மீனம்
மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக்கூடியவர்கள். ஆழமாகவும், அகலமாகவும் யோசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 5வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைவரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம். குழந்தை பாக்யம் உண்டு. கணவன்-மனைவியர் இனி நகமும் சதையுமாக ஒற்றுசேருவீர்கள். மகனுக்கு நல்ல இடத்திலிருந்து பெண் அமைவார். மனக்குழப்பங்கள், வீண் டென்ஷன் விலகும். கனிவான பேச்சால் சண்டை சச்சரவுகள் குறையும். வீட்டில் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபகாரியங்கள் சிறப்பாக முடியும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். கோயில் விழாக்களில் மரியாதை கிட்டும். உங்கள் ராசிக்கு சனிபகவான் இந்த விகாரி வருடம் முழுக்க 10ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
உங்களை புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்து போகும். மேலதிகாரி உங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க ராகுபகவான் 4ம் வீட்டிலும், கேது ராசிக்கு 10ம் வீட்டிலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவுகளெடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தைப் பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். உறவினர்களில் சிலர் உங்களை காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு விலகுகிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும்.
யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். 14.04.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதிக அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனதை வாட்டும். ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள். உத்யோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட வேண்டாம். 19.05.2019 முதல் 27.10.2019 வரை ராசிநாதன் குருபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
வேலை வேலை என்றிருந்தீர்களே! இனி குடும்பத்திற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன்மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் புகழும்படி நடந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். 17.08.2019 முதல் 09.09.2019 வரை சுக்கிரன் 6ல் அமர்வதால் அந்தக் கால கட்டத்தில் கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். 12.11.2019 முதல் 27.12.2019 வரை செவ்வாய் 8ல் அமர்வதனால் சகோதரர்களுடன் பகை வரும். செலவினங்கள் அதிகமாகும். பழைய கடனை நினைத்தும் அவ்வப்போது அச்சப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
கன்னிப்பெண்களே! புதிய நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். மாதவிடாய்கோளாறு, தூக்கமின்மை நீங்கும்.
மாணவர்களே! வழக்கம் போல அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள்.
வியாபாரிகளே! போட்டியாளருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! சிலரின் தவறான ஆலோசனையால் முதலுக்கே மோசமானதே! இனி உங்களின் திறமையால் லாபமீட்டுவீர்கள். நல்ல பணியாளர்களை சேர்ப்பீர்கள். கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என்றாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பழைய சரக்குகளை வந்த லாபத்திற்கு விற்று புது கொள்முதல் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் உதவி கிடைத்து கடையை, வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் கனிவாகப் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபமுண்டாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். சில சமயங்களில் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்து போகும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதைக் குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதற்கு முக்கியத்துவம் தராதீர்கள். உங்களுக்கு விருப்பமில்லாத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். அலுவலக ரகசியங்களையோ, மேலதிகாரியைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கணினி துறையினர்களே! செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு தாவாதீர்கள். சக ஊழியர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் உள்நாட்டுப் போரில் பங்கேற்காதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ளவேண்டாம். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல் தருவது நல்லது. சகாக்கள் சிலர் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள்.
கலைஞர்களே! அரசால் கவுரவிக்கப் படுவீர்கள். மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களைக் கேட்டறிவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள்.
விவசாயிகளே! வண்டுக்கடி, பூச்சி மற்றும் எலித் தொல்லை நீங்கி மகசூல் கூடும். தானிய வகைகள், மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு திடீர் வளர்ச்சியையும், பிள்ளைகளால் நிம்மதியையும் தருவதாக அமையும்.