மகரம்
பூவைப்போல் புன் சிரிப்பும் மெல்லிய மனதும் கொண்ட நீங்கள் சில நேரங்களில் புயலாக சீறிப்பாய்ந்து புரட்சி செய்வீர்கள். ஊர், உலகத்தை விட உள்மனது சொல்வதற்கு முக்கியத்துவம் தருபவர்களே! உங்கள் ராசிக்கு 7வது ராசியில் இந்த விகாரி வருடம் பிறப்பதால் பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள். உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். கணவன்மனைவிக்குள் சந்தேகத்தால் வீண் சச்சரவுகளும், உறவினர்களால் தொல்லைகளும் வந்ததே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்.
பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மகனுக்கு உங்கள் அந்தஸ்துக்கு ஏற்றபடி நல்ல மணப்பெண் அமைவார். குழந்தை வரம் வேண்டி கோயில் குளமெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தீர்களே! இனி கவலை வேண்டாம். அழகான வாரிசு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இனி ஓடி வந்து உதவுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 12ல் மறைந்து விரையச் சனியாகத் தொடர்வதாலும், கேதுவும் 12-ம் வீட்டில் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்து செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். இளைய சகோதரர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகளை எடுக்கப்பாருங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
ராகு இந்த ஆண்டு முழுக்க 6ம் வீட்டிலேயே தொடர்வதால் வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். மற்ற மாநில புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், வேற்று மொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சித்தர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். 14.04.2019 முதல் 18.05.2019 வரை குரு உங்கள் ராசிக்கு அதிசார வக்ரமாகி 12ம் வீட்டில் இருப்பதால் சின்னச் சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் பலவற்றிற்கும் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும்.
சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். குருபகவான் 19.05.2019 முதல் 27.10.2019 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 28.10.2019 முதல் 27.03.2020 வரை 12ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த பத்திரம், ஆவணம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம்.
பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது. தந்தையாருக்கு நெஞ்சு வலி, அசதி, சோர்வு வந்து போகும். அவருடன் அவ்வப்போது மனத்தாங்கல் வரும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துச் செல்லும். 06.07.2019 முதல் 23.07.2019 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும். 10.08.2019 முதல் 25.09.2019 வரை செவ்வாய் 8ல் மறைவதனால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தைத் தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரர்களால் அலைச்சல் இருக்கும்.
கன்னிப் பெண்களே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். காதல் இனிக்கும்.
மாணவர்களே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.
வியாபாரிகளே! சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். பங்குதாரர்கள் வளைந்துகொடுத்துப் போவார்கள். வேலையாட்கள் இனி புரிந்து கொள்வார்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஆவணி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும். போட்டிகள் அதிகமாகும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
உத்யோகஸ்தர்களே! சக ஊழியர்கள் மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குனி மாதத்தில் பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் வாரிசுகள் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உதவுவார்கள்.
கலைஞர்களே! உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். புதியவர்களையும் அனுசரித்துப் போங்கள். சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து நீங்கும்.
விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களுடன் இயற்கை உரங்களையும் பயன் படுத்துங்கள். கிணற்றில் தண்ணீர் சுரக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். இந்த புத்தாண்டு முதல் முயற்சியில் எதையும் முடிக்க முடியாமல் போனாலும் தொடர்முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.
பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீகல்யாணவரதராஜரை சென்று வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.