கும்பம்
நியாயமாக தனக்குக் கிடைக்க வேண்டியதைக் கூட சில நேரங்களில் விட்டுக் கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின் மீது அதிக பாசம் வைப்பீர்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தவர்களே! உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் இந்த விகாரி ஆண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் வல்லமை பெறுவீர்கள். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உங்களுக்குள்ளே தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். தொலை நோக்கு சிந்தனை அதிகரிக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். வருடமுற்பகுதி சாதிக்க வைப்பதாகவும், பிற்பகுதி சிக்கனம் தேவைப்படுவதாகவும் அமையும். புதன் 2ம் வீட்டில் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சேமிப்புகள் கூடும். புது வீடு, மனை வாங்குமளவிற்கு பணமும் வரும். அரசு காரியங்கள் வெற்றியடையும். பிள்ளைகளுக்கு இசை, நடனம், இலக்கியம் போன்றவை கற்றுக் கொடுப்பீர்கள். அவர்களால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். நீண்ட கால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.
இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலேயே நீடிப்பதால் சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். இந்த ஆண்டு முழுக்க சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே, என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். 14.04.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்ரமாகி லாப வீட்டிலே வலுவாகக் காணப்படுவதால் திடீர் பணவரவு உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் உதவ முன்வருவார். பெரிய பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். உங்களையும் அறியாமல் உங்களிடம் இருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.
வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 10ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கடனாகவும், கைமாத்தாகவும் கொடுத்த பணம் கைக்கு வரும்.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன்&மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். 24.07.2019 முதல் 16.08.2019 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பழுதாகும். கணவன்மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். ஈகோ பிரச்னையை தவிர்க்கப்பாருங்கள். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். 26.09.2019 முதல் 11.11.2019 வரை உள்ள கால கட்டத்தில் செவ்வாய் 8ல் மறைவதனால் கட்டுக்கடங்காத செலவுகள் வந்து கொண்டேயிருக்கும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர வகையிலும் போதிய ஒத்துழைப்பு இல்லையே என்று வருத்துப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். வைகாசி, தை மாதத்தில் கல்யாணம் நடக்கும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். மாதவிடாய்க்கோளாறு, தூக்கமின்மை நீங்கும்.
மாணவர்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேருவீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரிகளே! தொழிலைத் தொடரமுடியாமல் முடங்கிப் போனீர்களே! கடையை விற்று விட்டு வேற வேலையை பார்க்கலாம் என்று கூட யோசித்தீர்களே! அந்த அவலநிலையெல்லாம் இனி மாறும். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதிஇறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். அரசாங்கத்தால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! உப்பு சப்பில்லாத விஷயத்திற்கெல்லாம் மேலதிகாரி திட்டினாரே! மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிட்டதே! உங்களின் திறமையறிந்து புதிய பொறுப்புகளை நிர்வாகம் ஒப்படைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். பிற்பகுதியில் நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் உறுதியாகக் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கணினித் துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். தலைமையின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். என்றாலும் சகாக்களிடம் நிதானமாகப் பழகுங்கள்.
கலைஞர்களே! உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். வருட பிற்பகுதியில் அரசால் கவுரவிக்கப்படுவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.
விவசாயிகளே! சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சியெடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். வற்றிய கிணறு சுரக்கும். தென்னை, வாழை, சவுக்கு, பாக்கு வகைகளால் லாபமடைவீர்கள். ஆகமொத்தம் இந்த விகாரி வருடம் பணபலத்தை உயர்த்துவதாகவும், பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமையும்.
பரிகாரம்:
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை சென்று வணங்குங்கள். தந்தையில்லா பிள்ளைக்கு உதவுங்கள். மன நிம்மதி உண்டாகும்.