மேஷம்
சின்னச் சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் வல்லவர்கள். சுய மரியாதையையும், சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்காத நீங்கள், மொழிப்பற்று, இனப்பற்று அதிகமுள்ளவர்கள். உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தண்ணீரும் தாமரை இலையுமாய் ஒட்டாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். குறை கூறிக் கொண்டிருந்த உறவினர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். இந்த ஆண்டு பிறக்கும்போது சுக்கிரனும், புதனும் உங்கள் ராசிக்கு சாதகமான வீட்டில் நிற்பதால் வாடிப்போயிருந்த உங்கள் முகம் மலரும். பணவரவு திருப்தி தரும். வட்டி மேல் வட்டியாக கடன் வாங்கிக் குவித்தீர்களே, இனி கொஞ்சம் கொஞ்சமாக கடனை பைசல் செய்யுமளவிற்கு வருமானம் உயரும்.
இந்த வருடம் தொடக்கம் முதல் 18.05.2019 வரை குரு அதிசார வக்கிரமாகி 9ம் வீட்டில் நிற்பதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வீடு, மனை சேரும். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குரு அமர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச முடியாத நிலை வந்து போகும். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் 3ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோபலம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சனிபகவான் இந்த ஆண்டு முழுக்க 9ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் இந்த ஆண்டு முழுக்க கேதுவும் 9ம் வீட்டிலேயே நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் அவ்வப்போது திணறுவீர்கள். கடந்தகால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.
தந்தையாருக்கு நெஞ்சு வலி, சர்க்கரை நோய், கை, கால் வலி வந்து போகும். அவருடன் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது. 10.09.2019 முதல் 04.10.2019 வரை உள்ள காலகட்டத்திலே சுக்கிரன் 6வது வீட்டிலே சென்று மறைவதனால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போகுதல் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது. 28.12.2019 முதல் 08.02.2020 வரை உங்கள் ராசிக்கு செவ்வாய் 8ம் வீட்டிலேயே அமர்வதால் உறவினர்களுடன் மோதல் வந்து விலகும். தவிர்க்க முடியாத செலவினங்களும், பயணங்களும் கூடிக் கொண்டே போகும். சகோதரர்களுடன் சச்சரவு வரும்.
கன்னிப்பெண்களே! காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். மொபைல் போனில் வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. ஃபேஸ்புக், ஈமெயிலிலும் கண்டபடி உளறவேண்டாம். எந்த ஒரு முடிவுகளையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். தடைபட்ட கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு விலகுங்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
வியாபாரிகளே! லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். உங்களுக்குப் பின் கடையை தொடங்கியவர்களெல்லாம் உங்களைவிட அதிகம் சம்பாதித்தார்களே! இனி அவர்களை மிஞ்சுவீர்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணியாட்களை மாற்றியமைப்பீர்கள். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். உங்களை விட வயதில், அனுபவத்தில், கல்வித்தகுதியில் குறைவானவர்களை வைத்துக் கொண்டு உங்களை ஒதுக்கித் தள்ளினார்களே! இனி மேலதிகாரியை திருப்திப்படுத்தும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு வருட முற்பகுதியே கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை வாய்ப்பும் தேடி வரும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவார்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். அடிக்கடி தொகுதிப் பக்கம் போய் நிலவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்களே! பரிசு, பாராட்டு கிடைக்கும். என்றாலும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள்.
விவசாயிகளே! மகசூலைப் பெருக்க நவீன ரக உரங்களை பயன்படுத்துவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். இந்த தமிழ் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் அமைத்துத் தருவதாக இருக்கும்.
பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், ஓதிமலை எனும் ஊரில் அருட்பாலிக்கும் ஸ்ரீகுமார சுப்ரமணியரை சென்று வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயாளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள். நல்லது நடக்கும்.