமும், மாலையில் ஸ்ரீஅனுமன் சாலிசா படிப்பதும் உகந்த பரிகாரமாகும்.