மிதுனம்
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். சமாதானத்தை விரும்பும் நீங்கள், இன, மொழி, பேதம் பார்க்காமல் பழகுபவர்கள். உங்கள் ராசிக்கு தன வீடான இரண்டாம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கிப் போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். சிரித்துப் பேசி சிற்றுண்டி சாப்பிட மட்டும் இருந்த வி.ஐ.பி நட்பை இனி சரியாகப் பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்ததெல்லாம் போதும், இனி களத்தில் நேரடியாக குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். சித்திரை மாதத்தில் செலவுகள் இருந்தாலும் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களையெல்லாம் அடுத்தடுத்து முடிப்பீர்கள். மன தைரியம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் இருந்ததல்லவா, இனி சமாதானக் கொடி பறக்கும். கோபம் குறையும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். சிலர் வீடு வாங்குவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குரு அதிசார வக்ரமாகி நிற்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள்.
தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். புது வேலை கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குருபகவான் 19.05.2019 முதல் 27.10.2019 வரை 6ம் வீட்டிலேயே மறைவதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். மனைவியை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசித் தீர்க்கப் பாருங்கள். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்யவேண்டாம். வெளியூருக்குச் செல்லும் போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 7ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும்.
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன்மனைவிக்குள் காரண காரியம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டீர்களே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். சதா சர்வ காலமும் மருந்து மாத்திரை என்றிருந்த உங்கள் மனைவியின் ஆரோக்கியம் இனி சீராகும். நோய்கள் குணமடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும் இந்தாண்டு முழுக்க சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை விட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். இருவரும் ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. 29.10.2019 முதல் 21.11.2019 வரை 6வது வீட்டிலே சுக்கிரன் மறைவதனால் கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தங்க ஆபரணங்கள், செல்போன் போன்றவைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். 22.03.2020 முதல் 13.04.2020 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும்.
கன்னிப் பெண்களே! தோஷங்களால் தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் நினைத்ததை சாதிப்பீர்கள். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
மாணவர்களே! தேர்வின் போது படித்துக் கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டாதீர்கள். வேற்று மொழிப்பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு.
வியாபாரிகளே! முதலீடுகள் அதிகமிட்டு விழி பிதுங்கி நின்றீர்களே, இரவு பகலாக உழைத்தும் லாபம் பார்க்க முடியவில்லையே, கவலை வேண்டாம். இனி அந்த நிலை மாறும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். அனுபவ மிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். யாருக்கும் அதிக முன் பணம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்திய பகுதியில் கடையை விரிவு படுத்துவீர்கள். சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், புரோக்கரேஜ், ஷேர் வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். வேற்று மதத்தினர், வெளிநாட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்புண்டு. பழைய பிரச்னைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப் பாருங்கள். மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். உங்கள் கை ஓங்கும். கணினி துறையினர்களே! மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். அடிக்கடி விடுமுறை எடுக்காதீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வருட பிற்பகுதியில் அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.
கலைத்துறையினர்களே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.
விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கடன் தள்ளுபடியாகும். வற்றிப் போயிருந்த கிணற்றில் நீர் சுரக்கும். மகசூல் இரட்டிப்பாகும். பழுதான பம்பு செட்டை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். இந்த விகாரி வருடம் முடங்கிக் கிடந்த உங்களை முதலிடத்திற்கு அழைத்துச் செல்வதுடன் வசதி வளங்களையும் அள்ளித்தரும்.
பரிகாரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கையில் வீற்றிருக்கும் ஸ்ரீகால பைரவரை சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். ஆரோக்கியம் சீராகும்.